அந்த முகம்?

ஜெ,

இன்று காலையில் தான் கடைசி முகம் சிறுகதை படிக்க முடிந்தது.

விஷ்ணு நம்பூதிரி நேரில் கண்டு அதிர்ந்தது தன் மனதில் இருந்த பெண்பிம்பத்தையே…

பெண்ணிடமான ஆணின் எதிர்பார்ப்புகளின் தொகை தூலவடிவம் கொள்ளும் போது அவனே நடுங்கும் வண்ணம் அது சீறும் விழிகளும் கேரைப் பற்களும் கொண்ட யட்சியாகக் அவன் முன் எழுந்து வருகிறது ! அவனே அறியாமல் அவன் ஆழ்மனம் வளர்த்தியது அதையே. அதன் முழுத்தோற்றத்தில் அவன் எதிர்பாரா அதிர்சியைத் தந்து உறைய வைக்கிறது . வெளிப்புறத்தில் அவன் பெண்ணின் அழகுபற்றிப் பேசும் பேச்சுக்கள் யாவும் உள்ளீடற்றவை.. அதை உணரும் கணம் தனது இழிநிலையைக் கண்டு துணுக்குறுகிறான். மரணத்தை அந்த ஏமாற்றத்தின் தீர்வாக அவன் அமைக்க நேர்கிறது.

ஏகதேச தொடர்புடைய இன்னொரு சம்பவம், நான் சிறுவனாக இருந்தபோது…. எங்கள் ஊர் வில்லேஜ் ஆபீசில் வேலைபார்த்த வேலப்பபன் அண்ணனின் மனைவி ரேணு அக்காவின் முகம் ஞாபகம் வருகிறது. சாந்தமான அழகி அவள். ஆனால் வேலப்பன் அண்ணனின் ஆர்வமோ வேறு திசையிலிருந்தது. ஆண்மைத்தனமாக உடல்வாகும், கொஞ்சம் மாறுகண்ணும், வெற்றிலை சிவக்கும் தடித்த உதடுகளும், கட்டுப்பாடில்லாமல் பறக்கும் சுருட்டை முடியும் கொண்ட கறவைக்காரி மண்டைக்காட்டாள் அவருக்கு மெல்ல நெருக்கமானாள். ஊரில் அரசல் புரசலாகப் பேச்சு கிளம்பியது. மூத்தோர்கள் அண்ணனை உபதேசித்தார்கள். அவரோ எதையும் கண்டுகொள்ளவில்லை. ஒருகட்டத்திற்கு மேல் எதையும் மறைக்கவும் இல்லை. ஒரு நாள் காலை வயல்வரம்பில் அவர் இறந்து கிடந்ததை வயல் வேலைக்குச் சென்றவர்கள் கண்டு சொன்னார்கள். மாரடைப்பு !

முடிவின்மையின் விளிம்பில் சுட்டுவதும் இக்கருத்தையே. சிகரமாக வரும் அதன் திருப்பம் அச்சிறுகதையை உன்னதப்படுத்துகிறது. ஆண்மனதின் இச்சையின் எல்லை பெண்ணால் எழுதப்படுகிறது ! இலக்கியத்தில் ஆண் இலக்கியம் பெண் இலக்கியம் என்று இருக்கிறதா என்ன..?

கெ.பி.வினோத்

அன்புள்ள வினோத்

அந்தப் பெண்பிம்பத்தை அல்லவா மூன்றாவதாக யட்சி காட்டுகிறாள். அதற்கும் அப்பால் நாலாவது யார் என்பது அல்லவா கதை?

ஜெ

அன்புள்ள எழுத்தாளருக்கு!

வணக்கம்!
கடைசி முகம்!
அவன் விரும்பிய எல்லா குணங்கள், அழகும் நிரம்பிய ஆனால் அவனை எப்போதும் புறக்கணித்த பெண்ணின் பிம்பம்!
பதில் சரியாக இருந்தால் பாதி பணத்தை எனக்கு அனுப்பவும்! :) DD sujatha’s touch!
நன்றி!

தண்டபாணி

அன்புள்ள தண்டபாணி

மூன்றாவது முகம் அதுவாக இருக்கக்கூடாதா என்ன?

ஜெ

வணக்கம்!

நீங்கள் பாவித்திருந்த “உலகு தழுவிப் பரந்த வலை” க்கு இணையான சொல் ரொம்ப நாட்களாக
புழக்கத்திலுள்ளது – “வைய விரிவு வலை”

வாசன்

அன்புள்ள ஜெ,

உங்கள் கதை கடைசி முகம்  வாசித்தேன். எத்தனைமுறை வாசித்தேன் என்று தெரியவில்லை. வங்கியில் எல்லாரிடமும் கதையைச் சொல்லவும் செய்தேன். சொல்லும்போதும் கதை அதே வீச்சுடன் இருப்பதை கண்டு அதிசயப்பட்டேன். மூன்றுமுறை திரும்பிப்பார்ப்பான் என்பது தெரிந்துவிட்டது. முதல்முறை திரும்பியதுமே அடுத்து என்னமுகமாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டேன். பெண் அம்மா துணைவி என்ற அடுக்குமுறையே ஆச்சரியமானது. அதில் நான்காவது யார்? யோசிக்க யோசிக்க ஒருவாரம் மண்டை வெடித்ததுதான் மிச்சம். தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த புதிர்க்கதை இதுதான். எளிமையாக இதற்குப்பதில் சொல்லிவிட முடியாது. அல்லது பதிலே இல்லை. பக்தர்கள் வேண்டுமானால் அம்பாள் என்று சொல்லிக்கொள்ளலாம். ஒவ்வொருவரும் ஒரு பதிலைக் கொள்ளலாம்.

ஒருவேளை அப்படி இருப்பதுதான் இயல்போ என்னவோ

சபரிநாதன்

அன்புள்ள சபரி,

என் கதைகளில் எனக்கும் பதில்சொல்ல முடியாத வினா ஒன்றை வைக்கும் கதை அது. எந்த பதில் என்றாலும் அது ஒரு பகுதி பொருந்தாததாகவே இருக்கும். ஆனால் அந்த வினா எல்லாருக்குள்ளும் இருக்கிறது அல்லவா?

ஜெ

முந்தைய கட்டுரைஅறம் விழா புகைப்படங்கள்
அடுத்த கட்டுரைஅன்னா ஹசாரே, தாலிபானியம்?