குருகுலமும் கல்வியும்

1

ஒன்று

உலகம் முழுக்க குருகுலக் கல்விமுறையே நெடுங்காலம் கல்விக்கான உகந்த வழிமுறையாக இருந்துவந்துள்ளது. கீழைநாடுகளில் குறிப்பாக கீழைஆன்மீக அமைப்புகளில் குருகுலக்கல்வி அதன் உச்சநிலைநோக்கி எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வகுக்கும் இந்தியமரபு தெய்வத்துக்கு அடுத்தபடியில் குருவையே வைக்கிறது. அதாவது மானுடரில் உயர்ந்தவர் குருவே. குருவே பிரம்மா, குருவே விஷ்ணு, குருவே மகாதேவன் என்ற பிரபலமான மந்திரம் குருவை ‘ஆக்கிக்காத்தழிக்கும்’ முத்தெய்வங்களும் ஒன்றானவன் என்கிறது. இதற்கு இணையான முக்கியத்துவம் ஜென் மரபிலும் குருவுக்கு இருப்பதைக் காணலாம். நாமறிந்த பெரும்பாலான ஜென் கதைகள் குருசீட உறவு குறித்தவை.

இன்றைய பள்ளி என்ற அமைப்பின் ஆரம்பநிலைகளை புராதன வேதபாடசாலைகளில் காண்பது பொது வழக்கம். ஆனால் தொல்தமிழ் நாகரீகத்தின் முதல் தெய்வமே குருதான் — தட்சிணாமூர்த்தி என்னும் தென்றிசைமுதல்வன். மரத்தடியில் அமர்ந்து கல்வியளிக்கும் ஆசிரியனே ஆலமர்ச்செல்வனாக இறைவனானான்.

குருகுலம், பாடசாலை இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை. அப்பெயர்களே குறிப்பதுபோல ஒன்று குலம், அதாவது வீடு. இன்னொன்று சாலை அல்லது பொதுஇடம். ஒரு குருவுடன் சேர்ந்து வாழ்ந்து மெல்லமெல்ல அவர் அடைந்த மெய்ஞானத்தை அவரது ஆளுமையுடன் சேர்த்து பெற்றுகொள்வதே குருகுலக்கல்வி.

பாடசாலையில் கூட்டமாக சேர்ந்து ஏதேனும் ஒருவிஷயத்தை ஒரேதரமான முறையில் பாடம் செய்கிறோம். கல்வி, பாடம் செய்தல் இரண்டும் வேறுவேறு. வேதபாடசாலைகளில் சிந்திப்பதற்கோ ஆராய்வதற்கோ இடமில்லை.வேதங்களை கற்பதில் தனிமனித சிந்தனைக்கோ தனிமனித கற்பனைக்கோ இடமில்லை. வேதங்களின் உச்சரிப்பு சைகைகள் அமர்தல் சேர்த்துச் செய்யும் சடங்குகள் எல்லாமே முற்றாக வகுக்கப்பட்டவை. மாற்றமுடியாதவை. அனைவருக்கும் அவை ஒன்றுதான். பிற்காலத்தில் பௌத்த விகாரங்களில் மூலநூல்கள் சார்ந்து இப்படிப்பட்ட அடிப்படைப் பயிற்சி அளிக்கப்பட்டது. கல்வியை மக்களிடம் பரவலாக்கிய சமணமுனிவர்கள் இன்றைய பள்ளிகூடங்கள் போன்ற அமைப்பை உருவாக்கினர். சமணப்பள்ளி என்ற சொல்லில் இருந்தே நமது பள்ளிகூடம் என்ற சொல் வந்திருக்கிறது.

இன்றைய பள்ளியின் சிறப்பம்சம் அது தரப்படுத்தப்பட்ட சீரான கல்வியை அனைவருக்கும் அளிக்கிறது என்பதே. ஒரு சமூகத்தை முழுக்க ஒரேவிதமான கல்வியை அளித்து தரப்படுத்துவதற்கு இதுவே சிறந்தவழி என்பதை மறுக்க முடியாது. இன்றைய கல்வியின் முதல்நோக்கம் சமூக உருவாக்கமே. சீரான மதிப்பிடுகளும் சமூகப் பழக்கவழக்கங்களும் அடிப்படை நம்பிக்கைகளும் கொண்ட சமூகமொன்றை பயிற்றுவித்து எடுப்பதே இன்று கல்வி மூலம் இலக்காக்கப் படுகிறது. கல்வி என்பது ஒரு சமூகத்திற்கு ஒட்டுமொத்தமாக அளிக்கப்படும் பயிற்சி என்று பொருள்கொள்ளப்பட்டால் இன்றைய கல்விமுறையே அதற்கு பெரிதும் உகந்தது என்பதில் ஐயமில்லை.

இன்றைய கல்விமுறை ஜனநாயகத்தன்மை கொண்டது, ஆகவே தரப்படுத்தப்பட்ட கல்வியையும் ஜனநாயகத்தையும் பிரிக்க முடியாது. நாம் நன்றாக அறியும் ஒரு விஷயம் உண்டு, இந்திய சமூகத்தில் அனைவரும் சமம் என்ற நிலையை நாம் முதலில் உணர்வது பள்ளியில்தான். ஒரு இந்திய கிராமத்தில் சமத்துவம் இருக்கும் ஒரே இடம் வகுப்பறையே. வகுப்பறைதான் தீண்டாமை சாதிப்பாகுபாடு பொருளியல் ஏற்றதாழ்வு ஆகியவற்றுக்கு எதிரான முதல் அமைப்பாக நம்மிடம் இன்று உள்ளது. சமத்துவத்துக்கான முதல்குரல் எழுவதும் முதல்போராட்டம் எழுவதும் அங்கிருந்துதான். இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் அடிப்படைக்கல்வி பரவலாக்கப்பட்டதோ அங்கேதான் மானுட உரிமைக்கான குரல்கள் முதலில் எழுந்தன. அங்கேதான் சமமான சமூக வளர்ச்சியும் அனுபவப்பட்டது.

