புளிய மரத்தின் கதை-கடிதம்

அன்புள்ள ஜெ,

எப்படி இருக்கிறீங்க?

ஒரு புளியமரத்தின் கதை படித்தேன். படித்து மூன்று வாரங்களுக்கு மேலிருக்கும். என் நினைவில் இப்போது எஞ்சியவை குறித்து…

மிக மிக கவனமாக எழுதப்பட்ட நாவல். கர்ணம் தப்பினால் மரணம். மதக் கலவரம் மூளும், நாவலில். தவிர்த்திருக்கின்றார்.!!!

வரலாற்றின் இருள் படிந்த பக்கங்களை தன் கற்பனையால் துளையிட்டு வெளிக்கொண்டுவருவது நன்றாகத்தானிருக்கின்றது. குறிப்பாக குளத்தை மூடும் காரணம். ஒரு நாவலின் நம்பகத்தன்மை என்பது ஆசிரியர் வாசகனை நம்பவைக்கும் தன் எழுத்தின் வலிமையைப் பொறுத்தது. ஆனால் பொதுவாக வரலாற்றை நாவலில் திணிக்கும்போது, அதன் நம்பகத்தன்மை என்ன? அது வரலாறா? அல்லது எழுத்தின் வலிமையா?

கதை சொல்லி, கதை சொல்லும் விதத்தை மூன்றாக பிரிக்கின்றான். ஒன்று கதையை இன்னொருவரை சொல்லவைப்பது; தனது காலகட்டத்திற்கு முந்தயவற்றை. மற்றவை, தான் கேட்டதும், பார்த்ததும். எனவே கதைசொல்லியும் இதில் ஒரு கதாபாத்திரம்தான். கதையில் வரும்
அனைத்து கதாபாத்திரங்களுக்கும் கடைசியில் வீழ்ச்சிதான். மனிதனால் புளியமரமே பட்டுப்போகின்றது அப்புறமென்ன மனிதன். ஆனால் உற்று நோக்கினால், கதைசொல்லி மட்டும் தப்பிவிட்டார்!

என் அப்பா சொல்லி கேட்டிருக்கேன்: “பண்டு நூறு ரூவா இருக்கிதவன் பணக்காரன்.” அதாவது நாற்பதுகளிலும், ஐம்பதுகளிலும். அதே காலகட்டத்தில் நடந்த கதையிது. நிஜமாகவே இரண்டாயிரம் ரூபா கொடுத்து அந்த மின்னொளி பெயர்ப்பலகை வாங்கப்பட்டதா? இதன் நம்பகத்தன்மை என்ன? இலக்கியத்தில் நம்பகத்தன்மை முக்கியம் இல்லையா?

கதைசொல்லிக்கு உரிமை இருந்தும் அவர் எந்த தனிமனிதனின் (கதாபாத்திரங்களின்) அந்தரங்கங்களில் ரொம்பவும் ஊடுருவவில்லை. அனைத்தும் வெளிப்பார்வையிலிருந்து சொல்லப்படுகின்றது. இதுவும் வாசகனை நம்பவைக்கும் முயற்சிதானா?

நாவல் மிக வேகம். நாவலில் கடைசியாக எஞ்சுவது புளியமரத்தால் ஏற்படும் சமூக மாற்றம். அதையும் மிஞ்சுவது கடலை மிட்டாய் தாத்தாவின் விஸ்வரூபம். பதவி ஆசை இல்லாத மனிதன் இருப்பானா என்ன?

இது நவீன தமிழ் இலக்கியத்தின் மயில் கல்லா? எனக்குத்தெரியவில்லை. காரணம் எனக்கு அதற்கு முந்தய இலக்கியத்தின் மீது ரொம்ப பரிச்சயமில்லை. மன்னிக்கவும்.

நீங்கள் இதுகுறித்து எழுதியிருந்தால் அந்த இணைப்பைக் கொடுங்கள். வாசிப்பின் அடுத்த கட்டத்திர்க்குச் செல்ல உதவும்.

பிகு: இது உங்கள் நாவல் இல்லை என்று தெரியும்

அன்புடன்,
கிறிஸ்.

அன்புள்ள கிறிஸ்

நீங்கள் இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்திருக்கிறீர்கள். புளியமரத்தின்கதை ஒரு நல்ல தொடக்கம்.

ஒவ்வொரு நாவலுக்கும் ஒரு மொழிநடை ஒரு வடிவம் உள்ளது. புளியமரத்தின் கதை சமூக விமர்சன நோக்கு கொண்டது. உளவியல் மோதல்கள் அதன் பேசுபொருள் அல்ல. ஆகவே அது மனதுக்குள் செல்லவில்லை

அது சமூக மாற்றத்தின் இழப்பையும் வெற்றியையும் பற்றி பேசும் முக்கியுமான தமிழ் நாவல். அந்த மாற்றத்தை அது குறியீடுகள் வழியாக பேசுகிறது. புளியமரம் மாற்றத்துக்கு நாம் கொடுக்கும் இழப்புகளின் குறியீடு. எதுவாகவும் இருக்கலாம்

அது மூன்று காலகட்டங்களைப்பற்றி பேசுகிறது. தாமோதர ஆசான் பேசும் தொன்மங்களின் காலகட்டம். அதன்பின் வரலாற்றுக்காலகட்டம் சுதந்திரப்போர் வரை நீள்கிறது. அதன்பின்னர் சுதந்திர இந்தியாவின் சமகாலம். தேர்தல் அரசியல், வணிகப்போட்டி …

அவ்வகையில் அது இந்தியவரலாற்றையே குறியீடுகள் மூலம் சொல்ல முயலும் நாவல்

ஜெ

முந்தைய கட்டுரைநான்காவது கொலை!!!- 3
அடுத்த கட்டுரைநான்காவது கொலை !!! -4