சண்டிகேஸ்வரர்

1

 

அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,

நலமா? போன வாரம் கும்பகோணம் சென்றிருந்தோம். அங்கு சுற்றியுள்ள கோயில்களுக்குச் சென்று வந்தோம். சண்டிகேஸ்வரரை வணங்கும்போது வழக்கம்போலக் கைதட்டினோம். அப்பொழுது என் சித்தி கைதட்டக்கூடாது என்றார். ஏன் என்றால் அவர் கோயிலை நிர்வாகம் செய்பவர் என்றார்.

திடீரென்று இன்று இணையத்தில் தேடிப்பார்த்தபோது நிறையக் கதைகள் கிடைத்தன. எல்லாக் கதைகளும் அவரவர் கற்பனைக்குத் தகுந்தவாறு சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் மையம் ஒன்றுதான். சிவபூஜை செய்து கொண்டிருந்த விசாரசருமருக்கு தந்தை எச்சதத்தன் இடையூறு செய்ய மழுவால் தந்தை காலை விசாரசருமர் வெட்டிவிடுகிறான். உடனே சிவன் பார்வதியுடன் தோன்றி சண்டிகேச பதவியைத் தருகிறார்.

மக்களுடைய நம்பிக்கை

1) சிவனை வணங்கும்போது சண்டிகேஸ்வரரையும் வணங்கினால்தான் பலன் கிட்டும்

2) கைதட்டுவது நூலைப்போடுவது போன்றவைகள், நான் எதையும் கோயிலிலிருந்து எடுத்துச் செல்லவில்லை என்று சொல்வதற்கு.

3) கைதட்டுவதும் நூலைப்போடுவதும் கூடாது என்றும் சிலர்….

4) சண்டிகேஸ்வரர் கோயிலை வலம்வரக்கூடாது என்று சிலர்

ஒரு நம்பிக்கைக்கும் மற்றொரு நம்பிக்கைக்கும் பெரிய முரண் உள்ளது. நம்பிக்கைகள் ஒருமையாக இருந்தால் ஏதோ பின்பற்றலாம்.

இதை எப்படி எடுத்துக் கொள்வது? எது மூலக்கதை? இதைப்பற்றி எந்த நூலாவது சொல்கிறதா? உண்மையில் சண்டிகேஸ்வரரின் தத்துவம் என்ன? தயவுசெய்து விளக்கம் அளிக்கவும். செய்வீர்களா? நன்றி.

இப்படிக்கு
பா.மாரியப்பன்

***

அன்புள்ள மாரியப்பன்,

முதல் குழப்பத்தைக் களையுங்கள். சண்டீச நாயனார் என்ற சிவ பக்தருக்கும் சண்டிகேஸ்வரர் என்ற சைவக்கடவுளுக்கும் சம்பந்தம் இல்லை.

சண்டீசநாயனார் பத்து பன்னிரண்டாம் நூற்றாண்டு வாக்கில் வாழ்ந்தவராக இருக்கலாம். அவரைப்பற்றி இருவேறு கதைகள் உள்ளன. பெரியபுராணத்தின்படி அவர் திருசேஞ்ஞல்லூரில் காசியப கோத்திரத்தில் எச்சதத்தன் என்ற அந்தணரின் மகனாகப் பிறந்தவர். பெயர் விசாரசருமர். சிவரகசியம் என்ற நூலில் கர்க்ககுலத்தில் கணபத்திரன் என்ற அந்தணரின் மகனாகப்பிறந்தார் என்று சொல்லப்பட்டுள்ளது.

பின்னர் வந்த நூல்களில் சண்டீச நாயனார்தான் சண்டிகேஸ்வரர் என்ற கூற்று உள்ளது. ஆனால் அது சரியானதல்ல. சண்டீஸ்வரர் ஒரு தொன்மையான தெய்வம். சண்டீசநாயனாரின் கதை அந்த தெய்வத்துடன் பன்னிரண்டாம் நூற்றாண்டு வாக்கில் இணைக்கப்பட்டது என்றே நினைக்கிறேன். சண்டீஸ்வரர் ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னரே சைவத்துக்குள் நுழைந்த தெய்வம்.

