ஞானமும் மெய்ஞானமும்- சீனு கடிதம்

10-5-2011

இனிய ஜெ.எம். சார்,

“இன்று பெற்றவை” படித்தேன். ஜக்கி வாசுதேவ் பற்றிய உங்கள் அவதானம் கண்டேன். 2008 ஏப்ரலில் எழுதியது. இன்று உங்கள் கருத்துநிலை மாறியும் இருக்கலாம், இருப்பினும் அப்பதிவு குறித்து உங்களிடம் சில வார்த்தைகள் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

சில வருடங்களுக்கு முன் நெருங்கிய நண்பரின் இனிய வற்புறுத்தலால்- தவிர்க்க மனமற்று ஈஷாவின் தியான வகுப்பில் கலந்து கொண்டேன். பொதுவாகவே நவீன சாமியார்களின் வழிகாட்டும் உரைகளோ, அவர்களின் வகுப்புக்கான அழைப்புகளோ எனக்குக் கிஞ்சித்தும் பிடிப்பதில்லை. உதாரணமாக ஞாபக சக்தி மேம்பாடு (+12 தேற வேண்டுமல்லவா?) மனச்சிக்கல்கள் (40 வயதுக்கு மேல நாய்குணம்), ரத்த அழுத்தம் (காலேஜ் போற புள்ளய நினச்சா தன்னால எகிறிடாதா?) சர்க்கரை வியாதி, மூட்டுவலி, முதுகுவலி (இத்தனையோடு போய்ச் சேர்ந்தால் சொர்க்கத்தில் இடம் கிட்டாதல்லவா?) எல்லாம் குணமாகும் 1 வார தியான முகாம். (அறிமுக உரை இலவசம்). இப்படித்தான் எல்லா (ஆ)சாமியார்களும் விளம்பரம் தந்து 6முதல் 60வரை எல்லோரையும் துண்டு போடுகிறார்கள். ஊன்றுகோல் தேவைப்படாத மனிதன் யாரேனும் உண்டா என்ன?

ஓர் அனுபவமாக இருக்கட்டுமே எனக் கலந்து கொண்டேன். எனக்கு அன்லோக் (குருஜீ தீட்சை தந்து வைத்த பெயராம்) என்பவர் வகுப்பெடுத்தார். தன் குருவைப் போலவே, வேறு மாநிலத்தவர் போல உடைந்த தமிழில் பேசி வகுப்பெடுத்தார். பின் தனிப்பட்ட உரையாடல்களில் சரியாகவே தமிழ் பேசினார். சேலத்துக்காரர். வேறு வகுப்பு ஒன்றை எட்டிப் பார்த்தேன். [அங்கும் உடைந்த தமிழ் வாத்தியார். அவரும் வகுப்பு முடிந்த பின் இயல்பான தமிழே பேசினார்]. என் சீரியசான பல கேள்விகளுக்கு, “உங்களைப்போன்ற தீவிரவாதிகளைத்தான் எங்கள் குரு தேடிக்கொண்டிருக்கிறார். அவசியம் கோவை வரவும். அங்கே பேசிக்கொள்ளலாம்” என சிம்பிளாக முடித்துக் கொண்டார் அன்லோக்.

என் கேள்விகளுக்கு பதில் கிடைக்காததால் இறுதி நாள் வகுப்புகளில் பங்கேற்பாளனாக இல்லாமல் வெறும் பார்வையாளனாக மட்டும் கலந்துகொண்டேன். அன்லோக் மடக்கி மடக்கி ஏன் என்று விசாரித்தார் (மந்தையில் இருந்து ஆடு விலகினால் மேய்ப்பனுக்கு இழுக்குதானே?) நான் என்னிடம் இருந்த ஒரே கேள்வியைத் திரும்பக் கேட்டேன். “நீங்கள் எனக்கு வகுப்பெடுக்க உங்கள் குருவிடம் பாடம் கற்று வந்துள்ளீர்கள். எனக்கு ஞானம், விழிப்புணர்வு இதன் அர்த்தம் ஏதும் விளங்கவில்லை. உங்கள் குரு விழிப்புணர்வு கொண்டவர் என்றும், நான் விழிப்புணர்வு இல்லாதவன் எனவும் நீங்கள் எந்த மையத்தில் இருந்து அறிந்து கொண்டீர்கள்?’’அத்தோடு ஓடியே போனார் அன்லோக்.

