வணங்கான் [சிறுகதை] – 2

தொடர்ச்சி

அதன்பின் கண்ணெதிரில் நேசமணி வளர்ந்து பெரிதாவதை அப்பா கண்டார். அவர் டீ குடிக்க வருவதில்லை. அவருடைய ஆபீஸுக்கு டீ கொண்டு கொடுக்கவேண்டியிருக்கும். சிலசமயம் பையன்கள் இல்லாவிட்டால் அப்பாவே செல்வார். நேசமணியின் ஆபீஸ் வாசலில் எந்நேரமும் ஆட்கள் கூட்டம்கூட்டமாக நிற்பார்கள். அழுதுகொண்டு அமர்ந்திருக்கும் பெண்களையும் கோபத்துடனும் கொந்தளிப்புடனும் விவாதித்துக்கொண்டிருக்கும் கிராமத்தினரையும் தாண்டி டீயை கொண்டுசென்றால் அங்கே வெள்ளைச்சட்டையும் போ டையையும் எல்லாம் கழற்றி ஆணியில் மாட்டிவிட்டு சட்டை இல்லாமல் நாற்காலியில் கால்களை தூக்கி வைத்துக்கொண்டு உரக்கச்சிரித்து பேசிக்கொண்டிருக்கும் நேசமணியை பார்க்கமுடியும். எப்போதும் முடிந்தவரை உச்சத்தில் பேசுவது விளவங்கோடு கல்குளம் பக்கத்து வழக்கம்.

எப்போதும் அங்கே ஏழெட்டுபேர் இருப்பார்கள்.’ உள்ளயும் வெளியயும் நிக்கப்பட்ட எல்லாருக்கும் சாய குடுடே’என்று அவர் சொல்வார். ஒரு நாளைக்கு எப்படியும் இருநூறு முந்நூறு டீ ஆகிவிடும். ஒருகட்டத்துக்குமேல் அவரது ஆபீஸிலேயே ஒரு பையனைப்போட்டு டீ போட ஆரம்பித்தார்கள். அப்பா அந்த ஆபீஸை கடந்துசெல்லும்போதெல்லாம் அவர் நேசமணியின் சிரிப்பையும் மலையாள நெடிகொண்ட உரத்த குரலையும் கேட்பார். இந்த மனிதர் உண்மையிலேயே வழக்குகளை நடத்துகிறாரா என்று சந்தேகம் வரும். ஆனால் அவர்தான் திருவிதாங்கூரிலேயே வெற்றிகரமான வழக்கறிஞர் என்றார்கள். அவர் வந்து நின்றாலே வழக்கு வென்றுவிடும் என்று நம்பினார்கள்.

நேசமணி திருவிதாங்கூர் காங்கிரஸில் சேர்ந்து முதலில் நாகர்கோயில் நகர்மன்றத்துக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்று தலைவராக ஆனார். அதன்பின் அவரை வக்கீல் அலுவலகத்தில் பார்ப்பது அரிதாயிற்று. அப்பா மெட்ரிக் பரீட்சையில் வென்றதும் அப்போதுதான். அவருக்கு நெருக்கமாக இருந்த வாத்தியார் செல்லப்பன் ஒருநாள் திருநெல்வேலியில் வெள்ளைக்கார சர்க்கார் வேலைக்கு ஆளெடுக்கிறார்கள், நீ அப்ளிக்கேஷன் போடு என்றார். அப்பா அன்று வரை அதைப்பற்றி யோசித்ததில்லை. அப்போது அவருக்கு முப்பத்திமூன்று வயது. திருமணம் செய்துகொள்ளும் நினைப்பும் அவருக்கு இருக்கவில்லை. நாள் தவறாமல் உள்ளூர் மிஷன் நூலகத்துக்குப் போய் வாசிப்பது மட்டுமே அவரது ஆர்வமாக இருந்தது.

‘வேலை கண்டிப்பா கெடைக்கும்… மெட்ரிக்கு படிச்சுட்டு உன்னளவுக்கு விஷயம்தெரிஞ்ச ஆரும் அந்த வேலைக்கு வரமாட்டாங்க..’ என்று வாத்தியார் சொன்னார். நம்பிக்கை இல்லாமல் அப்பா விண்ணப்பம் போட்டார். திருநெல்வேலிக்கு நேர்முகம் செல்ல ஆணை வந்தது. அவரிடம் பேசியவர் ஒரு மதுரை அய்யங்கார். ஆங்கிலத்திலேயே கேள்விகளைக் கேட்டார். அப்பாவும் ஆங்கிலத்திலேயே பதில் சொன்னார் ‘நீ மிஷன் பள்ளிக்கூடத்திலே படித்தாயா?’ என்றார். அப்பா ‘இல்ல பள்ளிக்கூடத்திலேயே படிக்கவில்லை’ என்றார். அய்யங்கார் தலையசைத்தார். அவர் அதிருப்தி கொள்வதுபோல முகம் காட்டியது.

வேலைகிடைக்காது என்று நம்பித்தான் அப்பா திரும்பிவந்தார். ஒருமாதத்தில் வேலைக்கு உத்தரவு வந்தது. அய்யங்கார் அவருக்குத்தான் இரண்டாவது இடம் கொடுத்திருந்தார். நேராக மதுரைக்குச் சென்று வேலையில் சேர்ந்தார். எட்டுமாத பயிற்சிக்காலம் முடிந்ததும் நில அளவைத்துறையில் தென்காசியில் அவருக்கு வேலைமாற்றம் கொடுத்தார்கள். அப்பாவுக்கு எல்லா ஊரும் ஒன்றுதான். தெனகாசியைப்பற்றி ஒன்றுமே தெரியாது. மதுரையில் இருந்து நேராக தென்காசிக்கு ரயிலில் சென்று இறங்கி வேலைக்குச் சேர்ந்தார்.

