அய்யப்ப பணிக்கருக்கு அஞ்சலி

அய்யப்ப பணிக்கரை நான் முதலில் கண்டது 1986ல் சுந்தர ராமசாமியின் வீட்டில். சற்று தர்மசங்கடமான நிலை. உடல்நலமில்லாமலிருந்த அவரை வற்புறுத்தி ஏ.ஸி கார் வைத்து ஒரு பேருரைக்காக கூட்டிக் கொண்டு சென்ற மதுரை கல்லூரி ஒன்று கூட்டம் முடிந்ததும் அம்போ என்று விட்டுவிட்டது. பலவிதமாக சிரமப்பட்டு திரும்பும் வழியில் நாகர்கோயில் வந்து சுந்தர ராமசாமி வீட்டு மாடியில் தங்கியிருந்தார். சுந்தர ராமசாமி நான் அவர் வீட்டு கேட்டை தாண்டும்போதே எழுந்துவந்து ”பணிக்கர் வந்திருக்கார்!”என்று மகிழ்ச்சியுடன் கூவினார். ”மாடியில இருக்கார். மாடிக்கு போங்கோ. நீங்க அவரைச் சந்திக்கிறது ஒரு பெரிய விஷயம்”

நான் மாடிக்குச் சென்றபோது அய்யப்ப பணிக்கர் ஒரு சிறிய பெட்டியை திறந்து அதிலிருந்த சிறு சிலைகளுக்கோ அல்லது படங்களுக்கோ – நான் சரியாகப் பார்க்கவில்லை– பூஜை செய்து கொண்டிருந்தார். பையை வெளியே வைத்துவிட்டு காத்திருந்தேன். மீண்டும் எட்டிப்பார்த்தபோது மூக்கை பிடித்தபடி பிராணயாமம் செய்து கொண்டிருந்தார். நான் கீழே வந்து சுந்தர ராமசாமியிடம் அவர் வழிபாடு செய்வதைச் சொன்னேன். சுந்தர ராமசாமி வாய்விட்டு சிரித்தார்.”பாரீஸ்ல நாங்க ரெண்டுபேரும் ஒரே ரூம்ல தங்கியிருந்தோம். இவர் பெட்டியைத் திறந்து பூஜை செய்திட்டு கொஞ்சம் விபூதியை நெத்தியில போட்டுண்டார். கூட்டிண்டு போக வந்த பிரெஞ்சு அம்மாவுக்கு அவர் ஒரு அசல் இந்தியனாகவும் நான் அவ்வளவு சரியில்லைண்ணும் தோணிடுத்து. அதுக்கப்புறம் எல்லாத்தையும் அவரைப்பாத்துதான் சொல்வாள்”

அய்யப்ப பணிக்கர் கீழே இறங்கி வந்ததும் நான் மேலே போய் குளித்துவிட்டு வந்தேன். பணிக்கர் மிகவும் ஒல்லியாக இருப்பதாக எனக்கு பட்டது. வழுக்கை இல்லாத தலையில் பாதி நரைத்த முடி. அழகான தாடி. நல்ல பல்வரிசையுடன் அழகிய சிரிப்பு.கிட்டத்தட்ட ஜெ.ஜெ.சில குறிப்புகளின் அரவிந்தாட்ச மேனன் போன்ற உடலமைப்பு, பெண்மை கொண்ட உடல் மொழி, நிதானமான மென்மையான குரல். அதை பிறகு சுந்தர ராமசாமியிடம் சொன்னபோது அவர் மிகவும் ரசித்தார். அன்று நான் பணிக்கரிடம் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை, சிறு அறிமுகம் சிரிப்பு , அவ்வளவுதான். சுந்தர ராமசாமியிடம் அவர் அவர்களுடைய நண்பர் நாராயணபிள்ளையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். நான் முன்னறைக்குப் போய்விட்டேன். அவர் ஒருமணிநேரம் கழித்து கிளம்பிச்சென்றார். பிறகு நான் அய்யப்ப பணிக்கரை நேரில் பார்க்கவே வாய்ப்பு கிடைக்கவில்லை.

