மலையாள இலக்கியம்

ஒரு மொழியில் பண்பாடும் இலக்கியமும் எப்படி மேம்படுகின்றன? இரண்டு கூறுகள்அவற்றை தீர்மானிக்கின்றன என்று சொல்லலாம். ஒன்று, பாரம்பரியம். இரண்டு புதுமைக்கானநாட்டம்.  இவற்றை ஒன்றுக்கொன்று முரண்படக்கூடிய இரு ஆற்றல்கள் என்று சொல்லலாம். இவைஇரண்டுமே சம வலிமையுடன் இருந்து இவற்றின் முரண்பாடு தீவிரமாக அமையும் மொழிகளில்தான்பெரும் பண்பாட்டு வளர்ச்சிகள் உருவாகின்றன. பேரிலக்கியங்கள் பிறக்கின்றன

உதாரணமாகச் சொல்லவேண்டுமென்றால் ஐரோப்பா. ஐரோப்பா கிரேக்க பாரம்பரியத்தில் ஊறியபழங்காலம் கொண்டது. மத்திய காலகட்டத்தின் மதமேலாதிக்கத்தால் அதன் பண்பாடும் கலையும்தேம்பிக்கிடந்த போது அதற்கு எதிராக புதுமைக்கும் வளர்ச்சிக்குமான நாட்டம் அங்கேஉருவானது. பாரம்பரியமும் வளர்ச்சிக்கான துடிப்பும் சரியாக இணைந்தபோது உருவானபண்பாட்டு வளர்ச்சியையே ஐரோப்பிய மறுமலர்ச்சி என்கிறோம். அதுவே கலைகளையும்இலக்கியங்களையும் பெருவளர்ச்சி அடையச்செய்து இருபதாம் நூற்றாண்டு உலகநாகரீகத்துக்கே அடிப்படையாக அமைந்தது.

இந்த இருகூறுகளில் ஒன்று மட்டும் மேலோங்கியிருக்கும் சமூகங்கள்முழுமைபெறாதவையாகவே இருக்கும். வெறும் பாரம்பரியம் மட்டுமே கொண்ட சமூகங்கள்தேங்கிக் கிடக்கும். வெறும் புதுமை நாட்டம் மட்டுமே கொண்ட சமூகங்கள் பிறவற்றைபோலிசெய்யும், அசலாக எதையும் உருவாக்காது.

தமிழ்ச்சமூகம் பாரம்பரியம் மேலோங்கிய ஒன்றாக இருந்தது. ஆகவே நாம் பழம்பெருமைபேசிதேங்கியே கிடந்தோம். புதுமைக்கான நாட்டம் கொண்ட மிகச்சிறிய ஒரு வட்டம் மட்டுமேஇங்கே தீவிரமாக இயங்கியது. அவர்களே நம்முடைய சிறந்த இலக்கியங்களை உருவாக்கினார்கள்.பாரதி முதல் புதுமைப்பித்தன் ,கு அழகிரிசாமி,சுந்தர ராமசாமி,  அசோகமித்திரன்வரையிலான அந்த சிறு வட்டம் இன்று மெல்ல மெல்ல அங்கீகாரம் பெற ஆரம்பித்திருக்கிறது.அவர்கள் பாரம்பரியத்தின் மீது காலூன்றி நின்று புதுமைக்காக முயன்றார்கள்

கேரளத்தில் பாரம்பரியம் வலுவிழந்தே இருந்தது. ஆனால் ஆங்கிலக்கல்வியும்ஐரோப்பியர் தொடர்பும் உருவாகியிருந்த கேரளத்தில் புதுமைக்கான தேடுதல்மேலோங்கியிருந்தது. ஆகவே பிறமொழி இலக்கியங்களை நோக்கி அதேபோல உருவாக்கும்இலக்கியங்கள் அங்கே தீவிரமாக உருவாயின. அவர்களில் இந்தியப்பாரம்பரியத்தையும்கேரளத்தின் நாட்டுப்புறப் பாரம்பரியத்தையும் அறிந்த சிலர் மட்டுமே நல்ல படைப்புகளைஉருவாக்கினார்கள்.

கேரள நவீன இலக்கியத்தின் பிதாமகன் என்றால் குமாரன் ஆசானையே சொல்லவேண்டும்.நாராயணகுருவின் நேரடி மாணவரான ஆசான் கல்கத்தாவில் ஆங்கிலம் படித்தவர். சம்ஸ்கிருதபாரம்பரியத்தை தெளிவாகக் கற்றவர். ஆகவே அவர் மலையாளமொழியில் சிறந்த இலக்கியங்களைஉருவாக்கினார்.அவரது ‘வீழ்ந்த மலர்’ ‘நளினி’ ‘லீலா’ ‘துர் அவஸ்தை’ போன்றகுறுங்காவியங்கள் இன்றும் மலையாளத்தில் மிகப்பரவலாக வாசிக்கப்படுகின்றன. மொழியின்உச்சங்களாகக் கருதப்படுகின்றன. அவரது கவிதைகள் தத்துவார்த்த கனமும் ஆழமானஉணர்ச்சிக்கொந்தளிப்பும் கொண்டவை.

