காந்தி-சுபாஷ் , கடிதம்

ஜெயமோகன்,

என் கட்டுரைக்குப் பல கடிதங்கள்வந்தன. ஆனால் காந்தியை மட்டம் தட்டி சுபாஷ் புகழ் பாடும் கட்டுரையென்று என்ற கோணத்தில் ஒருவரும் அந்தக் கட்டுரையைப் பார்க்கவில்லை. எனக்கே அது புதியதாகத்தான் இருந்தது.

உண்மையில் நான் எங்குமே அப்படிச்சொல்லவில்லை. அஹிம்சைப்போர்களைஎதிர்கொள்ளும் விதத்தை இருபதாண்டுகளில் பிரிட்டிஷார் நன்கு அறிந்திருந்தனர். காந்தியின் கீழுள்ள காங்கிரஸ் எந்தெந்த எல்லைகளைத் தாண்டாது என்கிற கணக்கில் காலனி அரசு தெளிவாக இருந்தது. சத்தியாக்கிரகப்போர்களின் போக்கு என்பது அளவில் விரிந்தது என்றாலும், அனுமானிக்கக்கூடிய ஒன்றாக அவர்களுக்கு இருந்தது. ஆனால் காங்கிரசிலிருந்து விலகிய போஸ் அவர்களுக்கு ஒரு வைல்ட் கார்ட். அதனால்தான் அவரைக் கொலை செய்ய நாட்டுக்கு நாடு ஆள் அனுப்பியது சர்ச்சிலின் அரசு. இதுதான் நான் சொல்லியிருப்பது.

போஸின் வழி வென்றிருக்கும் என்றும் நான் எங்கும்சொல்லவில்லை. அது போர்க்கால வேகத்தில் உருவெடுத்த ஒரு அதிரடி முயற்சி மட்டுமே. ஆனால் காந்தியின் நிதானம் பேதங்கள் தாண்டி பலதரப்பு மக்களை ஒன்றிணைத்தது போலவே போஸின் வேகமும் பேதங்கள் தாண்டி பலதரப்பு மக்களை ஒன்றிணைத்தது என்பது வரலாறு. இந்திய மக்களை விடுதலைக்குத் தயார் செய்ததில் காந்தியின் சரித்திரப் பங்கை மறுப்பவர் இந்திய வரலாற்று அறிவில்லாதவர்களாக, காந்தியின் மீது காழ்ப்பு உடையவர்களாக மட்டுமே இருக்க முடியும். அதே போல இரண்டாம் உலகப்போரின் மத்து உலகைக்கடைந்தபோது வெளியான வரலாற்று நிகழ்வுகளில் சுபாஷ் போஸின் படை திரட்டலும், கடற்படையின் கலகமும் முக்கியமானது என்பதையும் மறுக்க முடியாது.

இரண்டாம் உலகப்போரின் இறுதியில் பிரிட்டிஷ் படை நொறுங்கிக்கிடந்தது. சர்ச்சில் தரப்பு இங்கிலாந்திலேயே வெகுவாய் வலுவிழந்திருந்தது. வரலாற்றின் காற்று இந்திய விடுதலைக்கு வெகு சாதகமாய் இருந்தது. அந்த சமயத்தில் கடற்படை தனக்கு எதிராகத்திரும்பியது கண்டு பிரிட்டிஷ் அரசு அதிர்ந்து போனது. “இந்தியா முழுதும் பரவக்கூடிய அரசியல் பூகம்பம்” என்று அதனை வர்ணித்தார் ஜவஹர்லால் நேரு. அதை பிரிட்டிஷார் அடக்கியிருக்க முடியுமா என்றால் கட்டாயம் அடக்கியிருக்க முடியும்தான், ஆனால் அதுவல்ல இங்கே செய்தி. இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய பிரிட்டிஷ் அரசைப் பொறுத்தவரையில், இந்தியா கைநழுவிக்கொண்டிருக்கிறது என்பதற்கான இறுதி நிரூபண அம்சமாக அது காணப்பட்டது என்பதுதான் இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

காலனியாதிக்கத்தின் கடைசி நாட்கள் என்று வருகையில் இவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாகப்பார்ப்பது அவசியம் என்ற வகையில் அமைந்ததே என் கட்டுரை.மற்றபடி காந்தியின் மீது அவதூறு பொழியும் இந்துத்துவத்தரப்பு என்ற ஒன்று இருக்குமானால்அதிலிருந்தும், போஸின் தியாகத்தை மலினப்படுத்தும் காந்தியத்தரப்பு என்ற ஒன்று இருக்குமானால் அதிலிருந்தும் நான் விலகியிருக்கவே விரும்புகிறேன்.


