நாஞ்சில் நாடன் அறுபதாம் மணவிழா

இன்று நாஞ்சில் நாடனுக்கு அறுபது வயது ஆகிறது. நாளை சைதன்யாவுக்கு பதினொரு வயதாகிறது. கடந்த ஒருமாதமாகவே சைதன்யா ‘எனக்கு பர்த்டே வருதே’ என்று பாடிக் கொண்டிருந்தாள். அது ஏன் ஓர் உலகத்திருவிழாவாகக் கொண்டாடப்படவில்லை என்ற ஐயம் எப்போதும் குரலில் தொனிக்கும். என் மனதில் இரு நிகழ்ச்சிகளும் ஒன்றுடன் ஒன்று கலந்துபோனதனால் இரு உலகநிகழ்ச்சிகள் ஒரேநாள் இடைவெளியில் நடக்கும் பதற்றத்துக்கு ஆளானேன். செய்யவேண்டியவை கடல்போலக் கிடக்கின்றன. எனக்கானால் கடைசி நிமிடத்தில் வேகவெறியுடன் செய்தேன் என்றால்தான் எதுவும் சரிவரும். ஆகவே அமைதியாக வேறு வேலைகளில் மூழ்கினேன்.

கடைசிநேரத்தில் நாஞ்சில் நாடன் பற்றி ஒரு நூல் [கமண்டலநதி] எழுத ஆரம்பித்தேன். யோசிக்கவே இல்லை. யோசித்தால் குழப்பம் வந்துவிடும் என்பது என் அனுபவம். நாஞ்சில் நாடனின் எந்த நூலையும் புரட்டிப் பார்க்கவும் இல்லை. இரண்டு முறை ஐயங்கள் வந்தன. ஒருமுறை வசந்தகுமாரிடமும் இன்னொரு முறை சுரேஷ் கண்ணனிடமும் தொலைபேசியில் பேசியே தெளிவுசெய்துகொண்டேன். நாலே நாளில் எழுதி முடித்தேன். வழக்கம்போல எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் ஒழுங்கான வடிவத்துடன் சீராக முடிந்தது. ஒருவரிகூட மாற்றி எழுத நேரவில்லை. நல்லவேளை எண்ணித் துணியும் வழக்கம் எனக்கு இல்லை என்று சொல்லிக் கொண்டேன். துணிந்தபின் எண்ணுவதுதான் இலக்கியத்தில் சிறந்த வழி.. உடனே அதை வெளியிட ஒரு விழா ஏற்பாடு செய்தேன்.

நடுவே ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த பரம்பிக்குளம் பயணம். குடும்பத்துடன் அங்கே தங்கிவிட்டு ஈரோடுக்கு இருபத்தியாறாம் தேதி வந்து சேர்ந்தேன். இருபத்தி ஏழு அன்று நாமக்கல்லில் மைசூர் செம்மொழி உயராய்வு நிறுவனம் மற்றும் அரசு கலைக் கல்லூரி இரண்டும் இணைந்து நடத்திய பதினெண் கீழ்க்கணக்கு கருத்தரங்கில் பேசிவிட்டு இரவு கிளம்பி பேருந்தில் பயணம் செய்து காலை எட்டுமணிக்கு நாகர்கோயிலில் வந்திறங்கினேன். அன்றுதான் முதல் உலக நிகழ்ச்சி.

ஏற்கனவே எம்.கோபாலகிருஷ்ணன் [நாவலாசிரியர்], க.மோகனரங்கன் [விமரிசகர், கவிஞர்], நாஞ்சில் நாடனின் நண்பர் வேனில் [பதிப்பாளர்], ஓவியர் ஜீவா, தொழிலதிபர் ரவீந்திரன், நாஞ்சில் நாடனுக்குப் பிரியமான நண்பர் சௌந்தர் அண்ணா [ஜக்கி வாசுதேவ் அமைப்புடன் நெருக்கமான தொடர்புடையவர்], விஜயா பதிப்பகம் வேலாயுதம் ஆகியோர் வந்து வசந்தம் விடுதியில் தங்கியிருக்கும் தகவல் வந்தது. என்னுடன் நாமக்கல் கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு திரும்பிய வேதசகாய குமார் அதற்குள் அவர்களுடன் சென்று சேர்ந்துவிட்ட தகவல் அடுத்தபடியாக வந்தது. எனக்குப் போடுவதற்கு சட்டை இல்லை. எல்லாம் அழுக்கு. ஒருவழியாக பெட்டியைத் துழாவி ஒரு சட்டையைத் தெரிவுசெய்து அதை இஸ்திரி போட்டு வைத்தபின் குளித்து உடைமாற்றிக் கொண்டேன்

அருண்மொழிக்கு விடுப்பு இல்லை. ஆகவே பிறந்தநாளுக்காக ஒவ்வொரு கணமும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஜெ.சைதன்யாவை புத்தாடை அணியவைத்து ஆட்டோவில் கூட்டிக் கொண்டு அருண்மொழியின் தபால் நிலையத்துக்குப் போனேன்.