அவர் வேலைக்குச் சேர்ந்த அன்றே அவர் அங்கே விரும்பப்படவில்லை என்பதை உணர்ந்தார். நில அளவையின் மைய அலுவலகம் தென்காசியில் இருந்தது. அங்கே அவரை சேர்த்துக்கொண்டதும் நேராக இலஞ்சிக்கு போகச்சொன்னார்கள். அலுவலகத்தில் ஒருவர் கூட அவரைப்பார்த்து புன்னகை செய்யவில்லை. அவரது உத்தரவில் முத்திரை அடித்த இருளாண்டிச்சேர்வை ‘வெள்ளக்காரனுக்கு குனிஞ்சு குடுத்து வேல எடுத்துட்டு வந்திருதானுக’ என்று உரக்க முணுமுணுத்தபோது ஆபீஸில் பலர் திரும்பாமலேயே புன்னகைசெய்தார்கள்.

அப்பா குதிரைவண்டியில் இலஞ்சிக்குச் சென்று ஆபீஸுக்கு போனபோதுதான் அங்கே அவரை ஏன் வேலைக்கு போட்டார்கள் என்று புரிந்தது. அந்தப்பகுதி முழுக்கவே நேரடியாகவும் மறைமுகமாகவும் இஞ்சிக்குடி ஜமீனுக்குச் சொந்தமானதாக இருந்தது. அவரது ஆணைக்கு அப்பால் அங்கே சட்டமும் நீதியும் ஒன்றும் இல்லை. நிலங்கள் யார் பெயரில் இருந்தாலும் , யார் சம்பாதித்ததாக இருந்தாலும் ஜமீன் ஆட்கள் நினைத்தால் அதை எடுத்துக்கொண்டார்கள். பட்டா மாற்றினார்கள். அங்கே வரும் எந்த அதிகாரியும் ஜமீனுக்கு அடிமையாகவே இருந்தாக வேண்டும் என்று வழக்கம் இருந்தது

ஆபீஸ் பூட்டப்பட்டிருந்தது. மண்சாலை ஓரமாக கல்சுவருக்குள் இருந்த தாழ்வான பழைய ஓட்டுக்கட்டிடம். அதைச்சுற்றி செடிகள் மண்டியிருந்தன. ஒற்றையடிப்பாதைபோல ஒன்று உள்ளே போயிற்று. இலஞ்சியில் மழை அதிகமானதனால் பலவகை கொடிகள் அடர்ந்து கட்டிடத்தின் மேல் படர்ந்து கூரையை மூடியிருந்தன. அவர் அங்கே விசாரித்து தலையாரி சங்கரத்தேவரை வரவழைத்து கதவைத் திறந்து உள்ளே சென்றார். ஏழெட்டுமாதமாக திறக்காமலிருந்த அலுவலகம் முழுக்க வவ்வால் எச்சம். அப்பாவே அதை கூட்டிப் பெருக்கினார்.

முதல்நாளே தலையாரி சங்கரத்தேவர் அவருக்கு எல்லாவற்றையும் சொல்லிவிட்டார். அவருடன் அப்பா ஜமீன்தாரை பார்க்கச் சென்றார். ஜமீன்பங்களா ஒரு பெரிய தோட்டத்தில் ஓடைக்கரையில் தென்னைமரகூட்டங்களுக்குள் இருந்தது. முகப்பிலேயே வெளிவாசல் அருகே ஜமீன் அலுவலகம். அங்கேதான் கணக்குப்பிள்ளைகளும் பிறரும் இருப்பார்கள். ஜமீன்தார் காலையில் ஒருமுறை வந்து எல்லாவற்றிலும் கையெழுத்து போட்டுவிட்டுச் செல்வார்.

அலுவலகத்தை தாண்டிச்செல்லும் நீளமான சாலையின் இருபக்கமும் ஜமீன்தார் சொந்தமாக வைத்திருந்த மிருககாட்சிசாலையின் கம்பி அழி போட்ட கூண்டுகள். அவற்றில் அவர் நாலைந்து கரடிகளையும் ஏழெட்டு மலைப்பாம்புகளையும் ஒரு சிறுத்தையையும் வளர்த்து வந்தார். இதைத்தவிர புனுகுப்பூனைகள், முள்ளம்பன்றிகள், காட்டுப்பூனைகள், நரிகள், ஓநாய்கள், கருங்குரங்குகள் என பலவகை உயிர்கள். அவற்றின் எச்சமும் சிறுநீரும் கலந்த கடும் துர்நாற்றம் எந்நேரமும் அலுவலகத்தில் வீசிக்கொண்டிருக்கும்.

இஞ்சிக்குடி ஜமீன்தார் வேட்டையில் ஆர்வம் உடையவர். அவர் காட்டுக்குள் வேட்டைக்குச் செல்வதற்காகவே குதிரைகளை வரவழைத்து பழக்கி வைத்துக்கொள்ள நாலைந்து பட்டாணி முஸ்லீம்கள் இருந்தார்கள். மிருகங்களை பொறிவைத்து பிடிக்க பழங்குடிகளை வைத்திருந்தார். அவருக்குப் பிடிக்காதவர்களை கரடி மலைப்பாம்புகளுடன் போட்டு கூண்டுகளில் அடைத்து இரவெல்லாம் வைத்திருப்பது அவரது வழக்கம். கரடியால் கிழிபட்டு பலர் இறந்திருக்கிறார்கள் என்றார் சங்கரத்தேவர். மலைப்பாம்பைக் கண்டு பயந்தே ஒரு சிறுவன் உள்ளே செத்துக்கிடந்திருக்கிறான்.

அப்பாவும் தேவரும் வாசலை அடைந்தபோது கணக்குப்பிள்ளை வெளியே வந்து அப்பாவிடம் ‘ஏலே நீ நாடான்தானே…அந்தாலே ஏறி வாறியே..வெளியே நில்லுலே… திண்ணையிலே ஏறாதே… செருப்ப களட்டி மூலையிலே போடு’ என்றார். அப்பா அலுவலகத்திற்கு வெளியே நின்றுகொண்டார். தேவரை மட்டும் திண்ணையில் ஏறி அமரச்செய்தார்கள். எட்டுமணிக்கு அலுவலகத்தில் அனைவருக்கும் பதநீர் கொண்டுவந்து கொடுப்பார்கள். அதை அத்தனை பேருக்கும் மண்கோப்பைகளில் கொடுத்துவிட்டு அப்பாவுக்கு மட்டும் ஓலைபட்டையில் கொடுத்தார்கள். பட்டையை வெளியே கொண்டு சென்று போடச்சொன்னார்கள்.

