உலோகம்-கடிதம்

அன்புடன் ஜெயமோகன் அவர்களுக்கு, நலம், நலமறிகிறேன்.

இத்துடன் தங்களின் மேலான பார்வைக்கு, உலோகம் புதினம் தொடர்பான எனது திறனாய்வுப் பிரதியொன்றை மகிழ்வுடன், இணைத்துள்ளேன். ஒரு ஈழவனின் இயங்கு திசையில், மொழியில் இவ்வாய்வு அமைகிறது. வாழ்த்துக்கள்! தொடரட்டும் தங்கள் எழுத்துப்பணி!

நல்லன்புடன்,
இரா.மோகன்ராஜன்,
முத்துப்பேட்டை.

அன்புடன் ஜெயமோகன் அன்ணைக்கு..,

வணக்கம் ஜெயமோகன் அன்ணை, நான் விமலன் தமிழன், ஈழத்தவன் கதைக்கிறன் நான். நீங்கள்  சுகமோ? எண்டால் நலம். நாங்கள் அப்படியிருக்கயில்லை. எப்படியிருக்கறது? எங்களை வடிவா விடுறதுக்கு அவங்களுக்கு என்ன விசர் பிடிச்சிப்போட்டிருக்கோ? முள்ளிவாய்க்காலுக்குத் தப்பி, முள்வேலி முகாமுக்குள்ளாக அடைபட்டு, வெளிக்கிட்டு இப்பநான் புலம் பெயர் நாட்டிலொன்றில் அடைக்கலமாகியிருக்கிறன். கனகாலமாக குண்டு வீச்சிலும், ஷெல்லடியிலும் சிக்கி சின்னபின்மாகி சனங்களோடு சனங்களா கிடந்து பட்ட வேதனை சொல்லி மாளாது அன்ணை.

அவையெல்லாம் கதைச்சிப் போட்டெனண்டால், ‘உலோகம்’ கனக்கா கண், காது, மூக்கு எண்டு வச்சி வடிவா இன்னொரு புதினத்தை நீங்கள் படைச்சிப்போடுவிங்கள். பாருங்கோவன், ‘உலோகம்’ எண்டதும் நினைவுக்கு வந்துபோட்டது, இஞ்ச புலம் பெயர்ந்த எடத்திலைதான் உங்கட புதினம் வாசிக்க கிடைச்சது. பயப்படாதீங்கோ எண்ட ஒரிஜனல் பெயரிலைதான் கதைக்கிறான் நான்.

ஒங்கட சொர்லஸை, பார்க்கக்க பரிதாபமாயிட்டு இருக்கு. நானும் கனகாலமாய் இயக்கத்திலை இருந்தவன்தான், எண்டா, இவனைப்போல ஆட்களைத்தான் கண்டதில்லை. எனக்கு ஒரு சந்தேகம் அன்ணை,எங்களைப் போன்ற இயக்கத்திலை இருக்கும் ஆட்களை என்டைக்காவது  சந்திச்சி கதைச்சுப் போட்டதுண்டா நீங்கள் எண்டு, ஏனெண்டா போராளிக்கும், விசர் பிடிச்ச மனுசனுக்கும் எந்த வித்தியாசமுமில்லாமல் தங்கட கதாநாயகன் இருக்கினம்.

சொர்லஸ் ஓர் சீவிக்கும் மனுசத் துவக்கு, கொல் எண்டா, கொல்லும். ‘டைம் பொம்’ ஆள். அம்மா, தங்கை கொமர், குழந்தைகள், வயோதிபர் எண்டெல்லாம், குண்டுகள் வெடிக்கக்க கவனத்திலை எடுப்பதில்லை, சொர்லஸ_ம் அப்படியான ஆள்தான். இயக்கத்திலை சேர்ந்து நிழல் உலகுக்குப் போய்விட்டவை தற்கொலைப் போராளி எண்டவரைக்குஞ் சரிதான். வெளிஉலகுக்கு முகங்காட்டமை அவைகள் வாழ தங்களை, அனுசருச்சி கொண்டவைதான், மற்றது, அவை புண்ணாக்குப் போல, குழந்தைகளைக் கண்டுபோட்டவை எண்டா சிரிக்காமலும், தொட்டுத் தூக்காமலுமிருக்க இயலுமென்டு ஜெயமோகன் சொல்லக்கதான் வியப்பாகிப்போட்டது. விடுதலைப் போராளியெண்டா, அவன் கல்லாலை செஞ்போட்டவை எண்டு உது யார் சொல்லிப்போட்டவை இவருக்கெண்டு விளங்கேயில்லை.

