எஸ்ரா

எஸ்.ராமகிருஷ்ணனை மதுரை பொருட்காட்சியில் ஒரு பெரியவர் நெருங்கிவந்தார். கைகூப்பியபடி ”வணக்கம்!” என்றார். ராமகிருஷ்ணனும் கைகூப்பி சிரித்தபடி ”வணக்கம்! வணக்கம்!” என்றார். பரவாயில்லை பெரியவர்கள் கூட ராமகிருஷ்ணனைப் படிக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன். அவரும் அதற்கு ஏற்ற எழுத்தாளர்தானே. நம்மைப்போல சமயங்களில் ஷகீலா பட தளத்துக்கு நகர்வதில்லை. கைதவறி நகர்ந்தாலும் சுக்லம், சுரோணிதம் என்றெல்லாம் சம்ஸ்கிருதமாகச் சொல்லி ஏதோ புனித காரியம் போலிருக்கிறது என்ற எண்ணத்தை உருவாக்கிவிடுகிறார்

ஆனால் வந்தவர் ராமகிருஷ்ணனின் அப்பா என்றார் சுரேஷ் கண்ணன். அவர்கள் வீட்டில் அப்படித்தான் பழக்கமாம். இரவு உணவுக்குப்பின்னர் அவர் அண்ணா டாக்டர் வெங்கடாசலம் தஸ்தயேவ்ஸ்கியை அலசுவாராம். குழம்பு சரியில்லாத அன்று தஸ்தயேவ்ஸ்கிக்கு கெட்டகாலம்தானாம்.

வீட்டிலே இருக்கும்போது என்ன செய்வார்கள், எதிரே வரும்போதெல்லாம் கும்பிடுவார்களா என்று சுரேஷிடம் கேட்டேன். ”இருக்கலாம். அதனால் தானே இவர் தேசாந்திரியாக போயிருக்கிறார்?” என்றார்

எங்களூரில் ராமகிருஷ்ணனுக்கு வாசகர்கள் அதிகம். எங்கள் அக்கவுண்ட் கிளார்க் என்னிடம் ”சார் உங்களுக்கு நெஜம்மாவே ராமகிருஷ்ணனை தெரியுமா சார்?” என்றார்.

”தெரியுமே”

”உங்ககூட பேசுவாரா?”

”அப்பப்ப பேசுவார். சில சமயம் சிரிக்கக்கூட செய்வார்”

”பெரிய ரைட்டர் சார். பாத்து பேசணும். யூ ஆர் லக்கி” என்றார் ”அவரு ஒரு தேசாந்தரி சார்”

அந்த வார்த்தை அவருக்கு ரொம்ப பிடித்துவிட்டது போல. ”அந்தக்காலத்திலே ராணி வாராந்தரீண்ணு ஒண்ணு வந்ததே ”என்றேன்.

என்னை கனிவுடன் பார்த்து ”இது வேற சார். ஊரூரா ஜிப்பா போட்டுட்டு பைய தொங்க விட்டுட்டு போய்ட்டே இருக்கிறது. கூட கோமாளியையும் சிலசமயம் கூட்டிட்டு போவார் போல”

”கோணங்கி?”

”ஆமா சார். பாவம் சப்பாத்தி விரும்பி சாப்பிடுவார் போல. ஒரு வீட்டுலே இருபது சப்பாத்திக்கு மேலே குடுக்கமாட்டேன்னு கறாரா சொல்லிட்டாங்களாம். பாவம் சார். ஒருவாட்டி நமம் வீட்டுக்கு கூப்பிட்டு சப்பாத்தி குடுக்கணும் சார். அவரு நல்ல தேசாந்திரி பாத்துக்கிடுங்க”’

விகடன் வாசகரான தக்கலை நாயர் ஒருவரும் ராமகிருஷ்ணனின் பரம ரசிகர். ஓட்டலுக்கே கதாவிலாசம் என்று பெயர் வைக்கப்போவதாகச் சொன்னார்.