ஆயினும் இந்த கல்விமுறையில் சில அடிப்படைப்பிரச்சினைகளும் உள்ளன. இது பொதுத்திறனை குறிவைத்து இயங்குவதனால் தனித்திறனை பொருட்படுத்துவதில்லை. சராசரிகளையே இது கணக்கில் கொள்கிறது தனித்துவங்களை அந்த சராசரி மூலம் நசுக்குகிறது. அனைவருக்குமாக வகுக்கப்பட்ட பாடத்திட்டத்தில் தனித்த தேடலும் ஐயங்களும் கொண்ட மாணவனின் ஆத்மா அவநம்பிக்கை கொள்கிறது. கல்வியை தனிமனிதனுக்கான அறிவுத்தேடலை நிறைவுசெய்யும் வழிமுறை என எடுத்துக் கொண்டால் இன்றைய கல்விமுறை அவனுக்கு பெரிதாக எதையும் அளிப்பதில்லை.

இதை நான் என் அனுபவம் மூலமே சொல்கிறேன். என் வாழ்வில் ஏறத்தாழ பதினாறு வருடங்களை முறைப்படுத்தப்பட்ட கல்வியில் வீணடித்தேன் என்றே எனக்குப்படுகிறது. பள்ளியில் கற்ற எதுவுமே என்னிடமில்லை இன்று. நான் கற்றுக்கொண்டவை எல்லாமே என் சொந்த தேடல் மூலம் கல்விக்கூடத்துக்கு வெளியே கற்றுக்கொண்டவையே. மிகுந்த தாராள நோக்குடன் பார்த்தால்கூட பள்ளி எனக்களித்தவை என்று ஒரு சில விஷயங்களையே சொல்ல முடியும். ஆரம்ப மொழிப்பயிற்சி, பலவகை மனிதர்களிடையே பழகுவதற்கான பயிற்சி , இவ்வளவுதான். அதாவது என்னை பள்ளி சமூகப்படுத்தியிருக்கிறது. அதற்குத்தேவையான குறைந்தபட்ச பயிற்சியை எனக்களித்திருக்கிறது. எனது தனித்தன்மை நானே பள்ளிக்கு வெளியே உருவாக்கிக் கொண்டது.

சிறுவயதில் நான் பள்ளியை வெறுத்தேன். சமூகப்படுத்துதல் என்பதை என் ஆளுமை உருவாக்கத்துக்கு நேர் எதிரான ஒன்றாகவே கண்டேன். அதற்கு முடிந்தவரை எதிர்ப்பை அளித்தேன். அப்போது பள்ளி என்ற அமைப்பு என்னை திருப்பித்தாக்கியது. அதனால் நான் வதைக்கப்பட்டேன்.என்னை வெறுக்காத ஆசிரியர்கள் குறைவு. நான் அடிவாங்காத வகுப்புகள் மிகமிகக் குறைவு. என் நூலகப்புத்தகங்களை பிடுங்கி கிழித்து வீசிய ஆசிரியர்கள் உண்டு. என் அப்பா என்னை நூலகம் முதல் வீடுவரை துரத்தித் துரத்தி அடித்திருகிறார். எட்டாம் வகுப்பு படிக்கையில் ‘ரத்னபாலா’ இதழில் என் முதல் கதை வெளிவந்தபோது என் ஆசிரியர் ஒருவர் என்னை அடித்து சட்டையைக் கழற்றி பெஞ்சுமீது நிற்கவைத்தார். இன்று என் மகனும் அதேபோல அன்னியனாக இருப்பதைக் காண்கிறேன். ‘நீ இதன்வழியாகக் கடந்துபோயாகவேண்டும், வேறு வழியில்லை’ என்று சொல்லிக் கொள்கிறேன்.

ஆனால் எனக்கு பள்ளியில் நல்ல சில ஆசிரியர்கள் அமைந்தனர். என் நினைவில் நிற்கும் முதல் ஆசிரியர் திரு சத்தியநேசன் அவர்கள். எனக்கு தமிழ் இலக்கியத்தில் ஆர்வத்தை ஊட்டி செய்யுள் எழுத கற்றுத்தந்தவர். அதன் பின் நான் சந்தித்த முக்கியமான ஆசிரியர் சுந்தர ராமசாமிதான். சுந்தர ராமசாமி வழியாக ஆற்றுர் ரவிவர்மா. கடைசியாக நித்ய சைதன்ய யதி. இவர்களிடமிருந்தே நான் கற்றுக்கொண்டேன். நான் கல்விகற்ற குருகுலங்கள் இவர்களின் இல்லங்களே.

பள்ளி என்ற அமைப்புக்கும் இத்தகைய குருகுலங்களுக்கும் என்ன வேறுபாடு? முக்கியமான வேறுபாடு ஒன்றுதான் பள்ளியில் பாடம் உள்ளது ஆசிரியர் இல்லை. ஆசிரியர் அங்கு அப்பாடத்தை ஒலிக்கும் குரல்மட்டுமே. பள்ளியில் ஆசிரியருக்கும் மாணவனுக்கும் இடையே தனிப்பட்ட உறவே இல்லை. ஆசிரியர் மாணவனுக்கு ஒரு குரல். மாணவன் ஆசிரியருக்கு ஒரு முகம் அல்லது எண். ஆகவேதான் பெரும்பாலும் மாணவர்களை ஆசிரியர்கள் நினைவுவைத்துக் கொள்வதேயில்லை. ஆசிரியர்களை மாணவர்கள் நக்கலாகவே எண்ணிக் கொள்கிறார்கள். ஒருவரோடொருவர் கொள்ளும் இந்த உதாசீனத்தின் வடிவமாக அங்கே கல்வி உள்ளது. கல்வி அங்கே அவர்களை விலக்கும் , ஒருவரிடமிருந்து ஒருவரை மறைக்கும் ஊடுதிரையாக உள்ளது. நமது கணித ஆசிரியரை நம்மிடமிருந்து மறைப்பது அவர் நமக்குக் கற்பிக்கும் கணிதமே.

