அன்னிய முதலீடு- கடிதங்கள்

இடைத்தரகர்களினாலும் வியாபரிகளின் சிண்டிகேட்டுகளினாலும் விவசாயிகளுக்கு உரிய விலை போய்ச் சேர்வதில்லை என்ற ஜெயமோகனின் கருத்துக்களை முழுக்க ஆதரிக்கிறேன். எங்கள் வீட்டில் ஒரு சில மரங்கள் மூலமாக மட்டும் எலுமிச்சைகளும், முருங்கைக்காய்களும், கருவேப்பிலைகளும், மாம்பழங்களும், தேங்காய்களும் விளைகின்றன. தெருவில் போவோர் வருவோர்களைப் பறித்துக் கொண்டு எடுத்துக் கொள்ளச் சொல்லி விடுகிறோம். ஆள் வைத்துப் பறிக்கவோ, எடுத்துச் சென்று விற்கவோ ஆள் பலமும் இல்லை அதனால் எந்தவித ஆதாயமும் இல்லை. கடைக்காரர்களுக்கு எங்களிடம் காசு கொடுத்து வாங்குவதில் ஆர்வமும் இல்லை. ஆகவே கூடுமானவரை இலவச விநியோகம் இல்லாவிட்டால் கீழே விழுந்து மண்ணோடு மக்கிப் போகட்டும் என்று விட்டு விடுகிறோம். பட்சிகளுக்காவது இரையாகிறது அதனால் காலை நேரங்களில் ஏராளமான பறவைகள் வருகின்றன என்பதே ஒரே திருப்தி.

இன்னும் சில வருடங்களில் நான் வளர்த்து வரும் பல்வேறு வகைப் பழ மரங்கள் மூலமாக சில டன் எடையுள்ள பழங்களும் காய்களும் உற்பத்தியாகப் போகின்றன. அவற்றை எப்படி எடுத்து எங்கே விற்பது என்பதை இன்னும் தீர்மானம் செய்யவில்லை. தினமும் காலையில் வருபவர்களுக்கு அன்றன்று விளையும் காய்கள் கனிகள் இலவசமாக வழங்கப் படும் என்று அறிவித்து விட வேண்டியதுதான். மேலும் அரசாங்கத்தின் மூளையற்ற ஓட்டுப் பொறுக்கும் திட்டமான 150 ரூபாய் வேலைத் திட்டம் மூலமாக எந்த வேலைக்கும் ஆட்கள் கிடைப்பதில்லை. அதுவும் விவசாய அழிவுக்கு இன்னொரு காரணம். ஆகவே கூடுமானவரை இயந்திரங்களின் துணை கொண்டே பழங்களைப் பறிப்பது போன்ற வேலைகளைச் செய்வது குறித்து யோசிக்க ஆரம்பிக்க வேண்டும். அமெரிக்காவில் இன்னும் மோசமான நிலை. பழத் தோட்டங்களில் வேலை செய்ய ஆளில்லாத காரணத்தினால் பல கோடி டன் பழங்கள் அழுக விடப் படுகின்றன. ஆரஞ்சு ஆப்பிள் தோட்டங்களில் கால் வைக்க இடமில்லாமல் பழங்கள் வீணாகக் கீழே குவிந்து கிடப்பதை கலிஃபோர்னியா, ஓரிகான் மாகாணங்களில் காண முடிகிறது.

ஆனால் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பெருவணிகக் கடைகளின் வரவினால் இந்த நிலை முற்றிலுமாக மாறி விடுமா என்றால் அதற்கான உடனடிப் பதிலை இதே வெளிநாட்டு பெரும் வணிக நிறுவனங்கள் அந்தந்த நாடுகளில் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதையும் இப்பொழுதைய ரிலையன்ஸ் மற்றும் பிக் பஜார் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதைப் பொறுத்தே சொல்ல முடியும். அதற்கான தரவுகளை எவரும் சேகரித்துத் தருவதில்லை. பாலாவின் பதில் ஓரளவுக்கு இந்திய சூப்பர் மார்க்கெட்டுகளின் உத்தியைக் கோடிட்டுக் காட்டுகிறது. இது குறித்த எனது விரிவான கட்டுரை ஒன்றைப் பின்பு இங்கு இடுகிறேன். எழுதி வைத்தது நேரமின்மையினால் முடிக்க முடியாமல் பாதியில் நிற்கிறது. பெரும் வணிக நிறுவனங்கள் தங்கள் தேவைகளுக்காக ஒரு சில பெரிய பண்ணைகளை உருவாக்கி அதில் விளைவதைக் கொண்டே தங்கள் வியாபாரங்களை நடத்திக் கொள்ளவும் முயலலாம். அப்படிச் செய்தாலும் சிறு விவசாயிக்கு பெரிய லாபம் ஏற்பட்டு விடப் போவதில்லை. இந்த நிறுவனங்கள் ஏற்கனவே காலூன்றி உள்ள வளர்ந்த நாடுகளில் சிறு விவசாயங்களை எவரும் செய்வதில்லை. அனைத்துமே பல ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் விளைவிக்கப்படும் பெரும் பண்ணைகளே. இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரையிலும் பெரும் கடைகள் எவையும் லாபத்தில் இயங்குவதில்லை. பல இடங்களிலும் தாக்குப் பிடிக்க மூடி விட்டார்கள் என்பதே உண்மை நிலவரம்.

