யானை-ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ,

நலம் தானே?

கடந்த வாரம், மேகமலை சென்றிருந்தேன். வாய்ப்பு அமையும் போதெல்லாம் பயணம் செல்வதின் ஒரு பகுதி. யானைகளைக் காணும் வாய்ப்பினை எதிர்நோக்கி இருந்தேன். காணக் கிடைக்கவில்லை. ஆனால் பயணம் முழுதும் யானை பற்றிய நினைவாகவே இருந்தது. மேகமலை பேரூராட்சி தங்குமிடத்தின் எதிரில் இருந்த ஆற்றில் நீரை ஒட்டி இருந்த பாறை, யானை நீர் குடிப்பது போன்ற பிரமையைத் தோற்றுவித்தது. தூரத்தில், தேயிலைத் தோட்டத்தின் பின்னால் நின்றிருந்த மரத்தின் முறிந்து காய்ந்து காற்றில் அசைந்தாடிய கிளை, யானை அசைந்து செல்வது போல் பிரமை தோற்றுவித்தது. இப்படிப் பலவாறு காணுமிடமெல்லாம் யானைகளுக்காகக் கண்கள் பூத்திருந்தது. அதே நினைவு தொடர, இரவு, மீண்டும் யானை டாக்டர் வாசித்தேன். காடு….யானை…மிக நெருக்கமாக உணர முடிந்தது.

மேகமலைக்கு அடுத்ததாகத் தேக்கடி சென்றிருந்தேன். படகுப் பயணத்தில், ஒற்றை யானை காணக் கிடைத்தது. சிறு வயது. தனியனாகக் கரையோரப் புற்களை மேய்ந்து கொண்டிருந்தது. எங்கே சக பயணிகள் சத்தம் எழுப்பி, அதனை எரிச்சல் படுத்திவிடுவார்களோ என்று கவலை கொண்டேன். நல்லவேளையாக, உறுத்தும்படியான கூச்சல் ஏதும் இல்லை.

வீடு திரும்பி, உங்கள் வலைத்தளத்தில் ஊர்ந்து கொண்டிருந்த போது, ஆப்பரிக்க யானை டாக்டர் காணக் கிடைத்தது. மீண்டும் யானைகளைப் பற்றிய சிந்தனையில் மூழ்கி, பயணக் குறிப்பு எழுதும் போது, டிஸ்கவரி சேனலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்திய யானைகள் பற்றிய ஆவணப் பதிவு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

பிரம்மாண்ட இயற்கையின் ஒரு அடையாளம். அதன் முன், நம்முள் ஏதோ ஒன்று கரைந்து அழிந்து, நம்மை லேசாக உணரச் செய்கிறது. நம்முடைய சிறுமைகளை சிதற அடிக்கிறது.

(விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக வெளியிடப்பட்டிருந்த யானை டாக்டர் புத்தகங்கள் 1000 என் வசம் இருந்தது. என் அறை நண்பனின் திருமணத்தில், 900 யானை டாக்டர் புத்தகங்கள், திருமணத் தாம்பூலத்தோடு விநியோகித்தோம்; பத்தில் ஒருவராவது வாசிப்பார்கள், குறிப்பாக பீர் புட்டிகள் உடைக்கும் இளைஞர்கள் சிலர் கைகளுக்காவது சென்று சேர வேண்டும் என்று. சற்று நேரம் ஒதுங்கி நின்று புத்தகத்தைக் கவனிப்பவர்களின், எடுத்துச் செல்பவர்களின் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். முகப்பு யானை படமும், ‘யானை டாக்டர்’ பெயரின் விசித்திரமும் பெற்றுச் செல்பவர்களை ஈர்த்திருக்க வேண்டும்; ஆர்வத்துடன் பெற்றுச் சென்ற வண்ணம் இருந்தனர்.)

நன்றி,
வள்ளியப்பன்

அன்புள்ள வள்ளியப்பன்

மேகமலைக்குச் சென்று கொஞ்சநாள் ஆகிறது. எங்கள் மேகமலை முகவரான தனசேகரன் மணிரத்தினம் படக்குழுவின் உதவி இயக்குநராகப் புயல்வேகப்பணியில் இருக்கிறார்.

மேகமலைக்கு யானைகள் வர ஒரு சீசன் உண்டு என்கிறார்கள். சபரிமலை காலகட்டத்தில் கேரள மலைப்பகுதியில் சந்தடி அதிகரிக்கும்போது அவை கூட்டம் கூட்டமாக மலை ஏறி இப்பக்கம் வருகின்றன- அதாவது டிசம்பரில். மேலும் இங்கே டிசம்பரில் மழை கொட்டும். புல்லும் தழையும் ஓங்கி நிற்கும்.நாங்கள் மேகமலையில் ஒருமுறை ஒரு சரிவுக்கு அப்பால் யானைக்கூட்டங்களைக் கண்டிருக்கிறோம்.

காட்டு யானை ஓர் அற்புதம். உயிர்கொண்ட குன்று அது. யானை என்ற மகத்துவம் நிகழ்வதற்காகக் குன்றுகள் பலகோடி வருடம் முன்பே உருவாகி தவம்செய்தன

ஜெ

முந்தைய கட்டுரைபின் நவீனத்துவம், பின்கொசுவம்
அடுத்த கட்டுரைகடிதங்கள்