பத்துமணி வரை அங்கேயே காத்திருக்க வேண்டியிருந்தது. ஒருமணி நேரம் நின்றபின் அப்பா தரையில் குந்தி அமர்ந்துகொண்டார். பத்து மணிக்கு ஒரு டவாலி ஓடி வந்து ஜமீந்தார் பெரியகருப்பத்தேவர் வருவதை அறிவித்தான். அவனுக்கு நீதிமன்றத்தின் வில்லைசேவகனின் அதே உடையை அணிவித்திருந்தார் ஜமீன்தார். கொஞ்ச நேரத்தின் நீதிமன்றத்தைப்போலவே ஒரு வெள்ளித் தடியை ஏந்தி அதே சீருடையுடன் ஒரு சேவகன் லெஃப்ட் ரைட் போட்டு வந்தான். அவன் ஆங்கிலம் போன்ற உச்சரிப்புடன் அர்த்தற்ற ஒலிகளை எழுப்பி கூவிக்கொண்டே வந்தான். பின்னால் இருவர் பாண்ட் வாத்தியத்தையும் பியூகிளையும் மனம்போனபடி முழக்கியபடி வந்தார்கள்.

கடைசியாக நாலைந்து சேவகர்கள் பின்தொடர ஜமீன்தார் பெரியகருப்புத்தேவர் வந்தார். அவர் வெள்ளைக்கார லெஃப்டினெண்டின் சீருடையை தைக்கச்செய்து அணிந்திருந்தார். இடுப்பில் கைத்துப்பாக்கியும், கைகளில் வெள்ளைக் கையுறைகளும், கால்களில் பெரிய வேட்டை பூட்டுகளும் அணிந்து பெரிய எடை கொண்ட உடலை சிரமப்பட்டு நகர்த்தி கொண்டு வந்தார். அவர் வந்ததும் அத்தனைபேரும் எழுந்து நின்று அவரை வாழ்த்திக் கூச்சல் போட்டார்கள். அப்போது அவர்கள் ஹிட்லரின் படைகள் செய்வது போல வலது கையை முன்னால் நீட்டியிருந்தார்கள். அதெல்லாம் அங்கே பழக்கப்படுத்தப்பட்டிருந்தது.

ஜமீன்தார் அலுவலகத்தின் படிகளில் ஏறிய போது அப்பாவை பார்த்தார். அப்பா கழுத்துமூடிய வெள்ளைச்சட்டையும் அதன்மேல் கறுப்பு கோட்டும் போட்டு கச்சவேட்டி கட்டியிருந்தார். தலையில் தலைப்பாகையை தொப்பி போல வைத்திருந்தார். அது அன்று எல்லா அரசாங்க அதிகாரிகளுக்கும் உரிய உடை. கணக்குப்பிள்ளை ‘புதிய ஆளாக்கும். திருவிதாங்கூருகாரன். நாடானாக்கும்’ என்றார்.

சட்டென்று ஜமீந்தார் கடும் கோபத்துடன் கையில் இருந்த பிரம்பால் அப்பாவை மாறி மாறி அடித்தபடி ‘கபர்தார்…ஃபூல்…’ என்று கத்த ஆரம்பித்தார். தலையாரியிடம் அப்பாவைப் பிடித்துக் கட்டி சவுக்காலடிக்கும்படி சொன்னார். கணக்குப்பிள்ளை உள்ளே புகுந்து அவரை நிதானமடையச்செய்து அப்பா அரசாங்க உத்தியோகஸ்தர் என்றும் அப்படி செய்யமுடியாது என்றும் சொன்னார். மெல்ல ஜமீந்தார் அடங்கி பெரிதாக மூச்சு விட்டுக்கொண்டு வசைபாட ஆரம்பித்தபோதுதான் அவரது கோபத்துக்கு என்ன காரணம் என்று தெரிந்தது. அவர் முன் ஒரு நாடார் அப்படி உடையணிந்து நின்றது அவருக்குப் பிடிக்கவில்லை.

அவர் உள்ளே சென்றதும் கணக்குப்பிள்ளை அப்பாவிடம் தலைப்பாகையையும் சட்டையையும் கழற்று என்று அதட்டினார். ஜமீந்தார் தலையை வெட்டிவிடவும் அஞ்சமாட்டார் என்றார். அச்சத்தாலும் அவமானத்தாலும் கூசிப்போனவராக அப்பா தலைப்பாகையையும் சட்டையையும் கழட்டினார். வெற்று மார்புடன் கைகட்டி நின்றார். அவரது உடலில் பிரம்படிக்காயங்கள் சிவந்து வரியோடின. ஜமீன்தார் மீண்டும் வெளியே வந்தபோது அப்பாவை வெறுப்புடன் பார்த்தார். ‘பாத்து மரியாதையா வேலைசெய்தா தலையோட வீடு போவே..என்னலே’ என்றபின் அவரது உடல்மேல் துப்பிவிட்டு சென்றார்.

எச்சில் வழியும் உடலுடன் அப்பா திரும்பி நடந்தார். அமிலம் மாதிரி அந்த எச்சில் உடலை எரித்தது. திரும்பி வந்து தன் அலுவலக அறையில் அமர்ந்து மனமுடைந்து அழுதார். தலையாரி சங்கரத் தேவர் மெல்லிய கிண்டலுடன் பார்த்துக்கொண்டு சென்றார். அன்று பகலும் இரவும் அப்படியே அந்த நாற்காலியிலேயே அப்பா அமர்ந்திருந்தார். அவர் மனம் முழுக்க உதிரி எண்ணங்களாக ஓடிக்கொண்டிருந்தன. மறுநாள் காலையில் மனம் கல் போல இறுகிப்போய் இருந்தது.

அப்பா அலுவலகத்திலேயே தங்கிக்கொண்டார். அலுவலக வளாகத்திலேயே குளமும் கக்கூஸும் இருந்தது. பின்பக்கம் ஒரு சாய்ப்பு இறக்கி அதில் அடுப்பு செய்துகொண்டார். பாத்திரங்களும் அரிசிபருப்பும் விறகும் வாங்கி அவரே சமைத்துக்கொண்டார். அவருக்கு உதவியாக பியூன் கந்தசாமி தினமும் வந்து செல்வான். தலையாரி தேவர் அவருக்கு தோன்றும்போது வருவார். அவருக்கு பெரும்பாலும் வேலை ஜமீனில்தான்.

