நாத்திகவாதம்- ஒருகடிதம்

ஆசிரியர் அவர்களுக்கு,

வணக்கம். நாத்திகவாதம் எதிர்மறை மனநிலை உடையது என்று சொல்லி இருந்தீர்கள். ஏன் ஆசிரியர் அவ்வாறு சொல்கிறார் என யோசித்தேன். அப்புறம் சிவேந்திரன் கேள்வியை மீண்டும் படித்தேன். அதில் “ஆன்மிகரீதியான தத்துவச்சிந்தனையின் வளர்ச்சியில் கிடைக்கும் மனநிலைக்கும் நாத்திகவாதத்தால் ஏற்படும் மனநிலைக்கும்” என்று அவர் ஒப்பீடு செய்திருந்தது பார்த்தேன். அவர் கேட்டிருந்த கேள்வி எதிர்மறை மனநிலைத் தன்மை உடையதாய் இருந்தது. ஆன்மீக ரீதீயான தத்துவத்தின் மறுபக்கம் என நாத்திகம் வரையறை செய்கின்றார். அந்த நாத்திக வரையறைக்குள் இருக்கும் பொழுது வாழ்வின் சமநிலையும் , முடிவு குறித்தான அச்சமும் இல்லை என சொல்கின்றார்.

எனக்கு இதில் தொடர் கேள்விகள் உண்டு. நாத்திகம் என்பது பல்பொருள் கொண்டது எனவே எனக்குப் படுகின்றது. பொது வெளியில் கடவுள் மறுப்பு எனும் தளம் கொண்டு முன் வைக்கப் படுகின்றது. ஆனால் கடவுள் இருக்கலாம் ஆனால் நிறுவனமாக்கப்பட்ட மத அமைப்பு வேண்டாம் என்பதே நாத்திகக் கொள்கை கொண்டவரின் உள் தேடல் என எனக்குத் தெரிந்த நண்பர் வட்டாரத்தில் கண்டிருக்கின்றேன். ஆனால் அதை நண்பர்கள் வார்த்தையில் சொல்லும் பொழுது கடவுள் மறுப்பு என முடிப்பர். இந்த இரு வார்த்தை முடிவுக்குக் காரணம் லௌகீக வாழ்வில் விரிவான உரையாடலும் , உரையாடல் சார்ந்த தொடர் சிந்திப்பும் பெரும்பாலும் இல்லை என நினைக்கின்றேன். பெரும்பாலான கருத்துகள் பொது நம்பிக்கைத் தளத்தில் நேர்ந்து விடப்பட்டுள்ளன. பொது நம்பிக்கை தனி மனிதர் அகங்காரம் சார்ந்தது. அதைக் கையாளுவது அனைவருக்கும் சுலபம் அல்ல.

நாத்திகவாதம் நகரக் கூடிய ஒரு தேர். பிரம்மாண்டமாய் அது கட்டப்பட்டுக்கிடக்கின்றது. அதை இழுத்து நகர்த்தும் பொறுப்பு உள்ளவர் முடங்கிப் போதலில் தேரும் பழுதானதாய்ப் படுகின்றது. நாத்திக வாதம் நிறுவன உடைப்பு வாதம் எனும் பொருளில் முன் வைக்கப்பட்டு நகருதல் வேண்டும் என்று சில நேரம் படும். அந்த நேரத்தில் கையில் உளியை வைத்து கொண்டு உருட்டி விளையாடிக் கொண்டு இருக்கின்றோமா எனத் தோன்றும். உளியில் செயல் சிலையாய்ப் பூத்தலில் உண்டு.

நிறுவனமாய்க் கூட்டப்பட்டு ,அதிகாரமும், மூலதனமும் தேங்கி அலையும் அமைப்புகளின் இயங்கு தன்மையை உடைத்து நெறி செய்யும் அமைப்பினையே நாத்திகம் எனலாம். அது வெற்றுக் கடவுள் மறுப்பன்று. கடவுளோடு அதற்குப் பேச ஒன்றும் இல்லை. கடவுள் நம்பிக்கை தனி மனித உரிமை என பூரண நாத்திகம் உணரும். அது மறுப்பது நிறுவன அமைப்பின் செயல்தளத்தினையே.

நாத்திகம் கடவுள் மறுப்பாய்க் குறைத்து நிற்கையில் அது உணர்வெழுச்சியோ கவித்துவமோ சாத்தியமாவதில்லை என உருவம் வரலாம் . ஆனால் அது உண்மையன்று.
நாத்திகம் அறவடிவினை, கருணையை ,அழகை நிறுவன அமைப்பின் வெளியே தேடுகின்றது ,இந்தத் தேடல் கவிதையை , கவித்துவத்தினைக் கொடுக்கக் கூடியதே என நான் நினைக்கின்றேன்.

எல்லாவகை மன எழுச்சியிலும் தர்க்க முழுமை உடையவர் நடை முறை சாத்தியம் அல்ல எனவே படுகின்றது. அவ்வாறு உள்ளவர் பூரணம் ஆனவர் ஆவார். நாத்திகம் கோரும்
தர்க்கம் மன எழுச்சியின் மறுப்புக்கு அல்ல, மன விரிவுக்கு என்பதே என் எண்ணம்.

நன்றி
நிர்மல்

முந்தைய கட்டுரைவிண்வெளியில் ஒரு சிவதாண்டவம்
அடுத்த கட்டுரைசி.கே.கே.அறக்கட்டளை விருது