எஸ்.எல்.எம்.ஹனீஃபா

சிலநாட்களுக்கு முன்னால் என்னைப்பார்க்க இலங்கையிலிருந்து ஓர் எழுத்தாளர் வந்திருந்தார். சுந்தர ராமசாமி வீட்டுக்குச் சென்று எம்.எஸ்ஸும் அவருமாக எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். நான் சமீபகாலத்தில் அவரைப்போன்ற உயிராற்றல் ஒவ்வொரு கணமும் பீரிடும் ஒரு மனிதரைப்பார்த்ததில்லை. இருபது வயது இளைஞர்களுக்குரிய உற்சாகமும் அலைபாய்தலும் துருதுருப்பும் கொண்டவர். அடங்கிய மனிதரான எம்.எஸ்ஸுக்கு நேர் எதிர். ஆனால் இருவருக்கும் ஒரே வயது. எழுபது பிளஸ் என்று சொல்லாவிட்டால் கோபம் கொள்வார் என நினைக்கிறேன்.

எல்.எல்.எம்ஹனீஃபா  இலங்கை எழுத்தாளர்களில் இஸ்லாமிய வாழ்க்கையின் உள்ளடுக்குகளைச் சொல்லும் படைப்பாளி. மக்கத்துச் சால்வை என்ற அவரது சிறுகதைத் தொகுதியின் சிலகதைகள் மிக முக்கியமானவை. ஆனால் மிகமிகக் குறைவாகவே எழுதியிருக்கிறார். நிறைய எழுதியிருக்கக் கூடும். ஆனால் அவரது எழுத்துமுறைக்கும், அரசியலுக்கும் சரிப்படாது. மெல்லிய எள்ளலும் எகத்தாளமுமாக அன்றாடவாழ்க்கையைச் சித்தரிப்பவை அவரது கதைகள். அரசியல் அற்றவை. பதற்றமான அரசியல்சூழலில் அவருக்கு இயல்பாகவே எழுத்துவேகம் குறைந்தது இயல்பானதே.

மக்கத்துச் சால்வை கதை சிலம்பாட்டப்போட்டியை சித்தரிப்பது ஆபிதீனின் வலைத்தளத்தில் அதை வாசிக்கலாம்.  அப்பவெல்லாம் மூன்று நான்கு நாள்களுக்கு முந்தியே பெருநாள் மணக்கத் தொடங்கிவிடும்.  போன்ற சுவாரசியமான எளிய சித்தரிப்புகள். பறங்கி வாழைக்குலை என்கிறார். செவ்வாழையைச் சொல்கிறாரா என்ற எண்ணம் ஏற்பட்டது. ஒரு படைப்பு அது முளைத்த பண்பாட்டின் பிரதிநிதி. அது அளிக்கும் தகவல்களுக்கு முடிவே இல்லை என்பதற்கான உதாரணம் இந்தக்கதை.

முதல் வாசிப்பில் ஒரு மனிதாபிமானத்தின் கதை இது. ஆனால் அந்த சிலம்பப்போட்டியை  வாழ்க்கைப்போட்டியின் அடையாளமாகக் கொண்டால் மிஞ்சிநிற்பது என்ன என்ற கேள்வியை முன்வைக்கும் ஆழமான கதையாக ஆகிவிடுகிறது. வெற்றி தோல்விகள், கௌரவங்களுக்கு அப்பால் செல்வது இந்த வாழ்க்கை முதிர்ந்து மட்கி முடியும் என்ற உண்மை. அதற்கும் அப்பால் செல்வது மானுட அன்பு என்றுமிருக்கும் என்ற பேருண்மை. அதையே ஆயிரம் வருடங்களாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்– மீண்டும் எழுதியிருக்கிறார் ஹனீஃபா

ஹனீஃபா விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவரது எழுத்தார்வம் மட்டுப்பட்டமைக்கு அதுவும் காரணமாக இருக்கலாம். விவசாயம் ஒரு விஷகன்னி [எஸ்.கெ.பொற்றெகாட்டின் தலைப்பு] அவள் காதலித்தே கொல்லக்கூடியவள். ஹனீபாவின் புகைப்படங்களில் அவரது வயலும் சூழலும் தெரிந்த்து. எங்களூரைப்போலவே வயல்நடுவே நீராழி. உபரி நீரை அதில் வடித்துவிட்டு விவசாயம் செய்வோம்.

இலங்கைக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையே விடப்பட்ட கப்பலில் இந்தியா வந்ததாகச் சொன்னார். அந்தக் கப்பல் ஒரு முக்கியமான தொடர்பு ஊடகம், ஒரு நல்ல அனுபவம் என்று சொல்லி என்னை இலங்கைக்கு அழைத்தார்.முதல்முறை அவர் இந்தியா வந்ததே லா.ச.ராமாமிருதத்தைச் சந்திப்பதற்காகத்தான். தென்காசி அருகே வங்கி ஊழியராக இருந்த லா.ச.ராவுடன் ஹனீஃபா நிற்கும் படத்தைப் பார்த்தேன். இளமையாக அழகாக இருந்தார். அதைச்சொன்னபோது ஆவேசமாக ‘இப்பவும் இளமை இருக்கு…நான் இனியும் பெண்ணு கெட்டுவேன்’ என அறிவித்தார். ஹனீஃபாவுக்கு ஜெயகாந்தனும் ஆதர்ச எழுத்தாளர்.

ஈழச்சூழலில் அவர் முன்வைக்க விரும்பும் எழுத்தாளர்களின் சில தொகுதிகளை எனக்காகக் கொண்டுவந்திருந்தார் ஹனீஃபா. அவற்றை வாசித்துவிட்டேன், எழுதவேண்டும்.  விடைபெறும்வரை சிரித்துக்கொண்டே இருந்தேன். இஸ்லாமில் மார்புறத்தழுவும் ஆசாரம் உள்ளது. எனக்கு மிகப்பிடித்தது அது.  மிக அபூர்வமாகவே மார்புறத்தழுவிக்கொள்ளத்தூண்டும் ஆளுமைகளைப் பார்க்கிறோம். ஹனீஃபா அத்தகையவர். அவர் இனிமேலாவது தொடர்ச்சியாக எழுதலாம். இலக்கியம் என்பது ஒரு மாயப்பறவை. நூறு கைக்குச்சிக்கினால் ஒன்றுதான் ஆன்மாவுக்குச் சிக்குகிறது

ஹனீபாவின் மக்கத்துச் சால்வையின் மொத்தச் சிறுகதைகளும் நூலகம் தளத்தில் உள்ளன

முந்தைய கட்டுரைதூக்கு-எதிர்வினைகள்
அடுத்த கட்டுரைதூக்கு- எதிர்வினை