‘யூத்து’

 

அன்புள்ள ஜெ

பருவமழைப்பயணம் கட்டுரை வாசித்தேன். அற்புதமான அனுபம்.

ஆனால் இந்தவகையான இயற்கையழகுள்ள இடங்களுக்குப் போவது நல்லது. அதை எழுதுவதுசரியா என்று தெரியவில்லை.

நம் இளைஞர்க்ளின் மனநிலை வேறு. அந்த அழகான இடத்திற்கு பீர்ப்புட்டிகளுடன் போய்க் குடித்து நாறடித்து புட்டிகளை உடைத்துப்போட்டுவிட்டு வருவார்கள். யானைடாக்டர் கதைதான் நினைவுக்கு வருகிறது

கொஞ்சமாவது சிவிக் சென்ஸும் அழகுணர்வும் உள்ள ஒரு தலைமுறை நமக்கு உருவாகி வருவதுவரை இந்த விஷயங்கள் எல்லாம் கண்ணுக்குத்தெரியாமல் இருந்துகொண்டிருப்பதே நல்லது

சரவணன்

அன்புள்ள சரவணன்,

உண்மை. அதைப் பருந்துப்பாறையிலும் பார்த்தோம். அங்கே ஓர் இளைஞர் கும்பல். அவர்களுக்கு அங்கே என்ன செய்வதென்றே தெரியவில்லை. கூச்சலிட்டார்கள். அங்குமிங்கும் ஓடினார்கள். காரில் அதிஉச்ச சத்தத்தில் சினிமா பாட்டுபோட்டுவிட்டுக் குடித்தார்கள். சட்டையைக் கழற்றிவிட்டு நடனமாடினார்கள்.

அந்த மலைச்சரிவு முழுக்க அவர்களைப்போன்றவர்கள் வீசிய பீர்புட்டிகள் நொறுங்கிக் குவிந்து கீழே காடுவரை சென்றிருந்தன. மறுநாள் சனிக்கிழமையன்று செல்லும்வழியில் காவலர்கள் ஒரு கருவி வைத்து ஊதச்சொல்லி, குடித்துவிட்டுச் செல்பவர்களைப் பிடிப்பதைக் கண்டோம். அந்த அளவுக்கு அவர்களின் தொல்லை அதிகரித்திருக்கிறது.

அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அந்த இளைஞர்களுக்கு அந்த இடத்தின் அழகும் முக்கியத்துவமும் உண்மையிலேயே தெரியவில்லை. அங்கே எப்படி மகிழ்ச்சியாக இருப்பது என்று அவர்களுக்கு புரியவில்லை. அதைப்போன்ற விஷயங்கள் அவர்களுக்குப்பழக்கமே இல்லை. அதுதான் பிரச்சினை

ஊட்டியில் கிராமத்து இளம் காதலர்கள் சினிமாஜோடிகளைப் போலி செய்து நடித்து ‘ரொமாண்டிக்’ ஆவதைக் காணலாம். வேடிக்கையாக இருக்கும் . நம் மரபில் ஒரு ஆணும்பெண்ணும் பேசிப்பழகி சரசம் செய்வதைப் பார்க்க வழியே இல்லை. ஆகவே இளம்ஜோடிகளுக்கு என்ன செய்வதென்று தெரியாது. சொல்லிக்கொடுப்பது சினிமா மட்டுமே. ஆகவே அதை செய்கிறார்கள்

அதேபோன்ற கும்பல்தான் இதுவும். இவர்களுக்கும் இந்த இடத்தில் என்ன செய்வதென்று தெரியாது. இவர்கள் அறிந்தது தமிழ் சினிமா. அதில் என்ன செய்கிறார்களோ அதைச் செய்கிறார்கள். ‘ஜாலியாக’ இருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள்

நம்முடைய இளைஞர்களின் வளர்ப்பு இதற்கு முக்கியமான காரணம். ரசனை, அழகுணர்வு, குடிமைப்பண்பு, அறிவார்ந்த நோக்கு ஆகியவை குடும்பம், கல்விநிலையம் என்னும் இரு அமைப்புகள் வழியாக வரவேண்டும்

நம்முடைய எத்தனை குடும்பங்களில் குழந்தைகளுக்கு ஏதேனும் ஒரு கலையை ரசிக்கச் சொல்லித்தருகிறோம்? அறிவார்ந்த அணுகுமுறைக்கான ஆரம்பப் பாடங்களை சொல்லிக்கொடுக்கிறோம்? குறைந்தபட்சம் பொது இடங்களில் பண்புடன் நடப்பதைக் கற்பிக்கிறோம்?