ஒரு குருகுல அமைப்பில் ஆசிரியனும் மாணவனும் தனிப்பட்ட உறவுடன் உள்ளனர். மண்ணில் இரு உயிர்களிடையே உருவாகும் உறவுகளில் மிகமிக நெருக்கமான, மிக உணர்ச்சிகரமான உறவுகளில் தலையாயது அதுவே. அங்கு அவர்களை இணைக்கும் ஊடகமாக உள்ளது அவர்கள் கற்கும் கல்வி. ஆசிரியன் மீது மாணவனுக்கு ஏற்படும் மீளாக்காதலுக்கு நிகராக ஒருபோதும் சாதாரணக் காதலைச் சொல்லிவிடமுடியாது. நான் வருடக்கணக்காக என் ஆசிரியர்களை அல்லும்பகலும் எண்ணிக் கொண்டிருந்திருக்கிறேன். இன்றும் ஒருநாளாவது அவர்களை எண்ணாமல் என் நாட்கள் மறைவதில்லை. அந்தக்காதல் அக்கல்வியிலிருந்து உருவாவதா இல்லை அக்காதலில் இருந்து கல்வி அத்தனை நெருக்கமாக ஆகிறதா என்று சொல்லிவிடமுடியாது.

ஆசிரியர் ஓர் ஆளுமையாக முன்னுதாரணமாக மாணவன் முன் நிற்கிறார். தன்னையே அவர் அவனுக்கு அளிக்கிறார். அவன் ஆக விரும்பும் பிம்பம். அவனுடைய எதிர்காலமே அவன் முன் மானுட வடிவமாக நிற்கிறது. அந்த இளம்பருவத்தில் எப்படிப்பட்ட மனஎழுச்சியை அது அளிக்கும் என்று கற்பனைசெய்து பாருங்கள். எதிர்காலம். விதி! அது கடவுளன்றி வேறென்ன? அதன் மறுபக்கம்தான் ஆசிரியர். அவரைப்பொறுத்த்வரை மாணவன் அவரது எதிர்காலமேதான். அவன் வழியாக அவர் காலத்தை தாண்டிச்செல்ல முடியும். அவரது மரணமின்மையின் தடையம் அவன். அந்த பரஸ்பர பிரியத்திலிருந்தே உண்மையான கல்வி உருவாக முடியும். ஞானத்தை தொடர்புபடுத்தும் ஊடகமாக இருப்பதற்கு தகுதிபடைத்தது அன்பே.

கடமைக்காக கற்பிக்க வரும் ஆசிரியனுக்கும் குருவுக்கும் எவ்வளவு வேறுபாடு? ‘இன்று முழுக்க உன்னைப்பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன்’ என்று என் ஆசிரியர்கள் என்னிடம் பலமுறை சொல்லியிருக்கிறார்கள். ‘இப்போதெல்லாம் உன்னிடம் பேசுவதுபோலவே நான் சிந்திக்கிறேன்’ என்று சுந்தர ராமசாமி ஒருமுறை சொன்னார். ஒருநாள் பேசவில்லை என்றால் , இரு வருகை தவறிவிட்டதென்றால் என் ஆசிரியர்கள் மனம் வருந்தியிருக்கிறார்கள். சினம் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கல்வி நமக்கென்றே தயாரிக்கபடுவது. நமது ருசிகளுக்காக நமது திறன்களையும் நமது தேடல்களையும் கணக்கில் கொண்டு கனிந்த அன்புடன் உருவாக்கப்பட்டு நமக்கு மிகமிகப்பிரியமான முறையில் பரிமாறப்படுவது. இதற்கு ஈடு இணை வேறெதுவும் இல்லை. இதன் ஒவ்வொரு கணமும் நமக்கு பேரின்பம் அளிக்கிறது. இந்தக்கல்வியில் நாம் ஒருதருணத்தில்கூட சிறிதேனும் களைப்¨ப்பம் சலிப்¨ப்பம் உணர்வதில்லை. மானுடனுக்கு மண்ணில் உள்ள பேரின்பங்களில் ஒன்று மெய்யான கல்வி.

எல்லா உறவுகளும் இருகூரானவை. ஆசிரியர்களிடம் கொண்ட உறவில் உக்கிரமான வலிகளையும் நினைவுகூர்கிறேன். அன்பளவே மனத்தாங்கல்களும் தீவிரமானவை. யமுனாச்சாரியார் ஏன் தன் மாணவர் ராமானுஜரைக் கொல்ல முயன்றார்? ஆசிரிய மாணவ உறவின் கதைகளில் பலசமயம் அந்த பெருங்கசப்பு வெளியே வருகிறது. கௌடபாதருக்கும் சங்கரருக்கும் அப்படிப்பட்ட கசப்பு உருவான கதை உள்ளது. தோதாபுரிக்கும் ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும் கூட அந்த கசப்பு உருவாகியிருக்கிறது. குருசீட உறவின் உக்கிரத்துக்கு வெளியே நின்று அதைப் புரிந்துகொள்ள இயலாது. எனக்கு நித்யாவிடமும் மட்டுமே கசப்பில்லாத உறவு சாத்தியமாயிற்று..

நூல்களும் நமக்கு கற்பிக்கும். இறந்த ஆசிரியர்கள் எவருமே மறைவதில்லை. அவர்கள் சொற்கள் அழிவதில்லை. ஆனாலும் நூலுக்கு மனிதருக்கும் இடையே உள்ள வேறுபாடு பிரம்மாண்டமானது. நூல்கள் சிந்தனைகளைக் கற்பிக்கின்றன. ஆசிரியர் சிந்தித்தல் என்னும் செயலைக் கற்பிக்கிறார். ஒருமுறை நித்யாவிடம் கேட்டேன்,”இங்கே உங்கள் மாணவர்களுக்கு நீங்கள் என்ன கற்பிக்கிறீர்கள்”என்று. ”நான் அவர்களை என்னுடன் வாழ அனுமதிக்கிறேன்”என்றார் நித்யா. அவருடன் நடந்து அவருடன் அமர்ந்து உண்டு அமருடன் வேலைசெய்து அவர்கள் அவரை அறிகிறார்கள். அவர் அடைந்த ஞானமே அவர். ஒருவரின் ஞானம் மெய்யானது என்றால் அது அவரது ஆளுமையிலிருந்து வேறானதாக இருக்காது.

