வசைகள்

images

 

அன்புள்ள ஜெ

உங்களைப்பற்றிய 50 டிவிட்டர்களைத் தொகுத்து அனுப்பியிருக்கிறேன்.  இவற்றை நீங்கள் சாதாரணமாக வாசிக்க மாட்டீர்கள் எனத் தெரியும். ஏன் அனுப்பினேன் என்றால் நீங்கள் இவற்றைக் கவனிக்கவேண்டும் என்பதற்காகத்தான். இவற்றில் உள்ள ஏளனம், நக்கல் எல்லாவற்றையும் நீங்கள் கவனிக்கவேண்டும் ஜெ. நீங்கள் யாருக்காக எழுதுகிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்தாகவேண்டும் என்பதற்காகவே இவற்றை அனுப்பியிருக்கிறேன்.

சுஜாதாவைப்பற்றியோ இசையைப்பற்றியோ நீங்கள் ஒரு கருத்தைச் சொன்னதுமே உங்களை அத்துமீறிக் கிண்டலும் நையாண்டியும் செய்து இவற்றை எழுதுபவர்கள் இந்தவகையில் எழுதுவதற்கு என்ன தகுதி கொண்டிருக்கிறார்கள் என்பதை என்னைப்போன்றவர்கள் யோசிக்கிறோம். இந்தக் கிண்டல்களைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சண்முகம் குமரவேல்

அன்புள்ள சண்முகம்

நான்கடவுள், அங்காடித்தெரு படத்தின் இணைப்புகளை நீங்கள்தான் சேகரித்து அனுப்பினீர்கள் போல. இணையத்தில் அதிக நேரம் செலவழிக்கிறீர்கள். உங்கள் இலக்கு சினிமா என்றால் நீங்கள் கவனம் செலுத்தவேண்டிய தளங்கள் இரண்டுதான். ஒன்று, உலக சினிமா. இரண்டு தமிழ்சினிமாவின் தொடர்புகள். இந்த வெட்டிவேலை உங்களுக்கு எதற்கு?

டிவிட்டரில் நான் ஒரு பக்கத்தைத் திறந்தேன். அதன்பின் அந்தப்பக்கமே போகவில்லை. அது ஒரு புதிய உலகம். என்னுடைய நேரம் ஏற்கனவே நிரம்பி வழிகிறது. ஆகவே ஒதுங்கிக்கொண்டேன். ஃபேஸ்புக்,ஆர்க்குட் போன்ற எதிலுமே நான் இல்லை. ஆர்க்குட்டில் சில விவாதக்குழுக்கள் என்பேரில் இருப்பதாகச் சொன்னார்கள்.ஒருமுறை பெருந்தேவி ஒரு ஃபேஸ்புக் தொடர்பை அனுப்பியிருந்தார்கள். நான் எதனுள்ளும் நுழைந்ததில்லை. எனக்கு ஒரு இடத்தில் சில தகவல்களை உள்ளே போட்டுப் பதிவுசெய்யவேண்டுமென்றாலே தயக்கம் ஏற்பட்டுவிடுகிறது. தொழில்நுட்பங்கள் என்னைக் குழப்புகின்றன

நம்முடைய சமூகம்,இன்றைய வேலைமுறை காரணமாக மனிதனை மேலும் மேலும் தனிமைப்படுத்திக்கொண்டே வருகிறது. அதன் விளைவாக இத்தகைய தொடர்பு மையங்களில் நம்மில்பலரும் சிக்கிக்கொள்கிறோம் என நினைக்கிறேன். இவை அரட்டைமையங்கள். தமிழகத்தின் வேறு எந்த அரட்டை மையத்திலும் எந்த வகையில் என்னென்ன பேச்சு நிகழுமோ, அவை என்ன தரத்தில் இருக்குமோ அதுவே இங்கும் நிகழ்கிறது. தொழிற்சங்கவாதி என்றவகையில் இந்த அரட்டைகளை எவ்வளவோ பார்த்திருக்கிறேன்.

இந்த அரட்டைகளில் என்னைப்பற்றி இழிவாகவும் நக்கலாகவும் பேசும் பலர் வாசகர்களாக எனக்கு அறிமுகமானவர்கள். உரையாடலுக்கு வந்தவர்கள். அவர்களின் இந்தக் குரலும் எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. இதுவும் இங்கே உள்ள ஒரு  மரபுதான். தொழிற்சங்கத்தில் இதுவும் சர்வ சாதாரணம். நேரில் தோழர் என்பார்கள். அப்பால் சென்றதுமே குரல்கள் வேறுபட ஆரம்பிக்கும். அவதூறுகள், வசைகள், நக்கல்கள், கிண்டல்கள் கிளம்பும்.

