கடிதங்கள்

திரு. ஜெயமோகன் அவர்களக்கு வணக்கம், நான் உங்களின் தீவிர வாசகன்.கடந்த நான்கு வருடமாக உங்களின் இணையதளத்தைத் தொடர்ந்து வாசித்து வருகின்றேன்..உங்களின் ரப்பர், காடு, கன்னியாகுமரி, ஏழாம் உலகம், சங்க சித்திரகள், அனல் காற்று, இன்றைய காந்தி படித்துள்ளேன்.தற்போது கொற்றவை படித்து வருகின்றேன்.உங்களின் சிறுகதை வணங்கான், சோற்றுக் கணக்கு மற்றும் யானை டாக்டர் எனக்கு மிகவும் பிடித்தவை.

இந்தத் தலைமுறைக்கு வாழ்க்கைக்கொண்டாட்டம் என்றால் அது மது குடிப்பது மட்டுமே என நினைகின்றார்கள், நீங்கள் “யானை டாக்டரில்” கூறுவது போல “இலட்சியமே இல்லாத தலைமுறை. தியாகம்னே என்னான்னு தெரியாத தலைமுறை… மகத்தான சந்தோஷங்கள் இந்த மண்ணிலே இருக்குங்கிறதே தெரியாத தலைமுறை..’’இந்த வரிகள் இளைய தலைமுறைக்குப் புரிய வேண்டும்.அது உங்கள் போன்ற எழுத்தாளர்களால் தான் முடியும்…..

இப்படிக்கு
ரா.அ.பாலாஜி
பெங்களுரு.

அன்புள்ள பாலாஜி

இன்றையதலைமுறை என ஆரம்பிக்கும் விமர்சனங்களை நான் பொதுவாக ஏற்பதில்லை. என்னுடைய தலைமுறையை விட இன்றைய தலைமுறையின் பொறுப்பும் அறிவும் அதிகம். என்னைவிட என் மகனுடைய தார்மீகம் மேலானதாகவே உள்ளது

நம் காலகட்டத்தில்தான் இந்தியாவின் 70 சதவீதக் காடுகள் அழிக்கப்பட்டன இல்லையா?

குடி கொண்டாட்டம் எல்லாம் எப்போதுமே இளைய தலைமுறையில் இருந்துள்ளன. நம் வீடுகளில் கேட்டுப்பாருங்கள். பாதிக் குடும்பங்களில் குடித்தே சொத்தை அழித்த தாத்தாக்களின் கதைகள் இருக்கும்

ஜெ

பிளாடோவின் Republic பற்றி உங்கள் கருத்தென்ன? தற்போது அந்த புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அதிலிருக்கும் Rhetoric மிக சுவாரசியமாக இருக்கிறது.

அன்புடன்
ஜெய்சங்கர்

அன்புள்ள ஜெய்சங்கர்

பின் தொடரும் நிழலின் குரலில் ஒருநாடகத்தில் ரிபப்ளிக் பற்றி என்னுடைய கருத்து ஆணித்தரமாகச் சொல்லப்பட்டுள்ளது

ஜெ

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைகார்ல்சகனும் சிவானந்த சர்மாவும்