சுந்தர ராமசாமி, ஆற்றூர் ரவிவர்மா, நித்யா ஆகியோரின் நீண்ட உரையாடல்களை நினைவுகூர்கிறேன். அவ்வுரையாடல்கள் மூலம் நான் கற்றுக்கொண்டது கருத்துக்களையும் தகவல்களையும் அல்ல. அவற்றை அவர்கள் நினைவுகூரும் விதத்தை. அவற்றை தொகுத்து முடிவுகளுக்கு வரும் முறைமையை. அம்முடிவுகளை அவர்கள் பரிசீலிக்கும் வழிகளை. எண்ணங்கள் முளைத்து முளைத்து வரும் விதம், தர்க்கம் கருத்துக்களை தொட்டுத்தொட்டு செல்லும் அழகு ஆகியவற்றில் மயங்கி அதை பின்தொடர முயன்றேன். அவர்களின் மொழியும் முகபாவனைகளும் உடலசைவுகளும்கூட என்னில் கூடிய நாட்கள் உண்டு. சுந்தர ராமசாமி சிந்திக்கும்போது விரல்களால் காற்றில் எழுதுவார். அதையே நானும் என்னை அறியாமல் செய்வதை உணர்ந்து சிரித்துக் கொண்டிருக்கிறேன்.

நிறுவனங்கள் ஒருபோதும் சிந்தனையைக் கற்றுத்தர இயலாது. மனிதர்களே கற்றுத்தர இயலும். ஆகவேதான் நிறுவனங்களுக்குள் கூட உயர் கல்வித்தளத்தில் தனிப்பட்ட குருசீட உறவுகள் சாத்தியமாகும்படியான அமைப்புகளை உருவாக்கியுள்ளார்கள். ஆய்வுக்கல்வியில் இன்று குருசீட உறவு நிகழும்படியே நம் கல்வி அமைப்பு உள்ளது– நிகழ்கிறதா என்பது வேறுவிஷயம். ஏனெனில் ஏற்கனவே சொன்னதுபோல சிந்திப்பதை ஒரு மனிதன் மட்டுமே இன்னொரு மனிதனுக்கு கற்றுத்தர இயலும். காரணம் சிந்தனைக்கு எந்தவிதமான கட்டுகளும், அமைப்பும் இருக்காது. நேரமும் சூழலும் அதைக் கட்டுப்படுத்தாது. காலையில் பத்திலிருந்து பதினொன்றுவரை ஒருவர் சிந்தனையை கற்றுத்தர இயலாது. நித்ய சைதன்ய யதி பாஸ்டன் மற்றும் ஹவாய் பல்கலைகளில் ஆசிரியராக இருந்தபோது அதிகாலையில்தான் தன் வகுப்புகளை நடத்தியிருக்கிறார். ஒர் ஆசிரியருடன் மாணவன் கூடவே இருப்பது மட்டுமே ஒரே வழி. அவரது கோபம் மகிழ்ச்சி மன எழுச்சி சோர்வு எல்லாவற்றையும் கூடவே அமர்ந்து கவனித்தல். இந்த பொருளில்தான் உபநிடதம் என்ற சொல்லுக்கு ”அருகே அமர்தல்”என்று பொருள்

இன்னுமொன்று உள்ளது. சிந்தனை என்பது பதில். சிந்திப்பது என்பது தேடல், கேள்வி. ஆகவே நூல்களின் வழியாக நாம் அடைவது முடிவுற்ற ஒன்றை. குருவிடமிருந்து நாம் அடைவது ஒரு பயணத்தை. அவர் செல்லும் தூரமெல்லாம் நாமும் சேர்ந்து பயணம் செய்கிறோம். அவரது தத்தளிப்புகலையும் கண்டடைதலின் உவகைகளையும் நாமும் பங்கிடுகிறோம். கடோபநிஷதத்தின் புகழ்பெற்ற தொடக்கப்பாடலே அன்றும் இன்றும் எல்லா குருகுலங்களிலும் தொடக்கப்பாடலாக குருசீடர்களால் இசைக்கபடுகிறது. ”ஓம் சஹனாவவது சஹனௌ புனக்து: சஹவீர்யம் கரவாவஹை ‘ என்ற அப்பாடல் ”மெய்யான உண்மை என்றால் என்னவென நாமிருவரும் சேர்ந்து தேடுவோமாக” என்று குரு சீடனை அழைப்பதாகும்

குருசீட உறவின் வழியாக சிந்தனைமுறைகள் தொடர்ச்சி பெறுகின்றன. இந்தியாவில் நாம் அறியும் முக்கிய சிந்தனைமுறைகள் அனைத்துமே குருசீடச் சங்கிலி வழியாக பரிணாமம் பெற்று வந்தவை என்பதைக் காணலாம். ஒரு சிந்தனைமுறையின் காலம்தோறுமான பரிணாம வளர்ச்சி குருசீட உறவின் மூலமே நிகழ இயலும். பொதுவான கல்வி ஒரு சிந்தனையை ஓர் அமைப்பாக மாற்றி நிலைநிறுத்தக் கூடும். ஆனால் குருவிடமிருந்து தகுதியுள்ள சீடன் பெற்றுக்கொள்ளும் சிந்தனை அவனில் அடுத்தகட்ட வளர்ச்சியை அடைகிறது. அவ்வாறாக அது காலத்தில் வளர்ந்துசெல்கிறது. தத்துவ சிந்தனைக்கு இம்முறை இன்றும் இன்றியமையாததாகவே உள்ளது