அமெரிக்கா சுட்டிப்போடுற ‘பயங்கரவாதி’, ஜெயமோகன் அடையாளப்படுத்திப்போடுற ‘போராளியும்’ ஒண்டுபோல காணக்கிடக்குதப்பா!

இலக்கில்லாத சனங்களோடை இந்தியவுக்கு எடுக்கும் சொர்லஸை, இந்திய நேவிக்காரர்கள் சந்தேகத்தோடை பிடிச்சி கதைக்கிறாங்கள், அங்க இன்னமும் ஆட்கள் அடிச்சிகொள்ளறதை கேட்டுப்போட்டு, ‘முட்டாள்கள்’ எண்டு கோபப்படுவினம் ஒரு நேவி ஒபிசர். சண்டை சச்சரவு எண்டு காணது அந்த ஒபிசர் அவையிண்ட இளைப்பரலை முடிச்சுகொள்வினம் எண்டு ஜெயமோகன் எழுதுவர். எண்டா ஜெயமோகனும், ஒருக்கா ஈழத்திலை எண் நடக்கிறதெண்டு கண்டு போட்டுவாறதும் நியாயமாயிட்டிருக்கும் ஒம்.

ஆல்பர்ட் காம்ய+யோடை, ‘அந்நியன்’ சொர்லஸை நினைவுப்படுத்திப்போடுது.நிலவும் சூழலுக்குப் பொருந்தி வாறாத மனுசன்தான் அந்நியன் எண்டா,  அந்நியனிண்ட குண இயல்புகளை உலோகத்திண்ட கதாநாயனுக்கு பொருத்திப் பார்க்கினம் மோகன் அன்ணை. இது ஏனெண்டு எண்ட மூளைக்கு கடைசிவரைக்கும் விளங்கிப்போடுவதாயில்லை.

படகிலை எடுத்து இந்தியா வாறது தொடக்கம், இடையிலை தீடையிலை நிண்டு பிறவு மண்டபத்திலை வைத்து ஜோர்ஜை, சார்லஸ் சந்திக்கினம், இந்த இடத்திலைதான் கதை பிக்கொப் ஆகிறது, ஒரு கடைஞ்செடுத்த சினிமா பைத்தியம் தான் ஜோர்ஜ் எண்டு இல்லை, இல்லை ஈழத்தமிழனெண்டு அன்ணை சொல்லுவினம் அவைமட்டுமா சொல்லுவினம் விவேக்கை வைச்சி யோகராசா வெண்டு கொமடி பண்ணி புலத்திலையும் இஞ்சையும் செய்தவையைதான், அண்ணை எழுத்திலையும் செய்தவையாக்கும். நிசத்திலை, எங்கட இளைஞர்கள் அப்படியானவை எண்டு பொதுபுத்தியில் உறைக்க இவைக்கு ஆர் சொன்னவை.? எத்தனை ஆட்கள் இப்படியெண்டு இவை கண்டு போட்டவை. அரசியல் துரோகத்தாலையும், தமிழன் என்கிறதாலையும், எமது சனங்களும், இளைஞர்களும் , யுவதிகளும், குழந்தைகளும், செத்து சீரழிவினம், எமது பொடியன்கள், பொன்னம்பலத்தார் கதைப்பது போலை ‘தோணி வலிக்கும் பையன்கள்’ மட்டுமல்ல, யாழ்.கலாசாலையில் கல்வி புலமை பெற்ற இன்டெலெக்சுவெல் அறிவுசீவிகளும் பங்களித்துள்ளமை வெளிப்படையாகும்.

சொர்லஸ_ண்ட உடம்பிலை துவக்கு சன்னமொண்டு புகுந்து கிடக்கினமாம், அது அவை, மனுச உணர்ச்சி அடையும் வாக்கிலை சன்னம் வலி கொடுத்து அவனை  இயந்திரமாக்கிப் போடுவினமாம். நல்ல கவித்துவம். எண்டா மோகன் அன்ணை, சொர்லஸ_ண்ட விலாவிலை ஒரு வண்ணத்துப்ப+ச்சி துடித்தினம்மெண்டா எவ்வளவு வடிவாயிட்டிருக்கும். அவனைத்தான் நீங்கள் இயந்திரமாக்கி போட்டிங்களே.