ஆனால் எங்களூர்காரர் ஒருவர் ராமகிருஷ்ணன் வீட்டுக்குப்போய் சிக்கலாகிவிட்டது என்றார்கள். பேசிய பின் சாப்பிட அழைத்திருக்கிறார் ராமகிருஷ்ணன். கைகழுவிவிட்டு கொப்பளிப்பதற்கு முன்பாக அவர் ”சார் முற்றத்துலே துப்பட்டா?” என்று கேட்டிருக்கிறார்

”துப்பட்டாவா? யம்மா! ”என்று ராமகிருஷ்ணன் பாய்ந்து அறைக்குள் போய் கதவைச் சாத்திக்கொள்ள அவர் மனைவி கோபத்துடன் வெளியே வந்து ”எதுக்குங்க பயமுறுத்துறீங்க அவரை? ஏற்கனவே கிலியடிச்சு கெடக்கார்”

”துப்பட்டான்னுதான் கேட்டேன்”

”துப்பட்டான்னாலே பயந்துக்கிறார். போனவாரம் இப்டித்தான் குட்டி பத்மினி போன் பண்ணினாங்க. ஏங்க ·போன்ல குட்டின்னு சொல்றதுக்குள்ள மயக்கம் போட்டு விழுந்திட்டார்”

ராமகிருஷ்ணன் மிகவும் கறாரான வாழ்க்கைமுறைகள் கொண்டவர். வீட்டில் சுவரில் ஒரு அட்டை. அதில் அதிகாலை ஐந்து பத்து துயிலெழுதல். ஐந்து இருபது பல்தேய்த்து முடித்தல். ஐந்து இருபத்தைந்து காப்பி. ஐந்து முப்பது உலக இலக்கியம் வாசித்தல். ஏழு ஐம்பது மனக்களைப்பு தீர சாரு நிவேதிதா, தங்கர் பச்சான் போன்றோரை நினைத்துக்கொள்ளுதல். எட்டுமணிக்கு டிபன்….என கச்சிதமான நிகழ்ச்சி நிரல்.

பிரமித்துப்போய் பார்த்தேன். பொறாமையாக இருதது. ”சூப்பர் ஐடியா ராமகிருஷ்ணன். இப்படித்தான் நேரத்த வீணாக்காம உழைக்கணும். உங்க வெற்றியோட ரகசியம் இப்பதான் தெரியுது.”என்றேன்

”இது ஒரு நல்ல வழிமுறை ஜெயமோகன்.நீங்ககூட செஞ்சு பாக்கலாம்”என்றார் ராமகிருஷ்ணன்

”வருஷம் தப்பா இருக்கு போலிருக்கே…இப்ப 2007 தானே?”

”அப்ப வச்சதுதான். மாத்தல்லை…” என்றார் ராமகிருஷ்ணன். ”சினிமா இருக்கு பாக்கறீங்களா?”

ஒரு பெரிய பீரோ நிறைய செங்குத்தாக படங்கள். ஏழாயிரம் எட்டாயிரம் இருக்கும் ”….நீங்க சினிமாவுக்குள்ள வந்துட்டீங்க. இனிமே கொஞ்சம் கொஞ்சமா சினிமா பாத்து பழகுங்க. மஸ்ட் வாச் அப்டீன்னு சொல்ற அளவுக்கு கொஞ்சம் கிளாசிக்ஸ் இருக்கு. அதை மட்டும் பாத்திடுங்க”

”பாத்தாப்போச்சு….செலக்ட் பண்ணிக் குடுங்க”

”செலக்ட் பண்ணி வச்சதுதான் எல்லாமே…. ஏங்கிட்ட என்ன பழக்கம்னா மஸ்ட் வாட்ச் கிளாசிக்ஸை மட்டும்தான் நான் பீரோவிலே வைப்பேன்…”

”மத்தது?” என்றேன்

”அதெல்லாம் மச்சிலே கெடக்கு. நீங்க இதைப்பாத்த பிறகு அதை ஒண்ணொண்ணா பாக்கலாம்…”

”எனக்கு என்ன பிரச்சினைன்னா சினிமா பாத்தா கண்ணீரா வருது ராமகிருஷ்ணன்…”

”மலையாளப்படம் பாத்தாலே அப்டித்தான்…’

”இது அதில்லை. டிஸ்கவரி சேனல் பாத்தாக்கூட கண்ணீருதான்…ஐ ஸைட் பிரச்சினை…”

”அதுக்கு நீங்க சினிமாப்பாக்கறதுக்குண்ணு ஒரு கண்ணாடி செஞ்சிரவேண்டியதுதான்….” நான் அடுத்ததை யோசிப்பதற்குள் ” உங்களுக்கு கழுத்துவலி இருக்கிறதனால ஒரு காலர் போட்டுட்டு பாக்கலாம்…” என்றார். அதுவும் போச்சு

”தினம் எத்தனை சினிமா பாப்பீங்க?”

