கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

திலகனின் சில படங்களைத் தமிழில் பார்த்திருக்கிறேன். கிளிப்பேச்சு கேட்கவா, ஆயுதபூஜை போன்றபடங்களில் அவரது நடிப்பு அசாத்தியமானது. கிளிப்பேச்சு கேட்கவா படத்தில் வெறுப்படைந்த அப்பாவாக நடிக்கும் இடங்களும், ஆயுதபூஜையில் ஒருகை இழந்த வில்லனாக அவர் செய்யும் வில்லத்தனங்களும் மறக்கவே முடியவில்லை. இதையும் தாண்டி ஒரு முறை டிவி சானல்களை வேகமாகத் தாவிச் செல்கையில் ஒரு மலையாள சானலில் பூஜை ஒன்று நடந்துகொண்டிருக்கும் அதை கவனித்துக் கொண்டிருக்கும் திலகன். இதுதான் காட்சி, அதில் நெஞ்சைத் தடவியபடி பார்த்துக்கொண்டிருப்பார். இத்தனை நேரமாக இது நடக்கவேண்டுமா? எப்போது முடிப்பார் போன்ற அத்தனை உணர்ச்சிகளும் ஒரே ஷாட்டில் வந்துவிட்டிருப்பது போலிருக்கும். இன்றும் அந்த காட்சி என்மனதில் இருக்கிறது. ஒரு சிறந்த நடிகருக்கு இந்த சாட்சியே போதும். இயக்குனர் சங்கர் நெடுமுடி வேணுவைத் தன்படங்களில் பயன்படுத்தியது போலத் திலகனைப் பயன்படுத்தாது ஏன் என்பது உங்கள் அஞ்சலி‍- திலகன் கட்டுரை சொல்லிவிட்டது.

நன்றி.
கே.ஜே.அசோக்குமார்.

அன்புள்ள ஜெயமோகன்,

நலமா?
உங்களுடைய யானை டாக்டர் சிறுகதையை வாசித்தேன்.மிகவும் எதார்த்தமான ஒரு கதை. காட்டுக்குச் செல்லும் இன்றைய இளைய தலைமுறை செய்யும் கீழ்த்தரமான செயல்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன். நான் தற்போது ஒரிசாவில் வேலை பார்த்து வருகிறேன். ஒரிசாவில் அருவிகளும்,நீர் வீழ்ச்சிகளும் அதிகம்.இங்கு தொழிற்சாலைகளும் அதிகம். விடுமுறையைக் கொண்டாட இங்குள்ள அருவிகளுக்கும் , மிருகக் காட்சி சாலைகளுக்கும் செல்லும் நம் நாட்டின் இளையதலைமுறை பீர் பாட்டில்கள் இல்லாமல் செல்வதே இல்லை. அவர்கள் குடித்து முடித்ததும் அந்த பாட்டில்களை வைத்துப் பாறைகளில் பாட்டில் உடைத்தல் போட்டி நடைபெறுகிறது.

அவர்கள் சென்ற பிறகு அங்கு விலங்குகள் மட்டுமல்ல மற்ற மனிதர்களே செல்லுவது கடினம்தான்.இப்போதெல்லாம் சுற்றுலாவுக்கு சென்றால் மது அருந்துவது ஒரு நவீன நாகரிக செயலாகிவிட்டது.ஒருபுறம் தொழிற்சாலைகள் சூழ்நிலையைக் கெடுப்பதும் மறுபுறம் இவர்கள் சூழ்நிலை உயிகர்ளை அழிப்பதும் தொடர்கதையாகிவிட்டது.நான் உங்களுடைய யானை டாக்டர் சிறுகதையின் ஆங்கிலப் பதிப்பை என்னுடன் பணிபுரிபவர்களுக்குப் பரிந்துரைத்தேன்.இப்போது அவர்கள் அந்தக் கதையைப் பற்றி என்னிடம் நிறையப் பேசுகிறார்கள்.அவர்கள் தவறை உணர்வார்கள் என்று நம்புகிறேன்.நீங்கள் எழுதிய யானை டாக்டர் சிறுகதைக்கு ஆயிரம் நன்றிகள்.

ம.பா.ராஜீவ்
-மா.பா.இராஜீவ்

முந்தைய கட்டுரைஅன்னியமுதலீடு- விவாதம்
அடுத்த கட்டுரைஅன்னியமுதலீடு கடிதங்கள்