அன்புள்ள ஜெயமோகன் – ஒரு நூல்

கடலூர் சீனு என்கிற சீனிவாசன் எனக்கு 2006ல் வாசகராக ஒரு நீண்ட கடிதம் வழியாக அறிமுகமானார். அன்றைய சீனுவை என் நூல்களின் வாசகர் என்பதைவிட விஷ்ணுபுரம் நாவலின் வாசகர் என்று சொல்வதே முறையாக இருக்கும். பல வருட காலமாக மீண்டும் மீண்டும் அந்நாவலை வாசித்துக்கொண்டிருந்தார். வாசிக்க வாசிக்கக் கடிதம் போடுவார். அவரளவுக்கு அந்நாவலின் நுட்பங்களைத் தொட்டு வாசித்த வாசகர்கள் மிகமிகக் குறைவு என்பதே என்னுடைய எண்ணம். அவரது கடிதங்கள் வழியாக நானும் விஷ்ணுபுரத்தை மீண்டும் மீண்டும் கண்டறிந்து கொண்டே இருந்தேன். அதன்பின் மெல்ல அவர் கொற்றவை நோக்கிச் சென்றார். சமீபத்தில் ஒரு சந்திப்பில் கொற்றவையின் பல பகுதிகளை அவர் மனப்பாடமாகச் சொன்னபோது நான் வியப்படையவில்லை.

சீனு நானறிந்த அபாரமான வாசகர்களில் ஒருவர். தமிழிலக்கியத்தின் மொத்த விரிவையும் அள்ளி எடுக்கக்கூடிய ஆர்வமும் வேகமும் கொண்டவர். மிக அபூர்வமான தமிழ்மொழியாக்கங்களைக்கூட அவர் வாசித்திருப்பார். ஒரு நூலில் ஏதேனும் ஐயமென்றால் நான் கூப்பிட்டுக்கேட்கும் வாசகர்களில் ஒருவர் அவர். பலசமயம் என் நாவல்களைப் பற்றியே அவரிடம்தான் ஐயம் கேட்பது. கோணங்கிக்கு நெருக்கமானவர்.

ஒருகட்டத்தில் தொலைபேசியில் பேச ஆரம்பித்தோம். வாரம் இருமுறை கூப்பிடுவார். ஒவ்வொருமுறையும் ‘சாரி சார்…’ என்றுதான் பேச்சை ஆரம்பிப்பார். என் நேரத்தை எடுத்துக்கொள்வதைப்பற்றிய உணர்வுடன் பேசுவார். பேச்சுமுடிகையிலும் அதேபோல மீண்டும் ஒரு ‘சாரி’ . பெரும்பாலும் அவர் அன்று வாசித்த விஷ்ணுபுரம் அல்லது கொற்றவையின் ஒரு பகுதியைப்பற்றிப் பேசுவார். அங்கிருந்து அன்றாட அனுபவங்களை நோக்கிச்செல்வார். சீனு என்னைப்போலவே ஒரு அபாரமான பயணி என கண்டுகொண்டேன். பலமுறை விசித்திரமான இடங்களில் இருந்தெல்லாம் அழைத்திருக்கிறார். திருவண்ணாமலையின் உச்சியில் இருந்து, கெடிலம்நதியின் கரையோரமாக பௌர்ணமியில் பைக்கில் நண்பர்களுடன் சென்றபடி…

உற்சாகமும் சிரிப்பும் ததும்பும் இளைஞராகவே நான் சீனுவை ஒருவருடத்திற்கும் மேலாக அறிந்திருந்தேன். 2008 மார்ச் 11 ஆம் தேதி சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழாவுக்காக சிதம்பரம் சென்றிருந்தேன். சீனுவிடம் நான் சிதம்பரம் வரப்போவதைச் சொல்லியிருந்தேன். ஈரோட்டு நண்பர்கள் விஜயராகவன், கிருஷ்ணன், சிவா வந்தனர். கல்பற்றா நாராயணன் கூட இருந்தார். அப்போது நான் எம்ஜிஆர் ,சிவாஜி பற்றி எழுதிய கட்டுரைகளை விகடன் விவாதமாக ஆக்கி நான் ’தலைமறைவாக’ த் திரிந்துகொண்டிருந்தேன். சிதம்பரத்தில் நான் இருப்பதை நண்பர்கள் எவருக்கும் சொல்லக்கூடாதென்று சீனுவுக்கும் சொல்லியிருந்தேன். பொதுவாக நான் தொலைக்காட்சிகளில் அதிகம் தோன்றியதில்லை என்பதனால் என்னை எவருக்கும் தெரியாது. ஆகவே சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருந்தேன், வீட்டில் இருந்தால்தான் சிக்கலே.

