பாஸ்கர் சக்தி

 

பதினைந்தாண்டுகளுக்கு முன்னர் இந்தியா டுடே நடத்திய ஒரு சிறுகதைப்போட்டியில் பாஸ்கர் சக்தி, க.சீ.சிவக்குமார் இருவரும் பரிசு பெற்றார்கள். இரு எழுத்தாளர்களின் வருகையை அறிவிக்கும் கதைகளாக அவை இருந்தன. சகஜமான நடையும் நுண்ணிய நகைச்சுவையும் கொண்டவை அவை. க.சீ.சிவக்குமார் தொடர்ந்து கதைகள் எழுதிவருகிறார். அவற்றில் பெரும்பகுதி பிரபல இதழ்களின் வாசகர்களுக்கு உரிய விளையாட்டுநடை கொண்டவை என்றாலும் அவருக்கே உரித்தான அங்கதம் அவற்றில் இருக்கும். அவ்வப்போது குறிப்பிடதக்க கதைகளையும் எழுதுகிறார்.

 

பாஸ்கர் சக்தி அதிகமாக எழுதவில்லை. அவரது குறிப்பிடத்தக்க தொகுப்பு தமிழினி வெளியீடாக வந்த பழுப்பு நிற புகைபபடம்என்ற நூல்தான். அதில் பாஸ்கர் சக்தியின் சிறந்த கதைகள் சில உள்ளன. அவர் ஆனந்தவிகடனில் துணையாசிரியர் ஆனார். அதுதான் அவரது எழுத்து மடுப்பட்டமைக்கான காரணமாக இருக்கலாம். பின்னர் அவர் தொலைக்காட்சித்தொடர்களுக்கு வசனம் எழுதுவதாகச் சொன்னார்கள். அதில் மிக வெற்றிகரமான ஆசிரியர் அவர் என்றார்கள்.

 

மெட்டிஒலிபாஸ்கர் சக்தியின் திறமையை சின்னத்திரையில் நிறுவிய தொடர். அவரது வசனங்களைக் கவனிப்பதற்காக நான் ஒரு இருபது அங்கங்கள் வரை அதை பார்த்திருக்கிறேன். சாதுரியமான வசனங்கள் என்று சொல்லலாம். அதன்பின் அவர் எம்-மகன் சினிமா வழியாக திரையுலகுக்கு நுழைந்தார். சிறியபடமான எம் மகன் வெற்றியடைந்ததில் பாஸ்கர் சக்தியின் பங்களிப்பும் அதிகம். அதன்பின் முனியாண்டி விலங்கியல் இரண்டாம் ஆண்டு

 

இப்படங்களில் அவரிடம் கோரப்பட்டதை பாஸ்கர் சக்தி செய்தாலும்கூட அவரால் மட்டுமே எழுதப்படக்கூடியதை எழுத அவருக்கு வாய்ப்பளித்த படம் வெண்ணிலா கபடிக்குழு. நானும் ஷாஜியும் வசந்தபாலனும் அந்தப்படத்தை சென்னையில் பார்த்தோம். வழக்கமான கதையும் திரைக்கதையும் கொண்ட வழக்கமான படம் அது. ஆனால் படம் தொடங்கியது முதல் இறுதிவரை படத்தில் ஓரு சுவாரஸியம் இருந்துகொண்டே இருந்தது. அதற்குக் காரணம் இயக்குநர் சுசீந்திரன் அளித்திருந்த நுண்தகவல்கள் மற்றும் பாஸ்கர் சக்தியின் வசனம்.

 

வெண்ணிலா கபடிக்குழுவில் கதாபாத்திரங்களுக்கான நடிகர் தேர்வும் சரி, அவர்களை நடிக்க வைத்திருந்த விதமும் சரி, நுட்பமானவை. பற்பல நுண்மையான காட்சித்தகவல்கள் மூலம் ஒரு கிராமத்தை கண்ணில் காட்ட இயக்குநரால் முடிந்திருந்தது. கிராமத்து திருவிழாவின் கோலாகலம் ஒரு பக்கமென்றால் இளசுகளின் காதலைக் கண்டு மென்னகை புரியும் நடக்கமுடியாமல் நடக்கும் கிழவரின் முகத்தின் நிறைவு இன்னொரு பக்கம். அது வாழ்க்கையை தரிசிக்கும் நிறைவு.

 

பாஸ்கர் சக்தி இந்தப்படத்தில்தான் வெளிப்பட்டிருக்கிறார். அவரது எழுத்துக்களில் உள்ள சிரிப்பை நகைச்சுவை அங்கதம் என்றெல்லாம் சொல்லமுடியாது. அது ஒருவகை குசும்பு. தேனி வட்டார ஆட்களுக்கு அந்த ங்யஉச்சரிப்பின் மூலம் அந்தக்குசும்பை உருவாக்க முடியும். பாலாவிடம் அது உண்டு. இயக்குநர் சிங்கம்புலி அதில் ஒரு மாஸ்டர். ஏன்,நான்கடவுளின் எலிசெந்தில் கூட அபாரமான குசும்பு உள்ளவன்தான்.

 

பலகாட்சிகளில் அந்த நாட்டுக்குசும்பு வெளிப்படுவதை அரங்கில் ரசிகர்கள் சிரித்து மகிழ்வதைக் கண்டேன். வசனம் என்னும்போது அது வசனம் மட்டுமல்ல, அந்தச்சந்தர்ப்பத்தை எழுதியமைத்திருக்கும் விதம்தான். குறிப்பாக அந்த பரோட்டா வீரரின் மனைவியும் அவரும் பேசிக்கொள்ளும் இடங்களைச் சொல்லலாம்.

 

எழுத்தாளராக பாஸ்கர் சக்தி தமிழ் சினிமாவுக்கு பெரும் பங்களிப்பை ஆற்றமுடியும். வாழ்த்துக்கள்.

முந்தைய கட்டுரைஅநங்கம் :நிகழ்ச்சி
அடுத்த கட்டுரைஅனல் காற்று (குறுநாவல்) : 14