இணையதள வாசகர்கள்

ஜெ,

உங்கள் பதில் அற்புதம். சாதாரணமாக ஆரம்பித்து (வழக்கம் போல :)) தத்துவார்த்த தளத்திற்கு சென்று விட்டது. என்ன பயன் என்று கேட்டதற்கு ஒரு உற்சாக டானிக் பதிலாகக் கிடைத்துவிட்டது.

// இதை எப்படி மேலும் efficient ஆக செய்வது, அடுத்த லெவலுக்கு இந்த மாதிரி தளங்களை எப்படிக் கொண்டுபோவது என்ற கேள்வி. //

என்றும் ஆர்.வி. கேட்டார். அதனால் அவர் சில practical tips, யோசனைகள், கூட்டு முயற்சிகள் ஆகியவை பற்றி ஐடியாக்கள் கேட்கிறார் என்று படுகிறது.

சரிதானே ஆர் வி?

ஜடாயு

அன்புள்ள ஜடாயு,

ஆர்வி சொல்வதில் உள்ள நடைமுறைப் பிரச்சினையை நான் இவ்வாறு புரிந்துகொண்டிருக்கிறேன். இணையதளங்களின் வாசகர்களை சில குழுக்களாகப் பிரித்துப்பார்க்கலாம். நாம் இலக்காக்குபவர் எவரென்ற எண்ணம் நமக்குத்தேவை.

இணையம் ஆரம்பிக்கும்போதே உள்ளே வந்தவர்கள் நிறையப்பேர் உள்ளனர். பெரும்பாலானவர்கள் தாங்களும் பிளாக் வைத்து எதையோ எழுதிக்கொண்டிருப்பார்கள். ஆகவே மூத்த வலைப்பதிவர்கள் என அறியப்படுகிறார்கள். பலர் தங்களை எழுத்தாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் துணிவு கொண்டவர்கள்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் கற்பனையோ, அறியும் ஆர்வமோ இல்லாதவர்கள். பலர் பத்து வருடமாக வாசித்து, எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்றாலும் மொழியில், கூறுமுறையில் ஒரு சிறிய வளர்ச்சியைக்கூட காணமுடியாது. பெரும்பாலும் அரட்டை என்ற எல்லைக்குள்ளேயே நின்றுவிட்டவர்கள். எங்கும் எதிலும் ஆழம் நோக்கிய தேடலோ எதையும் கவனிக்கும் பழக்கமோ இல்லாதவர்கள்.

ஆனால் இவர்களில் நிறையப்பேர் மிக இறுக்கமான அரசியல் நிலைப்பாடு அல்லது சாதியப்பிடிப்பு கொண்டவர்கள் என்பதை ஊகிக்கிறேன். பெரும்பாலும் இவர்களின் கருத்துக்களுக்குள் அந்தப் பற்றுகள்தான் இருக்கும். இவர்களின் முதல் ஈடுபாடு வம்பு என்பதனால் [முறையே வசைகள், சினிமா, அரசியல், சாப்பாடு] எவர் எங்கே சண்டை போட்டாலும் அங்கே சென்று குவிவார்கள்.

இவர்கள் நம் இணையதளத்தை வாசிக்கலாம், கருத்தும் சொல்லலாம். ஆனால் இவர்களால் எந்த பயனும் இல்லை. இவர்களிடம் பேசுவதென்பது களரில் விதைப்பது போல. ஒருபோதும் இவர்களுடன் விவாதிக்கக்கூடாது. ஒருபோதும் இவர்கள் சொல்லும் ஒரு கருத்தையும் பொருட்படுத்தக்கூடாது. பாராட்டுகளைக்கூட.

இவர்களிடம் விவாதங்களில் இறங்குபவர்கள் இவர்களால் ஆழமாகப் புண்படுவதற்கு வாய்ப்புண்டு. ஏனென்றால் இணையம் ஒரு அமனித வெளி. தனிமனிதத் தொடர்புகள் இங்கே இல்லை. மேலும் இவர்கள் வசைபாடுதல், நக்கலடித்தல் ஆகியவற்றையே பல ஆண்டுகளாகச் செய்து அதில் தேர்ச்சியும் பெற்றிருக்கிறார்கள்.

அனைத்துக்கும் மேலாக லௌகீகத்தில் எங்கோ எப்படியோ அடைந்த தோல்விகளின் கசப்பை இங்கே கொண்டுவந்து கொட்டுபவர்களாகவே பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள். இவர்களுடனான கசப்பை இணையம் மீதான கசப்பாக நாம் ஆக்கிக்கொள்ள நேரும். இழப்பு நமக்குத்தான். இதைப் பத்தாண்டுகளுக்கு முன் இணையத்துக்கு வந்த காலத்திலேயே உணர்ந்து எச்சரிக்கையாகிவிட்டேன்.

சென்ற சில ஆண்டுகளாக இணையதளம் ஒரு பொதுவெளியாக ஆனமையால் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே வந்துகொண்டிருக்கும் பொதுவாசகர்களையே நாம் இலக்காக்கவேண்டும். அவர்கள் பலவகைப்பட்டவர்கள். தங்களுக்கு உகந்த எதையேனும் தேடி நம் இணையதளத்துக்கு வருபவர்கள். புதிய விஷயங்களைக் கண்டு ஆர்வம் கொண்டு வாசிக்க ஆரம்பிக்கிறார்கள்.

இவர்கள் பெரும்பாலும் சிலவருடங்கள் கழித்தே தங்களை வெளிப்படுத்திக்கொள்வார்கள். ஆகவே இவர்கள் இல்லை என்றே நாம் நினைத்துக்கொள்வோம். இவர்களே நம் உண்மையான வாசகர்கள். இவர்களில் நாம் உருவாக்கும் பாதிப்பே உண்மையானது.