சுந்தர ராமசாமி வாழ்வில் பிற்காலத்தில் அடிக்கடி சந்திக்காவிட்டாலும் மிக நேசித்த நண்பர்களில் ஒருவர் அய்யப்ப பணிக்கர். இருவரும் ஏறத்தாழ சமவயதினரானாலும் ஒருவரை ஒருவர் மிகுந்த மரியாதையுடன் தான் அழைப்பார்கள். சுந்தர ராமசாமி ”பணிக்கர்”என்பார். அய்யப்ப பணிக்கர் ”ஸ்வாமி”என்பார். பணிக்கர் திருவனந்தபுரம். சுந்தர ராமசாமி நாகர்கோயில்.காரில் ஒருமணி நேர பயணம். ஆனால் அவர்கள் பார்த்துக்கொள்வது குறைவு. காரணம் அய்யப்ப பணிக்கர் உலகப்பயணி. ”ப்யூனஸ் அயேழ்ஸிலே இருந்து நடு ராத்திரி கூப்பிட்டு உங்கள நினைச்சுண்டேன்பார்” என்றார் சுந்தர ராமசாமி.

ஆனால் திருவனந்தபுரம் மையமாக்கி ஒரு இலக்கிய ஜமா இருந்திருக்கிறது. எழுபதுகளின் இறுதியில் அய்யப்ப பணிக்கர் திருவனந்தபுரம் பல்கலைக் கழக கல்லூரியில் வேலைபார்த்தார். அங்கேயே பேராசிரியர் ஜேசுதாசனும் வேலைபார்த்தார். நகுலன்,நீல பத்மநாபன், காசியபன், ஷண்முக சுப்பையா, மா தட்சிணாமூர்த்தி ஆகியோரும் திருவனந்தபுரத்தில் இருந்தனர். ஜேசுதாசன் அறையிலோ வெளியிலோ அவர்கள் மாதத்தில் ஒருமுறை கூடும் வழக்கம் இருந்தது. தமிழில் உருவாகிவந்த நவீனத்துவம் வேரூன்றுவதற்கான கோட்பாட்டு அடித்தளம் அப்போது அவர்களின் உரையாடல் மூலம் உருவாயிற்று. அதன் விளைவாகவே நகுலன்ரின் ‘குருஷேத்ரம்”என்ற கவிதையை மொழிபெயர்த்து அதை தலைப்பாகக் கொண்டு நவீனத்துவப் படைப்புகளின் ஒரு தொகைநூலை வெளியிட்டார். நவீனத்துவ அழகியல் சார்பாக பெரிதும் விவாதிக்கப்பட்ட அந்நூலை ஒரு திருப்புமுனையாகவே சொல்வதுண்டு.

மலையாள இலக்கியத்தில் அய்யப்ப பணிக்கரின் இடம் தமிழில் க.நா.சுவின் இடத்துக்கு நிகரானது. மலையாள நவீனத்துவத்தின் முதல் பெருங்குரல் அவர்தான். அவரது குருஷேத்ரம் டி.எஸ்.எலியட்டின் தரிசு நிலத்தில் இருந்து உந்துதல் பெற்ற நீள் கவிதை. தொடர்ந்து பணிக்கர் பல உத்திகளில் நவீனத்துவக் கவிதைகளை எழுதியுள்ளார். தொடக்க காலத்தில் அவரது கவிதைகள் புறக்கணிப்புக்கு உள்ளாயின. குருஷேத்ரம் பல முக்கிய இதழ்களால் நிராகரிக்கப்பட்ட பின்னர் எம்.கோவிந்தனின் சமீக்ஷா என்ற சிற்றிதழில்தான் வெளியாயிற்று. மரபான அழகியலை நிராகரித்த அய்யப்ப பணிக்கரின் அங்கதக் கவிதைகள் பல கசப்புக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாயின.சொல்லப்போனால் அந்த கசப்பு இன்றும் அங்கு உண்டு. நவீனகவிதையை ஏற்றுக்கொள்ளாத பெரும்பாலான வாசகர்கள் இருக்கும் ஒரே இந்திய மொழி மலையாளம்தானோ என்ற ஐயம் எனக்கு உண்டு. மெல்ல அய்யப்ப பணிக்கரை முன்னோடியாகக் கொண்ட நவீனத்துவக் கவிஞர்களின் வரிசை ஒன்று உருவாயிற்று. அவர்களில் பலர் பணிக்கரின் நண்பர்கள். சம வயதினர். என்.என்.கக்காடு, ஆர்.ராமச்சந்திரன்,ஆற்றூர் ரவிவர்மா, கெ.பாலூர், சுகத குமாரி போன்றவர்கள் முக்கியமானவர்கள். எம்.கங்காதரன் போல நவீனகவிதைக்காக வாதிடும் விமரிசகர்கள் உருவானார்கள். நவீனகவிதைக்காக ‘கேரள கவிதா’என்ற சிற்றிதழை பிடிவாதமாக பலகாலமாக நடத்தினார் அய்யப்ப பணிக்கர். நான்கூட அதில் இரண்டு கவிதைகளை எழுதியிருக்கிறேன்.

