அலைவரிசை ஊழல், அருந்ததி ராய் -ஒருகடிதம்

அன்புள்ள ஜெயமோகனுக்கு

நான் உங்களுடைய நீண்ட நாள் வாசகன். முதல் முறையாக மின்னஞ்சல் அனுப்புகிறேன்.

அலைவரிசை ஊழல் பற்றிய உங்கள் கட்டுரையும் மாவோயிசம் குறித்து வந்த மூன்று கடிதங்களுக்கு அளித்த எதிர்வினையும் மிக அருமை. அலைவரிசை ஊழல் கட்டுரையை படிக்க ஆரம்பிக்கும்போது என்னடா மனிதர் ஊழல் எல்லாம் இருக்க வேண்டிய விஷயம் தான் என்று சொல்ல வருகிறாரோ என்று தோன்றியது. ஆனால் அந்த கட்டுரை உங்கள் இணைய தளத்துக்கு வாசகர்கள் மீண்டும் மீண்டும் வருவதற்கான காரணங்களின் உதாரணம் என்று சொல்லலாம். வரலாறு, கலாச்சாரம், பொருளாதாரம் கலந்த பரந்து பட்ட பார்வையுடன் தெளிவாக முன்வைக்கப்பட்ட கருத்துக்களை உள்ளடக்கியது.

அந்த கட்டுரையை படித்தபோது ஆப்பிரிக்காவின் கபான் (gabon) நாட்டின் சர்வாதிகாரியாக நாற்பது ஆண்டுகளுக்கும் மேல் அந்த நாட்டை சுரண்டிய ஓமர் பாங்கோ (omar bongo) நினைவுக்கு வந்தார். அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை கேட்டு ‘கடுங்கோபம்’ கொண்டு “ஊழல், நேபாடிசம் (nepotism) போன்றவை ஆப்பிரிக்க வார்த்தைகள் அல்ல, அவற்றுக்கு இங்கே எந்த அர்த்தமும் இல்லை, இந்த அர்த்தமற்ற குற்றங்களை என் மீது சாட்டாதீர்கள்” என்று சொன்னார். எனக்கோ திருட்டுத்தனம் பண்றதுக்கு என்னவெல்லாம் சாக்குபோக்கு சொல்றாம் பார் என்று தோன்றியது. உங்கள் கட்டுரையை படிக்கும் போது திருவிதாங்கூர் மன்னரை போலத்தான் பாங்கோவின் பார்வையும் இருந்திருக்கிறது என்று புரிகிறது.

ஐரோப்பிய அரசு முறை பற்றி சில வரிகளில் எளிமையாக தெளிவாக சொல்லியிருந்தீர்கள். நீங்கள் சொன்னது போல இப்போதைக்கு இது தான் சிறந்தது என்று தான் தோன்றுகிறது. ஆனால் பெரிய மக்கள் நல திட்டங்களில், அதுவும் குறிப்பாக பென்ஷன், இலவச மருத்துவம் போன்ற மேலும் மேலும் முதலீடு தேவைபடுகிற விஷயங்களில் இறங்குவதன் கிட்டத்தட்ட தவிர்க்க முடியாத பக்க விளைவாக சில பல வருடங்களில் அரசாங்கங்கள் பெரும் கடன் சுமையில் மூழ்கி விடுகின்றன. ஊழல் குறைவாக இருக்கும் நாடுகளில் கூட இது தான் நடக்கிறது, இதற்கு விதிவிலக்குகள் அபூர்வம் – டென்மார்க் ஒரு உதாரண விதிவிலக்கு என்று நினைக்கிறேன். இது பற்றி உங்கள் கருத்துக்களை அறிந்து கொள்ள ஆவல்.

அமெரிக்காவிலோ வரப்போகும் கடன் சுமையை காரணம் காட்டியே மக்கள் நல திட்டங்கள் கடுமையாக எதிர்க்கப்படுகின்றன. அதிலும் சமீபத்தில் வலு பெற்று வரும் ‘டீ பார்ட்டி’ (tea party) அமைப்புகள் இதை தீவிரமாக செய்து வருகின்றன. இந்த அளவுக்கு அரசின் பொருளாதார நன்னலத்தில் அக்கறை கொண்ட சாதாரண மக்கள் வேறு எந்த நாட்டிலும் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. பொதுவாக போராட்டங்கள் எல்லாம் மக்களுக்கு ஏதாவது வேண்டும் என்று கேட்பவையாகதான் இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக அரசின் கடனற்ற பொருளாதார வலுவை முன்வைக்கும் அமைப்புகளுக்கு இந்த அளவுக்கு மக்களிடம் வரவேற்பு இருப்பது அமெரிக்காவில் தான் என்று நினைக்கிறேன்.

