ஏழாம் உலகம் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகனுக்கு…..

உங்களுடைய “ஏழாம் உலகம் ” இப்போதுதான் வாசித்தேன். மனம் “அய்யோ அய்யோ வென்று மிகவும் பதட்டம் அடைகிறது ஒரே மூச்சில் அத்யாயங்களை வாசிக்க முடியவில்லை…..

இந்த அவலங்கள் கதை அல்ல அன்றாடம் நிகழும் வாழ்க்கையின் சித்தரிப்பு என்று அறியும் போது மனித வக்கிரத்தை எண்ணி துக்கமும் அவமானமும் நெஞ்சை அடைத்துக் கொள்ளுகிறது. சமூகத்தின் மீது மனிதப்பேய்களின் மீது தாங்கமுடியாத கொலை வெறி தோன்றுகிறது.

ஆனால் நாவல் முழுவதும் ஆசிரியர் எந்த வித சார்பும் இல்லாமல் யார் மீதும் பச்சாதாபப்படாமல் யாருக்கும் தண்டனை வழங்காமல் மிக சகஜமாக இந்த ஜீவன்களின் பிறப்பு வாழ்வு இறப்பு என்ற பரிணாமத்தை ஏதோ இயற்கையின் இன்னொரு [அலங்] கோலமாக சொல்லிப் போகும் பற்றற்ற பாங்கை அறியும் போது மனம் இனமறியாத பிறவி சார்ந்த துக்கத்தில் ஆழ்ந்து போகிறது. அத்தகைய துக்கம் ஒரு உயர்ந்த கலைப் படைப்பால் தான் சாத்தியமாகும் என்றும் தெரிகிறது.
இதை எழுதுவதற்குக் கத்தி முனையில் நடக்கப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். கலைநேர்த்தி குன்றாமல் வடிவம் பிசகாமல்
வெளிப்படுத்துவது எளிய விஷயம் அல்ல.. வாழ்த்துக்கள்

ஆனால் இது இப்போதும் தொடர்கிறதா? அரசாங்கம் அனுமதிக்கிறதா? அல்லது கண்களைப் பொத்திக் கொள்ளுகிறதா? ஊனமுற்றவர்களுக்கு எந்தப் பாதுகாப்பும் எந்த உத்தரவாதமும் இல்லையா? இந்தக் கொடுமையை எப்படி மதங்களும் அமோகமாக வளர்த்து விடுகின்றன.?

வைதீஸ்வரன் [ஆஸ்திரேலியாவிலிருந்து]

அன்புள்ள வைதீஸ்வரன் அவர்களுக்கு

ஏழாம் உலகம் காட்டும் வாழ்க்கைநிலை இருந்துகொண்டு இருக்கிறது என்பதற்கு ஆதாரமாக எப்படியும் வருடம் இரு செய்திகள் நாளிதழ்களில் வந்து கொண்டிருக்கின்றன. இன்னும் கொடூரமாகக்கூட

உடல்வணிகம் என்பது ஏதோ வடிவில் உலகில் எங்குமே இருந்துகொண்டிருக்கிறதென்றே நினைக்கிறேன். அவற்றை மதம் வளர்ப்பதில்லை. அவற்றை வளர்ப்பது அற உணர்வற்ற அரசும் சுய உணர்வற்ற சமூகமும்தான்

ஜெ

ஜெ

நான் வாசகர்கடிதங்கள் எழுதுவதில்லை. நாமே எழுத்தாளர் இல்லை என்றால் நம்மால் சரியாகச் சொல்லமுடியாது. நாம் ஒரு நல்ல நூலைப்பற்றி மிகவும் சாதாரணமாக எதையாவது சொல்லவேண்டியிருக்கும். ஆகவேதான் எழுதுவதில்லை

ஆனால் , நேற்று ஏழாம் உலகம் வாசித்து முடித்தபோது இதை எழுதியே ஆகவேண்டும் என்ற எண்ணம் வந்தது. எங்கெங்கோ கொண்டுபோயிற்று நாவல். பிச்சைக்காரர் வாழ்க்கை என்று எளிதாகச் சொல்லலாம்தான். ஆனால் இது ஆன்மீகமாக ஒரு பெரிய அனுபவம். ஒரு நிறைவு

மானசீகமாக மாங்காண்டிச்சாமியின் கால்களைத் தொட்டு வணங்குகிறேன்

சாமிநாதன்

அன்புள்ள சாமிநாதன்

மாங்காண்டிச்சாமி காசியில் இருந்தவர். அதனாலென்ன, அவரைப்போன்றவர்களை எங்கும் குடியேற்றலாமே

ஜெ

முந்தைய கட்டுரைமலையாளம் விக்கி
அடுத்த கட்டுரைவணிக எழுத்து தேவையா?