இசை ஒருகடிதம்

அன்புள்ள ஜெ,

தமிழிசை குறித்த பதிவுகளைப் படித்த பிறகு எனக்கு இவ்வாறு தோன்றுகிறது:

இனிமை தரும் இசையை ரசிப்பதற்கு மொழி எவ்வாறு ஒரு தடையாக இருக்க முடியும்? நாமறிந்த மொழியில் பாடப்படும் எந்த வகையான இசையையும் நாம் ரசித்துக் கேட்கிறோமா? இசையில் நம்மை முதலில் கவர்வது மெட்டுதானே? அது எந்த மொழியில் இருந்தால் என்ன? என்னை மிகவும் கவரும் எந்தப் பாடலையும், தெலுங்கோ, கன்னடமோ, மலையாளமோ, சமஸ்க்ருதமோ எந்த மொழியில் இருந்தாலும் அந்த சொற்களை கவனித்து (முடிந்தால் அர்த்தம் தெரிந்து கொண்டு) முழுமையாக நுகர்ந்தின்புறவே விழைவேன். இசையோடு மொழி இணையும் அழகை ரசிக்கவே முயல்வேன். மானமு லேதா என்ற தியாகய்யர் பாடலைப் புரிந்து கொள்ள சிறிது முயன்றாலே போதும். காருண்ய சாகரம் என்று நீலவண்ணனை தீட்சிதர் வர்ணிப்பதை ரசிக்க சமஸ்க்ருதம் தெரிய வேண்டுமா என்ன? தீட்சிதரின் நவாவர்ணக் கீர்த்தனைகள் போன்ற சிலவற்றிற்கே இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் தேவை. தமிழ் மொழி பெயர்ப்போடு கூடிய கீர்த்தனை நூல்கள் உள்ளனவே! இசையில் ஆர்வம் இருந்தால் இவற்றின் துணையோடு நமக்குப் பிடித்த பாடலை மேலும் ஆழ்ந்து ரசிக்கலாமே!

மொழியைப் போற்றிப் பாதுகாப்பதையும் இசை நுகர்வையும் ஏன் இணைத்துப் பார்க்கிறோம் நாம்?

இசையே ஒரு மொழி இல்லையா?

எனக்கு (தாய்)மொழிப்பற்றில்லையோ என்னவோ!

அன்புடன்
ஸ்ரீனிவாசன்

அன்புள்ள ஸ்ரீனிவாசன்

மொழி, இசை இரண்டுமே பண்பாட்டின் இரு கூறுகள். அவற்றை அத்தனை எளிதாக பிரிக்க முடியாது

ஜெ

முந்தைய கட்டுரைஅறம் [சிறுகதை]
அடுத்த கட்டுரைநான்காவது கொலை !!! – 10