நம்முடைய குடும்பங்கள் பெரும்பாலும் சேர்ந்து சமைத்துத்தின்று, உறங்குகிற இடங்கள் மட்டுமே. உறவுகளே கூட சுயநலமும் வன்முறையும் கொண்டவை.நம் குடும்பங்கள் அதன் பிள்ளைகளுக்குப் பணம்சம்பாதிப்பதற்கான உந்துதலை மட்டுமே உருவாக்குகின்றன. கல்வி அப்படி பணம்சம்பாதிப்பதற்கான ஒரு வழிமுறையாகவே முன்வைக்கப்படுகிறது.

நமது பெற்றோர்கள் நாளெல்லாம் பொழுதெல்லாம் இதற்கான முனைப்பை உருவாக்குவதை மட்டுமே குழந்தைகளிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.வேறு எதையும் சொல்லிக்கொடுப்பதில்லை. அந்தக்குழந்தை அதுவாகவே கற்றுக்கொண்டால் உண்டு. அது மிக அபூர்வம்

பல குடும்பங்களுக்குச் செல்லும்போது ஒரு அச்சம் மனதில் படரும். அங்கே பண்பாடு என நாம் நம்பும் எதனுடைய அடையாளமும் இருக்காது. ஒருசில சாமிப்படங்கள் ,பாடப்புத்தகங்கள், ஒரு டிவி- அவ்வளவுதான். அவர்களுக்கு எந்த ஒரு பண்பாட்டுப்பயிற்சியும் இருப்பதில்லை.

நாம் மரபாகக் கொண்டிருந்த எல்லா பண்பாட்டுக்கூறுகளும் ‘வாழ்க்கை வளர்ச்சிக்கு’ உதவாதவை எனத் தூக்கி வீசப்பட்டு விட்டன. ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் ஆராதிக்க ஆரம்பித்துவிட்டோம். ஆனால் ஒரு ஐரோப்பியனும் அமெரிக்கனும் கொண்டுள்ள எந்த பண்பாட்டுப் பயிற்சியையும் கற்றுக்கொள்வதுமில்லை.

கல்விநிறுவனங்களைச் சொல்லவே வேண்டாம். அவை தொழிற்சாலைகள் போல. வேலைசெய்து பணமீட்டும் இயந்திரங்களை மட்டுமே அவை உருவாக்க முடியும். பண்பாடு ,கலை எதற்குமே அங்கே இடமில்லை.

ஒரு சராசரி அமெரிக்கனுக்குக் குடும்பப்பின்னணியிலேயே இசை, ஓவியத்தில் அடிப்படைப்பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதை நான் கவனித்திருக்கிறேன். அவனுடைய கல்வியமைப்பு அவனுக்கு நூல்களை வாசிக்கவும் விவாதிக்கவும் கற்றுத்தருகிறது

யோசித்துப்பாருங்கள். நம்முடைய சராசரி இளைஞனுக்கு ஏதாவது ஒரு ஊடகத்திடமாவது தொடர்புள்ளதா என்று. அவனுக்கு இசை, ஓவியம் என எந்தக்கலையும் அறிமுகமில்லை. அவனால் ஒரு நூலை வாசித்துப்புரிந்துகொள்ளமுடியாது. ஒரு நல்ல செய்தித்தாள் கட்டுரையைக்கூட அவனால் வாசிக்கமுடியாது. ஓரிருபத்திகளுக்குமேல் அவன் கவனமே நிற்காது. எந்தக்கலையிலும் அதிகபட்சம் பத்து நிமிடம் கவனித்தால் பொறுமை இழந்துவிடுவான். ‘அறுவைடா’ என்று சொல்லிவிடுவான்.

பாடப்புத்தக மனப்பாடத்துக்கு அப்பால் அவனால் செல்லமுடியாது. அதைத் தாண்டிவிட்டால் பின்னர் அவன் அவனுடய வேலையை ஒழுங்காகச் செய்வான். அதற்குத்தேவையானதை மனப்பாடம்செய்வான். வேறு எல்லாமே அவனுக்கு அவனுடைய சிறிய எல்லைக்குட்பட்டதாக இருந்தாகவேண்டும். எளிமையானதாக, சாதாரணமானதாக இருந்தாகவேண்டும்.