இந்திய உளவுத்துறை ஆட்கள் ஒட்டுக்குழுக்களை, உதிரி இயக்கங்களைக் கைக்கூலிகளாக் கொண்டு, எம்மையும் எமது விடுதலை இயக்கத்திரையும் ஒழிச்சிப்போட, செய்யும் தந்ரோபாயங்களை வடிவா சொல்லிப் போட்டிங்கள் அன்ணை. இது வொண்டுதான் புதினத்திண்ட நல்ல அம்சம் என்ன..

இந்த ஜோர்ஜை உளவுத் துறை போட்டுத்தள்ளியதுயெண்டா, அவனின்ட மனைவியை, உளவுத்துறை பொலீஸ் ஆள் வீராகவன், அங்காலை, இவன் சொர்லஸ். இயக்கத்திண்ட விதிகளுக்கு முரணாக நடந்துபோடுவினம். ஓண்டு இயக்க ஆள் இல்லை எண்ட சந்தேகத்தினை போக்கிப்போட, அல்லவெண்டா செயமோகன் அன்ணையோடை வக்கிர கற்பனையெண்டுதான் சொல்லிப்போடனும்.

சந்தர்ப்பம் கிடைச்சவை யெண்டா, அதைச் சாக்கிட்டு, பெண்பிள்ளைகளை வலைச்சிப்போடுவினம் எண்டு போராளிகளை நினைப்பவைகள், தலைவரை நேர்கண்ட அனிதாபிரதாப்பிண்ட ஒருக்க கதைச்சிப் போடவேணும், போராளிகளோடை இராத்தங்கி வந்தவை அவை சொல்வினம், “இவை என்னை ஒரு பெண்பிள்ளை எண்டு கூட பார்க்காமலை, அவங்களிலை ஒருத்தரா நடத்துவினம்’ ஒழுக்கம், கட்டுப்பாடு என்னவெண்டு இவையிடம் பார்த்தநான்” எண்டவை.

கொழும்புவிலை அரசியல் துரோகியை சுட்டுப்போட்டு வெளிக்கிடும், சொர்லஸ_க்கு, இந்தியாவிலை சொந்த இயக்கத்து ஆளான சிறிமாஸ்றரை போடுவதாலை துரோகிக் குழுவினுக்க அவை தலைவனாகினம். இஞ்சதான் இந்திய உளவுத்துறை நம்பிக்கையை பெற்றுக்கௌ;கிறவன் சொர்லஸ். அவையாலை, தலைநகர் தில்லிக்கு அனுப்பிவைக்கப்டுவினம், எதற்கெண்டா அங்காலை ஒரு தமிழ் மக்களிண்ட அரசியற் துரோகி இந்திய மக்களிண்ட வரிப்பணத்திலை சொகுசா வாழ்வினம் (வடக்கு-கிழக்கு முன்னாள் முதல்வர் வரதராஜ பெருமாளை நினைவு படுத்தி போடுது, அமிர் அன்னை போலவும் கிடக்குது. ) இவையை சொர்லஸ் போட்டினமெண்டா, அவன் பெரிய இயக்கத்திண்ட ஆள் எண்டது உறுதியாகிப்போடும், மற்றது, சொர்லஸ_ண்ட நோக்கமும் நிறைவேறிப்போடும். உளவுத்துறையும், சொர்லஸ_ம் கண்ணாமூச்சி ஆடுவினம்.

சொர்லஸ் பயிற்சி எடுத்த ஆள் ஆனபடியாலை சமயோசிதமும், செயலுக்கமுமிக்கவை என்பது உண்மையே, உது நான் முன்னாலை கதைச்சது போலை கனகலிங்கம் பொன்னம்பலம் ஆர் எண்டா இயக்கத்துக்கும், தமிழ் மக்களுக்கும் துரோகம் செய்து போட்டு பதுங்கிகிடப்பவை அப்படித்தான் கதைபோறதாக்கும். பொன்னம்பலத்தார்

சொல்வினம், “உலகத்திலேயே நம்ப முடியாத இயக்கமெண்டா அது இவைதான் யார் மேலேயும் சந்தேகத்தை கிளப்பிப்போட்டு, கொல்றதுக்கு ஆள் அனுப்பிவிடுவாங்கள்,” எண்டு, எண்டா, இவர் மட்டும் ‘ரோவோடு’ சேர்ந்து போட்டு இயக்கம் ஆரம்பிக்க செய்வர், என்ன கதையெண்டு கேட்டால், அவை துரோகியெண்டு சொல்லி போட்ட்படியாலை நான் இவைகளோடு சேர்ந்து கொண்டினம் எண்டு கதைச்சிபோடும்.