2

 

இரண்டு

நம் சமகால இந்தியாவில் தொடர்ச்சியாக நான்காவது தலைமுறையை எட்டியிருக்கும் ஒரு தத்துவ சிந்தனை மரபு என்று நாராயணகுருவின் சீடபாம்பரையைச் சொல்லலாம். தமிழ் சித்தர் மரபு இந்திய நவீனமயமாதலுக்கு அளித்த பங்களிப்புகள் என்று நாராயணகுரு , ராமலிங்க வள்ளலார் இருவரையும் கூற இயலும். கேரளத்தில் 1854 ல் செம்பழஞ்சி என்ற சிற்றூரில் கள் இறக்கும் ஈழவர் என்னும் சாதியில் பிறந்தவர் நாராயணகுரு. தந்தை மாடன் ஆசான். தாய் குட்டியம்மா. அச்சாதி அன்று தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டது. சிறுவயதிலேயே தமிழ் கற்று நூல்களை வாசிக்க ஆரம்பித்த நாராயணகுரு அன்று திருவனந்தபுரம் சாலைத்தெருவில் இருந்த தைக்காடு அய்யாவு ஆசான் என்ற ஹடயோகியிடம் யோகம் கற்றார். பின்னர் இருபத்து மூன்றாம் வயதில் ஊரைவிட்டு கிளம்பி துறவு பூண்டு தமிழகத்தில் அலைந்தார். இக்காலகட்டத்தில் பல சித்தர்களை இவர் கண்டதாக ஊகிக்க முடிகிறது. பிற்காலத்தில் கேரள அறிவுத்துறையின் தலைமைப்பேரறிஞராக நாராயணகுருவை நிலைநாட்டிய சாஸ்திரக்கல்வி இக்கலத்தில் அவர் பெற்றதேயாகும். வேதங்கள் , உபநிடதங்கள், புராணங்கள், அறுவகை மதங்கள், பௌத்த சமண மரபுகள், மூவகை வேதாந்தங்கள் ஆகியவற்றில் நிகரற்ற கல்வி அவருக்கு இருந்தது. தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பெரும்புலமை பெற்றார்.

பின்னர் நாராயணகுரு வெளிப்பட்டது 1888 ல் அவரது சொந்த ஊரின் அருகே உள்ள அருவிக்கரை என்ற சிற்றூரில். அங்கே ஒரு குருகுலத்தை நிறுவி ”ஜாதிபேதம் மத வெறுப்பு இன்றி அனைவரும் சமமாக வாழும் உதாரணமான இடம் இது”என்று அவர் பொறித்து வைத்தார். அன்று சமூகவிடுதலைக்கு போராடிக்கொண்டிருந்த ஈழவர்களை அவர் பால் ஈர்த்தது. அவரை மையமாக்கி 1903ல் ‘ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபா” [எஸ்.என்.டி.பி ] என்ற அமைப்பு உருவாயிற்று. அது சமூக சீர்திருத்தத்துக்காகவும் மத மறுமலர்ச்சிக்காகவும் கல்வி வளர்ச்சிக்காகவும் போராடிய பெரும் அமைப்பாக வளர்ந்தது. ஆகவே நாராயணகுரு கேரள மறுமலர்ச்சியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். 1928ல் நாராயணகுரு தம் சீடர்களை திரட்டி ‘தர்ம சங்கம்’ என்ற அமைப்பை உருவாக்கினார். இதன் தலைமையகம் கேரளத்தில் வற்கலா என்ற ஊரில் சிவகிரி என்னும் குன்று மீது உள்ளது.

நாராயணகுரு இரு வகை நூல்களை இயற்றியுள்ளார். சுப்ரமணிய சதகம். காளீநாடகம், சாரதா தேவி ஸ்துதி, முதலியவை கவித்துவமான தோத்திரப்பாடல்கள். ஆத்மோபதேச சதகம், தரிசன மாலா, அறிவு முதலியவை ஆழமான வேதாந்த தரிசனம் கொண்ட தத்துவ நூல்கள். அடிப்படையில் நாராயண குரு வேதாந்தி. சங்கரரின் அத்வைத நோக்கை விரிவுபடுத்தியவர். அனைத்து தரிசனங்களையும் தன் தனித்துவம் கொண்ட நோக்கின் அடிப்படையில் ஒன்றிணைத்து ஒரு இணைவை [சமன்வயம்] கொண்டுவந்தார் என்பதே தத்துவ ரீதியாக அவரது சாதனையாகும்.

நாராயணகுருவிற்கு கேரள மரபின் பல தளங்களில் பெரும்பங்களிப்பாற்றிய மாணவர்கள் பலர் உண்டு. பிற்காலத்தில் கேரள வரலாற்றின் சிற்பிகளாக அறியப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அவரை ஆதர்சமாகக் கொண்டு இயங்கியவர்களே. ஆயினும் அவரது முதல் சீடர் என்றும் அவரது தரிசனத்தை முன்னெடுத்தவர் என்றும் சொல்லத்தக்கவர் நடராஜ குருவே. எஸ்.என்.டி.பி அமைப்பை உண்டுபண்ணியவரான டாக்டர் பல்புவின் மகனாக 1895ல் பிறந்தார். நிலவியலில் பட்டமேற்படிப்பை முடித்தபின் உலகப்புகழ்பெற்ற சார்போன் பல்கலை [·ப்ரான்ஸ்] கழகத்தில் தத்துவமேதை ஹென்றி பெர்க்ஸனின் மாணவராக தத்துவத்தில் முனைவர் ஆய்வை நிகழ்த்தி பட்டம் பெற்றார். கல்வியியல் குறித்த அவரது முனைவர் பட்ட ஆய்வேடு யுனெஸ்கோ முன்வரைவுக்காக ஏற்கப்பட்டது 1930ல் ஜெனிவா தேசியக்கல்லூரியில் உயர் பௌதிக ஆசிரியராக பணியாற்றினார். [ இண்டர்நேஷனல் ·பெல்லொஷிப் ஸ்கூல். ஜெனிவா ]