’’உங்களைப்போன்றவர்கள்” என்று சொல்கையில் நீங்கள் மனதில் உருவகித்து வைத்திருக்கும் ஏதோ ஒரு ஒட்டுமொத்தத் தரப்பில் என்னையும் ஒட்ட வைத்து, அந்தத் தரப்பின் மீதான உங்கள் அத்தனை விமர்சன அம்புகளையும் என்மீது எறிந்திருக்கிறீர்கள். என் சிந்தனைகளில் நான் சுதந்திரமாய் இருக்கவே விரும்புகிறேன். வசதியான முன்முடிவுகளுடன் சித்தாந்தக் குப்பிகளில் என்னை யாரும் அடைப்பதில் எனக்கு சம்மதமில்லை.

ருவாண்டாவின் ரத்த அழிவின் பின்புலத்தில்”ஆரிய” வாதம் என்கிற 2006-ஆம் வருட திண்ணைக்கட்டுரையிலேயே “கீதையின் அடிப்படையில் எழுந்த காந்தியடிகளின் இந்து தார்மீகத்தின் முன்” ருவாண்டா போன்ற ஒரு பேரழிவுப் பிரசாரம் இந்தியாவில் எடுபடாமல் போனது என்று எழுதியவன் நான்.

இதோ இன்று கூட, கலிபோர்னியா பாடப்புத்தகத்தில் “காந்தியடிகள் உலக அளவில் பிரபலம் பெறுவதற்காக உண்ணாவிரதங்களை மேற்கொண்டார்” என்று மகாத்மாவை மலினப்படுத்தும் வகையில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகத்தைத் திருத்தக் கோரிக் கடிதம் எழுதி விட்டுத்தான் உங்களுக்கு இந்த பதிலை எழுதவே வந்திருக்கிறேன்.

மற்றபடிஇது குறித்து எனக்கு வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.

அருணகிரி

அன்புள்ள அருணகிரி

உங்கள் கட்டுரையில் அந்த வரி, அதிலும் அது சாதாரணமாக சொல்லப்பட்டிருக்கும் விதம், என்னை வருத்தமுறச்செய்தது. அதைவிட எவ்வளவோ மடங்கு கீழ்த்தரமாகவெல்லாம் பலர் இணையத்தில் காந்தி பற்றி, இந்தியா பற்றி எழுதுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு எந்த வாசிப்பும் கிடையாது . ஒருவகையான விடலைகள் அவர்கள், தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்றுகூடத் தெரிந்துகொள்ளாத அளவுக்கு முதிர்ச்சியற்றவர்கள். நான் உங்களைத் தொடர்ந்து அரசியல் சார்ந்து வாசித்து எழுதிவரும் ஓர் அறிஞனாகக் காண்பதனால் எனக்கு உங்கள் எல்லா வரிகளுமே முக்கியமெனத் தோன்றியது. ஆகவேதான் அப்படி.

நீங்கள் சொன்னபடி உங்கள் நோக்கம் அதுவல்ல எனில் நான் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறேன். ஆகவே மன்னிக்கக் கோருகிறேன்.

உண்மையில் சுபாஷ் உத்தேசித்த போராட்டமே பிரிட்டிஷ் அரசுக்கு எளிமையாக எதிர்கொள்ளத்தக்கது. உலகமெங்கும் அவர்கள் ஆதிக்கம் செலுத்திய எல்லா நாடுகளிலும் அவர்கள் எதிர்கொண்டது அதையே. உலகிலேயே மூர்க்கமும் வேகமும் கொண்ட ஆயுதப்போராட்டமாக அறியப்பட்ட ஐரிஷ் விடுதலைப்போரை அவர்கள் எப்படி வெற்றிகரமாக சமாளித்தார்கள் என்பதையே உதாரணமாக காணலாம்.