அதற்கு ஆதாரமாக இன்று சொல்லப்படவேண்டியது ஆகமமுறைப்படி சண்டிகேஸ்வரர் ஒரு பரிவார தேவதை அல்ல என்பதையே. சிவனைப்போலவே அவர் ஒரு தனிக்கடவுள். காமிகஆகமத்தில் அவருக்குத் தனி ஆலயம், கொடிமரம், பூசைவிதிகள், திருவிழா எல்லாமே சொல்லப்பட்டுள்ளன. ஆகவே எப்போதோ ஒரு காலகட்டத்தில் ஒரு தரப்பு மக்களின் தனிப்பெருந்தெய்வமாக இருந்திருக்கிறார். இவருக்கு தேவியும் உண்டு. சண்டிகா தேவி.

ஆகமங்களின் படி இவர் கரியநிறம் கொண்டவர். காளை வாகனம் கொண்டவர். நான்கு கரங்கள். அவற்றில் சூலம் உளியும் கொண்டு அபய, வரத முத்திரைகளுடன் இருப்பார். நான்கு தலைகள். நாகத்தால் உபவீதம் [பூணூல்] அணிந்து நாககங்கணம் அணிந்து வெண்தாமரைப் பீடத்தில் அமர்ந்திருப்பார். ஆனால் சண்டிகேஸ்வரர் ஒரு பெருந்தெய்வமானதனால் அவருக்குப் பல்வேறு தோற்றங்கள் உண்டு. ஆகவே ஊருக்கொரு வடிவில் காணப்படுவார்.

இவர் எந்த மக்கள்குழுவின் தனிக்கடவுளாக இருந்தார் என்று தெரியவில்லை.சைவம் பெருமதமாக எழுந்த காலகட்டத்தில் பல்வேறு தெய்வங்கள் சைவத்துக்குள் இழுக்கப்பட்டன. தட்சிணாமூர்த்தியும் அப்படிப்பட்ட தனிப்பெரும் தெய்வமே. அவை சிவ வடிவங்களாகவோ சிவசம்பந்தம் கொண்ட தெய்வங்களாகவோ உருமாற்றம் பெற்றன. சண்டிகேஸ்வரரும் அப்படி பரிணாமம் கொண்டவர்.

ஆனால் சைவத்துள் நுழையும்போதே சண்டிகேஸ்வரர் முழுமுதல் கடவுளாக இருந்திருக்கிறார், பழங்குடித்தெய்வமாக அல்ல. அதற்கு உதாரணம் அவரது தாமரை இருக்கை. அவரது நாக ஆபரணங்களை வைத்துப் புராதன நாகர்களின் தெய்வம் அவர் என்று சொல்பவர்கள் உண்டு.

சைவம் பெருமதமாக வளர்ந்த காலகட்டத்தில், அதாவது பிற்காலச் சோழர்காலகட்டத்தில், பல்வேறு தெய்வங்களையும் வழிபாட்டுமுறைகளையும் சைவத்துக்குள் கொண்டுவரும்பொருட்டு ஏராளமான புராணங்கள் எழுதப்பட்டன. இவை தவிர தலபுராணங்கள் ஆங்காங்கே இருந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டன. பின்னர் பூசாரிகள் அவரவர்களுக்குத் தோன்றிய சடங்குகளையும் கதைகளையும் சொல்ல ஆரம்பித்தார்கள்.

எனவே சிவவடிவங்கள், உபதெய்வங்கள் சார்ந்த எல்லா வினாவுக்கும் நாம் ஆகமங்களை ஆராய்வதே முறையாகும். ஆகமமுறைகளின்படி அவருக்கு பலிச்சடங்குகள் இல்லை. முதற்பெரும்தெய்வத்துக்குரிய எல்லாப் பூசைகளும் செய்யப்பட்டாகவேண்டும். அதாவது அவர் சிவபரிவாரம் அல்ல சிவ வடிவம்.