நாடுதிரும்பி நாராயணகுருவுடன் குருகுலத்தில் தங்கி கீழைதத்துவங்களைக் கற்றார். நாராயணகுருவின் தத்துவ நூல்கள் பல நடராஜகுருவின் கோரிக்கைக்கு இணங்க உருவாக்கப்பட்டவை என்று சொல்லப்படுகிறது.மூன்றுவருடன் சென்னையில் அத்வைத ஆசிரமம் என்ற அமைப்பின் சார்பில் தலித்துக்கள் மத்தியில் பணியாற்றினார். ஆறுவருடம் இந்தியாவெங்கும் பிச்சையேற்று அலைந்து திரிந்தார். 1923ல் ஊட்டி ·பெர்ன்ஹில் பகுதியில் அன்பளிப்பாக கிடைத்த நிலத்தில் தன்கையாலேயே குடிசை கட்டி தங்கி நாராயணகுருகுலம் என்னும் அமைப்பை உருவாக்கினார்.

நடராஜகுரு அதிகமும் ஆங்கிலம் ·பிரெஞ்சு மொழிகளில்தான் எழுதியிருக்கிறார். மலையாளத்தில் அவருக்கு பயிற்சி குறைவு. The word of Guru, One hundred verses of self instruction, Wisdom, Man woman dialectics , The auto biography of an absolutist ஆகியவை அவரது முக்கிய நூல்கள். நடராஜ குரு நாராயணகுருவின் சிந்தனைகளை ஆங்கிலத்தில் விரிவாக அறிமுகம் செய்தார். கீதைக்கு நடராஜ குரு எழுதிய உரை ஒரு கிளாசிக் என்று சொல்லப்படுகிறது. நாராயண குருவின் அத்வைத சமன்வய நோக்கை மேலை தத்துவங்களுடன் இணைத்து வளர்த்தெடுத்தார். இதன் பொருட்டு நடராஜ குரு ஐரோப்பா முழுக்க விரிவாகப்பயணம்செய்துள்ளார். அவருக்கு பிற்காலத்தில் பெரும்புகழ்பெற்ற பல மாணவர்கள் அமைந்தனர்.

நடராஜ குருவின் மாணவர்களில் முதன்மையானவர் நித்ய சைதன்ய யதி. 1923ல் பந்தளம் என்னும் ஊரில் புகழ்பெற்ற ஈழவக்குடியில் பிறந்த நித்ய சைதன்ய யதியின் இயற்பெயர் ஜெயச்சந்திரப் பணிக்கர். அவரது தந்தை பந்தளம் ராகவப்பணிக்கர் ஒரு புகழ்பெற்ற கவிஞர். இளம் வயதிலேயே துறவு பூண்ட நித்யா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திலும் ரமணரின் குருகுலத்திலும் இருந்திருக்கிறார். பிச்சையெடுத்து இந்தியாவெங்கும் அலைந்திருக்கிறார். கொல்லம் எஸ்.என் கல்லூரியில் தத்துவத்தில் முதுகலைபடிப்பை முடித்து அங்கேயே ஆசிரியராக வேலைபார்த்தார். சென்னை விவேகானந்தா கல்லூரியில் தத்துவப் பேராசிரியராக வேலைபார்த்தபோது நடராஜகுருவின் மாணவராக ஆனார். பம்பாயில் விழியிழந்தோர் உளவியலில் முனைவர் படிப்பை முடித்தார். நடராஜகுருவின் குகுலத்திலும் அவரது ஆணைப்படி வட இந்திய குருகுலங்கள் சிலவற்றிலும் இந்திய தத்துவத்தில் பயிற்சிபெற்றார்

1969ல் ஆஸ்திரேலியா சென்று உலகப்பயணத்தை தொடங்கினார். அமெரிக்கா சென்று போர்ட்லண்ட் சிகாகோ ஹவாய் பல்கலைக்கழகங்களில் கவிதை, உளவியல், இந்திய தத்துவம் ஆகியவற்றைக் கற்பித்தார். 1984ல் இந்தியா திரும்பி ·பெர்ன் ஹில் குருகுலத்தில் தங்கி நடராஜ குரு தொடங்கிய பணிகளை முன்னெடுத்தார். ஆங்கிலத்தில் என்பதும் மலையாலத்தில் நூற்றைம்பதும் நூல்களை எழுதியிருக்கிறார். உயர்பௌதீகம், மேலைதத்துவம் இலக்கியம் நுண்கலை உளவியல் ஆன்மீகம் சார்ந்த நூல்கள் அவை. கீதை, பிரகதாரண்ய உபநிடதம், ஆத்மோபதேச சதகம், தரிசன மாலை ஆகியவற்றுக்கான உரைகள் முக்கியமானவை. குரு நித்ய சைதன்ய யதி 1997ல் மரணமடைந்தார்

நடராஜ குருவின் அடுத்த மாணவரான முனி நாராயண பிரசாத் இன்று நாராயணகுருகுலத்தின் தலைவராக உள்ளார். கீழைமெய்யியல் , கிரேக்க மெய்யியல் ஆகியவற்றில் விரிவான ஆய்வு செய்தவரான முனி நாராயண பிரசாத் ஏறத்தாழ நூறு நூல்களை இவ்வரிசையில் எழுதியுள்ளார். கொழும்பு, பாலி பல்கலைகளில் கீழைதத்துவம் கற்பித்திருக்கிறார். தலைமை குருகுலத்தில் [ ஸ்ரீ நாராயணகுரூகுலம், சிவகிரி, வற்கலா] வாழ்கிறார். இன்னொரு மாணவரான வினய சைதன்யா பெங்களூர் சோமனஹள்ளி குகுலத்தில் வாழ்கிறார். ஆங்கில இலக்கியம் கன்னட இலக்கியம் ஆகியவற்றில் விரிவான பயிற்சி உடையவர். நித்ய சைதன்ய யதியின் மாணவர்களில் சுவாமி தன்மயா, சுவாமி வியாசப்பிரசாத் , ராமகிருஷ்ணன் ஆகியோர் ஊட்டி குருகுலத்தில் உள்ளனர். சுவாமி தன்மயா மேலைமருத்துவத்தில் பட்டம்பெற்றவர். இன்று ஆயுர்வேத ஆய்வில் முக்கியமானவராக அறியப்படுகிறார். [ நாராயணகுருகுலம், ·பெர்ன் ஹில், ஊட்டி ] இன்று நான்காவது தலைமுறையாக நாராயண தரிசனம் முன்னெடுத்துச்செல்லப்படுகிறது.