நான் வகுப்பில் கலந்து கொள்ள (நன்கொடை!) செலுத்திய தொகைக்கான ரசீது வரவே இல்லை. கேட்டும் கிடைக்கவில்லை. மைய சேவைகளின் புரவலர் மாவட்டத்தின் முதல்தர வரி ஏய்ப்பாளர். ஞானி தாமரை இலைத் தண்ணீராக இருக்கலாம், சமூக செயல்பாடு என வரும்போது இத்தகைய கிரிமினல்களை விட்டு விலகி இருப்பது தானே முறை? “உள்தன்மையில் மாற்றம்’” என்ற ஜக்கியின் பிரகடனம் முதலாளியை ஏதும் பாதித்ததாகத் தெரியவில்லை. இவரைப் போன்றவர்களை விட்டுவிலகி இருக்க ஜக்கியாலும் முடியாது.

கடலூரில் மட்டும் சராசரியாக வருடத்துக்கு 1000 பேர் வகுப்பில் கலந்து கொள்கிறார்கள். தலைக்கு 500 எனில் வருடம் 5 லட்சம். நெய்வேலி, விருத்தாசலம், பண்ருட்டி, சிதம்பரம் என சேர்த்தால் வருடம் கால் கோடி, கடலூர் மாவட்டத்தால் ஈஷா மையம் அடையும் வருமானம் மட்டும். மொத்தத் தமிழ்நாடு? ஜக்கியை நாராயணகுருவுடன் எந்தப் புள்ளியில் இணைத்தீர்கள்? கடலூரில் ஈஷா மையம் நடத்தும் மெட்ரிக் பள்ளியில் சேர்வது பற்றி ஒரு சராசரி வருமானக்காரனால் கனவுகூடக் காணமுடியாது. நாராயணகுரு கேரளக் கல்வி மேம்பாட்டுக்கு ஆணிவேர். அவரும் ஜக்கியும் ஒன்றா?

சகல பார்வையாளனையும் குறிவைத்து இயங்கும் ஹாலிவுட் படம் போன்றதே ஈஷாவின் செயல்பாடு. ஒரு முகமதியரிடம் இருந்தோ, யூதரிடம் இருந்தோ 500 ரூபாயை மத அடையாளத்துடன் கறக்க முடியுமா என்ன? ஜக்கி எதை நவீனப்படுத்தினார்? வள்ளலார் சைவ சமயத்தை அதன் ‘தூய நிலைக்கே’ மாற்ற முயன்றார். அவர்காலத்தில் அவர் சந்தித்த எதிர்ப்புகள் வரலாறு. ஒவ்வொரு மாதமும், பூசம் அன்றும் சத்ய ஞான சபையில் குறைந்தது 10 முஸ்லிம் பெண்களையாவது பார்க்கலாம். ஈஷா ஆஸ்ரமத்தில் அப்படி எத்தனை பேரைப் பார்க்க முடியும்? ஒவ்வொரு மாதமும், வருடமும் பூசம் அன்று வடலூரில் கூட்டம் கூடிக்கொண்டேதான் இருக்கிறது. இதுவே வள்ளலாரின் “செயல்பாட்டுக்கான” அத்தாட்சி. மாறாக வடலூரிலும், திருவண்ணாமலையிலும் கூட்டப்பொழுதுகளில் ஜக்கி, ரவிசங்கர், அம்மா பகவான் என எல்லாரும் பிரும்மாண்ட டிஜிடல் பேனர்களில் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.

நாராயணகுருவோடும், ராமகிருஷ்ண மடம், வள்ளலாரோடும் ஜக்கியை நேர் நிறுத்தி இருப்பது என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. நாஞ்சில்நாடன் போன்றவர்களைத்தான் வாழ்வு சுழன்றடிக்கும். காரணம் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஜக்கி, ரவிசங்கர் போலப் பேர், புகழ், பணம், அதிகாரவர்க்க அணுக்கம், பணிந்து கிடக்கப் பல்லாயிரம்பேர் எனக் காலம் கடத்துபவர்களுக்கு வாழ்வு என்னவிதமான சவாலை வழங்கும்? இத்தனை ‘குருஜி’க்களைக் காண ஏழு ஜென்மம், ஊசியை நட்டுவைத்து, அதன் மேல் கட்டைவிரலை ஊன்றி நின்று தவம் செய்திருக்க வேண்டும். சாதாரணமாகப் பார்க்க முடிந்தால் ஒளிவட்டம் என்னாவது? ‘நேரடி தரிசனம்’ தரும்போதுகூட, சீடர்கள் வழி துண்டுச் சீட்டு அனுப்பியே நம் கேள்விகளுக்கு பதில் பெறமுடியும் (குருவின் கடாட்சம் இருந்தால்). இந்த விலகலுக்கு மூலகாரணம் நேர்மையான கேள்விகளுக்கு இவர்களால் பதில் சொல்ல முடியாது என்பதே.

