எம்.டி.எம்.மின் கேள்விகள்

ஜெ,

டிவிட்டரில் எம்.டி.முத்துக்குமாரசாமி இந்தக் கேள்விகளை முன்வைத்திருக்கிறார்.

காலச்சுவடுக்கு சென்ற நிதிதானே பூமணியின் நாவல் அஞ்ஞாடி எழுதுவதற்கும் சென்றது ?

காலச்சுவடு தான் பெற்ற நிதியில் புதுமைப்பித்தன் ஆவணக்காப்பகம் அமைத்தது. இதில் என்ன கருத்தியல் இருக்கிறது ஜெயமோகன்?

க்ரியா ஃபோர்ட் நிதியில் தற்காலத் தமிழ் அகராதி கொண்டு வந்தது. இதிலும் கருத்தியல் பரப்புதல் என்ன என்று ஜெயமோகன் கண்டுபிடித்து உதவலாம்.

எந்த இந்து தேசிய அமைப்பு ஜெயமோகனின் புத்தகங்களை வெளியிடும் பதிப்பகத்திற்கு நிதி வழங்குகிறது?

நீங்கள் அவரை முக்கியமான சிந்தனையாளராகச் சொன்னீர்கள். அந்த வகையில் நீங்கள் பதில் சொல்லலாமே!

ராம்குமார்

அன்புள்ள ராம்குமார்,

நான் எம்.டி.எம்.மை அவரது பழையகால கட்டுரைகளின் அடிப்படையில் ஒரு ஹீரோவாக முன்னிறுத்தினேன். அவர் தன்னை காமெடியனாக அரங்கேற்றிக்கொள்ளும்போது என்னால் எதிர்கொள்ள முடியவில்லை.

நான் என் கட்டுரைகளில் ஒன்றை தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். பழையகால எம்ஜியார் படங்களைப்போல அன்னிய ஒற்றர்கள் கன்னத்திலே மருவும் கறுப்புக்கண்ணாடியும் வைத்துக்கொண்டு வந்து ‘இந்தா இந்தியாவை அழி’ என்று சொல்லி தோல்பையில் பணம் கொடுப்பதில்லை.

இத்தகைய நிதிகள் எப்போதுமே முதல்பார்வைக்கு ‘சரியான’ பண்பாட்டு நடவடிக்கைகளுக்கு நேர்மையான தோற்றமுள்ள பண்பாட்டு அமைப்புகள் வழியாகவே அளிக்கப்படுகின்றன. அவற்றின் உள்நிபந்தனைகள் பெறுபவர்களுக்கும் தெரியும்.

இவ்வாறு நிதிபெறும் நிறுவனங்கள் அவற்றை தங்கள் ஓம்புதலுக்கு உட்பட்ட எழுத்தாளர்களுக்கும் பகிர்ந்தளிக்கலாம். அவ்வெழுத்தாளர்கள் அவற்றின் முழுமையான பின்னணியை, இலக்கை அறிந்திருக்கவேண்டுமென்பதில்லை.

நிதிபெற்றவர்களெல்லாம் அயோக்கியர்கள் என்று நான் சொல்லவரவில்லை. ஆனால் நிதி பெற்றவர்களின் கருத்துக்களையும் செயல்பாடுகளையும் அந்த நிதியையும் கணக்கில்கொண்டே யோசிக்கவேண்டும் என்கிறேன். அந்த நிதியும் நம் பண்பாட்டுச்சூழலில் பேசப்பட்டாகவேண்டும் என்கிறேன். அவ்வளவுதான்.

ஆம், பூமணி நிதி பெற்றார் என்பதை அறிய எனக்கு ஏமாற்றமாகவே இருக்கிறது. பெருமாள்முருகன் நிதி பெற்றார் என்பது புரிந்துகொள்ளக்கூடியது.

காலச்சுவடின் இந்திய எதிர்ப்பு நோக்குக்குப்பின்னால் அந்த நிதியை பொருத்திப்பார்க்கும் உரிமை ஒரு வாசகனாக எனக்குண்டு. அதையே நான் செய்கிறேன். எம்.டி.முத்துக்குமாரசாமியின் இந்திய எதிர்ப்பு நிலைபாட்டை அவரது நிதிபீடத்தில் இருந்து பிரித்துப்பார்க்கவேண்டும் என அவர் என்னிடம் மன்றாடுவதை புரிந்துகொள்கிறேன். அவர் தயவுசெய்து கட்டாயப்படுத்தக்கூடாது.

என்னுடைய நூல்களை வெளியிட நிதி ஏதும் தேவைப்பட்டதில்லை. கொஞ்சம் பெரிய நிதி என்றால் விஷ்ணுபுரம் முன்விலைத் திட்டம் அறிவிக்கப்பட்டபோது கோவை ஞானி அவரது நண்பர்களிடம் சொல்லி திரட்டிக்கொடுத்த நூல்விற்பனைதான்.

என் பிரசுரகர்த்தர் ‘தமிழினி’ வசந்தகுமார். அவரை இந்துத்துவராக ஆக்க எம்.டி.எம். முயல்கிறார் என்று நினைக்கிறேன். இந்தியாவிலேயே புத்தகம்போட்டு நொடித்துப்போன ஒரே பதிப்பாளர் அவர். எம்.டி.எம்.மின் கடைக்கண் அவர் மீது பட்டாலும் நல்லதுதான்.

உண்மையில் எம்.டி.எம் போன்றவர்கள் பதிலளிக்கவேண்டியது இந்த பரிதாபமான ‘காலத்தின் குரலுக்கு’த்தான். ‘அக்சுவலா… ஃபோர்டு பவுண்டேசன் என்பவர் யார்?! அவரிடம் நிதி வாங்காதவன் நான் மட்டும்தானா?!’ [செல்வேந்திரன் டிவிட்]

ஆனாலும் ஒன்றுண்டு, எம்.டி.எம்முக்குத்தான் தமிழ்கூறும் நல்லுலகம் நன்றிக்கடன்பட்டிருக்கிறது. தேரை இழுத்து தெருவிலே விட்டவர் அவர்தானே?

ஜெ

முந்தைய கட்டுரைஎஸ்.வி.ராஜதுரை கடிதம்
அடுத்த கட்டுரைஷோபாசக்தி ஒரு கேள்வி