துரோகம் என்பவை ஏதோ பத்தோடு பதினைந்தாக போய்விடுதில்லைதானே, ஆட்களை, இயக்கதினை, மக்களை எண்டு சகலத்தையும் அழிச்சிப்போடும் மத்தவை போல துரோகத்திற்கும் சலுகை காமிச்சமெண்டா, அதற்கான பலனை அனுபவிச்சி போடனும் தானே? எண்டாதாலை முளையிலேயே கிள்ளிப்பேடுவினம், அதை ஆர் எதற்கெண்டு செய்து போட்டினமெண்டாலும் சாவா, வாழ்வா எண்டு களத்திலே நிப்பவைகளுக்கு எல்லாஞ் சரிதான்.

அங்காலை பொன்னம்பலத்தாரின்ட மகள் வைஜெந்தி, பிறகொருமுறை இவன் சொர்லஸஸ_ண்ட கதைக்கக்க, அவளிண்ட தந்தை, பொன்னம்பலத்தார் சொல்வாரெண்டு சொல்லி, ஒருநாளைக்கி மொத்த ஈழ சனத்ததையும் அவங்கள்(இயக்கத்திலை) துரோகியெண்டு சொல்லிப்போடுவாங்கள் எண்டு சொல்லுவள். எமது விடுதலைப் போராட்டமெண்டது நீண்ட நெடிய போக்குடையது, பேச்சு, அது பலனளிக்காவிட்டதெண்டால் துவக்கு எண்டு மாறி மாறி அமைந்த ஒண்டாகும். பேச்சை விட செயலில் நம்பிக்கை வைத்தமையாலேயே எமது பிரச்சனை இண்டைக்கு சகலருக்கும் தெரிஞ்ச ஒண்டா காணக்கிடக்குது. இதிலை துரோகிகள், கைக்கூலிகள் எவையெண்டு மக்களுக்கு அடையாளம் காண்பிச்சிப்போடுவது ஒரு கடமை.

இவர், பொன்னம்பலத்தார், தமது துரோக வாழ்க்கைக்கு பாதுகாப்பளிக்க பயிற்சியெடுத்த ஈழத்தவன் ஒருத்தனை ஏற்பாடு செய்கிறவர். எண்டாக்க அவரது நம்பிக்கை பெற்றுக்கொண்டு சொர்லஸ் அங்காலை தில்லியில் தங்குகிறவன். இயக்கத்திற்கும், மக்களுக்கும் துரோகம் செய்து போட்டவை யெண்டதாலும் அவை காற்று புகாத இடத்திலையும் தேடி வந்து கொன்டுபோடுவாங்கௌண்டு கிலேசமடைகிறவர் பொன்னம்பலத்தார். சொர்லஸ் இயக்கத்திண்ட தமிழக பொறுப்பாளனிடம் உத்திரவும், செல்போனையும் பெற்று அதை தமது மலகுடலினுக்குளாக வைச்சி காப்பினம். தலைமை ‘போட்டுத்தள்ளும்’ உத்திரவை இடும் வரை இஞ்சை இவன் மீள, மீள எடுத்து  உத்திரவு ‘லொட்’ ஆகியிருக்காவெண்டு பார்க்கினம், பொக்கெட்டிலிருந்து ஏதோ புகைச்சல் பொதியை எடுப்பவை போண்டு எடுத்து பார்க்கினம்.

