ஓரினச்சேர்க்கை – அனிருத்தன் வாசுதேவன்

அன்பு நிரம்பிய ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். என் பெயர் அனிருத்தன் வாசுதேவன். உங்கள் மீது மிகுந்த அபிமானமும் மதிப்பும் கொண்ட ஒருவன். உங்களது எழுத்துப் பணி குறித்து மிக உயர்வாக நினைக்கிறேன்.

உங்கள் வலைப்பதிவில் வெளியாகியிருக்கும் “ஓரினச்சேர்க்கை” என்ற தலைப்பிலான அனுபவக் கட்டுரையைப் படித்தேன். நீங்கள் மிகுந்த அன்புடனும் அக்கறையுடனும் மனித நேயத்துடனும் கடிதம் எழுதிய நண்பருக்கு பதிலளித்திருப்பது ஒருபாலீர்ப்பு கொண்ட எனக்கும், என் நண்பர்கள் பலருக்கும், மாற்றுப் பாலியல் கொண்ட நபர்களின் நல்வாழ்வு மற்றும் உரிமைகள் சார்ந்த பணியில் ஈடுபட்டிருக்கும் பலருக்கும் நெகிழ்வுண்டாக்கியது. மிக்க நன்றி.

பல்வேறு துன்பங்களுக்கு இடையிலும் பலர் — ஆண்களும் பெண்களும் – ஒருபாலீர்ப்பு கொண்டவர்களாகவோ, இருபாலீர்ப்பு கொண்டவர்களாகவோ வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பலர் தங்களது பெற்றோருடனும் மற்ற குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் தங்கள் பாலியல் இச்சை குறித்த உரையாடலையும் தொடங்கிவிட்டிருக்கின்றனர். இதனைச் செய்த ஒருவன் என்ற நிலையிலும், மற்றவர்களுக்கு இந்தப் பயணத்தில் துணை நிற்க முயலும் ஒருவன் என்ற நிலையிலும், ஒரு சக-ஆற்றுப்படுத்துநராக தினசரி ஒருபாலீர்ப்பு மற்றும் இருபாலீர்ப்பு கொண்ட பலரை சந்தித்து அவர்களுடைய பகிர்தலைக் கேட்பவன் என்ற நிலையிலிருந்தும் இதனை எழுதுகிறேன்.

நான் பங்கு வகிக்கும் குழு ஒன்றின் உறுப்பினர்கள் பலர் www.orinam.net என்ற இணையதளத்தை உருவாக்கி அதில் மாற்றுப் பாலியல் குறித்த பயனுள்ள பல விஷயங்களை வலையேற்றி வருகின்றனர். தங்களது பாலியல் குறித்த சிலரது வெளிப்படையான கடிதங்கள் இங்கு காணக் கிடைப்பதுடன் தங்களது பிள்ளைகள் ஒருபாலீர்ப்பு கொண்டவர்களாக இருப்பதைக் குறித்தும் அது குறித்த தங்கள் நிலைப்பாடு பற்றியும் பெற்றோர்கள் எழுதியுள்ளவையும் இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது. உங்களுக்குக் கடிதம் எழுதியுள்ள நண்பருக்கு இவை பயனுள்ளதாக அமையலாம்: http://orinam.net/parents-family-friends/

உங்கள் அன்பிற்கும், புரிதலுக்கும், ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன்,

அனிருத்தன் வாசுதேவன்

http://aniruddhanvasudevan.blogspot.com

***

அன்புள்ள அனிருத்தன்

உங்கள் எழுத்துக்களை காலச்சுவடு இதழில் கண்டதுண்டு.

உங்கள் இணையதளம் சிறப்பாக உள்ளது. ஒரு முக்கியமான பணி என்றே நினைக்கிறேன். எந்த ஒரு புதிய கருத்தும் நீடித்த விவாதம் வழியாக மெல்லமெல்ல உருவாவதே. அதற்கு இந்தத் தளம் வழியமைக்கும் என நினைக்கிறேன்

வாழ்த்துக்கள்

ஜெ

***

முந்தைய கட்டுரைஅதர்வம்- ஒருகடிதம்
அடுத்த கட்டுரைதேர்வு செய்யப்பட்டவர்கள்- எதிர்வினைகள்