1873ல் காயிக்கரை என்ற ஊரில் ஒரு வணிகக்குடும்பத்தில் பிறந்தவர். அவரதுதந்தையும் ஒரு மொழி அறிஞர். கேரளத்திலும் கல்கத்தாவிலும் கல்விகற்ற ஆசான் பின்னர்நாராயணகுருவுடன் இணைந்து சமூக பணிகளில் ஈடுபட்டார். பானுமதி அம்மா என்ற பெண்ணைமணந்தார். 1924 ல் ஒரு படகுவிபத்தில் மறைந்தார்.

ஆசானின் சமகாலத்தவரான வள்ளத்தோள் நாராயண மேனன் மரபுமுறையிலான கவிஞர். சம்ஸ்கிருதபாரம்பரியத்தில் ஊறியவர். விடுதலைப்போராட்ட வீரர். இந்தியதேசிய மறுமலர்ச்சி சார்ந்தகவிதைகளை எழுதினார். கதகளி என்ற கேரளக்கலையை அழிவில் இருந்து காப்பற்றி கேரளபண்பாட்டு அடையாளமாக ஆக்கியவர் அவரே. அவர் அதற்காக நிறுவிய கேரள கலாமண்டலம் இன்றுஒரு பெரிய நிறுவனம். 1881ல் பிறந்த வள்ளத்தோள் நாராயணா மேனன் 1958 ல் இறந்தார்.

ஆசானுக்குப்பின்னர் கேரளத்தில் ஒரு பெரிய அலையை உருவாக்கிய கவிஞர் சங்கம்புழகிருஷ்ணபிள்ளை. 1911 ல் பிறந்த சங்கம்புழ 1948 ல் இளம்வயதிலேயே மரணமடைந்தார்.பெண்பித்தராக இருந்தார். அதுசார்ந்த நோய் அவரது மரணத்துக்குக் காரணம். அவரது நண்பர்இடப்பள்ளி ராகவன்பிள்ளை ஒரு காதல் தோல்வியால் தற்கொலைசெய்துகொண்டபோது அவர் எழுதியகுறுங்காவியமான ரமணன் கேரளத்தில் மிக அதிகமாக விற்ற நூல். அது ஒரு இசைக்காவியம்.இன்றும் அதன் கற்பனாவாதத்தன்மை கேரளக் கவிதையில் மேலோங்கியிருக்கிறது

கேரள உரைநடை இலக்கியத்தை தொடங்கிவைத்த இரு முக்கியமான நாவலாசிரியர்களில் ஒருவர்சி.வி.ராமன்பிள்ளை. திருவனந்தபுரத்தில் 1858ல் பிறந்த சி.வி.ராமன்பிள்ளைமலையாளத்தின் முதல் வரலாற்றுநாவலான மார்த்தாண்ட வர்மாவை 1891ல் வெளியிடார்.அதன்பின் தர்மராஜா, ராமராஜா பகதூர் முதலிய நாவல்களையும் எழுதினார். சிவியின் நடைஆர்ப்பாட்டமான சொல்லாட்சிகளும் நேரடியான பேச்சுமொழியும் கலந்து வருவது.கவித்துவமானது. 1922ல் இறந்தார்

கேரள இலக்கியத்தின் அடுத்த அலை மார்க்ஸிய கோட்பாட்டின் பாதிப்பால் உருவானது.அதன் முக்கியமான எழுத்தாளர் என்று தகழி சிவ சங்கரப்பிள்ளையைச் சொல்லலாம்.  1912 ல்  அம்பலப்புழா ஊரில் பிறந்த தகழி சிவசங்கரப்பிள்ளை வழக்கறிஞராக தொழில்செய்தபின்முழுநேர இலக்கியவாதியாக ஆனார். அவரது தோட்டியின் மகன், செம்மீன், கயிறு, ஏணிப்படிகள் ஆகிய நாவல்கள் தமிழில் கிடைக்கின்றன. தகழி 1985 ல் இலக்கியத்துக்கானஞானபீட விருதை அவரது கயிறு நாவலுக்காக பெற்றார்

வள்ளத்தோள் நாராயண மேனன்

தகழியின் கதைகள் மிகத்துல்லியமான யதார்த்த தகவல்களுடன் சமூக மாற்றத்தையும்அவற்றால் பாதிக்கப்படும் மனிதர்களையும் சித்தரிப்பவை. மன உணர்ச்சிகளைச் சொல்வதில்தகழி விற்பன்னர். கேரள இலக்கியத்தில் எளிய அடித்தள மக்களின் வாழ்க்கையை முதன்முதலாக கொண்டுவந்தவர் என்பதே அவரது முதல் பெருமை.

