காவியங்களும் தொன்மங்களும்

இலியட் பற்றி ஜெயமோகனின் கருத்துகள் தொன்மங்களின் ரசிகனான என்னைக் கவர்ந்தன. பிரியமும் அகிலிசும் சந்திக்கும் காட்சி ஜெயமோகன் வார்த்தைகளில் பிரமாதமாக இருந்தது. ஆனால் இலியட், ஒடிசி இரண்டும் – உண்மையைச் சொல்லப் போனால் இந்தியப் பாரம்பரியம் இல்லாத எந்தத் தொன்மமும் – என் மனதைத் தொடவில்லை. இது என் பிரச்சினையா,இந்தியர்களுக்கு மட்டும்தான் இப்படியா, கிரேக்கர்களுக்கு இலியட்தான் மனதைத் தொடும் தொன்மமாக அமையுமா என்று தெரியவில்லை. அதுவும் இதைப் போன்ற வீர கதைகள் – குறிப்பாக பியோவுல்ப் உள்ளிட்ட ஸ்காண்டிநேவியத் தொன்மங்கள்எல்லாமே ஜெயமோகன் சொல்வது போல கொஞ்சம் primitive ஆகத் தெரிகின்றன.

ஒரு பதிவிலிருந்து,

மகாபாரதமும்,மற்ற தொன்மங்களும்

அகிலிசுக்கும், யுலீசசுக்கும், ஹெக்டருக்கும் முன்னாலும் பின்னாலும்
இரண்டு கடவுள்கள் நின்று கொண்டே இருப்பார்கள். சண்டையே
அவர்களுக்குள்தான். நேராகவே சண்டை போட்டுத் தொலைக்கலாம். எரசும்,அதீனாவும், சூசும், ஹேராவும், அப்போலோவும்தான் அடித்துக் கொள்கிறார்கள்.வீரமும், விதியும், கடவுளர்களின் விருப்பமும்தான் கதையில் மீண்டும் மீண்டும். நட்புக் கூடக் கொஞ்சம்தான் வருகிறது. எது நடந்தாலும் அதில் ஒரு கடவுளின் பங்கு இருக்கிறது. பாரிசுக்கும் ஹெலனுக்கும் நடுவில் இருப்பது காதலா? இல்லை அது வீனஸ் பாரிசுக்குத் தந்த பரிசு. கடவுள்கள் ஆட்டி வைக்கும் பொம்மைகள்தான் இந்த கிரேக்க வீரர்கள்.

ஆர்வி

****

[அக்கிலிஸின் வெற்றிப்பிரகடனம்]

அன்புள்ள ஆர்வி

தொன்மங்களைக் கதைகளாக அல்லாமல் குறியீடுகளாக எடுத்துக்கொண்டால் மட்டுமே அவை
உண்மையான வீச்சை அடையும். ராவணனுக்குப் பத்துத் தலை என்பது தொன்மம் காட்டும் சித்திரம். அது அவனுடைய பத்து மடங்குஅகங்காரத்தைக் காட்டுவதென எடுத்துக்கொண்டால் கதை மேலும் உக்கிரம் பெறுகிறது.

பிரம்மாஸ்திரம் பெறுவதற்காகத் தவமிருக்கும் ராவணன்,தன் ஒன்பது தலையையும் கிள்ளித் தீயில் இட்டு அவிஸாக்கிப் பத்தாவது தலையையும் கிள்ளப்போகும்போதே பிரம்மா தோன்றுகிறார் என்ற இடம் ஆழமான அர்த்தம் கொண்டதாகும். இந்திரஜித் இறந்தபோது பத்துத் தலையும் பத்துவிதமாகப் புலம்பத் துயில் இல்லாமல் தவிக்கும் ராவணனை நாம் மேலும் உக்கிரமாக அணுக முடியும்

கிரேக்க புராணங்களையும் அப்படியே நாம் அணுகக்கூடும். உதாரனம் அக்கிலிஸ்,தீட்டிஸ் என்ற அலைதேவதையின் மைந்தன். புராணம் முழுக்க அவனுக்கிருந்து கொண்டிருக்கும் ஓயா அலைக்கொந்தளிப்புக்கான குறியீடு அது.
கடவுள்கள் எவரும் வெறுமே கடவுள்களாக இல்லை, இயற்கையின் ஓர் ஆற்றலின் அல்லது பிரபஞ்சத்தின் ஒரு அடிப்படைக்கூறின் அம்சமாகவே உள்ளனர். அந்த அம்சத்தைக் கற்பனையில் வளர்த்துக்கொண்டால் மட்டுமே நம்மால் உள்ளே
செல்லமுடியும்.