ஒருமாதத்தில் அப்பா எல்லா கோப்புகளையும் வாசித்துவிட்டார். அதற்கு முன்னால் இருந்த அய்யர் ஜமீன்தார் சொன்னதை எல்லாம் செய்து எட்டுமாதம் சமாளித்துவிட்டு கையை காலை பிடித்து மாறுதல் வாங்கிப்போனபிறகு எந்த வேலையும் நடக்கவில்லை. அப்பா எல்லாவற்றையும் சரியாக பதிவு செய்ய ஆரம்பித்தார். ஆவணங்களின் மூலங்களை ஒப்பிட்டார். பின்னர் ஜமீன்தாருக்கு பெரிய ஒரு கடிதம் எழுதினார். உண்மையான கணக்குகளையும் ஆவணங்களையும் உடனே பதிவு செய்யவேண்டும் என்று சொன்னார். மோசடிகளையும் தவறுகளையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

நாலைந்துநாட்கள் கழித்து தலையாரித் தேவர் வந்து ஜமீன்கணக்குப்பிள்ளை அவரை வந்து பார்க்கும்படி சொல்லி அனுப்பியதாகச் சொன்னார். வரமுடியாது என்று அப்பா சொல்லிவிட்டார். இரண்டுநாள் கழித்து ஜமீன்தாரே பார்க்க விரும்புவதாக தகவல் வந்தது. அதற்கும் அப்பா மறுத்து விட்டார். ஜமீன் அலுவலகம் எப்படி நிலை குலைந்திருக்கும் என்று அவரால் ஊகிக்க முடிந்தது.

மறுநாள் தலையாரி சங்கரத்தேவர் வேல்கம்பு ஏந்திய இன்னொரு தேவனுடன் வந்து ‘வே பேசாம வந்திரும் கேட்டேரா, …நாங்க உம்ம கைய கால கட்டி இளுத்துக்கிட்டு போனா நல்லா இருக்காது’ என்றார் . கடும் கோபத்துடன் ’முடிஞ்சா கூட்டிட்டுப் போடா…டேய், சூரியன் அணையாத பிரிட்டிஷ் சர்க்காருக்கு அதுக்க வேலைக்காரன பாதுக்காக்குத சக்தி இருக்கா இல்லியாண்ணுட்டு பாத்திருவோம்’ என்றார் அப்பா.

தலையாரி திக்பிரமை பிடித்துவிட்டார். அந்த கோணத்தில் அவர் யோசித்ததே இல்லை. அங்கே இருக்கும் அந்த கரிய மனிதன் ஒரு மாபெரும் வெள்ளைசாம்ராஜ்யத்தின் பிரதிநிதி! பீரங்கிகள், தொப்பிகள், ரைஃபிள்கள், குதிரைகள், முத்திரையிட்ட காகிதங்கள்…அவர் மேலே பேசவில்லை. மீசையை கோதியபடி கொஞ்ச நேரம் நின்றுவிட்டு திரும்பிச் சென்றுவிட்டார். போகும்போது ஒருமுறை அப்பாவை திரும்பிப்பார்த்தார்.

மறுநாளே தலையாரி சங்கரத் தேவரை வேலையில் இருந்து தூக்கி ஆணையிட்டார் அப்பா. மதியம் அவர் லேசான சாராய மணத்துடன் கம்பும் கையுமாக மீசையை கோதியபடி ஆபீஸ் வந்தபோது பியூன் கந்தசாமி பழுப்பு நிறமான சர்க்கார்காகிதத்தை கையில் கொடுத்தான். ‘என்னலே?’ என்றார் அவர் பீதியுடன். அவருக்கு வாசிக்கத்தெரியாது. ‘உம்மை வேலைய விட்டு தூக்கிட்டாருவே நாடாரு..’ என்றான் கந்தசாமி. சங்கரத்தேவர் திகிலடித்து நின்றார். அவர் அப்படி ஒன்று நிகழ முடியும் என்றே எதிர்பார்க்கவில்லை. நேராக வந்து ‘என்னவே இது?’ என்று காகிதத்தை ஆட்டி காட்டினார். ‘கவர்மெண்டு பேப்பராக்கும். அப்டி ஆட்டப்பிடாது’ என்றார் அப்பா. தேவர் கை காற்றில் நின்றது. முகம் வெளிறியது. ‘இனிமே நீரு வரவேண்டாம்….அங்க ஜமீனிலேயே போயி வேல பாரும்’ அப்பா சொன்னார்

ஏதோ சொல்ல வந்து சொல்ல முடியாமல் பிரமைபிடித்தவராக சங்கரத்தேவர் கிளம்பிச் சென்றார். மறுநாள் அவரும் அவர் மனைவியும் வந்து அப்பாவிடம் அழுது மன்றாடினார்கள்.’இந்தப்பாவி குடிச்சு தீக்குறதுல மிச்சத்த வச்சு சோறும்கஞ்சியும் குடிச்சு கெடக்கேன் சாமீ…வயத்தில அடிக்காதீக’ என்று பிள்ளையை இடுப்பில் வைத்துக்கொண்டு வண்டிமலைச்சி கெஞ்சினாள். குழந்தை ஆர்வமாக வேடிக்கை பார்த்தது. அவள் இடுப்பை பிடித்துக்கொண்டு முழுந்ர்வாணமாக ஒரு பையன் மூக்கில் கைவிட்டுக்கொண்டு விழித்து பார்த்தான். தேவர் தூண் மறைவில் ஒளிந்து நின்று ஓரக்கண்ணால் பார்த்தார்.