மார்க்ஸிய அலையால் உருவாகி அதைத்தாண்டிச்சென்று நவீனத்துவ இலக்கியத்துக்குவழியமைத்த பெரும் படைப்பாளி என்று வைக்கம் முகமது பஷீரைச் சொல்லலாம்.  1908 ல்தலையோலப்பறம்பு என்ர சிற்றூரில் பிறந்த பஷீர் சுருக்கமாக எழுதக்கூடியவர். நுட்பமானநகைச்சுவை கொண்ட அவரது எழுத்தில் வட்கேரளத்து முஸ்லீம்களின் பேச்சுவழக்கும்வாழ்க்கைச்சூழலும் அழகாக வந்திருக்கும். ஆனால் அடிப்படையில் பஷீர் சூ·பிமெய்ஞானத்தால் பாதிக்கப்பட்டவர். வெறுப்போ கோபமோ இல்லாமல் மனிதவாழ்க்கையை சொல்லும்கலைபப்டைப்புகள் அவரால் எழுதப்பட்டன.பஷீரின் பாத்தும்மாவின் ஆடு, இளம்பருவத்துதோழி [இரண்டும் ஒரே நூலாக] உலகப்புகழ்பெற்ற மூக்கு, மற்றும் சிறுகதைகள் தமிழில்கிடைக்கின்றன

மலையாளச் சிறுகதையில் சிறந்த சாதனைகளை நிகழ்த்திய முன்னோடி என்றுசொல்லப்படவேண்டியவர் காரூர் நீலகண்டபிள்ளை.  1898ல் பிரந்த காரூர் நீலகண்டபிள்ளைகேரள எழுத்தாளர் கூட்டுறவுசங்கத்தின் நிறுவனத்தலைவராக நெடுங்காலம் பணியாற்றினார்.பூவம்பழம், களிப்பாவைகள் போன்றவை புகழ்பெற்ற கதைகள். தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. 1974ல் இறந்தார்.

மலையாள நாவலின் சாதனைகள் என்று சொல்லப்படத்தக்க இரு நாவல்களை எழுதியவர்எஸ்.கெ.பொற்றெகாட்.  1913ல் கோழிக்கோட்டில் பிறந்த எஸ்.கெ.பொற்றெகாட் முக்கியமானபயண இலக்கியவாதியாகவும் இருந்தார். கம்யூனிஸ்டுக் கட்சியில் ஈடுபாடுகொண்டிருந்தார்.  மக்களவை உறுப்பினராக பணியாற்றினார். அவரது ‘ஒரு கிராமத்தின் கதை’ ‘ஒரு தெருவின் கதை’ என்னும் இருநாவல்களுமே தமிழில் கிடைகின்றன. 1980ல் ஞானபீடவிருது பெற்றார். 1982ல் மரணமடைந்தார்.

மலையாள நாவலின் சிறந்த இருநாவல்களை எழுதியவர் உறூப் என்ற பி.சிகுட்டிகிருஷ்ணன்.நெடுங்காலம் மலையாள மனோரமாவின் ஆசிரியராக இருந்தார். அவரது உம்மாச்சு, சுந்தரிகளும்சுந்தரன்மாரும் என்ற இரு நாவல்களும் முக்கியமானவை. இவற்றில் சுந்தரிகளும்சுந்தரன்மாரும் தமிழில் கிடைக்கிறது 1915ல் பிறந்த உறூப் 1979ல் இறந்தார்.

மலையாள நவீனக்கவிதையின் பிதாமகர் என்று சொல்லப்படவேண்டியவர் டாக்டர் அய்யப்பப்பணிக்கர். யாப்பற்ற கவிதைகளை பிரபலப்படுத்தியவர். பிறகு அவரே யாப்புள்ளகவிதைக¨ளையும் எழுதினார். நகைச்சுவையும் விமரிசனமும் கலந்த கவிதைகள் அவருடையவை. 1930 ல் பிறந்த பணிக்கர் கல்லூரி ஆசிரியராக பணியாற்றினார். 2006ல் மரணம்அடைந்தார்.