வழியில் சைதன்யா, “எதுக்கு நாஞ்சில் நாடன் மாமா பர்த்டேயிலே கல்யாணம் பண்ணிக்கிடுறாங்க?”என்றாள்.

“இது அறுபதாம் கல்யாணம் பாப்பா”

“எதுக்கு அவங்க அறுபது கல்யாணம் பண்ணிகிட்டாங்க?”

பத்துமணிக்கு ஜோதி பள்ளிக்குச் சென்றுசேர்ந்தபோது எதிர்பாராத பெருங் கூட்டம். அனேகமாக இவ்வட்டாரத்து இலக்கிய வாசகர்கள் அனைவருமே இருந்தார்கள். கணேஷ், சங்கீதா இருவரும் தனித்தனியாக வந்து வரவேற்றார்கள். நாஞ்சில் நாடனின் சொந்தக்காரர்கள் அவரது மனைவியின் சொந்தக்காரர்கள். நாஞ்சில் நாடனின் மூன்று தம்பிகளுக்கும் அவரது மகளுக்கும் ஒரே மாதிரியான சிரிப்பு உண்டு. அவர்களை தெருவில் பார்த்தால் தெரியாதவர்கள் கூட நாஞ்சில் நாடனை நினைவுகூர்வார்கள். நிகழ்ச்சி தொடங்கிவிட்டது. சிறு வெட்கத்துடன் பிள்ளையவர்கள் ஆச்சியின் கழுத்தில் தாலிகட்ட பிள்ளைகளுக்கு சிரிப்பு வந்து அடக்கிக் கொள்வதைக் கண்டேன்.

அறுபதாம் கல்யாணம் செய்துகொள்பவர்கள் ஒருநாள் எதுவுமே சாப்பிடக் கூடாது என்று ஒரு சடங்கு இருப்பதாகச் சொன்னார்கள். [இதை கடைசி நிமிடத்தில்தான் நாஞ்சில் நாடனிடம் சொல்லியிருப்பார்கள். அப்போது அவரது இரு கட்டுமஸ்தான தம்பிகளும் அவருக்கு இருபக்கமும் உறுதியாக நின்று அவரைக் கட்டுப்படுத்தியிருப்பார்கள்.] மூன்று வேளையும் பால்தான். ஆனாலும் அவர் உற்சாகமாகத்தான் இருந்தார்.

வெளியே இலக்கிய ஆராய்ச்சிகள். அ.கா.பெருமாள் அறுபதாம் கல்யாணம் என்பது பழங்காலத்தில் வேளாளர்களால் கொண்டாடப்படவில்லை. அடிப்படையில் அது ஒரு வைதீகச் சடங்கு, பிராமணர்களுக்கு உரியது, செட்டியார்கள் பிறகு அதைக் கொண்டாட ஆரம்பித்தார்கள், படிப்படியாக பரவியது என விளக்கிக் கொண்டிருந்தார்.

“உள்ள போலாமே” என்றார் சுப்ரமணியம். [இந்துக் கல்லூரி ஆங்கில பேராசிரியர் நாராயணகுரு பற்றி தமிழினி வெளியிட்ட நூல் அவரது குறிப்பிடத்தக்க மொழியாக்கம்] ‘பத்ர காளியின் புத்திரர்கள்’ நூலை எழுதிய ஜெகதீசன் உள்ளிருந்து விபூதி அணிந்து வெளியே வந்ததைக் கண்டேன். நானும் வேதசகாய குமாரும் உள்ளே சென்றோம்.

புகைமண்டிய அறைக்குள் நாஞ்சில் நாடனும் சந்தியா அம்மையாரும் நாற்காலிகளில் அமர்ந்திருந்தார்கள். அருகே விபூதிக் குடுவை. நாஞ்சில்நாடனின் தலைமயிர் மஞ்சளாக இருந்தது. நான் கால்களைத் தொட்டு வணங்கி நெற்றியில் விபூதி போட்டுவிடப் பெற்றேன்.

வேத சகாய குமாரும் வணங்கினார். “விபூதி போடலாமுல்ல?”என்றார் நாஞ்சில் நாடன்.

“பின்ன? உங்க கையால போடுததுல்லா?”என்றார் அவரது ஒருசாலை மாணாக்கனும் சமவயதினருமான வேதசகாய குமார்.

வெளியே வந்தோம். அருண்மொழி வந்து “ஜெயன் ஆசி வாங்கிட்டியா? அவங்களை கும்பிட்டப்ப எனக்கு ஒருமாதிரி கண்ணீர் வந்திட்டுது தெரியுமா?” என்றாள்.

“ஆமா. நல்லாத்தான் இருக்கு. ஆச்சி மட்டும் பக்கத்தில இல்லேண்ணா பண்டார சன்னிதின்னே சொல்லிடலாம். என்ன ஒரு தன்மய பாவம் இல்ல?” என்னைக் கொலைவெறியோடு நோக்கி அகன்றாள்.