எண்பதுகளில்தான் நவீனக் கவிதை மலையாளத்தில் மெல்ல ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் அதற்காக அது வடிவில் பெரிய சமரசங்களைச் செய்ய நேர்ந்தது, அதாவது யாப்பை சற்றே விலக்கிக் கொண்டு இசைத்தன்மை கொண்ட நெகிழ்வான பாடல்வடிவை அது தக்கவைத்துக் கொண்டது. படிமங்களில் மட்டுமே நவீனக் கவிதையாக அது இருந்தது. மலையாள நவீனக் கவிதைக்கு உரிய இந்த தனித்தன்மை இன்றும் அங்கே பெருமளவில் தொடர்கிறது. அதற்குக் காரணமாக அமைந்தவரும் அய்யப்ப பணிக்கர்தான்.அவரது ‘சந்தியை[ அந்தி என்ற பேரில் இது என்னால் மொழியாக்கம் செய்யப்பட்டுபென் தற்கால மலையாளக் கவிதைகள் நூலில் உள்ளது.] இதற்கு வழியமைத்தது. கற்பனாவாதப் பண்பு மிகுந்த இக்கவிதை அங்கே பொது வாசகர் மத்தியில் பெரும்புகழ் கொண்ட ஒன்று. அய்யப்ப பணிக்கர் என்றால் சராசரி மலையாளி நினைவுகூர்வதும் இப்பாடல்தான். லெனின் ராஜேந்திரன் இயக்கிய ‘வேனல்’என்ற படத்தில் இதை நெடுமுடி வேணு சிறப்பாக பாடியிருக்கிறார்.பிற்காலத்தில் அய்யப்ப பணிக்கர் நீளமான ”குடும்ப புராணம்” , ”கோத்ராயனம்” போன்ற கவிதைகளை எழுதினார். கோத்ராயனம் நீல.பத்மநாபனால் தமிழில் மொழியாக்கம் செய்யபபட்டு தனி நூலாக வந்துள்ளது.

கவிஞர் என்பதுடன் அய்யப்ப பணிக்கர் ஓர் இலக்கிய ஆளுமையும்கூட. அங்கதம் நிரம்பிய பேச்சு, நட்பார்ந்த பழகும் முறை ஆகியவை காரணமாக அவருக்கு விரிவான நண்பர்வட்டம் இருந்தது.சர்வதேசக் கருத்தரங்குகளில் இந்திய இலக்கியத்தை பிரதிநிதிகரித்து செல்லும் மிகச்சிலரில் ஒருவராக ஆகி உலகை வலம்வந்துகொண்டிருந்தார். அவரது இலக்கியத் திறனாய்வுக்கட்டுரைகள் – குறிப்பாக தகழி சிவசங்கரப்பிள்ளை மற்றும் நவீன கவிதை பற்றியவை- முக்கியமானவை. இந்திய இலக்கியம் பற்றி கேந்திர சாகித்ய அக்காதமி பிரசுரித்த நூல்வரிசையின் பொது ஆசிரியராக இருந்தார். அவரது ஆசிரியத்துவத்தில் வந்த தொகைநூல்கள், அவர் முந்நிலை வகித்த கருத்தரங்குகள், அவர் மையவிசையாக இருந்த விருதுக்குழுக்கள் பற்பல. அவர் மலையாள இலக்கியத்தின் ஓயாத உள் இயந்திரங்களுள் ஒன்றாக செயல்பட்டார்.

