இட ஒதுக்கீடு பற்றி

அன்புள்ள ஜெ.,

வழக்கம் போல் பொறுமையாக ஒவ்வொரு கண்ணியாகக் கோர்த்து எழுதி இருந்தீர்கள்.

இட ஒதுக்கீட்டின் மூலம் பொறியியல் கல்வி படித்த சில நண்பர்களின் கிராமத்துக் குடிசைகளுக்குச் சென்றிருக்கிறேன்… இதில் இருந்தா இவர்கள் இதுவரை வந்தார்கள் என்ற திகைப்பே தோன்றியது. இட ஒதுக்கீடு இல்லாமல் சத்தியமாக அவர்கள் அந்தக் கிராமத்தை விட்டு ஒரு அடி கூட நகர்ந்திருக்க முடியாது. ஒரு சமூகமாக எந்த வகையிலும் நாம் பெருமைப்பட வேண்டிய ஒரு விஷயம் இது.

அதே சமயம், கூட கோபுரங்களில் வாழும் ‘தலித்’துக்களும் என்னுடன் படித்து இருக்கிறார்கள். இன்னும் இருபது வருடங்களில், இவர்களின் வாரிசுகளே தலித்துக்களின் எல்லா இடங்களையும் ஆக்கிரமித்து இருப்பார்கள். குடிசைவாசிகளும் சேரிவாசிகளும் மீண்டும் ஒரு காந்திக்காகவும் அம்பேத்காருக்காகவும் காத்திருக்க வேண்டியது தான்.

இட ஒதுக்கீடு என்பது ஒரு தற்காலிக வழிமுறையாகவே நம் தலைவர்களால் முன் வைக்கப்பட்டது. திராவிட இயக்கத்தவர்கள் போன்ற சுயநல அரசியல்வாதிகளால், இன்று இட ஒதுக்கீடு கேலிக்கூத்தான அளவை எட்டியுள்ளது (69% என்பது அம்பேத்கரின் கனவு அல்ல). மேலும் பெரியார், அன்னிய முதலீடு போல இட ஒதுக்கீடும் பொது விவாதத்திற்கு அப்பாற்பட்டதாக ஆக்கப்பட்டுவிட்டது. அதன் எதிர்விளைவே இணையத்தில் இன்று உலாவரும் கருத்துக்கள். putting in others’ shoe என்பது சாதிகளின் விஷயத்தில் மிகக்குறைவாகவே நடக்கிறது. உங்கள் கட்டுரைகள் அதற்கான வலுவான தொடக்கமாக இருக்கக் கூடும்.

நன்றி
ரத்தன்

சாதியும் ஜனநாயகமும்

முந்தைய கட்டுரைகுருபீடம்
அடுத்த கட்டுரைவசைபட வாழ்தல்