எல்லா அரட்டைமையங்களிலும் உள்ள மனநிலைதான் இது. இங்கே பேசுபவர்கள், எவ்வகையிலும் பொருட்படுத்தத் தகுதியற்றவர்களாகத் தாங்கள் இருப்பதைப்பற்றிய சுயபிரக்ஞையுடன் இருக்கிறார்கள். அதுவே அவர்களை இந்தவகை மனத்திரிபுகளை அடையச் செய்கிறது. அவதூறும் வசையும் அவர்களுடைய ஆழமான மனப்பகுதியொன்றை இதமாக வருடிக்கொடுக்கின்றன. அந்த போதைக்கு அடிமையாகிவிடுகிறார்கள். காலை எழுந்ததுமே அந்த போதைக்கான தேவை இருக்கிறது, ஒரு கட்டிங் அடிப்பதுபோல. பரிதாபகரமான மனநிலை இது.

மேலும் நமக்கு ஒரு சமூகமாகவே வசை என்பதன் மேல் ஒரு பெரிய ஈடுபாடு உண்டு. ஒரு சந்திப்பில் என் நண்பர் அழகேசபாண்டியன் இதைச் சொன்னார். அவரது பிரியத்துக்குரிய கொள்கை இது. தமிழகத்தில் டீக்கடைகளில், செய்தித்தாள்களில், சுவரொட்டிகளில், மேடைகளில், இணையத்தில் யாராவது யாரையாவது வசைபாடிக்கொண்டே இருக்கிறார்கள். முதலாளி தொழிலாளியை வசைபாடுகிறார். வேலை கொடுக்கும்போதே ‘நான் ஆத்தா அம்மான்னு திட்டுவேன், சரியா?’ என்று கேட்டுத்தான் வேலையே கொடுப்பார். சாதாரண மனிதர்கள்,கையாலாகாத சின்னப்பையன்களை வேலைக்கு வைத்துக்கொண்டு வசைபாடுவார்கள். கணவர்கள் மனைவிகளை, அப்பாக்கள்  பிள்ளைகளை வசைபாடுவார்கள்.

வசைமீது நமக்கு இருக்கும் போதையே அலாதி. யாராவது வசைபாடினால் அங்கே உடனடியாகக் கூட்டம் கூடிவிடுகிறது. விதவிதமாக வசைபாடுபவர்கள்தான் நமக்குப் பிரியமானவர்கள். வசைக்கு ஓர் அரசியல் நோக்கத்தையும் கற்பித்துக்கொண்டால் அது புனிதமானதாக ஆகிவிடுகிறது. புரட்சியையே வசை மூலம் கொண்டுவரலாம் என்ற கோட்பாடே தமிழகம் மார்க்ஸியத்துக்கு வழங்கிய கொடை. வினவு என்ற இணையதளம் இதற்காகவே நடத்தப்படுகிறது. வாழ்நாள் முழுக்க வசைபாடுவதை மட்டுமே செய்த ஈ.வே.ராதான் நமக்கு முதல்பெரும் சிந்தனையாளர் !

நம் வாசகர்களால் அதிகமாக வாசிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் வசைபாடிகள்தான். எழுத்தாளர்கள் என்றும் சிந்தனையாளர்கள் என்றும் அவர்களே அறியப்படுவார்கள். ’என்னய்யாஎழுதியிருக்கிறார்’ என்றால் ராஜீவ்காந்தி, ராஜபட்சே, மன்மோகன்சிங், கருணாநிதி, ஜெயலலிதா, சுந்தர ராமசாமி என ஆரம்பித்து வசைபாடியிருப்பார்கள்.  அவற்றை வாசிப்பவர்களுக்குத் தேவை, வசையின் போதை மட்டுமே. ஆனால் அதற்கு ஏதாவது கொள்கை கோட்பாடு போர்வையை போர்த்திக்கொண்டால்தான் கௌரவம். ஏதோ உன்னதமான விஷயங்களைச் செய்வதாக எண்ணி மனச்சிக்கல் இல்லாமல் அதில் மூழ்க முடியும்.

இந்தக்கடிதத்தை எழுதிவிட்டு நான் இதை அஜிதனிடம் சொன்னேன். உடனே கிளம்பிப் பார்வதிபுரம் ஜங்ஷனுக்குச் சென்று வந்தோம். அந்த இருபது நிமிடங்களில் எத்தனை வசைப்பாடல்கள் காதில் விழுகின்றன என்று பார்த்தோம். நான்கு!

அந்த மனநோய்வட்டத்தை உதறிவிட்டு நிம்மதியாக இருங்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைஇந்தியா என்னும் குப்பைக் கூடை
அடுத்த கட்டுரையானை டாக்டர் நினைவு கூரல்-செல்வேந்திரன்