மாறாக நாராயணகுருவும் வள்ளலாரும் மக்களோடு மக்களாக வாழ்ந்து மறைந்தவர்கள். கோவை ஆசிரமம் டி.ராஜேந்தர் பட செட்டிங் என்பதைத் தாண்டி எந்த மதிப்பும் இல்லாதது. தியான லிங்கத்தில் குரு தன் தவ வலிமையைப் பூட்டிவைத்திருப்பதாக அன்லோக் சொன்னார். முதலில் பூட்டியபோது சில தவறுகளால் பூட்டமுடியவில்லையாம். பிறகு அரும்பாடுபட்டு இதை சாதித்தாராம். திருவக்கரையில் பிரும்மாண்ட அம்மன் சிலையை நிறுவிக் குறி சொல்பவருக்கும் இவருக்கும் எந்தப்பேதமும் இருப்பதாகத் தெரியவில்லை.

சில வாரங்கள் முன் திருவண்ணாமலை சென்றிருந்தேன். தன் ‘மிருக விதூஷகம்’ நாடகம் காண முருக பூபதி எங்கள் குழுவை அழைத்திருந்தார். சீக்கிரம் கிளம்பி ரமணாஸ்ரமம் சென்று விட்டேன். கந்தாஸ்ரமம் வரை மலையேற்றம், கிழக்கே மழை மேகம் கொண்டு கருத்தவானம், மேற்கே அந்திச் சிவப்பு சூரியன். பொன்னொளி கொண்டு துலங்கும் அடிவாரத் திருவண்ணாமலை. நதிப்பிரவாகமெனக் காற்று, ரேடியம் பச்சையாக ஒளிரும் செடிகொடிகள் மௌனம் மௌனம். மயில்கள் அகவும் மௌனம். ஏகாந்தம் ஏகாந்தம் நான் தனியன் இல்லை, நான் கைவிடப்பட்டவன் இல்லை என உரக்கச் சொல்லும் ஏகாந்தம்.

சடசடவென இறங்கியது மழை, பதுங்க இடம்தேடிக் காலிடை ஓடியது அணில் ஒன்று. ரமண குகைக்குள் அமர்ந்தபடி மழையை அதில் நனையும் திருவண்ணாமலையை, பொம்மை எனத்தோன்றும் கோயிலை வேடிக்கை பார்த்தவாறிருந்தேன். மனம் கரைந்து அழுதுகொண்டிருந்தேன் எனப் பிற்பாடுதான் கண்டுகொண்டேன். ரமணருக்கு குரு என்று எவரும் இல்லை என்ற வாக்கியத்தின் அபத்தம் உறைத்தது. ரமணர் தன் குருவின் சந்நிதியில்தான் வாழ்ந்து மறைந்திருக்கிறார்.

நம்மைச்சூழ இருக்கும் இவற்றைவிட இந்த தாடிவாலாக்கள் தரும் விஷயங்களில் ஏதேனும் பயன் மதிப்பு இருக்கிறதா என்ன? நவீன வாழ்வில் நாம் செய்தது ஒன்றுதான். நம் புற வாழ்வை மூன்றாம் தர அரசியல்வாதிகளைச் சுரண்ட விட்டு விட்டோம். அக வாழ்வை சுரண்ட இத்தகைய சாமியார்களைக் காசு கொடுத்து அமர்த்தி இருக்கிறோம். சமமாக இயற்கையை அறியும் ஆற்றலைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இயற்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறோம்.

இந்த சாமியார்கள் கொஞ்சமாவது நாணயமான பேர்வழிகளாக இருந்தால் முதலில் இயற்கையைப் பருகும் கண்களையே நமக்கும் தரவேண்டும். யோகா வெண்டக்கா எல்லாம் பின்னால் தன்னால் வந்து சேரும். ஜக்கி மீதான உங்கள் ஈர்ப்பு ஏனோ என்னைச் சமன் குலைய வைத்துவிட்டது. ஆகவேதான் இக்கடிதம். என் கடிதத்தில் தவறும், முதிர்ச்சியின்மையும் தென்பட்டால் மன்னிக்கவும்.

என்றும் நட்புடன்,

சீனு

வள்ளலார்

முந்தைய கட்டுரைஅருகர்களின் பாதை 7 – ஆயிரத்து எண்ணூறு கிலோமீட்டர்கள் கடந்து பெல்காம், கித்ராபூர், கும்போஜ்
அடுத்த கட்டுரைகடிதங்கள்