இஞ்சை இந்தியாவிலைதான், மக்களுக்கு துரோகம் செய்து போட்டு அரசியல் வாதிகள் உல்லாசமாக இருக்க ஏலும். அங்காலை அவை எண்ணி பார்த்தவெண்டாலே பயந்து போடுவாங்கள். அவைக்குத் வடிவாத் தெரியும் அய்க்கிய தேசியக்கட்சி எம்.பி கனகரத்தினம், யாழ். மேயர் அல்பிரட் துறையப்பா, என்ன கதிக்கு ஆளாயினாங்கள் எண்டு. இவை, ஆலாலசுந்தரம், தர்மலிங்கம், அமிர்அன்னா, யோகிசுவரன் போன்றவைகளை, இந்திய உளவுத்துறை ரோவின்ற ஆட்களும் அவையினண்ட கைகூலிகளுமே போட்டுத் தள்ளினம். எண்டா, இயகத்து மேலை அந்தப் பலியைப் போட்டினம்.

துரோகம், சதி, கொலை, குருதி எண்டு, சதா ஈழதெய்வம் தாகமெடுத்து பலி கேட்டினம், மோகனன்ணை என்னவெண்டா, ஈழத்துயரை திரில்லர் எண்டு சொல்லி அதன் சமூக அவலத்தை பகடிசெய்துபோட்டினம்.

ஓண்டு தெரியுமா அன்ணை ஒங்களுக்கு? இஞ்சை, இந்தியப் படை நின்ற காலத்திலை, அவைக்கும் இயக்கத்துக்கும் சண்டை துவங்கக்க, அங்காலை, அவை வாரும் வழியிலை, இயக்கத்திண்ட ஆட்கள் கண்ணிவெடியை புதைச்சிப்போட்டு காத்திருந்தவைகள், அண்டைக்கு எண்டா பாடசாலை பிள்ளைகளை ஏத்திப்போட்டு வான் வண்டியொண்டு அந்த வழியா திடீரெண்டு  வாரக்கண்டு பதைச்சிப்போன இயக்கத்து போராளி யொருத்தன் கெதியா வெளிக்கிட்டுப்போய் அந்த கண்ணிவெடியாலை காலை வச்சிப்போட்டு அவைகளை தடுத்து நிறுத்த சைகை காமிச்சிப்போட்டு இவன், வெடித்து சிதறினவன். ஈழத்தின்ட குழந்கைள் மேலை எத்தனை அன்பு கொண்டிருந்தவை யெண்டா, இவன் இதை இப்படி செய்து போட்டிருப்பான் எண்டு கொஞ்சம் யோசித்துப் பாருங்கோவன். போராளிகளோடை, விலாவிலை துடிக்கிற வண்ணத்துப்ப+ச்சியிண்ட இறக்ககை சத்தத்தை காதிலை கேட்டுப்போடுங்கோ ஜெயமோகன் அன்ணை.

கனத்த தியாகத்தாலையும், அர்ப்பணிப்பாலையும் துணிவாலையும் இவைகள் ஈழத்தினையும் வரலாற்றினையும் உருவாக்கினம். என்டா வரலாறு பற்றி பொன்னம்பலத்தாரும், சொர்லஸ_ம் கதைப்பவை பேரரசுகள் பற்றி எண்டு எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிரை, இனவாதத்திற் கெதிரான, விடுதலையின் பாற்பட்ட, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்டவையின் தற்காப்பு யுத்தத்தினை, விடுதலைபோராட்டத்தினை எண்டு தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது. விடுதலைப்போராட்டத்திற்கும், பயங்கரவதத்திற்குமான வேறுபாட்டை தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும், ஏணென்டா இண்டைக்கு அரசே பயங்கரவாதத்தினை நிகழ்த்தும் போக்கு காணக்கிடக்குது. இந்த கனத்த வேறுபாட்டை அன்ணை ஜெயமோகன், எளிதாக, செங்கிஸ்கான், அவை, இவை யெண்டு கெதியா, சொல்லிப்போடுவதோடை, கடந்து போறதுதான் கனத்த சந்தேகத்ததை கிளப்பிப்போடுவினம்..

