ஈரோட்டிலே …

ஈரோடுக்கு அதிகாலை ஐந்துமணிக்குவந்து சேர்ந்தேன். அதற்கு முன்னரே அஜிதன் பெங்களூரில் இருந்து வந்து பேருந்துநிலையத்தில் இருந்து என்னை எழுப்பிவிட்டான். அவனை பொதுவாக இலக்கியக்கூட்டங்களுக்கு வர அனுமதிப்பதில்லை. இலக்கியத்தைவிட சுவாரசியமானது இலக்கிய அரட்டை, அதில் அவன் சிக்கிக்கொள்ளவேண்டாமென்றுதான். ஆனால் ஈரோடு நண்பர்களைச் சந்திக்க மிக விரும்பினான். சரி என்றேன். அவனை கார்த்தி பேருந்து நிலையத்தில் இருந்து கூட்டிக்கொண்டு சென்றார்.

என்னை வரவேற்க கிருஷ்ணனும் சிவாவும் பேருந்துநிலையத்துக்கு வந்திருந்தார்கள். சிவாவை கொஞ்ச இடைவெளிக்குப்பின் சந்திக்கிறேன். அழகாக இளைத்திருந்தார்.

விஜயராகவனுக்குச் சொந்தமான ஒரு வீடு ஈரோட்டில் இருந்தது. அந்த வீடுமுழுக்க நாங்கள் தங்க ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. ஓட்டல் அறைகளை விட இது வசதியாக இருந்தது. எத்தனைபேர் வந்தாலும் பிரச்சினை இல்லை. எவ்வளவு நேரம்பேசினாலும் ஒன்றுமில்லை. நான் செல்லும்போது அங்கே ஏற்கனவே கடலூர் சீனு வந்திருந்தார். மெல்லமெல்ல நண்ண்பர்கள் வந்துகொண்டே இருந்தார்கள். ஒரு கட்டத்தில் இருபதுபேருக்குமேல் ஆகிவிட்டார்கள். பேசிக்கொண்டே இருந்தோம்

சென்னையில் இருந்து வசந்தகுமார் கிளம்பி வந்தார். அவரது வழக்கப்படி முன்பதிவு செய்யா பெட்டியில் வர சென்னை ரயில்நிலையத்தில் வந்தவர் அங்கே கிட்டத்தட்ட மூவாயிரம்பேர் காத்து நிற்பதைக் கண்டு பீதியடைந்து திரும்பிச்சென்றுவிட்டார். பேருந்துக்கட்டணத்தில் பாதிதான் ரயில் கட்டணம். எல்லாம் ரயில்களும் நிரம்பி வழிகின்றன. கோவையில் இருந்து ராதாகிருஷ்ணன் வந்திருந்தார். திருப்பூரில் இருந்து சிவகுமார், ராஜமாணிக்கம் வந்திருந்தனர். மதுரை ரவி பெங்களூரில் ஒரு கூட்டத்துக்குச் சென்றுவிட்டு வந்தார். ஈரோட்டில் இருந்து அனேகமாக எல்லா நண்பர்களும் வந்தார்கள். டாக்டர் ஜீவா சற்றுநேரம் கழித்து வந்தார்.

தமிழகமெங்கும் கடும் மழை அன்று. ஈரோட்டில் தொடர்ச்சியாக மெல்லிய சாரலும் தூறலுமாக இருந்தது. மதிய உணவு வரை விஷ்ணுபுரம் பற்றியும் இந்திய தத்துவங்கள் பற்றியும் இலக்கியம் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். மதியம் சிவாவின் உறவினர் தொடங்கியிருக்கும் ஹென் ஆண்ட் காக் என்ற உணவகத்துக்குச் பெருங்கூட்டமாக வண்டிகளில் சென்று சாப்பிட்டோம். ஆரம்பம் முதலே ஒரு பெரிய திருவிழா மனநிலை இருந்துகொண்டே இருந்தது.

நாஞ்சில்நாடன் மிஷ்கின் இருவரையும் அரங்கசாமியின் காரில் கோவையில் இருந்து அழைத்து வந்தார் ஓட்டுநர். கூடவே கடலூர் வளவதுரையன் வந்தார். கொஞ்சநேரத்தில் கல்பற்றா நாராயணன். உணவகத்தில் இருந்து நேரடியாக அரங்குக்கு கிளம்பினோம். செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியின் மாடியில் உள்ள அரங்கில் கூட்டம். பள்ளி நிர்வாகிகள் என்னை வரவேற்க ஒரு பேனர்கீழ் காத்திருந்தனர். நான் நண்பர்களுடன் பேசிக்கொண்டே வேறுவழியாக மேலே சென்றுவிட்டேன். அவர்களை கவனிக்கவில்லை. பின்னர் சொன்னார்கள்.