’செரி, உனக்காக பாக்கேன். நான் ஆரு சோத்திலயும் மண்ண போடுதவன் இல்லே’ என்றார் அப்பா. தேவரிடம் ‘ஆனா இனிமே தினம் காலம்பற இங்க வரணும். நான் சொல்லுறப்பதான் போகணும்.  சொல்ற வேலைய செய்யணும். இந்த ஆப்பீஸுக்குள்ள என்ன நடந்தாலும் நீருதான் பொறுப்பு, கேட்டேரா?’ ‘செரி’ என்றார் அவர். ‘இனிமே என்னை சார்னுதான் கூப்பிடணும்.. இது சர்க்கார் உத்தரவு. அந்த தாளிலே எளுதியிருக்கு’. ‘செரி சார்’ என்றார் தேவர். எதிர்பாராதவகையில் படீரென்று ஒரு சல்யூட் அடித்தார்.

மறுநாள் கணக்குப்பிள்ளை தேவரைக்கூப்பிட்டு அப்பாவை ஏன் அழைத்துவரவில்லை என்று திட்டினார். தேவர் உறுதியாகச் சொல்லிவிட்டார். ‘இங்க பாருங்க. நான் சர்க்காருத்தியோகஸ்தனாக்கும். மேல சூரியனுக்கு கெட்டு போட்டு வச்சிருக்கப்பட்ட ராஜ்ஜியமாக்கும் எனக்குள்ளது. நீங்க வெளியிலே என்ன வேணுமானாலும் செய்யுங்க. ஆப்பிஸிலே சார் எனக்கு எஜமான், நான் வேலைக்காரன். அங்க சார் சொன்னா நான் சரசராண்ணுட்டு பத்து தலைய வெட்டி அடுக்கிப்போடுவேன். பின்ன எனக்க மேலே வருத்தப்படப்பிடாது’

‘லே அவன் சொன்னா என் தலய வெட்டுவியாலே?’என்றார் கணக்குப்பிள்ளை. ‘பின்ன? சார் சொன்னா வெட்டணுமின்னுல்லா சர்க்காரு சொல்லுகான். நீரு என்ன, பூஞ்ச பிள்ளவாள். சாரு சொன்னாருண்ணாக்க வந்து சமீன் தலைய வெட்டி கீழ வச்சிருவோம்லா? ஏது?’ என்றார் தேவர். கணக்குப்பிள்ளைக்கு கண் பிதுங்கிவிட்டது. ‘சூரியன மந்திரம்போட்டு வச்சிருக்கப்பட்ட ராஜ்ஜியமாக்கும். இந்தா கண்டீரா? நோட்டீஸு?’ என்று அப்பா அவருக்களித்த வேலைநீக்க கடிதத்தை நீட்டினார். பிள்ளைவாள் அதை கையில் வாங்க தைரியப்படவில்லை. அதைத் தேவரே வந்து அப்பாவிடம் சொன்னார்.

கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை இழுபறி நீடித்தது. மூன்றாவது நோட்டீஸ் போனபோது கணக்குப்பிள்ளை நோட்டீஸுடன் அவரே அப்பாவை பார்க்க வந்தார். வந்ததும் ’என்னவே?’ என்று சுபாவமாக உள்ளே நுழைய முயன்றவரை தேவர் தடுத்து ‘சாரு எளுதுகாருல்லாவே? அவரு விளிக்கட்டும் போலாம். இரியும்’ என்று வாசலில் நிறுத்திவிட்டார். கணக்குப்பிள்ளை வெளிறிவிட்டார். பிறகு உள்ளே வந்தபோது அவரால் வந்த வேகத்தில் பேசமுடியவில்லை. அப்பா கணக்குகளின் உள்ள சிக்கல்களைச் சொன்னபோது ‘இங்க இப்டியாக்கும். அது சர்க்காருக்கும் தெரியும்’ என்றார்

‘செரி. அப்ப நான் சர்க்காருக்கு எளுதுகேன்’ என்றார் அப்பா. ‘அப்டி எளுதுற வளமொறை இல்லல்லா’ என்றார் கணக்குப்பிள்ளை. ‘பின்ன? நான் எனக்க சோலிய செய்யணுமில்லா?’ கணக்குப்பிள்ளைக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ‘பெரியகருப்புத்தேவரு கலெக்டருக்க செல்லப்பிள்ளையாக்கும். ஒரு வார்த்தை சொன்னா துரை இங்க ஓடி வந்துபோடுவாரு…துரைக்கு வேட்டைக்குபோறதுக்கு கூட்டுகாரன் நம்ம தேவருல்லா?’ என்றார் பிள்ளைவாள். அப்பா ‘அது எனக்கெதுக்கு. நான் மேலே எளுதுகேன். கலெக்டர் அவருக்கு தோணினத செய்யட்டும்’ என்றார் ‘எனக்க சோலிய நான் செய்யுதேன்னு தேவரிட்ட சொல்லிடுங்க’

இவனுக்கு கிறுக்கா என்று பிள்ளைவாள் நினைத்தார். அனாவசியமாகச் சாக துணிகிறானே. எத்தனை பேரை கொன்று சத்தமில்லாமல் புதைத்திருக்கிறார்கள். ‘வே நாடாரே…உம்ம எனக்க மகன மாதிரி நினைச்சாக்கும் சொல்லுதேன். வேண்டாம் கேட்டேரா? லீவ போட்டுட்டு போவும். மாற்றம் வேங்கிட்டு நல்ல ஊராட்டு போயி ஒரு நல்ல நாடாச்சிய கெட்டி பிள்ளகுட்டியோட இரியும். இது கொலகாரப்பய ஊரு, வெட்டி புதைச்சிருவானுக. தேவருக்கு ஆளைக்கொல்லுகது ஒரு வெளையாட்டாக்கும்’ என்றார்

அப்பா திடமாக ‘வே, நான் எருக்குழியிலே இருந்து கேறி வந்தவனாக்கும். மரணத்தைக் காட்டிலும் மோசமான பலதையும் கண்டவன். இனி இந்த சென்மத்திலே நான் ஒண்ணுக்கும் பயப்படமாட்டேன் பாத்துக்கிடும். உமக்கெல்லாம் கணக்குவேலைண்ணா பல அர்த்தம் உண்டு. நீரு அதை வச்சு என்ன ஆட்டமும் ஆடலாம். நான் இப்பதான் கேறி வந்து பிடிச்சிருக்கேன். இந்தப்பிடி எனக்க பிடியில்லவே, எனக்கும் எனக்கு பின்னால வாற ஏழு தலைமுறைகளுக்கும் சேத்து உண்டான பிடியாக்கும். இப்பம் நான் இத விட்டா எட்டு தலைமுறைகளாக்கும் கீழ விழுகது, கேட்டேரா? சாவுறதுக்கு நாடாரு ரெடியாக்கும்னு போயி சொல்லும்..போவும் வே’ என்றார்