 

Untitled

மூன்று

நாராயண குருவின் குருகுல உரையாடல்கள் பற்றி ஓரளவே எழுதப்பட்டுள்ளது. மூர்க்கோத்து குஞ்சப்பா, குமாரன் ஆசான், ச்கோதரன் அய்யப்பன் போன்றோர் எழுதிய குறிப்புகள் முக்கியமானவை. நடராஜ குருவின் வகுப்புகளைப்பற்றி நித்யாவைப்போலவே சிதம்பரானந்த சுவாமி எழுதியிருக்கிறார். உண்மையில் அந்நூல் இந்த நூலைவிட சுவாரஸியமானது. அதையும் தமிழாக்கம்செய்யும் என்ணம் உள்ளது

ஆக்கப்பூர்வமான குருகுலம் எப்படி இருக்கும் என்பதற்கான விரிவான சித்தரிப்பை அளிக்கிறது நித்ய சைதன்ய யதி அவரது சிறுவயதில் எழுதிய இந்நூல்.இந்நூலை எழுதும்போது அவருக்கு முப்பத்தைந்து வயதுதான். அவர் பிற்காலத்தில் எழுதிய பெரும் தத்துவ நூல்களின் தொடக்கப்புள்ளிகள் இந்நூலில் உள்ளன.குருவும் சீடனும் சேர்ந்து பயணம் செய்கிறார்கள்.குரு பேசிக்கொண்டே இருக்கிறார். வேடிக்கையாக. திடீரென்று சினம் கொண்டவராக. பெரும்பாலான சமயங்களில் ஆழ்ந்த தத்துவ நோக்கு கொண்டவராக. எல்லா தருணங்களிலும் பிரபஞ்சக்கூரை வேய்ந்த வகுப்பறை ஒன்றில்தான் இருவரும் உள்ளனர்.

இவ்வுரையாடல்களில் மூன்று கூறுகள் காணப்படுகின்றன. ஒன்று நடராஜ குருவின் அன்றாட செயல்பாடுகள், அதைச்சார்ந்த உரையாடல், வேடிக்கையாகவும் தத்துவார்த்தமாகவும் அவர் கூறும் சொற்கள். இரண்டு ஆழ்ந்த தத்துவக் கருத்துக்களை அவர் பிறரிடம் விவாதிக்கும் தருணங்கள். மூன்று அவர் பிற நூல்களை ஒட்டியும் வெட்டியும் சொல்லும் கருத்துக்கள். இம்மூன்றிலும் தொடர்ந்து நடராஜ குரூ வெளிப்படுகிறார். அவரது தரிசனம் விவரிக்கப்படுகிறது.

நடராஜகுருவின் நோக்கு அடிப்படையில் முரணியக்கம் சார்ந்தது. [டைலடிக்கல்] இதை அவர் யோகாத்ம நோக்கு என்கிறார். இந்திய ஞானமரபு பல்லாயிரம் வருடங்கள் முன்னரே விரிவாக்கம் செய்து எடுத்த இந்த ஆய்வுமுறை மிகவும் பிற்பாடுதான் மேலைநாட்டு ஆய்வாளர்களுக்கு புரிந்தது. மானுட உணர்வுகள், சிந்தனைகள், இயற்கையின் இயக்கம், வரலாற்று இயக்கம் எல்லாமே ‘நேர் Xஎதிர்’ இயக்கங்களால் நிகழ்பவை என்பது அவரது கோட்பாடு. இந்நூலில் அவர் அதுசார்ந்து ஆராயும் இடங்களை வாசகர் தொட்டுச்செல்லலாம். தத்துவ ஆய்வு சம்பத்தமான சில பகுதிகள் வாசகர்களுக்கு புரியாமல் போகலாம். அதற்கு நடராஜ குருவின் மூலநூல்களையே நாடவேண்டும். இவை ஒரு தத்துவ ஞானி எப்படி தன் மாணவனுக்கு கற்பிப்பார் என்பதைக் காட்டும் இடங்களாக அவற்றை காண்பதே நலம்.

தத்துவ ஆய்வு என்பது நிலையான உயர்விழுமியங்களை அடையும் நோக்கு கொண்டதாகவும் அதன் விளைவு பயனளிப்பதாகவும் இருக்கவேண்டுமென சொல்லும் நடராஜ குரு தத்துவம் என்பது தர்க்கம் மூலம் முழுமையாக ஆராயக்கூடியதல்ல என்று சொல்கிறார். தத்துவத்தின் அடிப்படையான தரிசனத்தை நாம் யோகாத்ம உள்ளுணர்வு மூலமே உணர முடியும். அது தர்க்கத்துக்கு அப்பாற்பட்டது. அதாவது தரிசனங்களை விளக்கவே தத்துவம் பயன்படும். தரிசனம் தியானம் மூலம் பெறப்படுவதாகும். இந்நோக்குடன் இங்கே அவர் தன் ஆய்வுகளையும் முடிவுகளையும் அளித்துள்ளார்.