இல்லாவிட்டால் அதை எளிதாக நிராகரிக்க, நக்கலடிக்க முயல்வான். அவனுடைய நட்பும் சூழலும் அவனைப்போன்றவர்களால் ஆனது என்பதனால் அவனுக்கு அதுவே ‘நார்மல்’ ஆன உலகம் என்று தோன்றுகிறது. மற்றதெல்லாம் ஏதோ சிக்கலான, கிறுக்குத்தனமான, அலுப்பூட்டக்கூடிய விஷயங்களாகத் தெரிகிறது.

அவனுக்குச் சிறு வயது முதலே தெரிந்த ஒரே ஊடகம் தமிழ்வணிக சினிமாவும் அந்த சினிமாவிலேயே மொண்டு சமைத்த டிவியும் மட்டுமே. இரண்டு வயதில் டிவியைப்பார்த்து ’காதல்பிசாசே பருவாயில்லை’ என்று இடுப்பை ஆட்டி ஆடுவதே அவனறிந்த பண்பாட்டுக்கல்வி. அந்த சினிமாவும் எட்டாம் வகுப்புடன் சரி. அதன்பின் கடும் ‘டியூஷன்வாழ்க்கை’. எல்லாம் முடித்து இருபத்தைந்து வயதில் அவன் ஒரு சமூகமனிதனாக மேலே தலைநீட்டும்போது இருக்கும் பண்பாட்டுத்தரம் என்பது அதே எட்டாம்வகுப்பில் இருந்ததுதான். அவனை எப்படிக் குறைசொல்வது?

இங்கே ‘யூத்’ என்றால் எதிலும் நிலையான ஆர்வமில்லாத, எந்த அடிப்படைப்பயிற்சியும் இல்லாத , மேலோட்டமான ஆசாமி என்றுதான் அர்த்தம். ‘ஜாலியாக இருப்பது’ என்றால் முட்டாள்தனமாக, சுரணையற்றவர்களாக, பொதுப்பிரக்ஞை அற்றவர்களாக இருப்பது என்று பொருள். ஒரு பொது இடத்தில் நாலைந்து ‘யூத்து’ வந்துவிட்டால் கிட்டத்தட்ட ஒரு குரங்குக்கூட்டம் வந்துவிட்டதுபோலத்தான்.

இந்த ‘யூத்து’கள் அமெரிக்கா போனாலும் ஐரோப்பா போனாலும் இப்படித்தான் இருக்கிறார்கள். அங்குள்ள எந்தப் பண்பாட்டையும் பொதுநாகரீகத்தையும் கற்றுக்கொள்வதில்லை. சொல்லப்போனால் அவர்கள் அந்த நாடுகளில் வாழ்வதே இல்லை. அங்கே ஒரு சின்ன ‘யூத்துச் சமூக’த்தை உருவாக்கிக்கொண்டு அதனுள் வாழ்கிறார்கள். அங்கும் அதே சினிமாஅரட்டையும் பீர்புட்டியும்தான் அவர்கள் அறிந்தது.

அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ இளைஞர்கள் நுட்பமாக இயற்கையை அனுபவிப்பதை ஒருமுறை சுற்றிவரும் எவரும் காணலாம். அவர்கள் விதவிதமான சாகசப்பயணங்களை செய்கிறார்கள். மலையுச்சிகளில் ஏறுகிறார்கள். நதிகள் வழியாகச் செல்கிறார்கள். காடுகளுக்குள் எந்த வசதிகளும் இல்லாமல் சென்று தங்குகிறார்கள். தன்னந்தனியாக நெடுந்தூரங்களை கடக்கிறார்கள். அந்த ரசனைவழிகள் மிகமிக விரிவானவை, அழகானவை.

