இருவகை எழுத்து

அன்புள்ள ஜெயமோகன்,

நான் ஏற்கனவே ஒரு முறை இலக்கியம் என்றால் என்ன என்ற கேள்வியுடன் அனுப்பி இருந்த மின் அஞ்சலுக்கு நீங்கள் பதில் எழுதியது நினைவிருக்கலாம். இந்தக் கடிதம் அது தொடர்பாக.

சமீபத்தில் சிங்கப்பூருக்கு மாற்றலாகி இருக்கிறேன். இங்குள்ள நூலகங்கள் எனக்கு வியப்பளிக்கிறது. (சிறு வயதில் சென்னை நூலகத்திற்கு சென்றதோடு சரி..அதற்கு பிறகு சென்றதில்லை..இப்போது செல்ல ஆசை, அங்கு எவ்வாறு இருக்கிறது என்று பார்பதற்கு). இக்கடிதம் அதைப் பற்றி அல்ல.

ஒரே நேரத்தில் எஸ் ராமகிருஷ்ணனின் சிறுகதைகளும், சுஜாதாவின் சிறுகதைகளும் அடங்கிய புத்தகங்களை எடுத்திருந்தேன். முதல் முறை என்பதனால் இரண்டும் பெரிய புத்தகங்கள்..மற்றும் மாறி மாறிப் படித்துக் கொண்டிருக்கிறேன். (இப்போது யோசிக்கையில் அது விஷப்பரிட்சை என்றே தோன்றுகிறது).

இது சுஜாதாவைப் பற்றிய உங்கள் இடுகைகளை ஒட்டியும் இருக்கும். இரண்டையும் மாறி மாறிப் படிப்பதில் என் சிற்றறிவிற்கு எட்டிய ஒரு சில வேறுபாடுகள் கீழ்க் கண்டவை:

 

* சுஜாதாவின் கதைகளில் ஒரு தேர்ந்த திரைக்கதையை என்னால் பார்க்க முடிகிறது. மிகவும் தேர்ந்த என்று குறிப்பிடலாம். இடத்தைப் பற்றி, நாயகன்/நாயகி பற்றி வர்ணிப்பு, தேர்ந்த தொடக்கம், ஒரு முடிவு (கிளைமாக்ஸ்!). இவைகள் இல்லாத கதைகளை நான் பார்த்ததே அரிது, சுஜாதாவிடம்.

* என்னைக் கேட்டால் சுஜாதாவின் பெரும்பாலான கதைகளை மிக எளிதாகக் குறும்படமாக உருவாக்கலாம். ஆரம்ப வர்ணனைகள் தவிரக் கதையைப் பெரும்பாலும் வசனங்களே நகர்த்திச் செல்கின்றன. கதாபாத்திரத்தின் உணர்வுகள் கூட வசனங்கள் வழியாகவே வெளிப்படுகிறது, அநேகமாக எல்லாக் கதைகளிலும்.

* இந்தக் கதைகளின் சாரம், அது ஏற்படுத்தும் உணர்ச்சி எல்லாவற்றையும் என்னால் மிக எளிதாக மற்ற நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள முடிகிறது. மிகவும் வெளிப்படையானது. மேலும் (நீங்கள் சினிமா பற்றி சொன்னது) இக்கதைகள் ஏற்கனவே நமக்கு இருக்கும் பிம்பத்தின் மீதே கட்டப்பட்டுள்ளது. பாமர ஏழை, படித்த வேலைதேடும் இளைஞன். ஒரு வகையான ‘settled’ கதாபாத்திரங்கள் அல்லது சூழல்கள்.

ராமகிருஷ்ணனின் கதைகள் நான் சொன்ன மேல் மூன்றுக்கும் நேரெதிர்.

*ஒரு கதையைக் கூட என்னால் படமாகக் கற்பனை செய்ய முடியவில்லை.  *வசனங்கள் எப்போதாவது ஒரு முறை, தேவை ஏற்படும்போது மட்டுமே.  அவைகள் கதையை நகர்த்திச் செல்வதில்லை, பெரும்பாலும்.

*மேலும் நிறைய உருவகங்கள்…வெயில், காடு, மரம்..இவைகள் எல்லாம் இவைகள் அல்ல..என்றும் அது ஒரு குறியீடு என்றும் புரிய வருகிறது  (எனக்கு இப்போதைக்கு வெகு சில இடங்களில் மட்டும் அந்தப் புரிதல்  ஏற்படுகிறது :) )

*இவைகள் எல்லாவற்றையும் விட என்னை ஆச்சர்யபடுத்துவது  இதுதான்…இந்தக் கதைகள் ஏற்படுத்தும் உணர்ச்சிகள் அல்லது  கற்பனைகள்தான். அவைகள் எனக்கே எனக்கானதாய் மட்டுமே  இருக்கின்றன. யாரிடமும் என்னால் பகிர முடியவில்லை. அப்படியே  முயற்சித்தாலும் ‘ம்ம்..அப்புறம்’ என்பது போல பதில்கள் மட்டுமே  கிடைக்கின்றன :).

