திலகன்- ஒரு கடிதம்

திலகன்

அன்புள்ள ஜெயமோகன்

எனக்கு மலையாளப் படங்கள் அறிமுகமானதே யவனிகா வழியாகத்தான். நினைவு தெரிந்து நான் முதன் முதலாகப் பார்த்த மலையாளப் படமும் அதுவே. இன்று வரை இந்தியப் படங்களில் மட்டும் அல்ல உலக அளவில் கூட அது குறிப்பிடத்தக்க படமாகவே இருந்து வருகிறது. அதன் உத்தி குரசேவாவின் உத்தியாக இருந்தாலும் கூட அதன் யதார்த்தமும், நடிகர்களின் இயல்பும் அசாத்தியமான நம்பகத்தன்மையையும் நிஜத்தையும் அதற்கு அளித்தது. அதில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் அடுத்த முப்பது வருடங்களில் தொடர்ந்து மலையாள சினிமாக்களை உச்சத்துக்குக் கொண்டு சென்றவர்கள். திலகன் அவர்களில் ஒரு முக்கியமான நடிப்பாளுமை. சற்று முரடான தோற்றமாக இருந்தாலும் கூட மென்மையான நகைச்சுவையான நாசூக்கான பணக்காரத்தனமான பாத்திரங்களிலும் கூட தன் உடல்மொழியை லாவகமாக மாற்றிக் கொள்வதன் மூலம் வெகு சிறப்பாகச் செய்திருப்பார்.

நாடோடிக் காத்து போன்ற படங்களில் அவர் காமெடி ரோல்களை அநாயசமாகச் செய்திருப்பார். அவரால் உச்சம் பெற்ற ஒரு அறுபது படங்களாவது மலையாள சினிமாவில் தேறும். அவற்றுள் பத்மராஜனின் மூணாம் பக்கம் குறிப்பிடத்தக்க ஒரு படம். அந்த படம் வெளி வந்த பொழுது அவர் ஐம்பது வயதை நெருங்கியிருந்திருப்பார். ஆனால் ஒரு 80 வயதுக் கிழவரை எந்த விதமான மிகை நடிப்பும் இன்றி தத்ரூபமாக நிகழ்த்தியிருப்பார். பத்மராஜன் திலகன் என்ற மாபெரும் நடிகனுக்காகவே உருவாக்கிய படமாக அது அமைந்து விட்டது. திலகனின் நடிப்பின் நுடபங்களை லோகி/சிபிமலையின் க்ரீடம் மற்றும் செங்கோல் ஆகிய இரு படங்களிலும் நாம் அனுபவிக்கலாம்.

செங்கோல் சினிமாவில் ஒரு இடம் வரும். ஒரு டீக்கடையின் உள்ளே அமர்ந்து மோகன்லால் புரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அதன் வாசல் வழியாக தெருவில் அவரது அப்பாவான திலகனும் அவரது சகோதரியும் நடந்து செல்வார்கள். உள்ளே மகன் இருப்பது தெரியும். அப்பொழுது திலகன் தலை குனிந்து ஒரு விதமான கள்ளப் பார்வையுடன் நடந்து செல்வார். அவரிடம் உள்ளே உட்கார்ந்திருக்கும் மகனிடம் மறைக்க வேண்டிய ஒரு அவமானகரமான குற்றவுணர்வு பொங்கி வழிந்து கொண்டிருக்கும். அந்த குற்ற அவமானவுணர்வைத் தன் பார்வையின் மூலமாகவும் நடையின் மூலமாகவும் மிக மிக நுட்பமாகக் காட்டி விட்டுச் செல்வார். அந்தக் காட்சி ஒரு நொடிதான் திரையில் வந்து விட்டுப் போகும். ஆனால் அந்த ஒரு நொடிக் காட்சியில் அவர் காண்பித்திருக்கும் நுட்பம் மட்டுமே அவரை மகத்தான ஒரு கலைஞனாக மாற்றி விடுகிறது.