[பீமன்]

சூரிய புத்திரனான கர்ணன்,சூரியன் போல அனைத்தையும் அளிப்பவனாக மட்டுமே இருக்கிறான். இந்திரன் மகனாகிய அர்ஜுனன்,காதலனாகவும் இருக்கிறான். இதேபோல நாம் கிரேக்க புராணங்களை வாசிக்கலாம். கிரேக்க புராணங்கள் அப்படித்தான் எழுதப்பட்டுள்ளன. அது அக்கால மக்கள் பிரபஞ்சத்தைப் பார்த்த,புரிந்துகொண்ட,சித்தரித்த ஒரு வழிமுறை .

போர்களை தேவர்கள்நிகழ்த்துகிறார்கள். ஆனால் அந்த தேவர்கள் யார்? அவர்கள் அந்த மனிதர்களின் அடிப்படைத்தன்மைகளின் உன்னதமாக்கப்பட்ட வடிவங்கள் அல்லவா? ஒருவன் உக்கிரமான கோபம் கொண்டு கொலைசெய்கிறான் என்பதை அவனைக் கோபத்தின் தேவன் இயக்க அவன் கொலைசெய்தான் என்று சொல்வதைப்போல எடுத்துக்கொள்ளலாம்

கிரேக்க புராணங்கள், காவியங்கள் காலத்தால் முந்தையவை. ஆகவே அவற்றின் கவித்துவம் எளிமையானது, அவற்றின் தத்துவார்த்தம் முழுமைநோக்கி விரியாதது. வாழ்க்கையை மட்டுமே மையப்படுத்தியவை அவை;அன்றாட வாழ்க்கைக்கு அப்பால்செல்லக்கூடியவை அல்ல. அன்றாட வாழ்க்கைக்கு அப்பால் அவர்கள் அறிந்ததையும் வாழ்க்கைக்குள்ளேயே போட்டுப்பார்க்கிறார்கள்.

தத்துவார்த்தமான பெருமதங்கள் உருவாகிக் குறியீடுகள் பிரம்மாண்டமாகப் பெருகியபிறகு உருவாகும் காவியங்களில் இருக்கும் கவித்துவச் செறிவை இவற்றில் நாம் காணமுடியாது

[ராவணன்]

கடைசியாக ஒன்று. ஒரு காவியமும் அதன் குறியீட்டமைப்பும் ஒரு பண்பாட்டுக்கு மட்டுமே உரியவை. பண்பாடெனும் பசுவின் பாலெனும் தொன்மப்பெருக்கில் கடைந்த வெண்ணெயே காவியம். ஆகவே ஒரு பண்பாட்டில் வளர்ந்து உருவானவர்களுக்கு அந்தப் பண்பாட்டின் சாரமான தொன்மவிரிவும் காவியமும் கொடுக்கும் ஆழமான மனநெகிழ்ச்சியை இன்னொருவருக்குக் கொடுக்காமல் போகலாம்.

[ஹெர்குலிஸ்]

உதாரணமாக ஊட்டி அரங்கில் பரதனின் வருகையைக் குகன் பார்க்கும் இடம்,ஆழமான மனநெகிழ்ச்சியை அனைவருக்கும் உருவாக்கியது. அதில் உச்சகட்ட நல்லியல்புகள் மோதிக்கொள்கின்றன. குகன் என்ற நட்பு,பரதன் என்ற பாசம்,ராமன் என்ற பெருந்தன்மை. அந்த நாடகம் ஒருவேளை அதே உச்சத்தை ஓர் அமெரிக்கனுக்கு அளிக்காமல் போகலாம்.

அதேபோலக் கிரேக்க இதிகாசங்களின் வீரம் மட்டுமே ஆன வீரம் நம்முடைய பிரக்ஞைக்கு உவக்காமல் போகலாம். அதையே அங்கே தெளிவாகச் சொன்னேன். நாம் ஒரு காவியத்தை நம்மை நோக்கி இழுக்கக்கூடாது. காவியத்துக்குள் நாம் செல்லவேண்டும். இல்லாவிட்டால் பல பெருங்காவியங்கள் வெறும் பாலைநிலங்களாகவே தோன்றும். மகாபாரதத்தில் ஊறிய குட்டிகிருஷ்ணமாராருக்குப் ’போரும் அமைதியும்’ குப்பை என்று தோன்றியது.

ஒரு காவியத்தை நாம் ஏன் வாசிக்கிறோம்? அது சாராம்சமாக்கப்பட்ட ஒருபண்பாடு. அந்த பண்பாட்டுக்குள் சென்று அதன் சாரத்தை அறிய. அதற்கு மேல் சென்று மானுடப்பண்பாட்டின் சில உச்சமான சாரமான நிலைகளை உணர. முதல் தளத்தில் நமக்குப் பண்பாட்டுத்தடைகள் இருக்கலாம். அதைத் தாண்டிச்சென்றால் இரண்டாம் தளத்தில் நாம் மானுடப்பொதுத்தளம் ஒன்றை அறிவோம். அங்கே அக்கிலிஸும் அர்ஜுனனும் ஒன்றே. ஹெர்குலிஸும் பீமனும் ஒன்றே.

 

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைபசுமை- ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைகோட்டிகள்