பாபா ராம்தேவ்

அன்புள்ள  ஜெ,

சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்னால் ஜெ. ஆட்சிக்கு வந்தால் நாடு மிகக் கேவலமாக  இருக்கும், எல்லா இடங்களிலும் கேபரேவும், கேவலங்களும் நிறைந்து இருக்கும் என நினைத்தேன். ஆனால் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின் ஜெ. மிக மோசமாக ஆட்சி புரிந்தாலும், இப்பொழுது கிடைத்ததில்  நல்லவர் நிலைக்கு உள்ளதாக நினைக்கிறேன்.

எனது பிரச்சினை இப்போ இந்த ராம்தேவ். எப்படி நான் ஒரு யோகாசிரியனை, சாமியாரை ஒரு அரசாங்கத்தை ஆட்டிப் படைப்பவனாக ஏற்றுக் கொள்ள முடியும். மேலும் அவர் கட்சி சார்பற்றவன் என்று சொல்லும் போது இன்னும் பயமாக இருக்கிறது.  தலிபான் போல் ஆகிவிடாதா. தலிபானுக்கும் ஆதரவு உண்டு அவர்கள் ஊரில்.

நீங்கள் ஒரு முன்னாளோ  அல்லது இந்நாளோ கம்யூனிஸ்ட் மற்றும் இந்துத்வா போன்ற காரணங்களால் மட்டும் அன்றி, எனக்குத் தெரிந்த அற உணர்வின் விளக்க உரையாளர் என்ற வகையில், எனது கவலை சரியா என புரிய வைப்பீர்களா?

அல்லது சாய்பாபா போனபின் மாற்றைக் கண்டு பிடிப்பதற்கான இந்திய வலதுசாரிகளின் நாடகமா?

இப்படிக்குத்
தமிழ்நாட்டின் தேடல் நிறைந்த, திராவிட சார்புடைய, நடுத்தர வர்க்க, சாதாரண ஒருவன்.
முத்துக்குமார். 37 வயசு.

அன்புள்ள முத்துக்குமார்,

பாபா ராம்தேவ் விஷயத்தில் பலரைப்போல எனக்கும் இரு தயக்கங்கள்.

ஒன்று , அவரது ஆளுமை மேல் உள்ள சந்தேகம். அவரது இது வரையிலான செயல்பாடுகளில் பொது நலன் தேடிய நடவடிக்கைகள் குறைவு. அவர், தனக்காக ஓர் அமைப்பை உருவாக்கவே முயன்றிருக்கிறார். அதற்குக் கறாரான வணிக நோக்குடன் செயல் பட்டிருக்கிறார். அவரை நம் கார்ப்பரேட் குருநாதர்களின் பட்டியலிலேயே சேர்க்க முடியும். அவரது இதுவரையிலான நடவடிக்கைகளில் அண்ணா ஹசாரே போல மக்கள் பங்கேற்பு இருந்ததில்லை. அவருக்கு மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கும் காந்திய வழிகளில் நம்பிக்கையும் இருந்ததில்லை.

அண்ணா ஹசாரேயைப் போன்ற மக்கள் போராளிகள், தொடர்ந்து மக்களைத் திரட்டி சமூகப் பணிகளைச் செய்திருக்கிறார்கள். அது ஒரு பெரிய அனுபவ ஞானம். மக்களின் சிக்கல்கள், பலவீனங்கள் எல்லாம் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். பலரைத் திரட்டிக் கருத்துக்களைத் தொகுத்து சமரசப்படுத்தி அவர்கள் ஒரு சமூக விசையை உருவாக்குகிறார்கள். பாபா ராம்தேவ் அப்படியல்ல. ஒரு குருநாதராக வழிகாட்டியின் இடத்தில் இருந்து பேசக் கூடியவர். அவரை ஏற்றுக் கொண்ட சீடர்களிடம் அது சரி. மக்கள் விஷயமென்றால் அது இயல்பான சர்வாதிகாரம் நோக்கியே இட்டுச்செல்லும்.

ராம்தேவ், அண்ணா ஹசாரேயின் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்ததில் சிக்கல் இல்லை. ஏனென்றால் எந்த ஒரு மக்கள் போராட்டமும் ஒரு குறைந்த பட்ச திட்டத்தின் அடிப்படையில் சாத்தியமான அனைவரையும் திரட்டிச் செய்வதாகவே இருக்கமுடியும். ஆனால் அவரே ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதென்பது வேறு. அவரது தனிப்பட்ட தகுதிகள் அங்கே கேள்விக்கு வருகின்றன.

இரண்டாவதாக, அவர் பயன்படுத்தும் மதக்குறியீடுகள் குறித்த ஐயம். அவரைப் போன்ற சாமியார்கள் அரசியலுக்குள் இறங்குவது சற்றும் நல்லதல்ல. நம் ஞானமரபு அவரது துறவுக்கு ஒரு மதிப்பை அளித்துள்ளது. அந்த மதிப்பை அவர் லௌகீகமாகப்  பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. அவரது துறவுத் தோற்றம் சாதாரண மக்களை அவரை சரியாக மதிப்பிடுவதிலிருந்து தடுக்கும். அவரை அவர்கள் இது வரையிலான மத மரபுத் துறவிகளுக்குப் பொதுவாக உருவாக்கி அளித்துள்ள பிம்பத்தை வைத்தே மதிப்பிடுவார்கள்.

மதக் குறியீடுகளை, மத மனச் சார்புகளை அரசியலுக்குப்  பயன்படுத்துவது மிக ஆபத்தானது. ஒரு கட்டத்தில் அந்தக்  குறியீடுகளையும், மனநிலைகளையும் செயற்கையாகக் கையாளத் தெரிந்தவர்களிடம் அதிகாரம் சென்று சேரும். இஸ்லாமியநாடுகளில் அது தான் நடக்கிறது. மேலும் மற்ற மதத்தவரிடம் ஆழமான அவநம்பிக்கைகள் உருவாகி ஜனநாயகத்தின் அடிப்படைகள் சரியும்.

அரசியல் என்பது லௌகீகமானது. அதில் மதத்துக்கு ஏதும் பெரிதாகச் செய்வதற்கில்லை. ஆகவே அது மதச்சார்பற்றதாக இருந்தாக வேண்டும். முல்லாக்களோ, பாதிரிகளோ, சாமியார்களோ அரசியலுக்குள் நுழைவது கடுமையாகக் கண்டிக்கத் தக்கது.

பாபா ராம்தேவ் ஒரு துறவி என்ற நிலையில் அறப்பிரச்சாரம் செய்யலாம். ஊழலுக்கு எதிராக மக்களை விழிப்புணர்ச்சி ஊட்டலாம். ஆனால் அதை அமைப்பாக ஆக்கி முன்னெடுத்தாரென்றால் அரசியலுக்குள் செல்கிறார். அந்நிலையில் அவர் தன் துறவைத் தவறாகப் பயன்படுத்துகிறார். மத அடையாளங்களை அதிகாரச் சின்னங்களாக ஆக்குகிறார். அது நல்லதல்ல.

ஒட்டு மொத்தமாக இந்தவகையான தொடர் போராட்டங்கள் ஊழலுக்கு எதிரான ஒரு மனநிலையை மக்களிடம் உருவாக்கி நிலை நிறுத்தும் என்றால் அது ஒருவகையில் நல்லதாக இருக்கலாம். அவ்வளவு மட்டுமே சொல்ல முடிகிறது.

ஜெ

முந்தைய கட்டுரைகட்டிடங்கள்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைபாபா ராம்தேவ்-கடிதம்