சிதம்பரம் நாட்டியாஞ்சலியில் முன்வரிசையில் அமர்ந்திருந்தபோது கரிய மெலிந்த இளைஞர் வந்து என்னருகே அமர்ந்தார். நான் அவரை கவனிக்கவில்லை. வெகுநேரம் அருகே அமர்ந்திருந்த பின் நடன இடைவெளியில் மெல்லக் குனிந்து ’நான் சீனு, கடலூர்’ என்றார். மகிழ்ச்சியாக இருந்தது. அவரைத் தழுவிக்கொண்டேன். சோடா புட்டிக்கண்ணாடிக்குள் சிறுவனைப்போன்ற சிரிக்கும் கண்களுடன் சீனு அப்போதுதான் அறிமுகமானார்

அதன்பின் மெல்லமெல்ல சீனு இன்னும் நெருக்கமானவராக ஆனார். நெல்லையில் இருந்து கடலூரில் குடியேறிய குடும்பம் சீனுவுடையது. சீனுவின் வாழ்க்கை,சோதனைகளும் சிக்கல்களும் நிறைந்தது. எலும்பில் கால்ஷியம் குறைவாக இருக்கும் பிறவிக்குறை அவருக்குண்டு. அவரது தந்தை கடலூரில் மூக்குப்பொடி வணிகம் செய்துவந்தார். அது நொடித்துப்போனபின் சீனு பலவகையான சிறிய வேலைகள் செய்துவருகிறார். ஆனால் தளராத ஊக்கம் மூலம் தன்னுடைய குடும்பத்தை மீண்டும் சகஜநிலைக்குக் கொண்டுவர அவரால் முடிந்தது. நண்பர்களுடன் மிக நேர்த்தியான உறவுள்ளவர். இந்த மெலிந்த சிறிய இளைஞர் எத்தனை பேருக்குத் தாங்காக இருந்துவருகிறார் என நான் நினைத்துக்கொள்வதுண்டு

நான் கடிதங்களுக்கு பதில் அளிக்காமலிருப்பதே இல்லை. ஆனால் சீனு ஒருநாள் எழுதிய நீண்ட அகவயமான கடிதத்துக்கு பதிலளிக்கவில்லை. அவர் தொடர்ந்து எனக்குக் கடிதங்களாக எழுதிக்கொண்டிருந்தார். எந்தக்கடிதத்துக்கும் நான் பதிலே அளித்ததில்லை. ஒரே ஒரு கடிதத்துக்கு மட்டும் பதிலளித்தேன். அதைமட்டும் ஓர் இணைமனம் என்ற பேரில் நானே தட்டச்சிட்டு என் இணையதளத்தில் வெளியிட்டேன். அது என் பிறநண்பர்களுக்கு சீனு எனக்கு யார் என்பதைக் காட்டுவதற்காகவே.

அந்தக் கடிதத்தில் ஒரு வரி எழுதியிருந்தேன். ’நீங்கள் எழுதிய இக்கடிதத்தை நானே தட்டச்சிட்டு வலையேற்றுகிறேன். ஒரு காரணத்துக்காக. அன்புள்ள சீனு, வாசகன் எழுத்தாளனாக ஆகும் ஒரு தருணம் உண்டு. அதை நோக்கி வந்திருக்கிறீர்கள். நீங்கள் எழுதுவது உங்கள் விருப்பம். ஆனால் நீங்கள் எழுத முடியும்’ ஏனென்றால் சீனுவின் மொழிநடையின் தடையற்ற ஒழுக்கு, கச்சிதம்,கூர்மை பற்றி எனக்கு எப்போதுமே ஒரு ஆச்சரியம் உண்டு. சீனு இக்கடிதங்கள் அல்லாமல் எதுவுமே எழுதியதில்லை என்ற வகையில் அந்த ஆச்சரியம் அனைவருக்கும் உருவாகக்கூடியதே.

சீனு இன்னும் எழுத ஆரம்பிவில்லை. ஆனால் எழுதக்கூடியவர்தான். அந்த ஊக்கத்தை இந்த நூல் அளிக்கலாம். இது நூலாவதற்கு முக்கியமான காரணம் அதுவே. அத்துடன் இச்சிறு நூல் இன்னும் சில காரணங்களாலும் முக்கியமானது. ஓர் எழுத்தாளனுக்கும் வாசகனுக்குமான உறவு எத்தகையது என்பதற்கான ஆவணம் இது. இவற்றில் உள்ள இயல்பான சொந்தமும் தன்னைத் திறந்து வைக்கும் ஆத்மார்த்தமும் இலக்கியம் என்ற இயக்கத்தின் வல்லமைக்குச் சான்றுகூறுகின்றன.

அத்துடன் வேறெந்த நோக்கமும் இல்லாவிட்டாலும், எந்த வடிவபோதத்துக்கும் அடங்காவிட்டாலும், ஆத்மார்த்தம் மட்டுமே இருந்தால்போதும் ஓர் எழுத்து இலக்கியமாகிவிடுமென்பதற்கு ஆதாரமாக அமையும் நூல் இது

அன்புடன்

ஜெ

[கடலூர் சீனு எழுதிய ’அன்புள்ள ஜெயமோகன்’ என்ற கடிதத் தொகுப்பின் முன்னுரை]

ஓர் இணைமனம்

சிதம்பரம் நாட்டியாஞ்சலி

முந்தைய கட்டுரைதோப்பில் முகமது மீரானுக்கு ஓர் இணையதளம்
அடுத்த கட்டுரைபூமணியின் நாவல்கள்