கணக்குப்பிள்ளை திகைத்து அமர்ந்திருந்துவிட்டு கிளம்பிச்சென்றார். தலையாரி தேவர் ‘சார் வெளியே போகாதீங்க. கண்ட எடத்திலே வெட்டுகதுக்கு வந்திருவானுக’ என்றார். அப்பா ஆபீசிலேயே இருந்தார். மறுநாள் காலையில் ஜமீந்தார் தடதவென்று குதிரையில் வந்து ஆபீஸ் முன் இறங்கினார். கூடவே வந்த வேட்டைக்காரர்கள் வெளியே நின்றார்கள். அவர் வெள்ளைக்கார வேட்டை உடையில் இருந்தார். அப்பா எழவில்லை. வரவேற்கவில்லை. கையில் நீளமான ரைஃபிளுடன் தடதடவென படி ஏறி வந்த ஜமீந்தார் அவரது அறை வாசலில் நின்று துப்பாக்கியை நீட்டினார். டிரிக்கரில் அவரது கை இருந்தது.

அப்பா அந்தக் கணத்தில் ஒருமுறை செத்துப் பிழைத்தார். பின்பு ‘சுடுறதுன்னா சுடலாம். பிரிட்டிஷ் அதிகாரியா பிரிட்டிஷ் ஆபீஸிலே சாவுறதுக்கு ஒரு யோகம் வேணும்லா?’ என்றார். ஜமீந்தார் ரைஃபிளை தாழ்த்திவிட்டார். ‘சுடும் வே…நீரு பெரிய புடுங்கில்லா….கொல்லவும் கொள்ளையடிக்கவும் லைசன்ஸ் உள்ளவருல்லா…சுட்டுட்டு போவும். நான் செத்தா அது அப்டி தீராது வே . குளவிக்கூட்டிலயாக்கும் நீரு கைய வைக்குதீரு. கெளம்பி வருவோம் வே. அலையலையா பெத்து பெறந்து வந்துகிட்டே இருப்போம். எம்பிடு பேர நீரு சுடுவீருண்ணு பாக்குதோம்’ என்று அப்பா சொன்னார். அந்த நேரத்தில் அந்த அறையில் அவர் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் பல்லாயிரம்பேர் கேட்டுக்கொண்டிருப்பது போல அப்போது அவருக்குத் தோன்றியது

அந்த தைரியத்தை ஜமீந்தார் எதிர்பார்க்கவில்லை. அவரால் எதையும் சிந்திக்க முடியவில்லை. அவரது கைகள் நடுங்கின, துப்பாக்கியை தழைத்துக்கொண்டார். அந்த தயக்கத்தை அப்பா பயன்படுத்திக்கொண்டார். ‘நீரு சுட்டுட்டு தப்பிடலாம்னு நினைக்கேரா? நான் கிஸ்தி பிரிக்கவேண்டிய ஆப்பீஸராக்கும். நீரு நினைக்குதது மாதிரி ஒரு கலெக்டர் போறபோக்கிலே இந்த கேஸ மூடிர முடியாது. பிடிச்சு தூக்கில ஏத்திப்போடுவான் வெள்ளக்காரன். உம்மை பிடிச்சு தூக்கிலே போட்டுட்டு ஜமீனை வேற ஆளுக்கு குடுக்கதானா உம்ம பங்காளிகள் வந்து நிப்பானுக சாட்சி சொல்லுகதுக்கு. தெர்யுமா?’ என்றார்

ஜமீந்தாரின் முகம் மெல்ல நிதானம் அடைந்தது. கண்கள் தந்திரத்துடன் இடுங்கின. ‘டேய் நீ புத்தியுள்ள நரி…ஆனா நாங்க இந்த புத்திய பத்து தலமொறையா வச்சு வெளையாடுதவனுக. பாப்போம். இந்த வளாகத்திலதானே நீ ஆப்பீஸரு? இத விட்டு வெளிய வா. உன்னைய ஆனை மிதிச்சு கொல்லும். வழிய போற தேவன் வெட்டுவான். என்னல செய்வே? பாப்போம்..’ என்றபின் தடதடவென இறங்கிசென்று குதிரையில் ஏறி குளம்புகள் சேற்றை மிதித்து தெறிக்க திரும்பிச் சென்றார்

அப்பா அந்த அலுவலகத்தை விட்டு வெளியே செல்லவே இல்லை. அவர் வெளியே சென்றால் அவரைக் கொல்ல எல்லா இடத்திலும் ஆட்கள் பதுங்கி இருந்தார்கள். அதை தேவர் வந்து சொன்னார். பியுன் கந்தசாமி லீவு போட்டுக்கொண்டான். ஆனால் சங்கரத்தேவர் வேல்கம்புடன் அலுவலகத்திலேயே தங்கி விட்டார். அப்பா சமைத்ததை அவரும் சாப்பிட்டார். இரவில் திண்ணையில் சாக்கைப் போர்த்திக்கொண்டு ஒருகணம்கூட கண்ணயராமல் காவலிருந்தார். பகலில் ஆபீஸ் திண்ணையில் தூங்கினார். ஒரு ஓணான் ஓடும் ஒலி கேட்டல்கூட வேல்கம்புடன் எழுந்தார்.

இருபத்தேழு நாள் அந்த கெடுபிடி நீடித்தது. அப்பா ஆபீஸ் வளாகத்தைவிட்டே வெளியே வரவில்லை. தேவர் கையில் வேல்கம்புடன் தபால் அலுவலகம் சென்று கடிதங்களை கொண்டுவந்து திருப்பி கொண்டு சென்றார். தேவையான மளிகை வாங்கி வந்தார். மடியில் ’சர்க்கார் கடுதாசி’யை ஆதாரமாக வைத்திருந்ததனால் தலை நிமிர்ந்துதான் சென்றார்.