நித்ய சைதன்ய யதி ஒருமுறை இக்குறிப்புகள் எழுதிய காலங்களை நினைவுகூர்ந்தார். ராமகிருஷ்ண பரமஹம்சரின் குருகுல நிகழ்ச்சிகளை மகேந்திரநாத தத்தர் விரிவாக எழுதியதை [ ராமகிருஷ்ண கதாம்ருதம்] படித்த நித்யா அதைப்போல எழுத ஆசைப்பட்டு இவற்றை எழுதினார். ஆனால் தொடர்ந்து எழுத முடியவில்லை. முக்கியமாக நடராஜ குரு சொன்னவற்றின் மேலான தன்னுடைய எதிர்வினைகளை தவிர்க்க அவரால் இயலவில்லை. இரண்டாவதாக நடராஜ குரு சொன்னவை மிகமிகச் சிக்கலான தத்துவக் கோட்பாடுகள். ஏற்கனவே தத்துவ விவாதத்தில் அவற்றின் மூலங்களை கற்று அறிந்துள்ள மாணவர்களுக்கு சொல்லப்பட்டவை. பொதுவான மனிதர்களுக்காக அவர் பேசியது குறைவுதான். அதாவது குருகுலப் பதிவுகள் என்பவை குரு மட்டும் செய்யும் உபதேசங்கள் அல்ல. அவை சீடர்களும் சம அளவில் பங்கு பெறுபவை. அவற்ரை பதிவுசெய்வது அரைகுறைப்பதிவாகவே அமைய முடியும். ஆகவே நித்யா இரண்டாம் கட்டமாக எழுதிவைத்த குறிப்புகளை ஒருமுறை ரயிலில் செல்லும்போது அப்படியே பறக்கவிட்டுவிட்டார். இக்குறிப்புகள் அரைகுறையானவையாக இருப்பது அதனாலேயே.

ஆயினும் இக்குறிப்புகள் ஒருகுருகுலம் எப்படி இருக்கும், ஒரு மகாகுருவின் ஆளுமை எப்படி மாணவன் மீது கவியும் என்பதற்கான சிறந்த ஆவணமாக கொள்ல இயலும் என்று எனக்குப்படுகிறது. அவ்வண்னம் சில வாசகர்களுக்காவது இவை தூண்டுதலாக இருக்கும்.

 

nitya

நான்கு

 

பேராசிரியர் ஜேசுதாசனை நான் சில வருடங்கள் நன்கறிந்திருந்தேன். அவரது வீட்டில் அவரது குரு கோட்டாறு குமரேசபிள்ளை அவர்களின் பெரிய படம் ஒன்று எப்போதும் துடைத்து சுத்தமாக இருக்கும். தன் ஆசிரியர் பற்றி சொல்லும்போது முதிர்ந்த வயதில் பேராசிரியர் கண்ணீர்விட்டு அழுததை நினைவுகூர்கிறேன். ஆசான் கம்பராமாயணத்தை கற்பிக்கும் விதத்தை பெரும்பரவசத்துடன் அவர் எனக்கு நடித்துக்காட்டினார். [பேராசிரியரின் பேட்டி ஒன்றை நான் எடுத்தேன். அது என் ‘உரையாடல்கள்’ என்ற பேட்டித் தொகுப்பில் உள்ளது] ஜேசுதாசனின் பிரியத்துக்குரிய மாணவர்கள் எம்.வேத சகாய குமார், அ.கா.பெருமாள், ராஜ மார்த்தாண்டன் ஆகியோர் இன்று தமிழில் தங்கள் இடத்தை நிறுவிக்கொண்டவர்கள்

எம்.வேதசகாய குமாரை நான் பத்து வருடங்களாக அறிவேன். எந்நிலையிலும் அவர் ஆசிரியர்தான். எனக்கும் அவர் ஆசிரியர் எனற நிலையில் இருப்பவரே. தமிழ் இலக்கிய மரபு குறித்து அவரிடம் எப்போதும் கற்றுக்கொண்டிருக்கிறேன். அவர் தன் ஆசிரியரிடம் கொண்டிருந்த மட்டற்ற காதலை அருகே நின்று கண்டிருக்கிறேன். மரணம் வரை பேராசிரியர் ஜேசுதாசன் தன் மகன்களைவிட மேலாக வேதசகாய குமாரையே அனைத்துக்கும் நம்பியிருந்தார். அதற்கு இணையாகச் சொல்லவேண்டுமென்றால் குமார் தன் மாணவர்களிடம் கொண்டுள்ள அன்பைச் சொல்லவேண்டும். சஜன், மனோகரன் போன்ற அவரது மாணவர்கள் எதிர்காலத்தில் பேசப்படுவார்கள்.

எம்.வேதசகாயகுமாரின் பிரியத்துக்குரிய மாணவியான ப.சாந்தி இந்தச் சிக்கலான நூலை மிகக் கடுமையான உழைப்பின் விளைவாக மொழியாக்கம்செய்தார். அந்த விடாப்பிடியான சிரத்தை என்னை பிரமிக்கச்செய்தது. அது ஒருவகையான குருகுலக்கல்வியின் விளைவென்றே எனக்குப் படுகிறது. தலைமுறைகளின் வழியாக நீளும் ஒரு பண்புநலன் அது. நவீனத் தமிழிலக்கியத்தில் இரண்டாம் உலகப்போரின் பங்களிப்பு என்ற தலைப்பில் எம்.வேதசகாயகுமாரின் வழிகாட்டலில் திருவனந்தபுரம் பல்கலைகழகக் கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வு செய்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள்

[எனி இன்டியன் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘குருவும் சீடனும், ஞானத்தேடலின் கதை’ -தமிழாக்கம் ப.சாந்தி -என்ற நூலுக்கான முன்னுரை]

 

முதற்பிரசுரம் Jan 31, 2006 மறுபிரசுரம்

முந்தைய கட்டுரைசுவாமி வியாசப்பிரசாத் – காணொளி வகுப்புக்கள்
அடுத்த கட்டுரைVenmurasu.in வெண்முரசு நாவலின் தனி இணையதளம்