திலகன் மட்டும் இன்றி பெரும்பாலான மலையாள நடிகர்களின் சிறப்பே அவர்களது பன்முக நடிப்பாளுமையே, வெர்சடாலிடியே. அத்தனை விதமான வெர்சடாலிடியை பிற மொழி நடிகர்கள் எவருமே கொணர்ந்ததில்லை. அதன் காரணமாகவே நான் இங்கு இன்னொரு திரியில் அவருக்கு இணையான ஒரு நடிகர் தமிழில் நிச்சயமாக இல்லை என்று சொல்லியிருந்தேன் அது அலட்டலாகவும் அபத்தமாகவும் தென்பட்டது. திலகன் நடித்த பாத்திரங்களில் அவர் எத்தனை விதமான நுட்பமான ஜாதீய, சமூக உட்கூறுகளை நிகழ்த்தியிருக்கிறார் என்பது புரியாதவர்களுக்கு குறிப்பாக தமிழ்ப் படங்கள் பார்த்தும் திலகன் போன்றவர்களை தமிழ்ப் படங்களின் ஸ்டீரீயோடைப்பிங்குகளில் பார்த்து வளர்பவர்களுக்கு என்றுமே புரியாது.

தரவாட்டு நாயராக, ஆதிக்கம் உள்ள ஜாதீய வெறி பிடித்த நம்பூதிரியாக,சிரியன் கிறிஸ்துவராக, மலப்புரம் முஸ்லீமாக,மன்னனாக, தாழ்த்தப் பட்டவனாக, கொள்ளைக் கும்பலின் கொடூரமான தலைவனாக, புரட்சிக்காரனாக, மந்திரவாதியாக, கையறு நிலைத் தந்தையாக, அப்பாவியாக, ஏமாற்றுக்காரனாக, வளர்ப்பு மகளைப் புணரும் காமுகனாக என்று மலையாள சமூக வாழ்வின் அத்தனை தளங்களிலும் அவர் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். சட்டென்று தன் உடல்மொழியை, ஆளுமையை, நடிப்பை, குரலை மாற்றி முற்றிலும் ஒரு புதிய ஆளுமையக் கொண்டு ஒரு ரசவாதத்தை நிகழ்த்தி விடக் கூடிய அற்புதமான நடிகர் திலகன். இனி அவர் நடித்த எண்ணற்ற சினிமாக்கள் மூலமாக மட்டுமே நம்முடன் துணை வருவார்.

மலையாள சினிமாவின் பேரிழப்பாக நான் பத்மராஜன் மற்றும் திலகனின் இழப்பினைக் கருதுவேன். ஜெயமோகன் என்றைக்காவது இயக்குனராக மாறும் பொழுது அவரால் பத்மராஜனின் இடத்தை நிரப்பி விட முடியும் ஆனால் திலகனின் இடம் நிரப்ப முடியாத ஒன்றாகவே என்றும் இருக்கும். நிரப்ப முடியாத மற்றொரு மகத்தான நடிகன் ஜெகதி ஸ்ரீகுமார் அவரும் கூட விபத்தில் அடிபட்டு இனி நடிக்க முடியாத நிலையில் இருப்பதாகக் கேள்விப் படுகிறேன்.

இப்படி ஒரு மகத்தான திறன் உள்ள கலைஞனிடம் அசாத்தியமான ஒரு திமிரும் கர்வமும் இருந்ததில் ஆச்சரியமேதுமில்லை. அடூர் கோபாலகிருஷ்ணன் ஒரு விருந்தினரை அழைத்துக் கொண்டு திலகனின் அப்பார்ட்மெண்டுக்குச் சென்று அறிமுகப் படுத்தியிருக்கிறார். அந்த விருந்தினர் உலகப் புகழ் பெற்ற ஒரு இயக்குனர். அவர் அடுத்து எடுக்கவிருந்த படம் உலக சினிமாவையே உலுக்கிய ஒன்று. அதில் ஒரு சின்ன வேடத்தில் நடிக்க திலகனைக் கேட்டுள்ளார். அந்த வேடத்தில் தனக்கு எதுவும் இல்லை என்று மறுத்து விட்டிருக்கிறார். அவரை தன் படத்தில் நடிக்குமாறு வீடு தேடி வந்து கோரிக்கை வைத்த இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், சினிமா ஜூராஸிக் பார்க். இந்தச் செய்தியை நான் எங்கு எப்பொழுது படித்தேன் என்பது நினைவில் இல்லை. ஆகவே ஆதாரம் எல்லாம் கேட்டால் அளிக்க முடியாது.