சண்டிகேஸ்வரருக்குப் புத்தாடை [வஸ்திரம்] சார்த்தி வழிபடவேண்டும். அதைத்தான் யாரோ எப்போதோ பஞ்சகாலத்தில் நூலே போட்டால் போதும் என மாற்றியிருக்கிறார்கள். ஆனால் அது புதியநூலாக இருக்கவேண்டும். ஆடையில் இருந்து பிய்த்துப்போட எவர் ஆரம்பித்தார்கள் தெரியவில்லை. இந்த அபத்தமான வழக்கத்துக்கு உடனே ஒரு கதையையும் கட்டிவிட்டார்கள். காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி அவர்கள் இதைப் பல இடங்களில் கண்டித்திருக்கிறார்.

சண்டிகேஸ்வரரை வலம் வருதல் கூடாது என்பதும், கும்பிடும்போது கைதட்டிக்கும்பிடவேண்டும் என்பதும் அத்தெய்வத்தின் மூலமதத்தில் இருந்த நம்பிக்கை, சடங்கு ஆக இருக்கலாம். இப்படி பல தெய்வங்கள் பெரு மதத்தில் இணையும்போது அந்த மூல வழிபாட்டு முறை பெரும்பாலும் அப்படியே நீடிப்பதே வழக்கம். நவக்கிரக வழிபாடு, சக்கர வழிபாடு, சூரிய வழிபாடு, கணபதி வழிபாடு போன்றவை உதாரணம். காரணம் அந்தத் துணைமதப்பிரிவினர் தங்கள் தெய்வத்தை அதே முறைப்படித்தான் பெரும்கோயிலுக்குள் வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

இன்று அவை அப்படியே நீடிப்பது அவசியமும் கூட. ஒன்று, அவை நம் பண்பாட்டின் நுட்பமான பன்மைத்தன்மையின் சின்னங்கள். இரண்டு,அவை தொன்மங்கள், குறியீடுகள். அவை அளிக்கும் ஆழ்மனப்பதிவு முற்றிலும் தனித்தன்மை கொண்டது. தியான மரபில் அவற்றுக்கு வெவ்வேறு அர்த்தம் உள்ளது. ஆகவே சடங்கு நம்பிக்கை இல்லாவிட்டால் கோயிலுக்கே செல்லக்கூடாது. நம்பிக்கை இருந்து கோயிலுக்குள் சென்றால் குறியீட்டுச் சடங்குகளை மாற்றக்கூடாது.

சண்டிகேஸ்வரர் பற்றிய கதைகள் பிற்காலத்தைய அர்ச்சகர்களின் கற்பனை வளமற்ற உருவாக்கங்கள் மட்டுமே. அதாவது சிவன்கோயிலின் காவலர் சண்டிகேஸ்வரர், கோயிலைவிட்டுச் செல்லும்போது ஒன்றும் கொண்டுசெல்லவில்லை என்று கைதட்டிக் காட்டவேண்டும் என்பது. எந்த முக்கியமான நூலிலும் இந்த கதைகள் கிடையாது. ஒரு ஐம்பது அறுபது வருடங்களில் உருவாக்கப்பட்ட அசட்டுக் கதை இது. முன்னரே சொன்னதுபோல காமிக ஆகமப்படி சண்டிகேஸ்வரர் ஒரு காவலர் அல்ல, துணைத்தெய்வமும் அல்ல, இணைத்தெய்வம்.

சண்டிகேஸ்வரர் பற்றிய ஆகம நெறிப்படுத்தல் இவ்வளவே. சிவாலயத்துக்குள் நுழைவதற்கு முன்னரே ஆலயச்சுற்று வரும்போது அவரை வழிபடவேண்டும். ஒரேமுறை கைதட்டி மும்முறை வணங்கவேண்டும். அச்சம், நடுக்கம் தவிர்க்க அவரை வழிபடலாம். அவருக்கான பிற வழிபாடுகள் எல்லாமே சிவனுக்குரியவைதான். அவரை சிவ வடிவமாகவே எண்ணவேண்டும், பரிவார தேவதையாக அல்ல

ஜெ

சேட்டை

சிற்பங்கள்

 

 

மறுபிரசுரம் / Sep 23, 2011

 

முந்தைய கட்டுரைஇணைய எழுத்தாளர்கள்
அடுத்த கட்டுரைசண்டிகேஸ்வரர் முகங்கள்