“அப்பா இந்தக் கல்யாணத்துக்கு பாட்டிக்கு நெறைய புதூ நகை போடுவாங்களா?” சைதன்யா கேட்டாள்.

முதற்பந்தியிலேயே சாப்பிட்டபின் அருண்மொழியும் சைதன்யாவும் கிளம்பினார்கள். நான் ஆட்டோ பிடிக்கக் கிளம்பும்போது சங்கீதாவும் நாஞ்சில் நாடன் மனைவியும் வந்து வழியனுப்பினார்கள். “நாளைக்கு எங்க வீட்டு விசேஷம். தவறாம வந்திருங்க…”என்று நான் அவர்களை மறுநாள் நான் ஏற்பாடு செய்திருக்கும் ‘நாஞ்சில் 60’ விழாவுக்கு அழைத்தேன். “அதெல்லாம் அப்பவே ஃபோனிலே அருண்மொழி அக்கா முறைப்படி கூப்பிட்டாச்சு” என்று சங்கீதா சொன்னாள்.

நான் மீண்டு வந்தபோது நாஞ்சில் நாடன் பட்டுவேட்டி மஞ்சள் கறை தலையில் அட்சதை எல்லாமுமாக மங்கலகரமாக நின்றிருந்தார். சற்றே வெட்கமும் உண்டு.  நண்பர்கள் தர்மராஜன், கோபாலகிருஷ்ணன் ஆகியோருடன் சாப்பிடச் சென்றேன். அசல் நாஞ்சில் நாட்டுச் சாப்பாடு. ஓலன், அன்னாசிப் பழ புளிசேரி. போளி, பால் பாயசம், பருப்பு பிரதமன், இஞ்சிக் கறி…

“நம்ம பக்கத்துச் சாப்பாடு கோயமுத்தூர்காரங்களுக்கு பழகட்டுமேன்னு அப்டியே அசலா இருக்கணும்னு சொன்னேன்” என்றார் நாஞ்சில் நாடன். ஆனால் ஓரமாக நாஞ்சில்நாடனால் மனமார வெறுக்கப்படும் காலிஃப்ளவர். [“ஒண்ணு எறைச்சிய திங்கணும். இல்லேண்ணா காயத் திங்கணும். இதென்ன ரெண்டும் கெட்டதுமாதிரி?”] வெளியே வந்தபோது நாஞ்சில் நாடன் “என்ன செய்றது. அதுவும் வேண்டியிருக்கே?” என்றார்.

‘நெய்தல்’ கிருஷ்ணன், “சார் எங்களுக்கெல்லாம் அப்டி ஒரு ஞாபகம் இல்லாம இருந்தா சோறு எறங்காது,” என்றார்.

காலச்சுவடு கண்ணன், ‘இப்பல்லாம் ஃபேக் மீட் வந்திருக்கு. சோயா பீன்ஸிலே. இனிமே அதை போட்டாத்தான் இவரை மாதிரி ஆட்களுக்கு சரிவரும்,” என்றார்

கனத்த சாப்பாட்டுக்குப்பின் நேரத்தை வீணடிக்க விரும்பாமல் உடனே வேதசகாய குமாரின் ஸ்கூட்டரில் ஏறி வீடு வந்துசேர்ந்தேன். மறுநாள் இரண்டு கொண்டாட்டங்கள். காலை சைதன்யாவின் பிறந்தநாள். மாலை ‘நாஞ்சில் 60’ நூல் வெளியீட்டு விழா. மீண்டும் பதற்றம். எதற்கும் முதலில் தூங்குவோம். மற்றதைப் பிறகு பார்ப்போம் என முடிவுசெய்தேன்.

வீடு திரும்பி, படுத்தபோது சற்றுநேரம் நாஞ்சில் நாடனின் அம்மாவையே எண்ணிக் கொண்டிருந்தேன். அவருக்கு எண்பது தாண்டிவிட்டது. நாஞ்சில்நாடனிடம் இருக்கும் அந்தச் சிரிப்பு அப்படியே அவர் அம்மாவிடம் இருந்து வந்தது. அந்த வயதுக்கு, தெளிவுடனும் நேர்த்தியுடனும் பேசும் நிதானம் உடையவர். நாஞ்சில் நாடனுக்கு சிலவருடம் முன்பு இதய நோய் வந்தபோது சில வேண்டுதல்கள் செய்திருக்கிறார். அதற்காக அவர்களை இருநாள்கள் முன்பு நாஞ்சில்நாடன் கோயில்களுக்குக் கூட்டிச் சென்றதாகச் சொன்னார்.

நினைத்துக் கொண்டேன், நாஞ்சில்நாடனின் வாசகர்கள் நண்பர்கள் அனைவருக்கும் இது ஒரு கொண்டாட்ட நாள். அவரது அம்மாவுக்குத்தான் உண்மையான திருவிழா.

முந்தைய கட்டுரைகனவுகள் சிதையும் காலம் – பாலாஜி சக்திவேலின் ‘கல்லூரி’
அடுத்த கட்டுரைஓர் இலக்கிய நிகழ்ச்சியின் கதை