டீ பார்ட்டி அமைப்புகளை கொஞ்சம் அலசி ஆராய்ந்தால் இவற்றின் பின்னே பெரும் பணக்காரர்கள் இருப்பது தெரிய வருகிறது தான் – உதாரணம் கோக் (koch) சகோதரர்கள். ஆனாலும் சாதாரண மக்களிடையே கூட அரசின் பொருளாதார நன்னலத்தில் ஆர்வம் இருக்கிறது. இதற்கு சிறுவயதில் இருந்தே உலகத்திலேயே ‘தலை சிறந்த’ அரசமைப்பு முறை நம்முடையது தான் என்று அழுத்தமாக சொல்லி வளர்க்கும் பள்ளி மற்றும் சமுதாய அமைப்பு ஒரு முக்கியமான காரணம் என்று நினைக்கிறேன். மக்கள் நலத்தையும் அரசின் பொருளாதார ரீதியான நலத்தையும் ஒருசேர கவனத்தில் கொள்ளும் சமூக அமைப்பு முறைகள் குறித்து உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது எழுதுங்களேன்.

உங்களுடைய வாரத்துக்கு 2 பதிவு என்ற அறிவிப்பு பார்த்தேன். நீங்கள் சொல்வது உண்மை தான். புதிதாக பதிவு ஏதும் இல்லாவிட்டால் உடனே தளத்தை விட்டு போகாமல் பெரும்பாலும் பழைய கட்டுரைகளை வாசிக்கிறேன். உங்களுடைய மற்ற எழுத்து வேலைகளின் முக்கியத்துவம் கண்டிப்பாக புரிகிறது, குறிப்பாக அசோகவனம். அது போக நேரம் கிடைத்தால் எழுதுங்கள். நான் இது போன்ற துறைகளில் நிபுணன் அல்ல, பெரிதாக ஆர்வம் இல்லை என்றும் சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் பெரும்பாலும் இந்த துறைகளின் ‘அங்கீகரிக்கப்பட்ட நிபுணர்கள்’ எழுதும் கட்டுரைகளை விட உங்களுடைய கட்டுரைகள் ஆழமாகவும் நேர்மையாகவும் உள்ளன.

அருந்ததி ராய் பற்றிய பதிவை கடும் கோபத்தில் இருக்கும் போது எழுதி விட்டீர்கள் என்று நினைக்கிறேன். வழக்கமாக இருக்கும் நேரடியான காரண முறை, எல்லா பக்கங்களையும் பார்க்க கூடிய பார்வையும் இல்லை என்று தோன்றியது. அவர் பல காலமாகவே அதிமுட்டாள் தனமான, கடும் எரிச்சலூட்டும் கருத்துகளை தான் பேசி வருகிறார். ஆனால் அவர் சீன அரசின் கையாள் என்று சொல்ல ஆதாரம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. மேலை ஊடகங்களும் அவருடைய ‘புரட்சிகர’ கருத்துக்களுக்கு பெரிதாக முக்கியத்துவம் அளிப்பதில்லை. அவருக்கு புக்கர் பரிசு வழங்கப்பட்ட காரணம் நீங்கள் ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக ஆனதற்கு கொடுத்த அதே காரணம் என்று நினைக்கிறேன். அவ்வப்போது வளரும் நாடுகளில் இருந்து வருபவர்களை அங்கீகரிப்பதன் மூலம் பல அமைப்புகள் இங்கே வேரூன்ற முடியும்.

மேலும் புக்கர், புலிட்சர் பரிசுகள் மக்களால் 2 , 3 வருடங்களில் மறக்க பட்டு விடும் புத்தகங்களுக்கு கொடுக்க படுவது எப்போதும் சாதாரணமாக நடந்து வருகிறது. ஆனாலும் இந்திய இலக்கியம் என்று பேச்சு வந்தால் நைபால், ருஷ்டி, ராய் போன்றவர்களின் பெயர்கள் மட்டுமே முன்வைக்கப்படுவது எரிச்சல் உண்டாக்குகிறது. இது கொஞ்சம் கொஞ்சமாக மாறும் என்று நம்புவோம்.

அருண்

அன்புள்ள அருண்,

நான் இலக்கியம் , இந்தியதத்துவம் தவிர பிற துறைகளில் ஓர் எல்லைக்குமேல் வாசிக்கக் கூடாதென்ற முடிவுடன் இருப்பவன். அவை எழுத்தாளனுக்கு affordable அல்ல)). குறிப்பாக ஐரோப்பிய பொருளியல் சார்ந்த விஷயங்களில் நம்மால் எளிதாக எதையும் முடிவுசெய்துவிட முடியாது. சொல்லப்போனால் ஒரு பொதுவாசகனால் இவற்றைப்பற்றிய உண்மைகளை அறிந்துகொள்ள முடியுமா என்பதே ஐயமாக இருக்கிறது.