ஆனால் அவர் நிச்சயமாகப் படம் எடுத்தாடிய நாகப் பாம்பிடம் “நான் திலகனாக்கும் பறையுந்நது, நானாக்கும் இது, போய்க்கோ” என்று குடைக்காம்பை உயர்த்தி ஆணையிட்டிருக்கக் கூடிய ஆளுமைதான் அவர். ஜெயமோகனின் பல நாவல்களில் வரும் பல பாத்திரங்களுக்கு என்னால் திலகனைத் தவிர வேறு எவரையும் நினைத்துப் பார்க்க முடிந்ததில்லை.

இங்கு பலரும் திலகனை தமிழ்ப் படங்கள் மூலமாகவே அறிந்திருப்பீர்கள். அவரைத் தமிழ்ப் படங்களில் ஒரு வித்தியாசமான வில்லனாக மட்டுமே பயன் படுத்தியிருந்தார்கள். அவரை மட்டும் அல்ல ஆதி காலம் தொட்டே எந்தவொரு நல்ல நடிகனையும் ஒரே விதமாக நடிக்க வைத்து மோல்டு செய்து எடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருவது தமிழ்ப் பட உலகம். ஒருவர் ஒரு விதமாக நடித்துப் புகழ் பெற்று விட்டால் அவர் இறக்கும் வரை அவரை அந்த விதமாக மட்டுமே நடிக்க வைப்பார்கள், பேசவும், சிரிக்கவும் வைப்பார்கள். அது தமிழ் சினிமாவின் தலையெழுத்து.

நல்ல வேளையாக அவர் இங்கு அதிக படங்களில் தொடரவில்லை. திலகனை அவரது மொழியில் அவரது மண்ணில் அனுபவிப்பதே அவரின் நுட்பமான நடிப்பினை நாம் உணரும் வழியாக இருக்க முடியும். அனைவருக்கும் நான் பத்மராஜன் இயக்கத்தில் வந்த திலகனின் முக்கியமான ஒரு சினிமாவான மூணாம் பக்கம் என்ற படத்தினைப் பரிந்துரைக்கிறேன். இந்தப் படம் யூட்யூபில் முழுமையாக உள்ளது. இதில் வரும் திலகனை உணர நிச்சயம் மொழி தடையாக இருக்க முடியாது ஆகவே சப்டைட்டில் இல்லாமலும் நீங்கள் காணலாம்.

ராஜன் சடகோபன்

அன்புள்ள ராஜன்,

திலகன் தன்னை ஸ்பீல்பர்க் அழைத்ததை பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார். அடூர் வழியாக அந்த அழைப்பு வந்தது. ஜுராசிக் பார்க் படத்தில் அந்தக் கரிய விஞ்ஞானி கதாபாத்திரத்துக்காக. இந்திய [குஜராத்தி] விஞ்ஞானியாக நடிக்க

ஆனால் திலகன் மறுத்துவிட்டார். அந்தப்படத்தில் செய்வதற்கு ஒன்றுமில்லை என்பதுடன் ஒருவருடத்துக்கு மேலாக இந்தியாவில் இருக்கமுடியாது என்பதும் காரணம். அவர் அற்புதமான கதாபாத்திரங்களை இங்கே செய்துகொண்டிருந்த காலகட்டம் அது

ஜெ

முந்தைய கட்டுரைகருநிலம் – 1 [நமீபியப் பயணம்]
அடுத்த கட்டுரைகருநிலம் – 2 [நமீபியப் பயணம்]