இன்று சிறு வணிகர்களுக்காகப் போராடும் அமைப்புகளும், சிறு வியாபாரிகளின் சங்கங்களும் ஒரு சின்னக் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும். உள்நாட்டில் தயாரிக்கப்படும் குளிர்பானங்களை விற்பதற்கு உதவி செய்யாமல் அவற்றை வாங்குவதைத் தவிர்த்து கோக்கையும், பெப்சியையும் இங்கு மூலை முடுக்குத் தெருமுக்குக் கடைகளிலும் கூட வாங்கி வைத்து விற்பனை செய்வது யார்? யார் அந்த பானங்களை மக்களிடம் கொண்டு சென்றது? யார் உள்நாட்டுப் பானங்களின் அழிவுக்குத் துணையாக நின்றது? இன்று அதே சிறு வியாபாரிகள் தங்கள் வணிகம் பெரு வணிக நிறுவனங்களினால் அழிக்கப் பட்டு விடும் என்று கூக்குரல் இடுவதில் என்ன நியாயம் இருக்கிறது? நீ பொவண்டோவுக்கும் காளிமார்க்குக்கும் செய்ததை இன்று அவன் உன்னிடம் செய்யப் போகிறான் என்று கூச்சலிடும் பொழுது இவர்களை யார் பொருட்படுத்தப் போகிறார்கள்? வெளிநாட்டுப் பொருட்களும் வெளிநாட்டு நிறுவனங்களின் பொருட்களுமே இன்று எந்தவொரு சின்னப் பெட்டிக்கடைகளிலும் கூடப் பெருவாரியாக விற்கப் படுகின்றன. ஒரு சின்னப் பெட்டிக் கடையில் கூட நாம் வாங்குவதற்கு பெப்சியும், கோக்குமே, கோல்கேட்டுமே நமக்குக் கிடைக்கின்றன. பனைமரங்கள் அதிகம் உள்ள திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் திரிந்து அலைந்து தேடியும் கூட எனக்குக் குடிக்க ஒரு ஓலை பதநீர் கிட்டுவதேயில்லை. ஏன்? அதை ஆதரித்து விற்பனை செய்ய விரும்புபவர்கள் இதை மட்டும் எதிர்ப்பானேன்?

சுருக்கமாகச் சொன்னால் அந்நிய முதலீடுகளின் வரவு பெரிய நன்மையையோ பெரிய தீமையையோ ஏற்படுத்தி விடப் போவதில்லை. அவையும் ஒரு பக்கம் இயங்கும் அவ்வளவுதான். இந்த அளவுக்கு அச்சப் படுவதற்கோ, எதிர்ப்பதற்கோ எந்தவொரு முகாந்திரமும் கிடையாது என்பதே கூடங்குளம் ஆனாலும் சரி, அந்நிய முதலீடு ஆனாலும் சரி எனது நிலைப்பாடு.

ராஜன்
=======================================

நட்பிற்குரிய சகோதரர் ஜெயமோகன் அவர்களுக்கு, இனிய காலை வணக்கம். தங்களுடைய ”சிறுவணிகத்தில் வெளி முதலீடு” கட்டுரை படித்தேன். கிராமத்தில் உள்ள விவசாயியின் உண்மையான நிலையையும், வியாபாரிகளின் போலி முகங்களையும் தோலுரித்து காட்டியிருக்கிறீர்கள். ஒரு விவசாயியின் மகனாக எனது இதயம் நிறைந்த நன்றியை உரித்தாக்குகிறேன். என்னைப் பொறுத்தவரை

”வாங்குபவர் சந்தையாக மாறிவிட்ட விவசாயத்தை, விற்பவர் சந்தையாக மாற்றினால் விவசாயிகளை காக்க முடியும் என நம்புகிறேன். இது குறித்து எனது அறிவுக்கு எட்டிய சிந்தனைகளை தொகுத்து ”விவசாயிகளை பாதுகாப்போம்” என்ற ஒரு நூலை எழுதியுள்ளேன். ( இந்நூல் விமர்சனம் தமிழ் ஹிந்து.காம் இணையத்தளத்தில் வந்துள்ளது). இதுநாள்வரை தங்களை இலக்கியம் சார்ந்த எழுத்தாளர் என்று மட்டுமே எண்ணியிருந்தேன். இக்கட்டுரை மூலம்தான் தங்களின் பன்முகங்களில் இன்னொரு முகத்தை கண்டேன்.

சந்திப்போம்…

பிரியமுடன், ஈரோட்டிலிருந்து சு.சண்முகவேல்.

இனிய ஜெயமோகன்,

சிறுவணிகத்தில் அந்நிய முதலீடு குறித்த உங்கள் கட்டுரை கண்டு பெரிதும் மன அமைதி அடைந்தேன். முற்போக்கு என்றால், அரசு எதைச் செய்தாலும் எதிர்ப்பது என்ற புரிதலில் உள்ளவர்கள், இது பற்றி எனது கருத்தை, கிழ்க்கண்ட சுட்டியில் பதிவு செய்தபோது, கிண்டலும் கேலியும் செய்தனர். எப்பவும் போல், உங்கள் கட்டுரை மிகச் சரியாக விவசாயிகளின் துன்பத்தை விளக்கிவிட்டது. நன்றி.

http://www.manavelipayanam.blogspot.jp/2012_09_01_archive.html

செந்தில்குமார்.
டோக்கியோ.

Hello Sir,

I am regular reader of your articles and stories. I never write any mail to author and rather i talk about that and discuss with friends.
First time, i am sending this mail to you. The reason is, I was thinking the Siru Vanigam will kill the merchants….Since we don;t know about these mophia’s and belive or imagine differently. Your article clear many things.
Much appreciated. Keep writing…
Thanks
suresh

முந்தைய கட்டுரைஅன்னிய முதலீடு -எதிர்வினைகள்
அடுத்த கட்டுரைதமிழ்த்திரையும் இசையும்