நிகழ்ச்சி மிகச்சரியாக ஆரம்பிக்கவேண்டும் என்பது ஈரோடு வாசகர் இயக்கத்தின் கொள்கைகளில் ஒன்று. ஆறுமணிக்கு நிகழ்ச்சி ஆரம்பித்தபோது அரங்கு நிறைய ஆரம்பித்தது. இருநூற்றுமுப்பது பேர் வந்திருந்தனர், ஈரோட்டில் ஓர் இலக்கிய நிகழ்ச்சிக்கு வரும் அதிகபட்ச கூட்டம் என்றார்கள். நிகழ்ச்சி ஆரம்ப்பிப்பதற்குள் மிஷ்கினும் பவா செல்லத்துரையும் வந்தார்கள்.

நண்பர் பாபு ஈரோடு வாசிப்பு இயக்கத்தை அறிமுகம் செய்து பேசி அனைவரையும் வரவேற்றார்.ஈரோடு வாசிப்பியக்க பொருளாளர் இரா.விஜயராகவன் விழாவை தொகுத்தளித்தார். நூலை டாக்டர் ராஜலட்சுமி வெளியிட ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத் தலைவர் தாமோதர் சந்துரு பெற்றுக்கொண்டார்.

தலைமை வகித்த தோழர்.வி.பி. குணசேகரன் இந்திய கம்யூனிஸ்டுக்கட்சியைச் சேர்ந்தவர். பழங்குடிநலத்துக்காக பல ஆண்டுகளாக போராடிவருபவர். அறம் கதைகளில் வரும் மனிதர்களைப்போன்ற ஒருவர். இக்கூட்டத்துக்கு அவரே தலைமை வகிக்க வேண்டும் என விரும்பி நண்பர்கள் அழைத்து வந்திருந்தனர். யானைடாக்டர் உள்ளிட்ட கதைகளை சுட்டிக்காட்டி பேசினார்.

ஒவ்வொரு பேச்சும் ஒவ்வொரு கோணத்தில் அமைந்திருந்தது. அரங்கில் பெரும்பாலானவர்கள் அறம் வரிசைக்கதைகளில் கணிசமானவற்றை ஏற்கனவே படித்திருந்தனர். ஆகவே பெரும்பாலான பேச்சாளர்கள் கதைகளை சுருக்கிச்ச் சொல்ல முயலவில்லை. எஸ்.கெ.பி. கருணா கதைகளுடன் அறம்பாடுதல் பற்றிய ஆழமான நம்பிக்கை எப்படி அவரது தந்தையின் மனதில் ஊறியிருந்தது என்பதை விவரித்து தன் சொந்தவாழ்க்கை அனுபவங்கள் மூலம் எப்படி தொடர்புகொள்ளமுடிந்தது என்று சொன்னார். இக்கதைகள் எல்லாமே அற்புதமான திரைக்கதைத்தன்மைகொண்டிருப்பதை சுட்டிக்காட்டி வணங்கான் கதையின் கச்சிதமான தொடக்கம் மற்றும் உத்வேகமான உச்சம் ஆகியவை காட்சிகளாகவே இருப்பதை விளக்கினார்.

டாக்டர் ஜீவா தனிப்பட்ட முறையில் டாக்டர் கேயுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர். டாக்டர் கே பற்றிய கதை உண்மையில் அவரைப்பற்றி மட்டும் பேசுவதல்ல என்றார். அவர் நிலைகொள்ளும் மதிப்பீடுகளைப்பற்றியே அது பேசுகிறது. அத்தகைய பல மனிதர்கள் நம்மிடையே உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டுகொள்ள, அவர்களின் மரபை ஏற்றுக்கொள்ள இக்கதை வழிகாட்டுகிறது என்றார். ஈரோடைச்சுற்றி மலைப்பகுதிகளில் மக்களிடையே சேவை செய்யும் பல மருத்துவர்கள், களப்பணியாளர்கள் பற்றி உணர்ச்சிகரமாக பேசினார்.

மிஷ்கின் இந்த தொகுதியின் பெரும்பாலான கதைகளை அவை வெளிவந்த காலகட்டத்தில் பவா செல்லத்துரை வாயாலேயே முதலில் கேட்டதாகவும் அதன்பின்னரே வாசித்ததாகவும் சொன்னார். அறம் கதையின் தனித்தனியான வரிகள் எப்படியெல்லாம் தன்னை பாதித்தன என்று குறிப்பிட்டார். அறம் கதை முழுக்க அந்த எழுத்தாளர் கெஞ்சியபடி பணத்துக்காக காத்து நிற்கிறார். சட்டென்று கதைநேர்மாறாக மாறி அந்த ஆச்சி பணத்தை கொடுப்பதற்காக காத்து அமர்கிறாள். அந்த திருப்பத்தின் ஆச்சரியமே அந்தக்கதையின் உச்சம் என்று சொன்னார்.

