மருதையப்பாட்டா.

ம.க.இ.கவின் தோழர் மருதையனின் பேச்சை புகழ்பெற்ற ’வசவு’ இணையதளத்தில் வாசித்தேன். [வினவு என்றும் பாடம்]. வாசித்துமுடித்தபோது ஏதோ ஒரு செவல்காட்டில் கிராமத்துப் பெரிசு ஒன்றுடன் அமர்ந்து சிலமணிநேரம் அவரது அதிநீளமான தன்னுரையை கேட்ட நிறைவு உருவானது.

http://www.vinavu.com/2010/12/29/on-reading/

பெரிசு பசங்களிடம் வாசிக்கச் சொல்கிறது. வசைபாடுவதற்கு வாசிப்பு எதற்கு என்ற கொள்கை கொண்ட பசங்கள் அதை கேட்பதாக தெரியவில்லை. ஆகவே பெரிசு மனமுடைந்து அந்தக்காலத்திலே இப்படியா என்கிறது. சோவியத் ருஷ்யா புத்தகங்களை எல்லாம் காலணாவுக்கு வாசிப்போம் தெரியுமா என்கிறது.

மற்றபடி , எல்லாமே பழைய பாட்டுதான்.

’நாடு சும்மா கிடந்தாலும் கிடக்கும்
பாழும் நாகரீகம் ஓடிவந்து கெடுக்கும்’

என்ற வகையில் பெரிசு சொல்லிக் கொண்டே போகிறது. நாடு கெட்டு குட்டிச் சுவராகிறது. பிள்ளைகள் டியூஷன் படிக்கின்றன. கம்ப்யூட்டர் வேலைக்கு போய் சம்பாதிக்கின்றன. சாயங்காலம் கிளப்புக்கு போனால் ஒரு எஸ் எம் எஸ் கூட பெற்றோருக்கு அனுப்புவதில்லை. எல்லாம் தினமலர்லே டாக்டர் ஷாலினி புட்டுப்புட்டு வச்சிருக்காங்க. இதையெல்லாம் தீர்க்க புரட்சி வந்து சூத்தாம்பட்டையிலே போட்டால்தான் தெரியும்…

‘தீப்பெட்டி பொட்டி ஒட்டி
பொழைச்சு கெடந்ததெல்லாம் அப்போ –

நாம கம்யூட்டர் பொட்டிதட்டி
பாழாப்போறதெல்லாம் இப்ப -எப்ப?’

என்று அவர் பாடும் போது கேட்க நன்றாகத்தான் இருக்கிறது.

ஆனால் பெரிசுக்கே பெரிதாக ஏதும் வாசிப்பு இல்லை என்றுதான் தெரிகிறது. மேலும் சமூகத்தின் வளர்சிதை மாற்றம் பற்றி மார்க்ஸியம் முரணியக்க இயங்கியல் நோக்கில் சொன்னவற்றை எல்லாம் சொல்லப்போனால் வசவு தோழர்கள் பின்பக்க மணலை தட்டிக்கொண்டு எழுந்து சென்று விடுவார்கள். ஆகவே பொதுவாக மனசுக்குப்பட்டதைச் சொல்கிறது

சமீப காலமாக பெரிசு சிற்றிதழ்களைக்கூட வாசிப்பதில்லை என்றும் தெரிகிறது. இலக்கியம் என்றால் ராணிமுத்து வாசிப்பு என்று நினைத்துக்கொண்டிருக்கிறார். என்னைப்பற்றியும் நாலு வார்த்தை சொல்லியிருக்கிறார். வரலாற்றில் இடமிருக்கிறது என இறும்பூது எய்தினேன். ஆனால் பெரிசிடம் என்னைப்பற்றி சொன்னவர்கள் நான் பேசுவதை தப்பாகச் சொல்லியிருக்கிறார்கள். பெரியவர்களை இப்படியா குழப்புவது? என்ன இருந்தாலும் புரட்சி நியாயம் என்று ஒன்று இருக்கத்தானே செய்கிறது?

மகஇக என்ற மாபெரும் மக்கள் அமைப்பு எளியேனைப்பற்றி ஒரு நூல் வெளியிட்டு கௌரவித்திருக்கிறது. அதை வாங்கி வாசித்து என்னைப்பற்றி தெரிந்துகொண்டு என்னிடம் சொல்லவேண்டும் என நண்பர்களிடம் கோருகிறேன்

முந்தைய கட்டுரைகண்டவை, கவலைப்பட்டவை
அடுத்த கட்டுரைஅசோகமித்திரனுக்கு சாரல் விருது