ஆதாரம் நீயே

கிறிஸ்தவப்பாடல்கள் என் வாழ்க்கையின் மிக முக்கியமான அம்சம். இளவயதிலேயே அவற்றை ரசிப்பதற்கான மன அமைப்பு எனக்கு சூழலில் இருந்து வந்தது. என் இளமையில் இருந்தே கிறிஸ்துவை என்னுடைய ஆன்மீககுருவாகவே எண்ணி வந்திருக்கிறேன். ஞானமும் தர்க்கமும் எந்நிலையிலும் மனிதாபிமானத்தை நெகிழ்வை இல்லாமலாக்கிவிடலாகாது என்று அவரது கண்கள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. பைபிள் ஒரு வரியேனும் வாசிக்க்காத ஒரு நாள் என் வாழ்க்கையில் கடந்துசென்றதில்லை. பைபிள் வழியாக கீதையையும் கீதைவழியாக பைபிளையும் வாசிப்பவன் நான் என்று என்னைச் சொல்லிக்கொள்வேன்.

என்னுடைய கிறிஸ்து தல்ஸ்தோயின், தஸ்தயேவ்ஸ்கியின் கிறிஸ்து. ஜோசப் புலிக்குநேலும் நித்ய சைதன்ய யதியும் காட்டும் கிறிஸ்து. அவர் சாமானியர்களை நோக்கிப் பேசிய மீட்பர். சர்வசாதாரணமானவற்றில் இருந்து எழும் உச்சம். மீண்டும் மீண்டும் அதற்காகவே நான் கிறிஸ்துமுன் மானசீகமாக மண்டியிடுகிறேன். அந்தரங்கமாகக் கண்ணீர் விடுகிறேன்.

ஆனால் குறுகியமனம் கொண்ட, பிறர் மீதான வெறுப்பையும் நிராகரிப்பையுமே ஆயுதமாகக் கொண்ட மதபோதகர்கள் என் அந்தரங்கக் கிறிஸ்துமீது சேற்றை அடித்துக்கொண்டே இருக்கிறார்கள். குறிப்பாகக் குமரி மாவட்டத்தில் பெருகிவரும் பெந்தெகொஸ்தே முதலிய குறுங்குழு கிறிஸ்தவர்கள். ஒருவகையான மனநோயாளிகள் அவர்கள். தங்கள் இரக்கமற்ற சுயநலநோக்குடன் அவர்களால் பைபிளையும் சிலுவையையும் கையில்பற்றமுடியுமே ஒழிய ஒருபோதும் மானுடமீட்பரின் பாதங்களைத் தொட்டுவிடமுடியாது.

ஆழ்ந்த மனச்சோர்வில் வரும்போது எப்போதுமே மீட்பாக அமைபவை நல்ல பாடல்கள். ஆனால் சமீபமாக ஒலிப்பதிவும் வெளியீடும் எவராலும் செய்யக்கூடியதாக ஆனதும் கேட்கச்சகிக்காத முதிரா முயற்சிகள்தான் அதிகமாக வெளிவருகின்றன. அவையே எங்கும் காதிலும் விழுகின்றன. இந்தியாவில் கீபோர்டை அரசு அதிகாரபூர்வமாகத் தடைசெய்யவேண்டும் என்ற எண்ணம்கூட எனக்கு உண்டு. நல்லவேளையாக இந்து பக்திப்பாடல்களைப்போல சினிமாப்பாட்டு மெட்டைப் போடுமளவுக்குக் கிறிஸ்தவர்களின் நுண்ணுணர்வு இன்னும் சீரழியவில்லை.

ஆகவே நான் எப்போதுமே பழைய கிறிஸ்தவப்பாடல்களை மட்டும்தான் கேட்பேன். அவை வேறு ஒரு உலகுக்குக் கொண்டுசெல்கின்றன. எளிய இடையக் கோலத்தில் உள்ள மீட்பனிடம் இந்த வாழ்வின் ஒவ்வொன்றுக்காகவும் இறைஞ்சவும் மன்னிப்புக் கோரவும் வைக்கின்றன அவை.

இன்று ஓர் இசைத்தொகை மனதைத் திறந்து புதிய காற்றை உள்ளே விட்டது. குறிப்பாக ’ஆதாரம் நீயே அருட்கடலே’ இதில் உள்ள எல்லாப் பாடல்களுமே மனதை நெகிழச்செய்பவை. அவை கர்நாடக இசைமெட்டுகளால் அமைந்திருப்பதனால் மட்டுமல்ல இசைச்சேர்ப்பும் பாடும்முறையும் ஆத்மார்த்தமான ஈடுபாட்டைக் காட்டுகின்றன.

கிறித்தவப்பாடல்கள்

சில கிறித்தவப்பாடல்கள்

முந்தைய கட்டுரைஹீரோ-கடிதம்
அடுத்த கட்டுரைநமீபியா , நிஜமாகவே