கடைசிக் காலத்தில் தமிழ் [திராவிட] அழகியலை அடிப்படையாகக் கொண்டு நவீனத் திறனாய்வுமுறையை உருவாக்க முயன்றார் அய்யப்ப பணிக்கர். தொல்காப்பிய இலக்கியக் கோட்பாடுகள் குறித்த அவரது கட்டுரைகள் சர்வதேச அளவில் மிகவும் விவாதிக்கபப்ட்டவை.

1931 ல் கேரளத்தில் காவாலம் என்ற ஊரில் பற்பல ராஜதந்திரிகளும், இலக்கியவாதிகளும், அரசியல்வாதிகளும் பிறந்த மிகப்புகழ்பெற்ற செல்வந்த நாயர் குடும்பத்தில் அய்யப்ப பணிக்கர் பிறந்தார். பணிக்கர் என்பது மகாராஜாவால் குடும்பத்துக்கு அளிக்கப்பட்ட விருதுப்பெயர். அந்தக் குடும்பப் பின்புலத்தை எள்ளி நகையாடி குடும்ப புராணம் என்ற நீள்கவிதையை எழுதினார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றபின் அமெரிக்கா சென்று இண்டியானா பல்கலையில் எம்.ஏ ,பி.எச்.டி பட்டம் பெற்றார். கேரளத்தின் பல கல்லூரிகளில் பேராசிரியராக வேலைபார்த்தார். கேந்திர சாகித்ய அக்காதமி விருது, சரஸ்வதி சம்மான் விருது, கபீர் விருது உட்பட முக்கியமான பல விருதுகளை பெற்ற அய்யப்ப பணிக்கர் கேரளத்தின் முக்கியமான விருதான வயலார் விருதை அவ்விருது சமீபகாலமாக சில தகுதியற்றவர்களுக்கு வழங்கப்பட்டமையால் நிராகரித்து விவாதத்துக்கு உள்ளானார்.

நோயுற்றிருந்த அய்யப்ப பணிக்கர் 23-8-6 அன்று திருவனந்தபுரத்தில் காலமானார். அவரது சடலம் அவரது சொந்த ஊருக்கு கொண்டுசெல்லப்பட்டு முழு அரசுமரியாதையுடன் சிதையேற்றப்படும். மலர்வளையம் வைப்பது, பொதுப்பார்வைக்கு வைப்பது போன்றவற்றை உயில் மூலம் விலக்கியிருந்தார்.

அங்கணத்தின் ஒளி கண்ணாடிச்சில்லுகளிலும் முன்னந்தலை நரைமயிரிலும் விழ அய்யப்ப பணிக்கர் சுந்தர ராமசாமியிடம் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருக்கும் காட்சி நினைவுக்கு வருகிறது. ஒரு காலகட்டம் மெல்ல பின்னகர்வதை உணர முடிகிறது

குதிரை நடனம்
—————

நான்கு பெரும் குதிரைகள்
அலங்கரித்து வந்தன
ஒன்று வெள்ளை ஒன்று சிவப்பு
ஒன்று கருமை ஒன்றுக்கு தவிட்டு நிறம்

ஒன்றுக்கு நான்கு கால்
& மூன்று கால்
மூன்றாவதற்கு இரண்டுகால்
நாலாவது ஒற்றைக்கால்

ஒற்றைக்கால் குதிரை சொன்னது
மற்றவர்களிடம்
நடனத்துக்கு நேரமாகிவிட்டது நண்பர்களே
நாம் ஒற்றைக்கால் நடனம் ஆடுவோமாக!

நடனம் தொடங்கியது

நான்குகால் குதிரை நடுங்கி விழுந்தது
மூன்றுகால் குதிரை மூர்ச்சையாகியது
இரண்டுகால் குதிரை நொண்டித் தவித்தது

ஒற்றைக்கால் குதிரை மட்டும்
ஆடிக்கொண்டே இருந்தது

[நன்றி: தற்கால மலையாளக் கவிதைகள் 1991]

முந்தைய கட்டுரைசுந்தர ராமசாமி – நினைவின் நதியில்
அடுத்த கட்டுரைஆர்.விஸ்வநாத சாஸ்திரியின் ‘அற்ப ஜீவி’