நாட்கணக்காக அப்பா காத்திருந்தார். அவர் முன்னால் கண்ணுக்குத் தெரியாமல் மரணம் பதுங்கி காத்திருந்தது.அப்போதுதான் ஒருநாள் இரவில் அப்பாவுக்கு ஒரு கனவு வந்தது. அவரது டீக்கடையில் நேசமணி வந்து அமர்ந்து டீ குடிப்பதாக. ‘என்னலே மக்கா?’ என்று கோட்டை காலரை தூக்கி பின்னால் விட்டுகொண்டு அலட்சியமான உரத்த குரலில் அவர் கேட்டார். அப்பா விழித்துக்கொண்டார். உடனடியாக நடந்தவற்றை விரிவாக எழுதி நேசமணிக்கு ஒரு கடிதம்போட்டார்.

நேசமணி அந்தகடிதத்தை நெல்லை கலெக்டர் வரைக்கும் கொண்டு செல்லக்கூடும், ஒருவேளை போலீஸ் உதவி வரக்கூடும் என்றுதான் அப்பா எதிர்பார்த்தார். ஆனால் ஐந்தாவது நாள் தென்காசியில் இருந்து இலஞ்சி நோக்கி எழுபது எண்பது பேர் கொண்ட ஒரு கூட்டம் அரிவாள்களும் வேல்கம்புகளுமாக திரண்டு வந்தது. அதன் முன்னால் ஒரு யானை. ’ காங்கிரஸுக்கு ஜே! மகாத்மாகாந்திக்கு ஜே, பண்டிட்டு நேருவுக்கு ஜே! சுபாஷ் சந்திரபோசுக்கு ஜே’ என்று பெரும் கூச்சல்

அப்பா மதியம் ஆபீஸில் இருந்தபோது சத்தம் கேட்டு வெளியே வந்தார். தேவர் அரிவாளுடன் வாசலில் சென்று நின்று ’ உள்ள போங்க சார்…என்னைய மீறி ஒருத்தனும் உள்ள வந்துகிடமாட்டான்’ என்றார். அப்பா முதலில் வாசலை மூடி பெரிய பாறை முளைத்தது போல நின்ற கொம்பன்யானையைத்தான் பார்த்தார். ஒன்றும் புரியவில்லை. பின்னர்தான் முன்னால் வந்த நேசமணியை பார்த்தார்.

‘வே தேவரே, இது எனக்க நேசமணி வக்கீலாக்கும்’ என்றார் அப்பா. ‘ஆரு?’ என்றார் தேவர். ’எங்க தலைவரு…’ என்று அப்பா வெளியே சென்றார். பாய்ந்து சென்ற அவரை நேசமணி அள்ளி மார்போடு அணைத்துக்கொண்டார் . ’ஆணுக்குப் பெறந்தவன்ல நீயி…நிண்ணு காட்டினியே.. லே, நிண்ணு காட்டணும்ல…எங்கயும் நாம நிண்ணு காட்டணும்…. நீ வெளிய எறங்கினா எவன் வெட்டுகான் பாப்பம்…ஏறுல ஆனை மேலே’ என்றார்.

அப்பா ‘அய்யோ’ என்றார் ‘லே,நானாக்கும் சொல்லுகது. ஏறு ஆனை மேலே’ அவர் பாகனுக்கு கை காட்ட யானை குனிந்து முன்காலை காட்டியது. அதன் காதைப்பற்றிக்கொண்டு காலில் மிதித்து ஏறி மத்தகத்தின் மேல் அமர்ந்தார் அப்பா. பெரியதோர் பாறை மேல் அமர்ந்துகொண்டது போல இருந்தது.

பாகன் சத்தம் கொடுத்ததும் யானை எழுந்தது. அப்பா மேலே சென்றார். அந்த அசைவை அவர் வாழ்நாள் முழுக்க ஆவேசமாக வர்ணிப்பதுண்டு. எத்தனை முறை எத்தனை எத்தனை சொற்களில் அதைச் சொல்லியிருக்கிறார். அதிகம் போனால் மூன்றடி உயரம் அந்த மேலெழும் அசைவு இருந்திருக்கும். ஆனால் அது நெடுநேரம் அவரது மனதில் நிகழ்ந்தது.

அவர் சென்றுகொண்டே இருந்தார். மண் அவரில் இருந்து கீழே இறங்கிச்சென்றது. அலுவலகம் அதன் ஓட்டுக்கூரையுடன் கீழிறங்கியது. மரக்கிளைகள் கீழே சென்றன. சாலையும் மனிதர்களும் கீழே சென்றார்கள். ஒளியுடன் வானம் அவரை நோக்கி இறங்கி வந்தது. அவரைச்சுற்றி பிரகாசம் நிறைந்திருந்தது. வானத்தின் ஒளி. மேகங்களில் நிறைந்து ததும்பும் ஒளி.

யானை நடந்தபோது அவரே யானையாகி அசைவதை உணர்ந்தார் அப்பா. ‘ஆனைன்னா என்னண்ணு அதுக்கு மேலே கேறினாத்தான்லெ தெரியும். ஆனைன்னா சக்தியாக்கும் கேட்டியா? ஒரு குண்டூசிய வச்சு கோட்டைய உடைச்சிரலாம்னுட்டு தோணிரும் அப்ப…ஆனைக்க நடையிருக்கே. அதாக்கும் நடை…அதுக்க கெம்பீரம் வேற கேட்டியா?’ அப்பாவால் அதை சொல்லி சொல்லி முடிக்க முடியாது. அப்பா அசைந்து அசைந்து வானில் நடந்து சென்றார்.