பவாசெல்லத்துரை சோற்றுக்கணக்கு கதையின் பசி என்ற அம்சத்தை தொட்டுப்பேசினார். ஷோபாசக்தி, உதய ஷங்கர் போன்றவர்களின் கதைகள் வழியாக பசி என்பது அரசியலை, சமூகவியலை தாண்டி ஒரு முக்கியமான பேசுபொருளாக இருப்பதை, எவ்வளவு எழுதியும் கரைக்கமுடியாத ஒன்றாக இருப்பதை குறிப்பிட்டார். அந்த பசியை அன்பினால் கெத்தேல்சாகிப் எதிர்கொள்வதைப்பற்றிச் சொன்னார்

நாஞ்சில்நாடன் உணர்ச்சிகரமாகப் பேசினார். மத்துறு தயிர், தாயார்பாதம் என்ற கதைகளின் மொழியின் நுட்பத்தைச் சுட்டிக்காட்டினார். தாயார் பாதம் கதையில் இரு பிராமணர்கள் பேசிக்கொள்கிறார்கள். ஒருவர் தஞ்சைபிராமணர் இன்னொருவர் குமரிபிராமணர். இருவர் பேசுவதும் பிராமண வழக்கு. ஆனால் ஒன்று குமரிவட்டார பிராமண வழக்காகவும் இன்னொன்று தஞ்சைவட்டார பிராமண வழக்காகவும் இருக்கிறது. இருவரையும் யாரென தெரியுமென்பதனால் அவர்கள் பேசிக்கொள்வதைக் கேட்பதுபோலவே இருக்கிறது என்றார்.

அதேபோல மத்துறு தயிர் கதையில் பேராசிரியர், ராஜம், குமார் மூன்று கதைமாந்தர்களும் குமரிமாவட்டத்தின் மூன்று வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பேசும் குமரித்தமிழில் மூவருடைய மொழியும் தனித்தன்மையுடன் மாறுபட்டிருக்கிறது. அதை குமரிமாவட்டத்தினர் உணரமுடியும். இத்தகைய நுட்பங்களை எவர் உணரமுடியும்? உணர முடிந்தாலும் இல்லாவிட்டாலும் அது கலையின் இயல்பு என்றே சொல்லமுடியும் என்றார்

தாயார் பாதம், மத்துறுதயிர் இரண்டுமே நுண்மையான மரபிலக்கிய சுட்டிகள் கொண்ட கதைகள், மரபிலிருந்து வாசித்தெடுக்கவேண்டிய பல உள்ளடுக்குக்ள் கொண்டவை என்ற நாஞ்சில்நாடன் அவற்றைச் சுட்டிக்காட்டி பேசினார். தமிழ் மொழியின் இலக்கியச் சாதனைகளில் ஒன்று இந்த தொகுதி என்று கூறினார்

கல்பற்றா நாராயணன் மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட அறம் கதையைப்பற்றி மட்டும் பேசினார். பாஷாபோஷினியில் வெளியான அறம் கதை சமீபத்தில் மலையாள இலக்கிய வாசகர்களை அதிரச்செய்த, மிகவிரிவான விவாதத்தை உருவாக்கிய கதை என்றார். மலையாளிக்கு அக்கதையில் இருந்து கிடைப்பது மொழிக்கு அப்பாற்பட்ட மானுட அம்சம். ஒட்டுமொத்தக் கதையை முதலில் வாசிக்கிறோம். ஒவ்வொரு வரியிலும் வெளியாகும் கவித்துவத்தை மீண்டும் வாசிக்கவேண்டும். ‘இருளின் பிரார்த்தனை அல்லவா ஒளி’ என்ற வரியைப்போல ‘புலி காலெடுத்து வைப்பது போன்ற பேச்சு’ போன்ற வரியைப்போல கவிதையால் நிறைந்த கதை அது.

இந்த கதையின் தரத்தில்தான் பிற பன்னிரு கதைகளும் உள்ளன என்றால் உலகமொழிகளில் வெளியான மிகச்சிறந்த சிறுகதைத் தொகுதிகளில் ஒன்று என அதைச் சொல்லிவிட முடியும் என்றார் கல்பற்றார்.புத்தர் ஒருமுறை வெயிலில் நடந்து சென்றார். அதைக்கண்டு முப்பத்தாறு தேவதைகள் முப்பத்தாறு குடைகளை அவருக்கு அனுப்பினர். எவரையும் மனம் வருந்தசெய்ய விரும்பாத புத்தர் முப்பத்தாறு தோற்றம் எடுத்து அக்குடைகளை ஏற்றுக்கொண்டார். அதைப்போன்றதே இந்த பன்னிரு கதைகளும். பன்னிரு கதைநாயகர்களாக உருவம் கொள்வது ஆசிரியனின் அறவுணர்ச்சியே என்றார்