நவீன மலையாள இலக்கியத்தின் பெரும் படைப்பாளிகளில் ஒருவர் எம்.டி.வாசுதேவன்நாயர். 1933ல் கூடல்லூரில் பிறந்த எம்.டி.வாசுதேவன் நாயர்.மாத்ருபூமி வார இதழின்ஆசிரியராக பணியாற்றினார். அவரது நாவல்கள் நாலுகெட்டு, அசுரவித்து, காலம், இரண்டாமூழம் போன்றவை முக்கியமானவை. இவற்றில் நாலுகட்டு, இரண்டாமிடம் இரண்டும்தமிழில் கிடைக்கின்றன. எம்.டி.வாசுதேவன் நாயர். கேரள சினிமாவை உலகத்தரத்துக்குக்கொண்டு சென்ற மாபெரும் திரைக்கதையாசிரியர். 1995 ல் ஞானபீட விருது பெற்றார். ‘எம்.டி யின் திரைக்கதைகள்’ தமிழில் கிடைக்கின்றது.

சிறுகதைகள் மட்டும் எழுதிய டி.பத்மநாபன் 1931ல் பிறந்தவர். மலையாள மொழியின்மிகச்சிறந்த பல சிறுகதைகளை அவர் எழுதியிருக்கிறார். வெளிச்சம் பரப்பும் பெண், ஹாரிஸன் சாகிபின் நாய், சாட்சி, நிதிசால சுகமா, காலபைரவன், அந்திநேரத்து மழைமூட்டம்போன்ற பல கதைகள் கேரளத்தின் ஆகச்சிறந்த படைப்புகளாகக் கருதபப்டுகின்றன. பத்மநாபன் ·பாக்ட் கொச்சியில் உயரதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். அவரது கதைகள்உணர்ச்சிகரமானவை.

மலையாளநவீன இலக்கியம் அடுத்த காலகட்டத்துக்குச் சென்றது ஓ.வி.விஜயன் வழியாகஎன்று சொல்லலாம். 1930ல் பாலகாட்டு கிராமம் ஒன்றில் பிறந்த விஜயன் ஆங்கிலநாளிதழ்களில் கேலிச்சித்திரக்காரராக புகழ்பெற்றார். அவரது நாவல்களிலும் கதைகளிலும்அந்த கேலிச்சித்திரத்தன்மை உண்டு. அவரது ‘கஸாக்கின் இதிகாஸம்’ என்ற நாவல்உலகப்புகழ் பெற்றது. தர்மபுராணம் ,தலைமுறைகள் போன்ற நாவல்களையும்எழுதியிருக்கிறார். 2005ல் மறைந்தார்

எம்.டி.வாசுதேவன்நாயர்

கேரள நவீன இலக்கியத்தின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான பால் சகரியா நகைச்சுவைஓங்கிய விமரிசனக் கதைகளையும் கவித்துவமான கதைகளையும் எழுதியவர்.தேடிப்போகவேண்டியதில்லை, சொற்கம் தேடிப்போன இரு குழந்தைகள், யாருக்குத்தெரியும்போன்ற பலகதைகள் சிறப்பானவை. கிறித்தவப்பின்னணியை நகைச்சுவையாகவும் கவித்துவமாகவும்தன் எழுத்தில் கொண்டுவந்தவர் சக்கரியா. அவரது இரண்டு சிறுகதைத்தொகுதிகள் தமிழில்வெளிவந்துள்ளன.[சகரியாவின் கதைகள், யாருக்குத்தெரியும்] இதுதான் என்பெயர் என்றகுறுநாவல் மொழியாக்கமாக வந்துள்ளது.

சகரியாவின் பாணியில் எழுத ஆரம்பித்த என் எஸ் மாதவன் பிற்பாடு தனக்கென ஒரு தனிமொழியையும் கதையுலகையும் உருவாக்கிக் கொண்டார். நகைச்சுவையும் விமரிசனத்தன்மையும்கொண்ட கதைகள் அவை. நுட்பமான கவித்துவமும் அவற்றில் உண்டு. ஹிக்விட்டா என்ற கதைகேரளத்தின் சிறந்த கதைகளில் ஒன்றாக கணிக்கப்படுகிறது. அவரது ஒரு சிறுகதைத்தொகுதிசர்மிஷ்டா  தமிழில் வெளிவந்திருக்கிறது. லண்டன் பத்தெரியிலே லுத்தீனியகள் என்றஅவருடைய நாவல் இன்று பரவலாக பேசப்படுகிறது.

[கன்னியாகுமரி மாவட்ட பிரஸ்கிளப் ஆண்டு மலரில் வெளியிடப்பட்ட கட்டுரை]

 

[மறுபிரசுரம். முதற்பிரசுரம் 2010 மே]

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 41
அடுத்த கட்டுரைபரிந்து இட்டோர் – கடலூர் சீனு