பொன்னம்பலத்தார், உண்மையிலை ஒரு ‘கொமெடியன’;தான் சிரியசான ஆள் எண்டு அன்ணை உருவாக்கிப்போட்டினம் எண்டா இவை வளப்பமான உயர் சாதி சைவ, வெள்ளாள பார்பானை யாழ் புத்தி சீவியெண்டு சொல்லிப்போடுவினமெண்டா, அவர் அவரிண்ட உயிரை காப்பாற்றிப்போடும்படி சொர்லஸிடம் அடிக்கடி கெஞ்சுவதும், கண்ணீர் விட்டு கதறுவதும் நல்ல பகடிதான், அவரது மகள் வைஜெந்தி ( கலாவதி, யாழினி, கமலினி எல்லாம் எங்கள் மண்னை விட்டுப்போட்டு எங்கே போயினவங்கள் அன்னை?) நல்ல ‘பப+’னாக்கும். அவை சொல்வினம், தன்னோடை தந்தையை போட்டுவி;ட்டினமெண்டால், எல்லா பகையும் ஒழிஞ்சவை எண்டு,

சொர்லஸாலைதான் தந்தையும், மகளும் நம்புறவங்கள், இதிலை ஒருபடி மேலே போய், பென்னம்பலத்தாரின்;ட செல்லமகள், வைஜெந்தி, இவையை மனதிலை போட்டு,  சொர்லஸிடம் தன்னை கெ(டு)hடுக்கறவள். இவன் சொர்லஸ், தற்கொலை போராளியா மற்றது, ஹொலிவுட் ஹ{ரொவா எண்டு கன சந்தேகத்தை கிளப்பிபோடுதப்பா, போற இடத்திலையெல்லாம், துவக்கையெடுத்து நீட்றவை, பெண்களை கண்டமெண்டா வளைச்சிப் போடுறவை.

தற்கொலை போராளிணெ;டவை, தலைவரிண்ட மூளையில் பிரத்யேகமாக உதித்தவை, தமிழ்மக்களிண்ட காவல் தெய்வங்கள், அவைகள். பதட்டமில்லாமை வாழவும், கொல்லவும், சாகவுமெண்டு பழகியவைகள். சொர்லஸ் எண்டா சைவப்பழம் பொன்னம்பலத்தரோடை சேர்நது போட்டு தத்துவமெல்லாம் பிதற்றினம்,

யுத்த நிலம் உருவாக்கிப்போடும் வாழ்க்கை ஜெயமோகன் அன்ணை அனுபவிச்சுப்போடாத ஒண்டாக்கும், எண்டா என்னை போன்ற ஆட்களிடம் கதைச்சிப் போட்டு செய்திருக்கவேணும், இதிலை, ஈழத்தமிழில் கதைக்க தனக்கு ஏலாது எண்டு துவக்கத்திலை சொன்னவர் அன்ணை. ஆனபடியாலை, ஈழக்கதை யெண்டு சொல்லிபோட்டாலும் மனசிலை நிற்க ஏலவில்லை கண்டீர். எடுத்துக் கொண்ட விடயத்தை, செய்து முடிப்பவை இயக்காத்தாட்கள் இல்லையெண்டா அவை இயக்கத்தாள் கிடயாதுதான். கொழும்புவிலை காரியத்தை முடிச்சுப்போட வெளிக்கிடும் கரும்படை அணியாள், அங்காலை வீதியிலை, பிச்சையெடுத்தும், மரக்கறி வியாபாரம் செய்துபோட்டும், மழையிலும், வெயிலிலும் உரிய நேரம் வார வரை காத்திருப்பவை அப்படி வந்திட்டா, அவையையும், குறிச்ச ஆளையும், தாக்கிப்போடடுவதை எந்த சக்தியாலையும் தடுத்துப்போட ஏலாது. ஓண்டு கவனிச்சியெண்டால் தெரியும் கொழும்புவிலை சொகுசாக வாழ்வதற்கும், குடிப்பதற்கும், குடிச்சிப்போட்டு உறங்கவும், காசு பணத்திண்ட புழக்கத்திற்கும் ஃபைவ்ஸ்டொர் ஹொட்டலில் தங்கிபோட்டு தாங்கள் வந்த வேலையை மறந்து போட்டு இயக்கத்தாலையிருந்து தப்பிபோகலாம் அப்படியொரு கரும்படையாள் ஒண்டையேனும் காண்பிச்சி போடுங்களன் பார்ப்பம்.

