கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்

நான் சென்ற ஜூன் 20 200 அன்று சுந்தர ராமசாமியுடன் நடத்தபப்ட்ட விரிவான பேட்டியை டிடியில் பார்த்தேன்

எழுத்தாளனுக்கு வாசிப்பனுபவம் மிக முக்கியம்.

எழுதுங்கள், எழுதிக்கொண்டே இருங்கள், வேண்டுமென்றால் கிழித்துப்போடுங்கள்  … எழுத வரும்…

அவருடைய எழுத்துக்கள் இணையத்தில் அனைத்தும் உள்ளனவா?

மிகவும் நேசித்துவிட்டு, எதற்காக இந்தியாவை விட்டு விட்டு அமெரிக்க வாழ்க்கை வாழ்ந்தார்? ( நான் அங்கு கிட்டத்தட்ட ஆறு வருடம் வாழ்ந்த வாழ்க்கை, பணத்தை தவிர ( திறமைக்கு கூலி ) வேறு எதுவும் பிடிக்கவில்லை.

சுஜாதாவை விட இவரின் பேச்சு ( தேவையானவை ) மட்டும் மேலாக இருந்ததாக என எனக்கு தோன்றியது. நீங்கள் அவரிடம் பழகியுள்ளீர்கள், மணிக்கணக்கில் பேசுவது என்பது, மிகுந்த படிப்பு ஆர்வம் இருப்பவர்க்கு விருந்தாகும்..

Regards
விஜயஷங்கர்
பெங்களூரு


அன்புள்ள விஜயசங்கர்

சுந்தர ராமசாமியுடன் நான் நெருக்கமாக பழகியிருக்கிறேன். அதையெல்லாம் அவரைப்பறி நான் எழுதிய ‘சுரா-நினைவின் நதியில்’ என்ற நூலில் பார்க்கலாம். அது உயிர்மை வெளியீடாக வந்துள்ளது.
அந்த பேட்டியை நான் பார்க்கவில்லை. அதைப்பற்றி நீங்கள் காலச்சுவடு நிறுவனத்தில் விசாரித்து பார்க்கலாம்.

 [email protected]

ஜெ.

அன்புள்ள ஜெ,

சிலசமயம் மிக நீளமான கட்டுரைகளை இணையத்தில் வெளியிடுகிறீர்கள். அவற்றை யாராவது படிக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா?

சங்கர்

அன்புள்ள சங்கர்,

எனக்கும் அந்த ஐயம் வலுவாகவே உள்ளது.சிறந்த உதாரணம் இ எம் எஸ் பற்றிய கட்டுரை. ஒரு கடிதம்கூட வரவில்லை.சம்பிரதாயமாக குட் என்று வரும் ஒற்றைவரிகளே எனக்கு அதிகம். அவையும்கூட.  ஆகவே நானே நாலைந்துபேரிடம் படித்தீர்களா என்று கேட்டேன். படிக்க வாய்ப்புள்ளவர்களிடம். நீளம் என்றார்கள்.

அப்படி பல கட்டுரைகள் கொஞ்சம்கூட கண்டுகொள்ளப்படாமல் போயிருக்கின்றன. எஸ்.பொ, சேரன் குறித்த கட்டுரைகள். வேதாந்த மரபும் இலக்கியப்போக்குகளும் போன்ற கட்டுரைகள்.

நீளம்தான் பிரச்சினை என்றில்லை. தத்துவத்தை எதிர்கொள்வதைப்பற்றி நான் எழுதிய சின்ன கட்டுரைகூட வாசிக்கபப்டவில்லை என்றே நினைக்கிறேன்

எதிர்வினைகளை வைத்துப் பார்த்தால் எளிமையான விஷயங்களே அதிகம் படிக்கப்படுகின்றன. ஆகவே எதிர்வினைகளைச் சார்ந்து இந்த இணையப்பக்க்கங்களை வடிவமைக்க வேண்டாம் என நினைக்கிறேன். கொஞ்சம்கூட வாசிக்கப்படாத கட்டுரைகளாக இருந்தாலும் கனமான விஷயங்களையும் எழுதலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன். அதாவது இது என் பக்கம். வாசகர்களுக்கு பிடித்தமானதாக இருக்க இங்கே எந்த முயற்சியும் செய்யப்படாது.
இணைய்த்தில் பக்க அளவு பிரச்சினை இல்லை. செலவுக்கவலை இல்லை. இந்த பக்கங்களில் அவை நிரந்தரமாக இருந்துகொண்டிருக்கும். எவருக்காவது எப்போதாவது தோன்றினால் வாசிக்கட்டுமே

ஜெ

 

ஜெ:

வெகுநாட்களாக நாஞ்சில் பற்றி கேட்க நினைத்த கேள்வி இது. மிக முக்கியமானதும் கூட. நவீனத் தமிழ் இலக்கிய வரலாற்றில் கண்டிப்பாக பதிவு செய்யப் பட வேண்டிய விஷயமும் கூட. நாஞ்சிலின் வாழ்க்கை வரலாறும் இதன் விடை தெரியாமல் முழுமையடையாது என்பதே என் எண்ணம்.  அதாவது, நான் கேட்க நினைத்த கேள்வி என்னவென்றால் – ‘அது என்ன ”சிடி”’ என்று கடைசிவரை கண்டுபிடிக்க முடிந்ததா?’

ஆர்வத்துடன்,
அர்விந்த்

 

அன்புள்ள அர்விந்த்
இலக்கியத்தில் அப்படி பல விடுபடா மர்மங்கள்

1987ல் நான் விக்கியண்ணாச்சியை குற்றாலம் கவிதைப்பட்டறையில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தேன். அண்ணாச்சி புயல்காற்றை எதிர்கொள்ளும் தென்னை போல லம்பிக்கொண்டிருந்தார்

”இந்த ஜெயமோகன் இருக்கானே இவன் பெரீய…டேய் எவண்டாவன் மூஞ்சீலே லைட் அடிக்கிறது…ஆ ஆடோவா ரைட் போலாம்…

”சொல்லுங்கண்ணாச்சி”

”அதாண்டா, இந்த ஜெயமோகன் இருக்கானே இவனைப்பத்தி…. ரோட்டிலே எல்லாம் பரோட்டா விக்கப்பிடாது. நான்வெஜ் சாப்புடறவன் எப்டி நடக்கிறது? டேய்”

”அண்ணாச்சி என்னமோ சொல்ல வந்தீங்க”

”அதாண்டா….இப்ப இவன் இருககன் ஜெயமோகன் .இவன் இருக்கானே…இவன்…அப்பாஸ் எங்க? அவன் தான் நம்ம கம்பெனி. அப்பாஸ் எங்கேடா?”

”அண்ணாச்சி சொல்லுங்க”

”என்னது?”

”ஜெயமோகன்”

”ஆமா…இத ஜெயமோகன் இருக்கானே இவன்….காரையெல்லாம் கொண்டாந்து ரோட்டிலே நிறுத்தறான்…டேய்”

இப்படியே இரண்டரை மணி நேரம். அப்புறம் அண்ணாச்சி மலையேறி விட்டிருந்தார். மறுநாள் கேட்டேன் என்ன சொல்ல வந்தீர்கள் என்று அவருக்கு நானா உன்னையா நேத்தா பாத்தேனா என்ற பாவனை

அந்த மர்மம் அப்படியே வரலாற்றுப்பெருவெள்ளத்தில் கலந்து விட்டது

ஜெ

முந்தைய கட்டுரைகிளி சொன்ன கதை : 1
அடுத்த கட்டுரைகிளி சொன்ன கதை : 2