”பிஸியா இருந்தா மூணு… இல்லேண்ணா நாலு… ராத்திரிதான் வாசிக்கிறது. விடியற்காலையில் எழுதுறது… ”

”தூங்குறது?”

”சில நாளைக்கு அப்டியே தூங்கிருவேன்..”

ஒரு நாலு படத்துடன் தப்பினேன். அந்தப்படம் எடுத்தவரின் பெயர் நட்சத்திரம் ஜாதக பலன்கள் எல்லாம் சொன்னார். மனைவி அகன்றதும் அவரது காதல் வாழ்க்கையை விவரித்தார். ஆங்கில பட இயக்குநர்களின் வாழ்க்கைக்கு சென்சார் தேவை.

ராமகிருஷ்ணன் தேசாந்தரியாக ஆவதற்கு முன்னால் கொஞ்ச நாள் விருது நகர் மகளிர் கல்லூரியில் ஆசிரியராக வேலை பார்த்தார். [பின்தலை மயிரை முன்தலை வெறுமைக்குக் கொண்டுவரும் வழக்கம் அப்போது வந்திருக்கலாம்] துவைத்து வெளுத்து நீலம்போட்டு அயர்ன் செய்து மடித்து வைக்கப்பட்ட மல்மல் வேட்டி போன்ற சுத்தமான ஆத்மாவாகிய ராமகிருஷ்ணனை மகளிர் மட்டும் கல்லூரியில் ஒரே ஆண் ஆசிரியராக இருந்தபோது விருதுநகர் கன்னியர் என்ன கொடுமை செய்திருப்பார்கள் என்பது ஊகிக்கத் தக்கதே.

ஆகவே அவர் யார் கண்ணையும் பாராமல் கடுமையான முகத்துடன் சுட்டுவிரலை தூக்கி ஆட்டி கனகச்சிதமான சொற்களில் விரிவான தகவல்களுடன் பேசுபவராக தன்னை மாற்றிக் கொண்டார். குலுங்கிச் சிரித்துக் கொண்டே இருப்பவர் சட்டென்று இப்படி மாறும்போது நானெல்லாம் கொஞ்சம் அஞ்சித்தான் போவேன். அவரது ஆங்கில எம்.ஏ படிப்பின் உறுதி வெளிப்படும் தருணங்கள்.

” பிரதர்ஸ் கரமஸோவ்ஸ் நாவலிலே இருபத்தெட்டாம் அத்தியாயத்திலே என்ன நடக்குதுன்னா திமித்ரி அவன் அப்பாகிட்டே சொல்றான்…” பேசி முடித்ததுமே கேள்வி கேட்பாரோ என்று பயம் ஏற்பட்டு நான் கவனமில்லாதது போல் நடிப்பேன். படிப்பை சொதப்பிய எனக்கு கேள்விகேட்டாலே கைகால் உதறும். என் மனைவிகூட கேள்வி கேட்பதில்லை. ”ஜெயன் நூறு ரூபாய்ல நீ கணக்குசொன்ன அறுபது ரூபாய் போக இருபது ரூபாதான் சட்டைப்பையிலே இருக்கு! ”என்று கேள்வி கேட்கப்படாத பதில்தான் சொல்வாள்.

இப்படி திட்டவட்டமாக பேசப்போய்தான் ராமகிருஷ்ணன் அவரது முக்கியமான சிக்கலில் இருப்பதாக அவரது ‘உடனிருந்தே கொல்லும்’ நண்பரான சுரேஷ் கண்ணன் சொன்னார். மதுரையில் ‘நெடுங்குருதி’ விமரிசன விழா.. ராமகிருஷ்ணன் கடுமையான முகத்துடன் ஆணித்தரமாகவும் ஐயத்திற்கு இடமில்லாமலும் பேசுகிறார் ”…வேம்பர்கள் கிபி பதினாறாம் நூற்றாண்டிலே தெற்குதிசை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். இவர்களின் குலவழக்கபப்டி சின்னக்குழந்தைகள் முதல் பிறந்தநாளின்போது மூக்கு குத்தி முடியிறக்கி…”