மேம்போக்காக இது சுஜாதாவைப் பற்றி மட்டும் சொல்வதாகத் தோன்றினாலும் நான் சொல்ல வந்தது அதைப் பற்றி இல்லை. நான் ஏற்கனவே உங்களிடம் கேட்ட கேள்வி தொடர்பானதுதான். வாரப்பத்திரிகைக் கதைகளுக்கும் மற்ற கதைகளுக்கும் உள்ள வேறுபாடுதான் அந்தக் கேள்வியின் சாராம்சம்.

மன்னிக்கவும் என்னால் இந்த மாதிரி compare செய்து பார்ப்பதை இன்னும் சிறிது காலத்திற்கு விட முடியாது என்றே தோன்றுகிறது. அந்த வேறுபாட்டையும் என்னால் இதுதான் என்று அறுதியிட்டுக் கூற முடியவில்லை (அந்தக் கதைகள் தரும் உணர்ச்சியைப் போலவே). நீங்கள் உங்களது ‘நவீன இலக்கியம் ஒரு அறிமுகம்’ புத்தகத்தில் குறிப்பிட்ட விஷயங்கள் அடிக்கடி நினைவுகளில் வருவதும் இத்தகைய கதைகளைப் படிக்கும்போதுதான்.

நான் இப்போது செய்து கொண்டிருப்பது சரியா தவறா என்று எனக்குத் தெரியவில்லை.ஆனால் நான் ஏற்கனவே கூறியபடி இப்போதைக்கு என்னால் அப்படி செய்யாமல் இருக்கவும் முடியாது என்றே தோன்றுகிறது.

என்ன காரணமும் இல்லை இந்தக் கடிதத்திற்கு..இந்த உணர்வுகளைப் பகிர்வதைத்தவிர!!

அடுத்து உங்கள் ஏழாம் உலகம்..ஆரம்பிக்கிறேன்!! தொல்லைகள் தொடரலாம்!! :)

இவண்,
காளிராஜ்

அன்புள்ள காளிராஜ்,

சிங்கப்பூர் நூலகம் பற்றி எழுதியிருந்தீர்கள். தமிழக நூலகங்களைப்பற்றி நண்பர் ஆர்வி எழுதிய குறிப்பு உங்கள் பார்வைக்காக.

நீங்கள் வாசித்தவற்றைப் பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை என்ற எளிய இருமைக்குள் அடைக்காமல் பகுத்து ஆராய முயல்வது நல்ல விஷயம். அது இலக்கிய அளவுகோல்களை எளிதில் உருவாக்கும்.

அதேசமயம் இவ்வாறு பகுப்பாய்வுசெய்வதை வாசிக்கும்போதே ஒரு மனப்பயிற்சியாகத் தொடர்ந்து செய்து அப்படைப்பை வாசிக்கும் இன்பத்தை இழந்துவிடுவதிலும் அர்த்தமில்லை. படைப்பை ஒரு குழந்தையின் கள்ளமற்ற தன்மையுடன், நம்பும் மனநிலையுடன் வாசிப்பதே முழுக்க உள்வாங்கும் வழி. அப்படி முழுக்க உள்வாங்கிய பிறகே அதை ஆராயும் மனநிலை கூடவேண்டும்.

சுஜாதா- ராமகிருஷ்ணன் இருவரையும் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது சரிதான். சுஜாதாவின் வகைமாதிரி என்பது வணிக எழுத்து. அது வாசகனை உள்ளே இழுத்து அந்தக் கற்பனை உலகில் உலவச்செய்தாகவேண்டும். அதற்கான நுண்விவரணை, உரையாடல்கள், சகஜமான ஓட்டம் போன்றவை அவருக்குத் தேவை. அவை அவரது வலிமைகள்.

எஸ்.ராமகிருஷ்ணன் வணிக எழுத்துக்கு மாற்றாக சிற்றிதழ்சார் இலக்கிய உலகம் உருவாக்கிய வகைமாதிரிக்குள் நிற்பவர். தன்னை வாசகன் என உணரும் ஒருவன் கவனித்துப் பொறுக்கிக்கொள்ளும் மொழிநுட்பங்களும், சித்தரிப்புநுட்பங்களும் நிறைந்தது அது. வாச்கானை உள்ளே ஈடுபடுத்தாதது. அந்நுட்பங்களின் எல்லையை வாசகன் கண்டுபிடிக்கும் வரை அவன் ஆர்வத்தைப் பிடித்து வைத்துக்கொள்ளும்.