அப்பாவை யானைமேல் வைத்துக்கொண்டு இலஞ்சி முழுக்க தெருத்தெருவாக கோஷமிட்டுச் சென்றது ஊர்வலம். இருபக்கமும் வந்து நின்று ஆட்கள் பிரமித்துப்போய் பார்த்து நின்றார்கள். வீடுகளின் சன்னல்கள் முழுக்க பெண்முகங்கள் பிதுங்கின. கோயில்முன்னால் சென்று நின்று கூச்சலிட்டார்கள். அப்படியே சுற்றிக்கொண்டு சாவடி முன்னால் சென்று நின்றார்கள். அப்பாவைக்கொல்ல வேல்கம்பும், கவணும், அரிவாளுமாக அலைந்த ஜமீன் ஆட்கள் எல்லாம் பீதிபடிந்த கண்களுடன் பார்த்து நின்றார்கள்

கூட்டம் அப்படியே ஜமீன் பங்களா நோக்கிச் சென்றது. அவர்கள் வருவதைக் கண்ட ஜமீன் வளாகத்தின் கேட்கதவுகள் மூடப்பட்டன. ‘உடைச்சு போலே உள்ள’ என்று நேசமணி கத்தினார். யானை முன்னங்காலை தூக்கி ஓர் உதைவிட்டதும் கேட் திறந்து மடேலென சரிந்தது. நேராக ஜமீன் பங்களாவின் முற்றத்தில் யானை சென்று நின்றது. மிருகசாலைக்குள் கூண்டுக்குள் கரடிகளும் சிறுத்தையும் யானையின் வீச்சம் கேட்டு பயந்து பரிதவித்து சுற்றிவந்தன. காட்டுபூனைகள் மூலைகளில் தாவிப்பதுங்கி அஞ்சி சீறின.

அப்பா ஜமீன் பங்களாவின் கூரை விளிம்புக்கு மேல் இருந்தார். அந்த ஓட்டுக்கூரையை அவர் தன் காலால் எத்தினார். கூட்டம் ஆர்ப்பரித்து கூச்சலிட்டது.அரைமணிநேரம் அங்கேயே நின்று ’ காங்கிரஸுக்கு ஜே! மகாத்மாகாந்திக்கு ஜே, பண்டிட்டு நேருவுக்கு ஜே! சுபாஷ் சந்திரபோசுக்கு ஜே! காமராஜுக்கு ஜே! நேசமணி ராசாவுக்கு ஜே!’ என்று கோஷமிட்டபின் அதேபோல யானையில் திரும்பிசென்றார்கள்.

அப்பா ஆபீஸ் வாசலில் இறக்கி விடப்பட்டார். அவர் தன் உடலில் யானையின் அசைவுகள் மிச்சமிருப்பது போல உணர்ந்தார். இரு தொடைகளும் கடுத்து உளைந்தன. காலை அகட்டி நடந்தபோது மிதந்து செல்வது போல இருந்தது. ‘’ஏலே, அண்ணைக்கு எனக்க நடை மாறிச்சுலே. அதுக்கு பின்னால எப்பமும் எனக்க நடையிலே அந்த ஆட்டம் உண்டு பாத்துக்க’ என்று அப்பா சொல்வதுண்டு. அப்பாவை ஆபீஸில் விட்டு விட்டு நேசம்ணியும் குழுவும் கிளம்பிச் சென்றார்கள். ‘இனிமே ஒரு பய உனக்க மேலே கைய வைக்க மாட்டன் பாத்துக்க.. தைரியமாட்டு இரி’ என்று சொல்லி நேசமணி விடைபெற்றார்.

ஆமாம், அதன்பின்னால் அப்பா ஏழுவருடம் இலஞ்சியில் வேலைபார்த்தார். ஜமீந்தாரின் நிதி முறைகேடுகளை அறிக்கையிட்டார். நிலங்கள் மறு அளவை செய்யப்பட்டு உரியவர்களுக்கு அளிக்கப்பட்டன. ஒருகட்டத்தில் ஜமீந்தாரின் பங்காளிகளே அப்பாவுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்தார்கள். அப்பா சாலையில் நடந்துசென்றால் எதிரே வருபவர்கள் ஓரமாக விலகி நின்று வணக்கம் சொல்வார்கள். அவர்கள் எப்போதுமே அவருக்கு ஒரு யானைபோகுமளவுக்கு இடம் விட்டார்கள்.

‘ஏல, அவனுக கண்ணுக்கு நான் ஆனைமேலயாக்கும் போயிட்டிருந்தேன்…’என்றார் அப்பா. ’ஏன்னா எனக்க மனசிலே எப்பவும் ஆனை உண்டு. எனக்க நடையிலே ஆனை உண்டு பாத்துக்க’ அவர் பேருடன் யானை ஒட்டிக்கொண்டது. ஆனைக்கறுத்தான்நாடார் என்றுதான் அவரே கடிதங்களில் தன்னை எழுதிக்கொண்டார்.’ஆனைமேல போறவன் குனியமுடியாது. வழிவிட்டு ஒதுங்கமுடியாது, கேட்டியாலே?’

இலஞ்சியில் வேலைபார்க்கும்போதுதான் அப்பா திருமணம் செய்துகொண்டார். நான் பிறந்தேன். எனக்கு பெயரிடும்போது அப்பாவுக்கு அந்த கணம் சட்டென்று தோன்றியது அந்தப்பெயர் ‘வணங்கான்’. அம்மா ‘அது என்னது? ஒருமாதிரி பெயரா இருக்கு’ என்றாள். ‘சும்மா கெட..அவனுக்க பேரு அதாக்கும் ,வணங்கான்நாடார்.’ என்றார் அப்பா. எனக்கு என் பிறப்பிலேயே நான் மீறமுடியாத ஆணை ஒன்றை அளித்தார்.

எனக்கு ஏழுமாதம் இருக்கும்போது என்னை எடுத்துக்கொண்டு பள்ளியாடியில் நேசமணியை பார்க்கச்சென்றார் அப்பா. நேசமணி கூடத்தில் செய்தித்தாள் படித்துக் கொண்டிருதார். அப்பாவுப் பெருவட்டரின் பெரிய வீட்டில் நுழைந்து முன்கூடத்தில் இருந்த அவரது புகழ்பெற்ற மகனின் முன்னால் நின்றார். அவர் ‘இரில’ என்றதும் நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்துகொண்டு என்னை அவர் கையில் கொடுத்தார். ‘என்னவாக்கும் பேரு?’ என்றர் நேசமணி. அப்பா சொன்னார். நேசமணி புன்னகைசெய்தார்.

முந்தைய கட்டுரைவணங்கான் [சிறுகதை] – 1
அடுத்த கட்டுரைசரஸ்வதி விஜயபாஸ்கரன்