நான்கடைசியாக ஏற்புரை வழங்கினேன். இது என் நடுவயது. என் இருபத்தைந்து வயதில் என்னுள் குடியேறி என்னை கொண்டுவந்து சேர்த்த இலட்சியவாத நோக்கு ஒன்றுள்ளது. அது என் தேடலுக்கு அடிப்படை. நான் வாழ்க்கையை அந்த இலட்சியவாதம் நோக்கில் பார்க்கவில்லை. ஆனால் என்னை இலட்சியவாதியாக நிறுத்திக்கொண்டேன். என் முதல் தொகுதியிலேயே அதை அறிவித்திருந்தேன். அந்த இலட்சியவாதம் இந்த நடுவயதில் யதார்த்தபோதத்தின் முன் மங்கிவிட்டதா என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டது. ஒரு வாசகி என்னிடம் அதைப்பற்றி உணர்ச்சிகரமாக பேசியநாள் முதல் அந்த ஐயம் எனக்குள் குடியேறி வளர்ந்தது

சிலமாதங்கள் கழித்து சாதாரணமாக ஒருகட்டுரையாக எழுத ஆரம்பித்த அறம் ஒரு கதையாக ஆகியது. என் பண்பாட்டின் ஆழத்தில் இருந்து பேராச்சியான கண்ணகி எழுந்து வந்து என் ஐயத்துக்கு பதில் சொன்னாள். என் அறைக்குள் கண்ணகியை கொண்டுவரக்கூடியவனாகவே நான் இன்னும் இருக்கிறேன். அந்த தன்னுணர்ச்சி, என் பண்பாட்டின் சாரமென்ன என்ற அறிதல் என்னை ஒளிபெறச்செய்தது. அறம் கதையை எழுதி கீழே வந்து ஒரு டீ குடித்ததும் மீண்டும் மேலே சென்று சோற்றுக்கணக்கு கதையை எழுதினேன். நாற்பது நாட்களில் இந்த நாநூறுபக்க கதைத்தொகுதியின் கதைகள் எழுதி முடிக்கப்பட்டன. என் வாழ்க்கையின் உச்சகட்ட நாட்கள் அவை. இக்கதைகள் இன்னும் நெடுந்தூரம் செல்லும் ஆற்றலை எனக்களித்துள்ளன என்றேன்.

அன்றிரவு விஜயராகவன் வீட்டில்தங்கியிருந்தோம். அலெக்ஸ் வந்திருந்தார். மறுநாள்காலை ஆறுமணிக்கு ஒரு மலைப்பயணம். மழை தூறிக்கொண்டிருந்த நேரத்தில் வேனுக்குள் பத்தொன்பதுபேர் திணித்துக்கொண்டு சென்றது உற்சாகமாக இருந்தது. அந்தியூர் சென்று அங்கிருந்து பர்கூர். காட்டுப்பாதையில் நடந்துசென்று ஒரு அருவி. அருவின் மேலே சென்று இறங்கி மேலும் இறங்கி கீழே செல்லவேண்டும். பெரிய அருவி. ஆனால் சுற்றுலா இடமல்ல. காட்டருவி. அந்த இடத்தின் தனிமையில் நீர் விழும் ஓசையைக்கேட்டபடி நெடுநேரம் அமர்ந்திருந்தோம்

மாலை கிளம்பும்போது நன்றாகவே மூடுபனி. ஒரு வேட்டியை கார்முன் கட்டி தொங்கவிட்டதுபோலிருந்தது. மெல்லமெல்ல இழுத்து இழுத்து எட்டரை மணிக்கு ஈரோடு வந்துசேர்ந்தோம். நானும் ரவியும் இரவு பத்துமணிக்கு ரயிலில் கிளம்பினோம். அஜிதன், அலெக்ஸ், கடலூர் சீனு, கல்பற்றா நாராயணன் எல்லாம் அன்றிரவு தங்கிவிட்டு மறுநாள் காலையில் கிளம்பிச் சென்றார்கள்

காலை திரும்பிவந்துசேர்ந்தேன். ஒரு இலக்கியத்திருவிழா. பழையாகாலத்து மூன்றுநாள் கல்யாணங்களைப்போல பேச்சு, சிரிப்பு, நட்புகள், சாப்பாடு, சிறியசுற்றுலா எல்லாவற்றுடனும் உற்சாகமாக இருந்தது.

தினமணி செய்தி

கோபிராமமூர்த்தி கட்டுரை

முந்தைய கட்டுரைதவில்
அடுத்த கட்டுரைஅறம் விழா புகைப்படங்கள்