சங்கப்பாடல் நவீனவாசிப்புகள்

அன்புள்ள ஜெயமோகன்,

தங்களது சங்கசித்திரங்கள் போலக் குறுந்தொகைப் பாடல்களைப் புதுக் கவிதையாகச் செய்த புத்தகங்கள் ஏதேனும் உள்ளதா?இப்போதுதான் குறுந்தொகை படித்துக் கொண்டிருக்கிறேன். பல பாடல்களை, அது தரும் உணர்வு நிலைகளை சொல்லிப் பகிர்ந்துகொள்ள முடிவதில்லை. என்னைப் பாதித்த உணர்வுகளைக் கடத்துவதற்காக, இரண்டு பாடல்களைப் புதுக் கவிதைகளாக முயன்றிருக்கிறேன்.
குறுந்தொகை – பதுமனார் (6)

நள்ளேன் றன்றே யாமம்; சொல்லவிந்
தினிதடங் கினரே மாக்கள்; முனிவின்றி
நனந்தலை யுலகமுந் துஞ்சும்;
ஓவோயான் மன்ற துஞ்சா தேனே.

இரவு கழிந்து நடுச்சாமமாயிற்று
ஓசைகள் தொலைந்துபோய்ப் பறவைகளும் அயர்ந்துவிட்ட்டன
உறக்கம் உலகின் வெறுப்பனைத்தையும் மூடிக்கொண்டது
எனக்கு மட்டும் தூக்கமில்லை!

நன்னாகையார் (118)

புள்ளு மாவும் புலம்பொடு வதிய
நள்ளென வந்த நாரின் மாலை,
பலர்புகு வாயி லடையக் கடவுநர்
‘வருவீ ருளிரோ’ எனவும்
வாரார், தோழி, நங் காத லோரே

புத்தி பேதலிக்கச் செய்யும் மாலை நேரமிது;
பறவைகளும் விலங்குகளும் துணை தேடிக் கத்துகின்றன;
தூரத்தில் கோட்டைக் காவலன், கதவைச் சாத்துமுன் கேட்கின்றான்,
“வரவேண்டியது யாரேனுமுண்டோ”
இம்முறையும் என் காதலன் வரவில்லை…

குறிப்பு: தமிழறிஞர்கள் மன்னிக்க!

பாலமுருகன்

அன்புள்ள பாலமுருகன்

நீங்கள் கேட்டபடி பார்த்தால் சுஜாதா குறுந்தொகைப் பாடல்களை இவ்வாறு நவீனத்தமிழில் ஆக்க முயன்றிருக்கிறார். [401 காதல் கவிதைகள்- உயிர்மை பதிப்பக வெளியீடு] ஆனால் அதை நான் எவருக்கும் சிபாரிசு செய்யமாட்டேன். கவிதையில் இருந்து ‘மொத்ததிலே என்ன சொல்றார்னா…’ என ’மையத்தை’ உருவி எடுக்கும் முதிரா முயற்சி அது.

உங்கள் ரசனைக்காக நீங்களே இப்படிச் செய்து பார்க்கலாம். அது உங்கள் வாசிப்பாகவே அமையும்- குறுந்தொகையாக அல்ல. குறுந்தொகை அந்த வரி, வார்த்தைக் கட்டுமானமேயாகும். ஏனென்றால் அது கவிதை.

முதல் கவிதையில் ‘நடுச்சாமம் நள்ளென ஒலிக்கிறது’ என்றே பொருள். இரவை ஒலியாகச் சொல்கிறாள். ஏனென்றால் வீட்டுக்குள் இருக்கிறாள். சில்வண்டுகளின் ஒலி. இருளின் ஒலி அது. அந்த நுட்பம் முக்கியமானது.

சொற்கள் அணைந்து இனிது அடங்கினர் மக்கள். இங்கே பேச்சு மட்டும் அல்ல சொல்.மனதுள் ஓடும் சொல்லும்கூடத்தான். அது அடங்குவதே தூக்கம். எவரிடமும் பூசலின்றி உலகம் தூங்கியது. ஒரே ஒருத்தியாகிய நான் மட்டும் தூங்கவில்லை– அதுதான் கவிதையாகிறது. ’நனந்தலை’ என்பதில் உள்ள அழுத்தம் முக்கியமானது.  அதாவது முடிவில்லாமல் பரந்த உலகம்!

’நள்ளென வந்த நாரின் மாலை’ என்ற சொல்லாட்சியில்  உள்ள தாளமும் அழகும் மிக முக்கியமனாது. சொல்லச் சொல்ல நாவில் இனிப்பது. ’நள்’ என்று ஒலிக்கும் சிள்வண்டுகளின் சத்தம் இங்கே குறிப்பிடப்படுகிறது. சங்கப்பாடல்களில் இரவின் ஒலியாக அது பல இடங்களில் சொல்லப்படும். அந்தி தொடங்குவதைக் காட்டும் ஒலி அது. இரவெல்லாம் அவள் கேட்டுக்கொண்டிருக்கப்போகும் ஒலி. தனிமையின் ஒலி. அதுவே கவிதைக்கு உக்கிரத்தை அளிக்கிறது.

’நார் இன் மாலை’ என்ற சொல்லாட்சி இன்னும் நுண்ணியது. நார் என்றால் .இங்கே அன்பு, அல்லது காதல்இன்பம். ஆனால் அன்பில்லா மாலை வந்தது என்று மட்டும் அல்ல பொருள். தொடுக்கும் நார் இல்லாத மலர் மாலை அந்த மாலைநேரம் என்ற உட்பொருளும் உள்ளது. தொடுக்கும் சரடாகக் காதல் இல்லாமலானதால் தனிப்பூக்களாகச் சிதறுண்ட மாலை அது. அதுவே அக்கவிதையின் ஆழம்.

’பலர்புகு வாயில்’ என்ற அடைமொழி மிக முக்கியமானது. வாசல் அடைக்கும்நேரம் பலரும் அதில் முண்டியடிக்க,அதில் தன் காதலனைத் தேடும் அவளது தவிப்பு அங்கே தெரிகிறது.

சங்கப்பாடல்களில் அடைமொழிகள் வெறும் அலங்காரங்கள் அல்ல. அவற்றுக்கு நுண்ணிய பொருள் எப்போதும் உள்ளது. அதேபோல இயற்கை வருணனை வெறும் சூழல் சித்தரிப்பு அல்ல. அவை ஒரு அகநிலக்காட்சியின் கூறுகள். உணர்வுகளின் படிமங்கள்

சுஜாதாதான் இப்படி கவிதைகளை எளிமையாகச் சுருக்குவதை ஆரம்பித்து வைத்தார். அவருக்கு அதற்குமேல் புரியவில்லை என்பதை நான் அவருடன் பேசிய தருணங்களில் உணர்ந்தும் இருக்கிறேன். போகிறபோக்கில் தமிழறிஞர்களிடமிருந்து சங்கப்பாடல்களை மீட்பதைப்போல இந்த எளிமைப்படுத்தலில் இருந்தும் மீட்கவேண்டிப் போராடும் காலம் வந்துவிடலாம்

ஜெ

முந்தைய கட்டுரைநாரயணகுருகுல துறவியர்
அடுத்த கட்டுரைசுஜாதா, இலக்கிய விமர்சனம்-ஒருகடிதமும் விளக்கமும்