சோ

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்கள் நூல்களை நான் படித்ததில்லையாயினும், தங்களின் இணையதளத்தில் வரும் பெரும்பான்மையான பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து வருபவன் நான். இரண்டு விஷயங்களைப் பற்றித் தங்களிடம் கேட்க வேண்டும் என்று ஒரு ஆவல்.

1. “சோ” ராமஸ்வாமி எழுதியிருக்கும்/ எழுதிக் கொண்டிருக்கும் புத்தகங்களை வாசித்திருக்கிறீர்களா? அவற்றைப் பற்றி தங்கள் கருத்து என்ன? (முக்கியமாக வால்மிகி ராமாயணம், மஹாபாரதம் பேசுகிறது, எங்கே பிராமணன் மற்றும் ஹிந்து மஹா சமுத்திரம் ஆகியவற்றைப் பற்றி தங்களின் கருத்தை அறிய விரும்புகிறேன்)

2. தங்களின் பதிவுகளில் வரும் தமிழ் வார்த்தைகள் புரிந்து கொள்ள சற்றே சிரமமாக இருக்கிறது (அதிலும் என் போன்ற தமிழை வாசிக்க மற்றும் பேச மட்டுமே உபயோகப் படுத்துபவர்களுக்கு) :) தூய தமிழில் நீங்கள் எழுதுவது கட்டாயமாக எனக்கு ஏற்புடைய ஒன்றே. இருப்பினும் சில வார்த்தைகளுக்கு அவற்றின் நேர் ஆங்கிலச் சொல்லையும் பயன்படுத்தினால் என்னைப் போன்றோருக்கு மிக உபயோகமாக இருக்கும். உதாரணமாக கருத்தாக்கம், முரணியக்கவியல் போன்ற பல சொற்கள் எனக்குப் புரியவே இல்லை.

நன்றி,
கணேஷ் பெரியசாமி.

அன்புள்ள கணேஷ் பெரியசாமி

சோ அவர்களின் எழுத்தை நான் ஆரம்பகாலத்தில் வாசித்ததுண்டு. அவரது நாடகங்களில் இருக்கும் நேரடியான அரசியல் கிண்டல் எனக்குப்பிடித்தமானதாக இருந்தது. ஆனால் அவை காலத்தில் விரைவிலேயே பழைமயனவாக ஆகிவிட்டன

இந்துமதநூல்களை விரிவாக அறிமுகம் செய்யும் அவரது எழுத்துக்க்களின் பணியை நான் பெரிதும் மதிக்கிறேன். ராஜாஜி ராமாயணம் மகாபாரதம் ஆகியவற்றுக்கு அளித்த நவீன வடிவங்களுக்கு நிகரான சேவை அது.

மரபான முறையில் இந்த மூலநூல்களை வாசிக்கும் போக்கை ராஜாஜி சோ இருவரிடமும் காணலாம். மதப்பேரிலக்கியங்களில் இருந்து வாழ்க்கைக்கான அற-விழுமியங்களை திரட்டிக்கொள்ளும்பார்வை என அதைச் சொல்லலாம்

அந்தப்போக்கில் எப்போதுமே ஓர் எளிமைப்படுத்தல் உண்டு. அத்துடன் பழைமைவழிபாடு நோக்கும் கலந்திருக்கும். பௌராணிகர்களின் வழி அது.

அதன் அபாயம் என்னவென்றால் பழமையான எல்லா மதிப்பீடுகளையும் அப்படியே அவற்றின் பழைமையை காரணம் காட்டியே நியாயப்படுத்தும் போக்கு உருவாகிவிடும் என்பதே. பழமைவாதம் அல்லது ஆசாரவாதமே இதன் மூலம் மீண்டும் நிறுவப்படும்.

பழைமைவாதிகளுக்கு ஒரு பண்பாட்டுப்பங்களிப்பு உண்டு என்றுதான் நான் நினைக்கிறேன். பழைமைவாதிகள்தான் பண்பாட்டின் தொடர்ச்சியை நிலைநிறுத்துகிறார்கள். ஒரு சமூகத்தில் புதுமைநாட்டமும் பழமைநோக்கும் கொள்ளும் முரண்பாடு மூலமே சரியான முன்னகர்வு சாத்தியமாகும்.

ஆகவே காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி , சோ போன்றவர்களுக்கு ஒரு முக்கியமான இடமுண்டு. அவர்களுடன் விவாதித்து கடந்துசெல்லும் முற்போக்கு நோக்குகளுக்குத்தான் உண்மையின் பெறுமானம் உண்டு. ஆனால் பழைமைவாதத்தை வழிபடும், ஆதர்சமாகக் கொள்ளும் நோக்கு எவ்வகையிலும் எனக்கு ஏற்புடையதல்ல.

அவ்வகையில் சோ அவர்களைவிட ராஜாஜி இன்னும்கொஞ்சம் நவீன மதிப்பீடுகள் கொண்டவ்ராக, பழமையை விமர்சனபூர்வமாக அணுகுபவராக இருந்தாரென்பது என் எண்ணம்.அதற்கு ராஜாஜியின் காந்தியப்பின்னணி ஒரு காரணம்.

சோ மகாபாரதம் போன்றவற்றை முன்னோர் அளித்த பொக்கிஷம் என்ற நோக்கிலேயே அணுகுகிறார். கிட்டத்தட்ட இஸ்லாமியர் குரானை அணுகும் அதே பார்வை. நான் மதப்ப்பேரிலக்கியங்களை இன்றைய வாழ்க்கையில் வைத்து அணுகுவதை, இன்றைய சிந்தனைகளில் வைத்து ஆராய்வதையே சரியான வழி என நினைப்பவன். இந்த வேறுபாடு எங்கள் பார்வைகளுக்கு நடுவே உண்டு

சோவை நான் மதிப்பேன். அவரது நேர்மை மீது எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் அவரை எவ்வகையிலும் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. எப்படி நான் நம்முடைய முற்போக்கினரின் மூர்க்கமான மரபு நிராகரிப்பை எதிர்க்கிறேனோ அதேபோலவே சோவின் கண்மூடித்தனமான மரபு ஆதரிப்பையும் எதிர்க்கிறேன். என்னுடையது நடுவே உள்ள பாதை.

*

என்னுடைய கட்டுரைகளில் உள்ள கலைச்சொற்கள் நீண்ட காலமாக சிற்றிதழ்ச்சூழலில் புழங்கி வரக்கூடியவை. ஒரு சிந்தனையை சரியாகச் சொல்லும் ஒரு நல்ல கலைச்சொல் ஒவ்வொருமுறையும் அச்சிந்தனையை விளக்கிக்கொண்டிராமல் மேலே பேசிச்செல்ல இடமளிக்கிறது

ஒவ்வொருமுறையும் அச்சொற்களை ஆங்கிலப்படுத்திக் காட்டமுடியாதல்லவா? இச்சொற்களின் பொருட்களை நீங்கள் விக்ஸனரி போன்ற இணையதளங்களில் எளிதில் அறிந்துகொள்ளலாமே

ஜெ

முந்தைய கட்டுரைஅமெரிக்காவில் நாஞ்சில்நாடன்
அடுத்த கட்டுரைஎன் இரு ஆங்கில நூல்கள்