இவர்கள் பலர் சீக்கிரத்திலே இணையத்தின் அரட்டை-சண்டை உலகில் சென்று கரைந்துவிடக்கூடும். சிலர் ஆர்வமிழந்து பின் தங்கிவிடக்கூடும். ஆனாலும் கூட நமக்கு வாசகர்கள் வந்தபடியேதான் இருப்பார்கள். தமிழில் ஆழமான தடம் பதித்த பல சிற்றிதழ்கள் 500 பிரதிகளே அச்சிடப்பட்டன. ஆனால் ஒரு சாதாரண இணையதளமே 2000 வாசகர்களைப் பெறமுடியும். ஆகவே இது மிகப்பெரிய வாய்ப்பு.

சமீபகாலமாகப் பல்வேறு சமூக ஊடகங்களில் இணையதளக் கட்டுரைகளை வாசிக்கமுடிகிறது. அது வாசகர்களை அதிகரித்திருக்கிறது. செல்பேசியில் வாசிக்கமுடிந்த பின் அவ்வெண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கிறது. நான் சிலிகான் ஷெல்ஃபில் ஒரு கட்டுரையைக்கூடப் படிக்காமல் விட்டதில்லை. அதேபோலப் படித்த நண்பர்களையே சந்தித்துக் கொண்டிருக்கிறேன். ஆர்வி அவர்களை அறியமாட்டார்.

இதற்கும் அப்பால் ஒரு விஷயம் உண்டு. வாசகர்களை உருவாக்குவது தமிழின் பொதுவான பண்பாட்டுவெளிதான். அது இன்று இலக்கியம் கலை போன்றவற்றுக்கு இடமில்லாதது. வணிகம், அதிகார அரசியல், கேளிக்கைசினிமா என்னும் மூன்று அம்சங்களால் ஆனது அது. அதன் பொதுவான கருத்தியல்தளம் அந்த மூன்றிலும் மட்டுமே ஆர்வம் கொண்ட மனிதர்களையே சாதாரணமாக உருவாக்குகிறது.

ஆகவே இங்கே ஒருவருக்கு இருக்கும் கலை இலக்கிய ரசனை மற்றும் சிந்தனைத் திறன் என்பது நம்மைச்சுற்றி உள்ள பொதுவான போக்கில் இருந்து மீறி விடுபட்டு அவர் உருவாக்கிக்கொண்ட ஒன்று. ஒரு சர்வசாதாரணமான இலக்கியவாசகர், கலைரசிகர் கூட நம் சூழலில் ஒரு மீறலும் அபூர்வநிகழ்வுமாக இருப்பவர் என்பதை நாம் கணக்கில் கொள்ளவேண்டும்.

ஒருவருக்கு அவரது இளமையிலேயே கிடைக்கும் அனுபவங்களும் திறப்புகளுமே அவரை அப்படி ரசனையும் சிந்தனையும் கொண்டவர்களாக ஆக்குகின்றன. இங்கே அது பெரும்பாலும் தற்செயலே. அப்படி ரசனையும் சிந்தனையும் முன்னரே கொண்ட ஒருவர் நம் இணையதளத்தைச் சந்திக்கும்போது ஒரு வாசகர் நமக்கு அமைகிறார். அதுவும் ஒருவகைத் தற்செயலே.

நாம் வாசகர்களை உருவாக்க முடியாது. நாம் அவர்களைக் கண்டடையக்கூட முடியாது. அவர்கள் நம்மைக் கண்டடைவது மட்டுமே வழி. ஆகவே நாம் ‘வலை’ விரித்து அமர்ந்திருப்பதை மட்டுமே செய்யமுடியும்.

இதற்குமேல் இணையதளம், புத்தகம் போன்றவற்றைப் ‘பிரச்சாரம்’ செய்யலாமென நிறையப்பேர் நினைக்கிறார்கள். இலக்கியத்தைப் பிரச்சாரம் மற்றும் வினியோகம் மூலம் வளர்க்க முடியாது. இலக்கியம் சூழலில் உருவாகும் பண்பாட்டு மாற்றம் மூலமே வளரும். கர்நாடக சங்கீதத்துக்கு உள்ள ஊடக விளம்பரம் அதை ஒரு மக்களியக்கமாக ஆக்கியதா என்ன? அதற்கான ரசனை உள்ளவர்களை மட்டுமே அது சென்றடையும். அந்த ரசனை அதற்கான பண்பாட்டுச்சூழலில் சிறுவயதுமுதலே உருவாகக்கூடியது.

தமிழகத்தில் கண்டிப்பாக ஒரு பண்பாட்டு மாற்றம் நிகழ்ந்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் நூல் விற்பனை நூறு மடங்கு ஏறியுள்ளது என்பது தெரியுமா? அந்த மாற்றத்தை நிகழ்த்தியதில் இணையதளங்களுக்கும் பங்குண்டு. அதில் ஆர்வியும் பங்கெடுக்கிறார்.

ஆனால் பண்பாட்டு மாற்றமென்பது சாதாரணமாக நிகழ்வதல்ல. மெல்லமெல்ல அணுவணுவாக நிகழ்வது அது. கண்ணுக்குத் தெரியாத அசைவு அது. அது நிகழ்ந்ததை சில ஆண்டுகள் கழித்தே நம்மால் உணரமுடியும்.

ஆகவே நாம் செய்யக்கூடுவது ஒன்றே. நம்மை மேலும் தீவிரமும் மேலும் விரிவும் கொண்டவர்களாக ஆக்கி முன்வைப்பது.

ஜெ

முந்தைய கட்டுரைதினமணி -யானை டாக்டர்
அடுத்த கட்டுரைபயணத்துக்குக் குழு தேவையா?