நம் யூத்துக்கூட்டம் இதில் எதையாவது செய்து நான் பார்த்ததே இல்லை. இவர்களுக்கு அதெல்லாம் இருப்பதே தெரியாது. பீர்புட்டிகளுடன் சினிமா பாட்டுக்கு நடனமிடுவதையே இவர்கள் அமெரிக்க நாகரீகம் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இணையம் உட்பட எந்த ஊடகத்திலிருந்தும் நம் யூத்துக்கூட்டம் எதையும் கற்றுக்கொள்வதில்லை. ஒருமுறை நண்பர் கெ.பி.வினோத் வீட்டில் இருந்தபோது அவரது கணக்கில் சென்று நம்மூர் ஃபேஸ்புக், டிவிட்டர்களில் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று பார்த்தேன். அதே சினிமா, அதே அரசியல் அதே சில்லறை அரட்டை. அங்கும் ஒரு ‘யூத்துவட்டம்’ உருவாகியிருக்கிறது. இவர்களால் வேறு எதையும் எதிர்கொள்ள முடியாது.

சராசரி ஐரோப்பிய இளைஞன் அல்லது அமெரிக்க இளைஞன் இதற்கு நேர்மாறானவன் என்பதை கவனித்திருக்கிறேன். அவர்களிடம் அடிப்படையான ரசனையும் ,வாசிப்பும், தர்க்கத்திறனும் இருக்கும். கூடவே ஏதேனும் ஒரு தளத்தில் அபாரமான ஈடுபாடு தெரியும். நான் சந்தித்த பலர் நிலைகொள்ளாத் தன்மையுடன் இருந்தார்கள். சில ‘ஹிப்பி’ வகை இளைஞர்களைக்கூட எனக்குத்தெரியும். ஆனால் அடிப்படைப் பண்பாடற்ற ஒரு அமெரிக்க, ஐரோப்பிய இளைஞனை நான் சந்தித்ததே இல்லை. நம்முடைய இந்த ‘யூத்துக்கூட்டம்’ எந்தப்பண்பாட்டின் விளைகனி என்றே தெரியவில்லை.

சில மாதங்களுக்கு முன் சென்னையில் உள்ள மெயின்லாண்ட் சைனா என்ற ஓட்டலுக்கு சென்றிருந்தேன். அந்த உயர்தர உணவுவிடுதியில் பதினைந்து ‘யூத்து’க்கள் அவர்களில் ஒருவருக்கு பார்ட்டி கொடுத்தார்கள். என்ன பேசுகிறார்கள் என்பதை கவனித்துக்கொண்டிருந்தேன். தாளமுடியாத அசட்டுத்தனங்கள். சில்லறைத்தனமான நகைச்சுவைகள். அற்ப சினிமா தகவல்கள். ஹோஹோ என்று சிரிப்பு. உடல்மொழியில் அமெரிக்காவைப் போலி செய்தார்கள். பேச்சு நம்மூர் கிராமத்துப்பாலத்தில் நடக்கும் தரம்.

அதைத் தமிழிலாவது பேசித்தொலையலாம். ஆனால் இது தொழில்நிபுண யூத்துக்கூட்டமாயிற்றே. ஆகவே ஆங்கிலத்தில். என்னுடன் இருந்தவர் ஒரு ஐரோப்பிய இளைஞர். திரைப்பட வரைகலை நிபுணர். அவரும் கவனிப்பதை நான் கண்டேன். ‘இந்த இந்திய இளைஞர்களை என்னால் தாங்கிக்கொள்ளவே முடிவதில்லை. ஒரு ஹலோவுக்கு மேல் நான் இவர்களிடம் பேசவே விரும்புவதில்லை’ என்றார்.

நான் புண்பட்டேன். ‘இவர்கள் சோற்றுக்கல்விக்கு அப்பால் எதுவும் படிக்காத அசடுகள். ஆனால் வேறு தரமான இளைஞர்களும் இங்கே உண்டு’ என்றேன். அவர் மேல்நாட்டினருக்கே உரிய அபாரமான கனிவுடன் ‘நான் பார்க்க விரும்புகிறேன்’ என்றார்.

நான் கோபத்துடன் ‘நாங்கள் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறோம். எதிர்காலம் பற்றிய கவலைகளினால் முழுக்க முழுக்க லௌகீகமாக வளர்க்கப்பட்ட இளைஞர்கள் இவர்கள். குடும்பப் பண்பாட்டுப்பின்புலம் அவர்களுக்கு இல்லை. கல்விப்புலமும் இல்லை. ஆனால் வரும் தலைமுறை அப்படி இருக்காது’ என்று சொன்னேன்.

அது என் நம்பிக்கை.வேறென்ன சொல்ல?

ஜெ

முந்தைய கட்டுரைஃபெட்னா-கடிதம்
அடுத்த கட்டுரைபத்தினியின் பத்துமுகங்கள்