ஹனீபா-கடிதம்

அருமை ஜெயமோகனுக்கு

சென்ற மாதம் உங்களைக்காண வந்த நாள் என் வாழ்வில் பரவசம் மிகுந்த ஒரு காலை.எம்.எஸ்சும் நானும் அண்ணனும் தம்பியும் போல் உங்களைத்தேடி அந்த வீதியில் நடந்து வந்த அந்தத் தருணம் அலாதியானது. நினைந்து நினைந்து மனசு ஒவ்வொரு தருணமும் களி கொண்டாடுகிறது.

இருபது வருடங்களுக்கு முதல் உங்களது கதையைக் கணையாழியில் படித்து தருமபுரி விலாசத்திற்குக் கடிதம் போட்டேன். அதற்கான பதிலை சென்ற மாதம்தான் என்னால் அடைய முடிந்தது.

எமது சூழலில் இலக்கியம் என்பது மிகவும் மலினப்படுத்தப்பட்ட பண்டமாகவே தொடர்ந்தும் வினியோகிக்கப்படுகிறது.இங்கு பெரும் ஆரவாரத்துடன் வெளிவரும் மல்லிகை, ஞானம், செங்கதிர், (அம்பலம் கலைமுகம்) பார்த்திருந்தால் எனது கருத்தை மறுக்கமாட்டீர்கள். உங்களின் பெரும்பாலான நூல்களைப்படித்து விட்டேன். அது பற்றியெல்லாம் ஒரு சந்திப்பில் மட்டும்பகிர்ந்து கொள்ள முடியாது என்பதை அறிவீர்கள். அன்றும் நான் எவ்வளவோ பேச வந்தேன்.  உங்களைப்பார்த்த பரவசத்தில் எல்லாமே பின்வாங்கி விட்டது போல் இப்பொழுது படுகிறது.

அம்ருதாவில் உங்களின் 2ஜி பற்றிய பதிவுகளைப் பற்றியும் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன் அதையும் மறந்து போனேன். புகழ்  பெற்ற அந்த ஊழலைப்பற்றி பலரும் ஒரேவிதமாகப் பார்க்க நீங்கள் மட்டும் மரபுவழி நின்று அதைச்சொன்ன விதம் உயர்வானது. ஜெயமோகன் போன்றவர்களால் மட்டுமே அவ்வாறு எழுத முடியும் என்ற முடிவுக்கு என்னை வரவழைத்தது.

உலோகம் நாவல் பற்றிய மதிப்புரை படித்தேன். அதில் வருகின்ற ஜோர்ஜ் அவன் காதலி என் ஆத்மார்த்தமான நண்பர்கள். ஜோர்ஜ் புலிகளாலும் அவள் இராணுவத்தாலும் கொல்லப்பட்டார்கள். அருமைத்தோழர் பத்மநாபாவின் நெருக்கத்திற்குரியவர்கள். அவர்களைப்பற்றிய தகவல்கள் பெரும்பாலும் உண்மையானது அந்த நாவலைக் கொண்டு வரவில்லையே என்று இப்போது கவலைப்படுகிறேன். இலங்கையில் இப்போதைக்குக் கிடைக்காது.

வரும் டிசம்பரில் எமது பல்கலைக்கழங்களில் இடம் பெறும் புத்தகக் கண்காட்சியில் உங்களின் அனைத்து நூல்களையும் காட்சிப்படுத்த எண்ணியிருக்கிறேன். என்னிடம் இல்லாத உங்களின் நூல்களின் பட்டியலை அடுத்த மெயிலில் அனுப்பி வைப்பேன். நீங்கள் எனக்கு அதை சேகரித்து தரவேண்டும். இன்ஷா அல்லாஹ் அடுத்த அடுத்த மாதங்களில் மீண்டும் உங்களைக்காண வருவேன், மெய்தான். அம்ரிதா எம்மின் தொகுதியில் படித்துப்பார்த்தீர்களா? எமது எழுத்தில் ஒரு மாற்றம் புலப்படுகிறது அல்லவா அந்தக்கதைகள் பற்றிய உங்கள் பதிவைப் பார்க்க விரும்புகிறேன்.

ஓட்டமாவடி அறபாத் எனது உறவினன்.உங்களுக்கு எழுதுமாறும் அவன் கதைகளில் இரண்டை உங்களுக்கு அனுப்புமாறும் கேட்டு்க்கொண்டேன்.அது பற்றியும் எனக்கு எழுதுங்கள்.

அன்புடன்
எஸ்.எல்.எம்.ஹனீபா

குறிப்பு:
கோணங்கியை இங்கு அழைப்பதற்கான ஏற்பாடுகளை கவிஞர் அனாரும் நானும் செய்து கொண்டிருக்கிறோம்.ஜெயமோகன் கடல்வழிக்கப்பலில் ஒருக்கா இலங்கை வந்து போகலாமே !


அன்புள்ள ஹனீபா அவர்களுக்கு

உங்கள் கடிதம் கண்டு மிகுந்த மனநிறைவடைந்தேன். நலமாகத்தான் இருப்பீர்கள். உங்களுக்கென்ன!

வாழைக்குலையுடன் நீங்கள் நிற்கும் தோரணையே அலாதி. ஒரு வெற்றி வீரனைப்போல. அதிலேயே நிறைவுகண்டுவிட்டீர்கள் போல. உங்கள் வருகையின் அலை இப்போதுமிருக்கிறது. நினைவுகூரும்போதே ஒரு புன்னகை வருவதுபோல.

அங்கே வரவேண்டும். இப்போது மீண்டும் பார்க்கவேண்டிய பெரியவர்களின் பட்டியல் பெரிதாகிவிட்டது. மௌனகுரு, நீங்கள், தெளிவத்தை ஜோசப் என. வருகிறேன். முன்னர் எனக்கு [பழைய சில அரசுப்பதிவுகளினால்] இலங்கை விசா கிடைப்பது தடைபட்டிருந்தது. இனி அந்த பிரச்சினை இருக்காதென நினைக்கிறேன்.

கோணங்கி வருவது உற்சாகமான விஷயம். அவர் எழுத்தைவிடப் பலமடங்கு பெரிய ஆளுமை அவர். அவர் உருவாக்கும் ஆழமான மனப்பதிவு நெடுநாள் நீடிக்கும். ரசித்துச் சாப்பிடுவார். ஈழ சிறப்பு உணவுகளுக்கு ஏற்பாடு செய்யவும்.

ஜெ

முந்தைய கட்டுரைஅமெரிக்கன் கல்லூரி ,மதுரை
அடுத்த கட்டுரைமூவருக்கு தூக்கு தள்ளிவைப்பு