மேலும் சுபாஷின் செல்வாக்கு காங்கிரஸுக்குள், மிகஎளிமையான அளவிலேயே இருந்தது என்ற யதார்த்தமும் அவர்களுக்கு தெரியும். கண்டிப்பாக அது அவர்களுக்கு சிக்கலை அளிப்பதே. ஆனால் அவர்கள் ஆட்சிக்கு சவாலே அல்ல.

ஆனால் காந்தியின் போராட்டம் அப்படி அல்ல. அதுதான் அவர்கள் முன்னர் சந்தித்திராதது. அவர்கள் கடைசி வரை முழுமையாக புரிந்துகொள்ளமுடியாமல் போனது. இன்றும்கூட அவர்களுக்கு மர்மம் விலகாதது. அதன் விரிவான பாதிப்பு இன்றுகூட பிரிட்டிஷ் ராஜ் பற்றிய வரலாற்றை ஆட்டிப்படைக்கிறது. ஆகவேதான் இன்றும் கூட அவரைப்பற்றிய வரலாற்றை நுட்பமாகத் திரிக்கிறார்கள். அவதூறு செலுத்துகிறார்கள்–நீங்கள் சுட்டிக்காட்டியதுபோல.

பிரிட்டிஷாரின் ஆட்சியைத் தக்கவைத்த முக்கியமான வலிமை கருத்தியல் சார்ந்தது. உலகிலேயே நாகரீகமான, ஜனநாயக நாடு என அவர்கள் தங்களை சித்தரித்துக்கொண்டார்கள். தாங்கள் சென்ற இடத்து மக்களை அநாகரீகமானவர்கள் என்று விவரித்து அவர்களின் வரலாறுகளையும் தாங்களே எழுதிக்கொண்டார்கள். அந்த அநாகரீக மக்களை நாகரீகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவே தாங்கள் அதிகாரத்தைக் கையாள்வதாக உலகையும் அந்த அடிமைமக்களில் பெரும்பான்மையினரையும் நம்பவைத்தார்கள்.

ஆஸ்திரேலியாவில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையையும் அவர்கள் அப்படித்தான் சித்தரித்தார்கள் –எழுபதுகள் வரை கூட.அதுவே அவர்களின் ஆதிக்க உத்தி. அந்தக் கருத்தியல் மேலாதிக்கமே மிகச்சிறுபான்மையினரான அவர்களை அந்த மக்கள் அதிகாரத்தில் தொடர அனுமதித்தது. அந்த மக்கள் எதிர்த்துக் கலகம் செய்யும்போது அதைக் காட்டுமிராண்டிகளின் ஆயுத தாக்குதல் என்றே அவர்கள் உலகுக்கு சித்தரித்த்தார்கள். ஆஸ்திரேலிய பழங்குடிகள் மற்றும் அமெரிக்கச் செவ்விந்தியர்களின் எதிர்ப்புகளை ஆங்கில இதழியல் எழுத்தும் இலக்கியங்களும் எப்படிக் காட்டியிருக்கின்றன என்று பாருங்கள். கௌபாய் படங்களில் செவ்விந்தியர்கள் காட்டுமிராண்டி கொள்ளையர்களாகவே இன்றும் காட்டப்படுகிறார்கள்.

நைஜீரியா முதலிய நாடுகளை இன்றும்கூட உலகின் கண்முன்னால் காட்டுமிராண்டி நாடுகளாகக் காட்டுகிறார்கள் பிரிட்டிஷ் எழுத்தாளர்கள். சுதந்திரம் கொடுத்தபோது பிரிவினையை விதைத்துக் கலவரத்தை ஆரம்பித்துவிட்டு சென்றார்கள். அந்தக் கலவரத்தைக் காரணம் காட்டினால்,அதைக் காட்டுமிராண்டிநாடு என்றும் தாங்கள் செலுத்திய ஆதிக்கம் அதை சீர்திருத்தவே என்றும் சொல்கிறார்கள்.