அன்ணை விடுதலை இயக்க  ஆட்களை மட்டும் எடுத்துக்கொண்டு அரசியல் நீக்கம் செய்த கதையை கொடுக்க முயன்றவை, செங்கிஸ்கானை போண்ட ஆட்கள் வரலாற்றை படைக்க முயற்சித்தவை எண்டு சொல்லுவினம்., அங்காலை விடுதலை இயக்கமும், தலைவரும் ஏதோ திட்டமிட்டு வாரலாற்றை உருவாக்கினம் எண்ட நினைப்பை உண்டாக்கிப்போடுவினம், புதினத்தை வாசிச்சி முடிக்ககைக்க இந்த நினைப்பு வந்துபோடுவதை தவிர்க்க ஏலவில்லை எண்டுதான் சொல்லவேண்டுமப்பா. இதுதான் ஜெயமோகனிண்ட திட்டமோ எண்டும் தெரியேல்லை. வரலாற்றை ஜெயிச்சவங்கள் எழுதுறவை எண்டு பிரசங்கம் பண்ணிப்போடும் அன்ணை, வரலாற்றை திரிச்சிப் போடுறவை ஆர் எண்டதையும் விளக்கிப் போட்டா வடிவாயிருக்கும் என்ன..

உலோகத்திண்ட கதை ஈழச்ச சமூகத்திண்ட அவலத்தை சொல்லினமெண்டா எத்தனை வடிவாயிருக்கும்.. இவன் சொர்லஸ், போராளியானதுக்குப் பின்னாலை எவ்வளவு கனத்த கதையிருக்கும்? ஏதோ துவக்கை தூக்கப் பிடிக்குமெண்டதாலை விரும்பி போரளியாகிப்போட்ட ஆட்கள் எண்டுசொல்ல ஏலுமா என்ன. பெத்த குழந்தை சீவனை அதனிண்ட தாய் கொன்டு போடுறவள் எண்டா அவளிண்ட பின்னால் எங்கட சமூகத்திண்ட அழுத்தம் எத்தனை வலுவாயிட்டிருக்கும் ? அவை விசர் பிடிச்ச மனுசி யெண்டு சொல்லிப் போட்டினமெண்டால் சரியோ? துவக்கை எடுத்தினமெண்டால் அவனை மனநோய் பிடித்தனவனெண்டு எப்படி சொல்லுறது.

வைஜெந்தி –மற்றது பெண்பிள்ளைகள் கழுத்து, கன்னம், உதடு எண்டு ஆராய்ச்சியில் சொர்லஸ் மூழ்கிவிடுவதை காணக்க சிரிப்பதா, அழுவதா எண்டு தெரியேல்லை.

சொர்லஸை பயன்படுத்கொண்ட இவள், பெட்டை, தண்ட தந்தையை போட்டுத்தள்ள கேட்டினமெண்டால், மற்றது, இங்காலை ‘இரசீவ் காந்தியை கொன்டவைக்கே’ ஆயுள் தண்டனைதான் கொடுத்தினம் என்கிறவள். போறபோக்கிலை, ஆட்களுக்கும், நீதிக்கும் புதிய அறத்தை கற்பிக்கிறவை அன்ணை.

கடைசியிலை பொன்னம்பலத்தார், இயக்கத்தோடை ‘லிங்’ கிடைச்சிவிட்டதெண்டும், ரோவிண்ட ஆட்கள் பெயர் கேட்டினம் எண்டும் கதைக்கிறவர். எண்டா, சொர்லஸ_க்கு ‘டூ’ எண்டு மலக்குடலுக்கு செய்தி வருவினம். புறகெண்டா சொர்லஸ், பொன்னம்பலத்தாரை போட்டுத்தள்ளினம்.

பகுத்தறிவுள்ள துவக்கு சொர்லஸ், தான் வந்த வேலையை முடிச்சிப்போட்டு தப்பிக்கிறவன் இங்காலை கதை சுபமாகினம். எண்டா சொர்லஸ், உடம்பிலை துவக்கு சன்னம் அவனை துளைச்சிப் போட்டு இதயத்தாலை வெளிக்கிடுமெண்டால், அவனிண்ட மனுசத்தன்மை வெளிக்கிடுமென்ன!

பிறகெண்டா அவனிண்ட இமை வழியாலை, இதயக்கூட்டினுள் வண்ணத்துப்பூச்சியொண்டு வந்துபோடும் சரியோ!

தங்கடை அன்புத்தம்பி:

விமலன்.

