மதவாதம்-ஒருகடிதம்

ஜெ.,
1991க்கு பிறகு தமிழ் முஸ்லிம்கள் , முஸ்லிம் தமிழர்களாக மாறி இன்று முஸ்லிம்களாக வஹாபிய முஸ்லிம்களாக மாறிக் கொண்டிருக்கிறார்களோ என்று படுகிறது. முன்பெல்லாம் நண்பர்களுக்கிடையில் அரட்டையடிக்கும்போது முஸ்லிம்களும் இருப்பார்கள். ஒரு கணம்கூட “இவன் முஸ்லிம்” என்று பார்த்து, “பாதுகாப்பாக” பேசியதில்லை. இன்று நிலை வேறு. நீங்கள் என்ன சொன்னாலும் “புண்படுவார்களோ” என்று பயந்து சொல்லவேண்டியிருக்கிறது (அவர்கள் இந்துக்களைப் பற்றி வசைபாடுவார்கள். அது சிறுபான்மை “உரிமை”. மேலும் அவர்கள் “தமிழர்கள்” என்ற உயர் நிலையிலுருந்தல்லவா “பார்ப்பன” மதத்தை விமர்சிக்கிறார்கள்!) நீங்கள் எவ்வளவுக்கு பார்ப்பன மதங்களை வசைபாடுகிறீர்களோ அவ்வளவு “மதசார்பற்றவர்”. நாட்டியம் (பரதம்), இசை (கர்னாடக இசை) , யோகா என்று “இந்து வாடை” உள்ள எதில் ஈடுபாடு காட்டினாலும் நீங்கள் மதவெறியர். (விடுதலை புலிகளை ஆதரித்தாலும் ஏன் விஜயகாந்த் படம் பார்த்தாலும் நீங்கள் இந்துவெறியர்தான்!). நீங்கள் இந்து ஞான மரபில் நாட்டமுள்ளவர் என்று சொல்லிக்கொள்பவர். உங்களை சும்மா விடுவார்களா?

அடிப்படைக் காரணம் 1991க்குப் பிறகு அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வு குறைந்து போனதுதான் என்று படிகிறது. வடநாட்டில் சில இந்துவெறியர்கள் செய்த தவறினால் நம்மூரில் எத்தனையோ நல்ல நட்புகள் உடைகின்றன. சந்தேகம் ஒரு சுவராக எழும்பி தனிமைப்படுத்துகிறது.

நம்மில் பலர் அந்நிய நாட்டில் வாழ்ந்தாலும், “F***ing Indian” என்ற வசைகளை அடிக்கடி கேட்டாலும் அந்த நாட்டின் மீதோ மக்களின் மீதோ வெறுப்பை உமிழ தோன்றுவதில்லை. காலகாலமாக இதே மண்ணில் வாழ்ந்தாலும் ஏன் சிலரால் சொந்த ஊரோடு பிணைய முடிவதில்லை? (ஒருவேளை நானெல்லாம் சொரணை கெட்ட ஜென்மமா?!! :) )

நானும் சுட்டிய பக்கத்தை படித்துப் பார்த்தேன். ” எப்படியெல்லாஆஅம் சந்தேகப் படுறாய்ங்க…ஒக்காந்து யோசிப்பாங்களோ”?!!!” என்று ஒக்காந்து யோசிக்க வைக்கிறது! :)

நன்றி

சி.வெங்கட்

அன்புள்ள வெங்கட்

பத்து வருடங்களுக்கு முன்பு வரை எல்லா இஸ்லாமிய திருமணங்களிலும் பெரும்பகுதி இந்துக்கள் தான் கலந்துகொள்வார்கள். அவர்கள் வியாபாரிகளாக இருப்பதனால் ஊரடங்க அழைப்பதுதான் காரணம். இப்போது அந்நிலை இல்லை. மிக நெருக்கமானவர்கள் வீட்டுக்கு வந்து பிறமதத்தவரை அழைக்க அமைப்புகளின் தடை இருக்கிறது மன்னியுங்கள் என்று விண்ணப்பித்துச் செல்கிறார்கள். இருபது ஆண்டுகள் முன்புவரை கரிய பர்தா போடுவது சில முஸ்லீம் பிரிவுகளுக்கு மட்டுமே உரிய பழக்கம். இன்று போடாத ஒரு சில பெண்கள் கடும் மிரட்டலைச் சந்திப்பதாகச் சொல்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் வட இந்திய மதவாதமா என்ன?

இந்த மனநிலை பொதுவாக மதவெறி இல்லாமலிருந்த கீழை இஸ்லாமிய நாடுகள் உட்பட உலக நாடுகள் முழுக்க ஒரேசமயம் பரவி வருகிறது. எங்கே படித்த இஸ்லாமியர் அதிகமிருக்கிறார்களோ அங்கேதான் மத அடிப்படைவாதம் அதிகமாக இருக்கிறது. வளைகுடா நாடுகளுக்குச் சென்று வருபவர்களிடையேதான் அதிகமாக மத அடிப்படைவாதம் வலுவாக உள்ளது

காரணம் உலகமெங்கும் பெரும் பணச்செலவில் திட்டமிட்டு பரப்பப்படும் வகாபியம். அது ஒரு தீவிரமான போர்க்குணம் கொண்ட மதவெறி. இந்தியாவில் அது இந்துமதவெறியை வெற்றிகரமான காரணமாக ஆக்கிக்கொண்டது அவ்வளவுதான்

நடுநிலையானவர்கள் பண்பாளர்கள்கூட எங்கோ தங்கள் ஆன்மாவை அதற்கு கொடுத்துவிடுகிறார்கள். நண்பர்கள், இலக்கியமும் வரலாறும் அறிந்தவர்கள் கூட சட்டென்று அந்த முகம் காட்டுவது நம்காலகட்ட அவலம். வேறென்ன சொல்ல?

ஜெ

முந்தைய கட்டுரையானைடாக்டர் ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைதிராவிடவேதம் விளக்கம்