அந்த உத்திக்கு எதிராகப் போராட அடிமைநாடுகளால் முடியவில்லை. அந்த உத்தியை வெற்றிகரமாக எதிர்கொண்டவர் காந்தி. ’holier-than-thou.என்பதே காந்தியின் அணுகுமுறை. பிரிட்டிஷாரின் ஜனநாயகத்தைவிட மேலான ஜனநாயகத்தை காந்தி முன்வைத்தார். அவர்களின் மனிதாபிமானத்தை விட மேலான மனிதாபிமானத்தைப் பேசினார். எங்கும் எப்போதும் சட்டம் ஒழுங்கை மீறவில்லை. வன்முறையைப்பற்றிப் பேசவில்லை.

மேலும் இந்த மதிப்பீடுகளை ஐரோப்பாவிடமிருந்து கற்றுக்கொண்டதாகச் சொல்லவில்லை. கிருஷ்ணனிடமிருந்து கற்றுக்கொண்டதாகச் சொன்னார். பண்டைய இந்து ஞானமரபில் இருந்து வருவதாகத் தன்னை சித்தரித்தார். விளைவாக இருநூறாண்டுகளாக இந்தியா பற்றி பிரிட்டிஷார் உருவாக்கிய எல்லா சித்தரிப்பையும் முழுமையாகவே தோற்கடித்தார். எது பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் அடித்தளமோ அதை, அவர்களின் “The White Man’s Burden” என்ற கருத்தியலை முழுமையாகவே தோற்கடித்தார். அந்தப் போராட்டத்தை பிரிட்டிஷாரால் எதிர்கொள்ளமுடியவில்லை.

இந்தியாவை நைஜீரியா போல அவர்களால் இன்று சித்தரிக்கமுடியவில்லை. நீங்கள் சொன்னதுபோல நாசூக்கான திரிபுகளே சாத்தியம். காரணம் காந்தி நவீன ஜனநாயக மதிப்பீடுகளின் அடையாளமாக உலக மக்களில் பெரும்பாலானவர்களால் இன்று கருதப்படுகிறார். அவர் எதிர்த்துப் போராடியமையாலேயே வரலாற்றில் பிரிட்டிஷ் ராஜ் எதிர்மறையாக சித்தரிக்கப்பட்டுவிட்டது. அதைக்களைய இன்றும் பலகோடி ரூபாய் செலவிட்டு வரலாற்றை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

சுபாஷின் பங்களிப்பை குறைத்து நான் மதிப்பிடவில்லை. நீங்கள் சொன்னபடி அவரது தியாகம் ஒரு கட்டத்தில் இந்திய இளைஞர்களை எழுச்சிக்கொள்ளச்செய்வதாகவே இருந்தது. அவரது ஆளுமை இன்றும் ஒரு மாபெரும் இந்திய முன்னுதாரணமே. நான் காந்தியை மட்டம் தட்ட அவரை மிகைப்படுத்திக்காட்டும் முயற்சிகளையே சுட்டிக்காட்டினேன். உங்களைப்போன்றவர்கள் என நான் சொன்னது இந்த அணுகுமுறை மிகவும் பொதுப்படையான ஒரு போக்காக உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டவே. அது உங்கள் தனிப்பட்ட கருத்தாக மட்டும் இல்லை என்பதைக் காட்டவே.

காந்தியை நுட்பமாக மட்டம் தட்டும் முயற்சிகள் எல்லாக் கிறித்தவப்பின்புலம் உள்ள ஐரோப்பிய நூல்களிலும் , பாடத்திட்டங்களிலும் உள்ளவைதான். அவற்றுக்கு எதிரான உங்கள் போராட்டத்திற்கு தலைவணங்குகிறேன்

நன்றி

ஜெ

உப்பும் காந்தியும்

முந்தைய கட்டுரைகேள்விகள்
அடுத்த கட்டுரைகேரளத்திலும் ஆந்திரத்திலும் ஏன் திராவிடவாதம் இல்லை?