இங்கே நாளிதழ்களின் வாரமலர்களிலும், பொருளாதார இதழ்களிலும் இதழாளர்களும் , ’நிபுணர்களும்’ எழுதும் கட்டுரைகளை உட்கார்ந்து வாசிப்பது போல வீண் வேலை வேறு இல்லை. இவை பெரும்பாலும் உள்நோக்கத்துடன் எழுதப்படுபவை. பொருளியல் பற்றிய ஒரு குறிப்பிட்ட சித்திரத்தை ஊடகங்களில் பரப்ப நினைப்பவர்கள் எளிதில் அதற்கான எழுத்தாளர்களை கண்டுகொள்கிறார்கள். அவற்றுக்கென தனிமொழியும், விரிவான தகவல்களும் , தர்க்கங்களும் அவர்களிடம் இருக்கும். பட்டங்களும் பதவிகளும் இருக்கும். அக்கட்டுரைகள் அவற்றுக்கு எதிரான கட்டுரைகள் என ஒரு ’உயர்தள’ சொற்களன் உருவாக்கப்பட்டுவிடும். அதில் சாமானியனுக்கு இடமே இல்லை.

ஆனால் கொஞ்சம் பின்னகர்ந்துசென்று பழைய கட்டுரைகளை வாசித்தால் ஆச்சரியமும் அதிர்ச்சியும் எழும். அமெரிக்காவின் வீட்டுவசதிஊழல் வெடித்து அதன் பொருளியல்சூழலை மேலும் மறைக்க முடியாதென்ற நிலை வரும் வரை இங்கே பொருளியல் நிபுணர்கள் எழுதிய கட்டுரைகளை பாருங்கள். குறிப்பாக 2000 ல் முரசொலி மாறன் தொழில்துறை அமைச்சராக இருந்தகாலகட்டத்தில் இந்திய வங்கிகள் அமெரிக்க வங்கிகளில் முதலீடு செய்யவேண்டுமென வாதாடி எழுதப்பட்ட கட்டுரைகள். இது தொழிற்சங்க விஷயமானதனால் இந்த விஷயத்தை அப்போது விரிவாக சங்கக்கூட்டங்களில் பேசியிருக்கிறோம். உள்நோக்கங்களுடன் சொல்லப்படும் அப்பட்டமான பொய்கள் அவை என இப்போது தெரியும்போது முட்டாளடிக்கப்பட்ட சாமானியனாக உணர்கிறேன்.

ஆக இந்த விவாதங்களை எவர் ஒட்டுமொத்தமான ஒரு பொதுப்புத்திப்புரிதலுடன் பேசுகிறார்களோ அவர்களே ஏதேனும் அர்த்தபூர்வமாகச் சொல்லிவிட முடியும். நிபுணர் என்றாலும் அந்நிபுணத்துவத்துக்கு மேல் ஓர் ஒட்டுமொத்த பார்வை தேவை. என் அறிதலில் அமெரிக்கா பெரும் பொருளியல் நெருக்கடி நோக்கி சென்றுகொண்டிருக்கிறதென தொடர்ந்து தெளிவாக எழுதியவர் குருமூர்த்தி. துக்ளக்கில் எழுதப்பட்ட எளிமையான கட்டுரைகளில்! அவர் சொன்னதே உண்மை. ஆனால் அவை எழுதப்பட்ட காலகட்டத்தில் ஒரு ஐநூறு நிபுணர்கட்டுரைகளை அள்ளி அவற்றின் மேலே மூடிவிடமுடியும் நிலை இருந்தது.

டென்மார்க் பற்றி நான் அதிகம் தெரிந்திருக்கவில்லை. வழக்கம்போல விஷயம் தெரிந்த எவரிடமேனும் மேலும் விசாரித்துக்கொள்கிறேன். ஆனால் உண்மையில் இன்று ஐரோப்பிய நாடுகள் அளிக்கும் பொருளியல் சித்திரங்கள் உண்மையா என உள்ளே சென்று ஆராய்ந்து பார்க்க வேண்டியிருக்கிறது. பிறிதொரு தருணத்தில் எழுதுகிறேன்.

அருந்ததி ராயைப்பற்றி கோபம் இருந்தது, இருக்கிறது. அவருக்காக ஒரு மாபெரும் பின்னணி சக்தி ஊடகத்தில் வேலைசெய்கிறது. அரசியல் சக்தி, பொருளியல் சக்தி. அதன் முகம்தான் அவர். இல்லையேல் அவருக்கு இந்திய ஊடகம் இந்த இடத்தை அவருக்கு அளிக்காது. இந்திய பெருஊடகங்கள் மாபெரும் தொழில்நிறுவனங்களுடன் பின்னிப்பிணைந்தவை. அவற்றின் நோக்கங்களும் செயல்பாடுகளும் மேலே தெரியும் தளங்களை வைத்து புரிந்துகொள்ளமுடியாதவை. இப்போதைக்கு பர்கா தத் போல எங்காவது மாட்டிக்கொள்ளும் வரை இந்த ஊடகபொம்மையை நம்புங்கள் என்று சொல்லி நிறுத்துவதே எனக்கு வசதி

ஜெ

முந்தைய கட்டுரைராஜாஜி,மபொசி_ கடிதங்கள்
அடுத்த கட்டுரைஜனவரி 3