அன்புத்தம்பி ‘விமலன்’,

திரில்லர் நாவல் என்பது ஒரு குறிப்பிட்ட வடிவம்.  எல்லாக் கதை வடிவங்களும் ஒரே முக்கியத்துவம் கொண்டவை. உள்ளது உள்ளபடி சொல்லும் யதார்த்தபாணி கதைகள் மட்டுமே இலக்கியம், மற்றதெல்லாம் இலக்கியம் அல்ல என்று சொன்ன காலகட்டம் இப்போது இல்லை. எல்லாக் கதைகளையும் போல இதுவும் ஒரு கதை. எந்த யதார்த்தக் கதையிலும் எந்த அளவுக்கு உள்ளடக்கத்தில் உண்மை உள்ளதோ அந்த அளவுக்கு இதிலும் உள்ளது.

இந்த வகை கதை யதார்த்தத்தை ’அப்படியே’ சொல்லாமல் வேகமான தொடர்நிகழ்வுகளாக ஆக்குகிறது. அந்தத் தொடர்ச்சிக்காக சில சம்பவங்களை விரிவாகவும் சிலவற்றை சுருக்கமாகவும் சொல்கிறது. ஒரு செயற்கையான இறுக்கத்தையும் ஒற்றைப்படை ஓட்டத்தையும் அடைகிறது. இதெல்லாம் இந்த வடிவத்தின் இயல்புகள். இதை ஒரு யதார்த்தச் சித்தரிப்புக் கதையுடன் ஒப்பிடக்கூடாது. நம்மிடம் இலக்கிய ரீதியாக திரில்லர்களை மதிப்பிடும் அளவுகோல்கள் இன்னும் உருவாகவில்லை.

பொதுவாக இந்நாவலுக்கு வந்த எதிர்வினைகளில் அதிக தீவிரத்துடன் எழுதியவர்கள் விடுதலை இயக்கங்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள். எண்பதுகளின் ஆரம்பத்திலேயே புலம்பெயர்ந்து வசதியாக வாழ ஆரம்பித்தவர்கள். அவர்கள் ஒரு குற்றவுணர்ச்சியாலோ அல்லது தங்களுக்கென பிம்ப உற்பத்திக்காகவோ இன்று அதிதீவிர உணர்ச்சிநிலைப்பாடு எடுக்கிறார்கள். இயக்கங்களின் வாரிசுகளாகத் தங்களையே பதவி நியமனம் செய்துகொள்கிறார்கள். ஏனென்றால் இப்போது எந்த ‘ரிஸ்கும்’ கிடையாது. அவர்களை நான் ஒரு வகை வேடிக்கைகளாக மட்டுமே எடுத்துக்கொள்கிறேன்.

இதில் சிக்கல் என்னவென்றால் இவர்கள் ஒருவகை வரலாற்று உற்பத்தியைச் செய்வதுதான். புலி இயக்கத்தில் புகை பிடிக்கத் தடை இருந்தது, ஆகவே எந்தபுலியும் எப்போதும் புகைபிடிக்க மாட்டார், அவ்வாறு சொல்வதே அவதூறு என்றவகையில் பஜனை. நேற்று ஆயுதத்தால் விரும்பிய வகையில் வரலாறை எழுதவைக்க முயன்றார்கள். இப்போது கழிவிரக்கம் குற்றவுணர்ச்சியை அதற்குப் பயன்படுத்துகிறார்கள். இலக்கியம் இதற்கெல்லாம் கட்டுப்படாது.

அமைப்புகளில் மிக முக்கியமான பொறுப்பில் இருந்த பலர் எனக்கு இன்னும் நெருக்கமான நண்பர்கள். ஒருவரேனும் இந்த நாவலை பற்றி இவ்வகைக் கருத்துக்களைச் சொல்லவில்லை.  அதிகம்போனால் இனிமேல் இதையெல்லாம் பேசி என்ன என்ற சலிப்பை மட்டுமே சொன்னார்கள். சலம்புபவர்களுக்கு ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது

தம்பி கனகாலமாய் இயக்கத்தில் இருந்தீர் என்றீர்கள். சீனியரிடம் கேட்டுப்பாருங்கள். யார் யார் என்ன ஏது என்று தெளிவாகவே சொல்வார்கள்.அதை மோகனராஜனுக்கு எழுதி அனுப்புங்கள். அவர் உள்ளூரில் இருந்துகொண்டு உலக வரலாற்றை எழுதுகிறார்

ஜெ

 

முந்தைய கட்டுரைகூடங்குளம் இரு கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅனலும் அணுவும்