இரு கலைஞர்கள்

உடனே வசை வருமென்றாலும் சொல்லாமலிருக்க முடியவில்லை. பெரும்பாலான ஈழத்து நண்பர்களுக்கு இலக்கியத்தில் கலை என்ற ஒன்று உள்ளது என்று சொல்லிப்புரியவைக்க முடியவில்லை. அது நல்ல கருத்து அல்ல, உணர்ச்சிகரமான நிலைப்பாடுகள் அல்ல, நேர்த்தியான மொழிகூட அல்ல வேறு ஒன்று என பலமணிநேரம் பேசியபின்னரும் சர்வதாசாதாரணமாக கருத்துக்களை ‘வைத்து’ எழுதும் ஒருவரை மேற்கோள்காட்டி மேலே பேச ஆரம்பிப்பார்கள்.

அதைவிடக் கொடுமை ஈழத்து எழுத்தை விமர்சனம் செய்தால் உடனே ‘அப்படியானால் இவர்கள் எழுத்து இலக்கியமில்லையா?’ என நாற்பத்தெட்டு எழுத்தாளர்களின் பட்டியலை அளிக்க ஆரம்பித்துவிடுவது. எல்லாவற்றையும் படிக்காமல் பேசாதே என்று சொல்லி வாயை மூடச்செய்வது. கைலாசபதியின் ஆவியிடமிருந்து ஈழத்தமிழ் தப்பித்தாலும் சிவசேகரத்தின் உடல்பொருளிடமிருந்து தப்பிக்க முடியாத நிலை.

இன்றைய ஈழத்தமிழ் எழுத்தில் முதல்தரக் கலைஞர்கள் என நான் நினைப்பது அ.முத்துலிங்கம்,ஷோபாசக்தி இருவரையும்தான். அதைப் பலமுறை சொல்லியிருக்கிறேன். ஷோபா கலையை உருவாக்க முயல்வதே இல்லை, அவருக்கு அரசியல்தான் முக்கியம். ஆனால் கலைஞன் கலையைத்தான் உருவாக்கமுடியும். கலையை உருவாக்க முயலும் அரசியல்வாதிகள் அரசியலாக எழுதிவைப்பதுபோல இதுவும் இயல்பானதுதான்.

எது இவர்களைக் கலைஞர்களாக்குகிறது? எது கலை? மீண்டும் மீண்டும் உதாரணம் காட்டித்தான் சொல்லவேண்டியிருக்கிறது. அ.முத்துலிங்கம் எழுதிய இன்னும் சிறிது தூரம்தான் என்ற இந்தச் சின்னக் கட்டுரையில் கலை என்னும் சொல்லால் நான் சுட்டுவது நிகழ்ந்திருக்கிறது. அதை நானூறு பக்கம் எழுதினாலும் வெற்றுக்கோட்பாட்டாளர்களுக்குப் புரியச்செய்துவிடமுடியாது. சுட்டிக்காட்டினாலே நல்ல வாசகர்களுக்குப் புரியும்

என்னென்ன செய்யப்பட்டிருக்கிறதெனச் சொல்லிப்பார்க்கலாம். ஒரு காட்சி. அந்தக்காட்சியின் சாராம்சமான துயரத்தில் இருந்து சங்கப்பாடல் ஒன்று சென்று தொடப்பட்டிருக்கிறது. அந்த இணைப்பின் மூலம் அக்காட்சி காலாதீதமான துயராக ஆகிறது. அந்தப்பாடல் நிகழ்கால யதார்த்தமாக ஆகிறது.

அது இயல்பாக நிகழவேண்டுமென்பதற்காக மொழி முடிந்தவரை சகஜமாக ஆக்கப்பட்டிருக்கிறது. அன்றாட விவரிப்புகள் ஒட்டாத பாவனையில் சொல்லப்பட்டுள்ளன. முக்கியமாகக் கடைசி வரியில் உள்ள துயரத்தைக் குறைத்துவிடக்கூடாது என்பதற்காக முன்னால் சொல்லப்பட்டுள்ள பாரிமகளிரின் கவிதை யாழ்ப்பாணத்தனமாக ஆக்கப்பட்டு சற்றே வேடிக்கைத்தன்மையுடன் சொல்லப்பட்டுள்ளது.

ஒருவகையில் மொழிநுட்பம் அல்லது கூறல் நுட்பம். இந்த நுட்பங்களை எல்லாம் அந்தப் படைப்பு நிகழும்போது இயல்பாக அடைவதற்குப்பெயரே கலைத்திறன். இதைப் பயில முடியாது, ஏனென்றால் இன்னொரு படைப்புக்கு இது உதவாது. படைப்பு ஒவ்வொன்றும் தனக்கேயான தனித்தன்மை கொண்டது. அதைத் தன் வழியாக நிகழ்த்துவதே கலை.

ஷோபா சக்தியை சந்தித்தது பற்றி அ.முத்துலிங்கம் எழுதியிருக்கும் குறிப்பு புன்னகையுடன் வாசிக்கச்செய்தது. அதனுள் ஓடும் நுண்ணிய, பிரியமான கிண்டல்!

முந்தைய கட்டுரைசைவ வெறுப்பா?
அடுத்த கட்டுரைபூமணியின் புது நாவல்