பேச்சு முடிந்து ஒருவர் பரவசத்துடன் ராமகிருஷ்ணன் கையைப்பிடித்து குலுக்கி ”…சூப்பரா பேசினங்£க சார்” என்றார். ராமகிருஷ்ணன் மகிழ்ந்து வாசகர்களைக் காணும்போது மட்டும் அவர் அளிக்கும் ஒருவகையான சிரிப்பை வழியவிட்டு ”…அப்டீங்களா? நன்றி’ என்று சொல்லி ”…என்ன பண்றீங்க?” என்றிருக்கிறார்

”அருப்புக்கோட்டையிலே தாசில்தாரா இருக்கேன் சார்”

இதன்பின் ஒருவருடம் கழித்து ஏழெட்டுபேர் டாட்டா சுமோவில் அவரை காணவந்திருக்கிறார்கள். மதுரைப்பக்க கட்டைப்பஞ்சாயத்து வழக்கப்படி வெள்ளை வேட்டிமேல் பச்சை பட்டைபெல்ட் அதன் மேல் வெள்ளை சட்டை ஏப்பம் செல்போன் எல்லாமுமாக. ஆகா வந்திட்டாங்கய்யா பஞ்சாயத்துக்கு. யார் அனுப்பியிருப்பார்கள்? கோணங்கி அடிக்க மாட்டாரே, நாவல்தானே எழுதுவார் என்று குழம்பியிருக்க அவர்களில் தலைவன் கும்பிட்டு அமர்ந்து கொண்டார்

”சார் வார மார்ச் மாசம் எட்டாம் தேதி தமிழக வேம்பர் மாநாடு மதுரையிலே நடக்குது. நீங்க வரணும். பேசணும். வேம்பர்களை எம்.பி.சி கோட்டாவிலே சேக்கணும்ணு தீர்மானம் போடப்போறம் சார். உங்களைப்போல ஆளுங்க ஆதரவு வேணும் சார்…”

”வேம்பர்களா? அப்டி ஒரு சாதியே இல்லியே?”

”இல்லாமலா நீ நாவல் எழுதினே? …த்தா [தாத்தா] இந்த ரவுசுதானே வேணாம்கிறது…. சாதி இல்லாமலா இப்ப நாங்களாம் இருக்கோம். இவரு நாகராஜ வேம்பர். நான் முனியப்ப வேம்பர். அவரு—.”

கூட வந்திருந்த வயோதிகர் ”ஐயா நீங்க அறியாப்பையன். வரலாற்றை நல்லா படிக்கணும். கரிகால் சோழன் கல்லணைய கட்டினப்ப நாங்கதான் மண்ணு சுமந்தோம். ராஜராஜ சோழன் கடாரம் போனப்ப….”

”அதெல்லாம் இப்ப எதுக்கு. மூவேந்தர் பரம்பரையே நாங்கதான்னு சுருக்கமா சொல்லுங்க…தம்பியும் தெரிஞ்சுதானே பொஸ்தகம் எழுதியிருக்கு…” என்றார் இன்னொருவர்

”வேம்பர்களை பாண்டியன் தொரத்தினப்ப அவங்க வந்து ஒக்காந்த வேம்ப மரம் இப்பவும் இருக்கு. வருசம் தோறும் அங்க கடாவெட்டும் உண்டு …”

”உங்களுக்கு சாதி சான்றிதழ் இருக்கா?” என்றார் ராமகிருஷ்ணன்

“இருக்கே… அருப்புக்கோட்டை தாசில்தார் குடுத்திருக்கார்”

‘அடப்பாவி’ என்று குமுறிய பின்னர் எஸ்.ராமகிருஷ்ணன் சமாதானமாகப்போக முடிவுசெய்து ”சரிங்க செஞ்சிரலாம்…பாப்பம் ”என்று கும்பிட்டு அனுப்பி வைத்து காய்ச்சலுக்கு மாத்திரை சாப்பிட்டாராம்.

காய்ச்சல் தணியும்போது அடுத்த செய்தி வந்தது. வேம்பர்களின் பூர்வீகம் கேரளம். வேம்பநாட்டு காயல் அவர்களுக்குச் சொந்தம். அதை மீட்கும் போராட்டத்தில் முன்னணியில் நின்று போராடப்போகிறவர் ராமகிருஷ்ணனேதான். அறிவிப்பு வெளியாகிவிட்டிருக்கிறது.

முந்தைய கட்டுரைபப்படம்
அடுத்த கட்டுரைஅகச்சொற்கள் புறச்சொற்கள்