இலக்கியத்தின் வகைமாதிரிகள் முடிவற்றவை. ஓர் இலட்சியவகைமாதிரி என்றால் அது இவ்விரு அம்சங்களும் நிறைந்தது எனலாம். அது வாசகனை உள்ளே இழுத்துக்கொண்டு ஒரு மெய்நிகர் வாழ்க்கையை வாழச்செய்யும்.  அந்த வாழ்க்கை அவன் வெளியே வாழும் யதார்த்த வாழ்க்கையைவிட செறிவும் வேகமும் கொண்டதாக, உச்சதருணங்கள் நிறைந்ததாக இருக்கும். ஆகவே அவன் ஒருவாழ்க்கைக்குள் அதிக வாழ்க்கை வாழ்ந்தவன் ஆகிறான். இலக்கியம் அளிக்கும் முதல் பேரின்பம் அதுவே

அந்த வாழ்க்கையில் அவன் பல தீவிரமான அனுபவங்கள் வழியாக தன்னை மேம்படுத்திக்கொள்கிறான். சுத்திகரித்துக்கொள்கிறான். அரிஸ்டாடில் இதை கதார்ஸிஸ் என்கிறார். இந்த அனுபவஎழுச்சி நிகழும் ஆக்கங்களே எப்போதும் பேரிலக்கியங்கள் எனப்படுகின்றன.

ஆனால் நல்லவாசகன் அவ்வாறு எளிமையாகப் படைப்பில் ஒன்றுவதில்லை. அவனுடைய அறிவுத்தர்க்கம் அந்த ஒன்றுதலை எதிர்க்கிறது. அந்த எதிர்ப்பை தன்னுடைய இன்னும் பலமடங்கு மேம்பட்ட அறிவுத்தர்க்கத்தால் தோற்கடித்து அவனை முழுக்க உள்ளே இழுத்துக்கொள்கிறது பெரும்படைப்பு. அதற்காகவே அதில் தர்க்கமுழுமை கைகூடவேண்டியிருக்கிறது.

மொழிநுட்பம்,சித்தரிப்பு நுட்பம், உத்திநுட்பம் போன்றவை வாசகனின் அழகுணர்வை மட்டுமே நிறைவடையச் செய்கின்றன. ஒரு நல்ல ஆக்கம் பலமுறை வாசித்தாலும் தீராத நுட்பங்களால் ஆனதாக இருக்கும். அழகுணர்வின் நிறைவு என்பது வாசகனைப் புனைவு உருவாக்கும் உலகுக்குள் முழுமையாக ஈடுபடச்செய்கிறது. அழகுணர்வு நிறைவடையும்போது வாசகன் ஒரு நெகிழ்ந்த நிலையை அடைந்து அந்தப்படைப்பின் விவேகத்தின், தத்துவத்தின், மெய்ஞானத்தின் உச்சங்களை நோக்கிச் செல்லும் மனநிலையை அடைகிறான். அதை நான் தரிசனம் என்று சொல்வேன்.

அந்த தரிசனம் மூலம் தான் வாழ்ந்த வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக, சாராம்சமாக மீண்டும் பார்க்கும் பார்வையை வாசகன் அடைகிறான். அதுவே வாசிப்பு அளிக்கும் பலன் ஆகும். பேரிலக்கியங்கள் அங்கே கொண்டுசென்று வாசகனை நிறுத்துகின்றன.

ஆகவே, பேரிலக்கியங்கள் என்பவை நிகர்வாழ்க்கையை வாழச்செய்தல், தர்க்கபூர்வ நிறைவுடன் இருத்தல், நுட்பங்களை அளித்தல் மூலம் அழகியல் செறிவைக் கொண்டிருத்தல், மேலும் இம்மூன்றின் வழியாகவும் தரிசனம் நோக்கிச் செல்லுதல் என நான்கு ஆதார இயல்புகளையுமே கொண்டிருக்கும்.

பேரிலக்கியங்கள் எனப்படும் நூல்களைக்கொண்டு நம் அளவீடுகளை உருவாக்கிக்கொள்வதே நல்ல வழிமுறை. வாசிப்பின் ஆரம்பநிலையிலேயே தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி தொடங்கி தாராசங்கர் பானர்ஜி, சிவராமகாரந்த் எனப் பேரிலக்கியவாதிகளை வாசித்துவிடுவது நல்லது என்று நித்ய சைதன்ய யதி சொல்வார்.

ஜெ

மறுபிரசுரம் முதற்பிரசுரம் 2010

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 71
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 72