கல்யாணப்பாறை

ஈரோட்டைச்சேர்ந்த வாசகர் வெங்கடேஷ் ஆஸ்திரேலியாவில் பெர்த் நகரில் பணியாற்றுகிறார். அவருக்கு சென்ற டிசம்பர் 10 அன்று ஈரோட்டில் திருமணம். ஈரோடு, கோவைப் பகுதிகளில் திருமணங்களில் வெற்றிலை தேங்காய்ப்பை கொடுக்கும்போது ஏதேனும் புத்தகங்கள் கொடுக்கும் வழக்கம் சிலரிடம் உண்டு. வழக்கமாகத் திருக்குறள் அல்லது கீதை அல்லது திருமுறைப்பாடல் திரட்டுகள். வெங்கடேஷ் என் ‘சங்கச் சித்திரங்கள்’ கொடுக்க நினைத்து தொடர்புகொண்டார். தமிழினி வெளியிட்ட சங்கச் சித்திரங்கள் 700 பிரதிகளை வாங்கி அனைவருக்கும் அளித்தார்

அந்த திருமணத்துக்காக நான் காலையில் ஈரோடு வந்திருந்தேன். ஈரோடுக்கு அடிக்கடி செல்வதற்கு இப்படி ஒரு காரணம் வழக்கமாக வாய்க்கிறது. காலையில் ஆறுமணிக்கு நான் ஈரோட்டில் இறங்கியபோது கிருஷ்ணன் என்னை வரவேற்க வந்திருந்தார். நான் அதற்கு முன்தினம் சரியாகத் தூங்கவில்லை. காலை நாலரை மணிவரை வாசித்துக்கொண்டிருந்தேன். கெ.பி.என் பேருந்திலேறியதுமே தூங்கலாமென்றிருந்தேன். முடியவில்லை. பேருந்து கிளம்புவதற்கு சற்று முன் இருவரை வேறு இருவர் கைத்தாங்கலாகத் தூக்கி வண்டியில் ஏற்றினார்கள். முழு போதை.

போதையர் இன்னொரு இருக்கையையும் நிரப்பிக்கொண்டு தூங்க அந்த இருக்கைகளுக்குச் சொந்தமானவர்கள் எழுந்து நின்று தனக்கு இருக்கை தரும்படி கோரினார்கள். ஓட்டுநர் தன்னால் அவர்களைத் தூக்க முடியாது, முடிந்ததைப் பார்த்துக்கொள் என்றார். சண்டை . பயணிகள் அவர்களிடம் நெல்லையில் ஏறும் பயணிகள் பொருட்டு காலியாக இருந்த இருக்கைகளில் அமரும்படியும் அங்கே பார்த்துக்கொள்ளலாம் என்றும் சொன்னார்கள். அவர்களும் அங்கே அமர்ந்துகொள்ள ஒரே சலசலப்பு

பன்னிரண்டு மணிக்கு நெல்லைக்குச் சென்றது வண்டி. அங்கே அவர்களை ஏற்றி விட வந்த கெ.பி.என் ஊழியர்கள் அந்த இரு இருக்கைகளைக் காலிசெய்யும்படி அதட்டினர். குடிகாரர்களை எழும்பச்செய்வது தங்கள் பணியல்ல என்றார்கள். ஒரு கட்டத்திற்குப் பின் நான் பொறுமையிழந்து எழுந்து போய் சத்தம் போட்டேன். பயணிகளுக்கு இருக்கை வசதி செய்துகொடுக்கவில்லை என்றால் வண்டியே கிளம்ப வேண்டாம் என்றேன். இன்னும் இருவர் என்னுடன் சேர்ந்து கொண்டார்கள். அதன் பின் ஊழியர்கள் முணுமுணுப்புடன் ஏறி இரு போதைப்பெருமக்களையும் இழுத்து கீழே படுக்கச் செய்தார்கள்.

ஆனால் அரைமணிநேரத்தில் அடுத்த பிரச்சினை. பிராந்திநெடி கொண்ட சிறுநீர் ஆறாக வழிந்து முன்பக்கம் நோக்கி வந்தது. பயணிகள் கீழே வைத்திருந்த பெட்டிகளையும் பைகளையும் எடுத்து மடியில் வைத்துக்கொண்டு சத்தம்போட்டனர். டிரைவர் ஒரு சாக்குப்பை கொண்டுவந்து போட்டார். நெடி. கொஞ்சநேரத்தில் சகபோதையரும் சிறுசீரை முன்னிருக்கைகளை நோக்கி அனுப்பி வைத்தார். சிறுநீர் நெடியுடன் தூங்குவதற்கு ஒருமணி ஆகிவிட்டது

தமிழ்நாட்டில் குடியர்கள் அரசின் செல்லக் குழந்தைகள். அரசுக்கு வரி அதிகம் கட்டுபவர்கள்தானே அவர்கள்? ஆக அவர்களுக்கே நாடு சொந்தம். குடிக்காதவர்களின் உரிமைகளை பற்றி பேசக்கூடாது. அது பிற்போக்குத்தனம், மடிசஞ்சித்தனம், தயிர்சாதத்தனம். பேருந்தில் கொட்டை தொங்கி ஆடத் தூங்குவதும் மூத்திரம் பெய்வதும் அமைப்புக்கு எதிரான கலகம், புரட்சி. ஒருவேளை அந்த இருவரும் தமிழ் கவிஞர்கள் அல்லது கட்டுரையாசிரியர்களாக இருந்தால் மன்னிக்கக் கோருகிறேன்.

லிவ் இன் விடுதிக்குச் சென்று பத்துநிமிடம் காலை மேலே தூக்கி வைத்து ஓய்வெடுப்பதற்குள் கிருஷ்ணனும் சிவாவும் வந்தார்கள். ‘சார் உங்கள தூங்கவிடக்கூடாதுன்னு அப்பவே முடிவு செஞ்சிட்டோம்’ என்றார் கிருஷ்ணன். நான் படுத்தவாறே பேசிக் கொண்டிருந்தேன். விஜயராகவன் வந்தார். அதன்பின் வசந்தகுமார் சென்னையில் இருந்து வந்து சேர்ந்தார். பின்னர் பாரதி புத்தக நிலையம் இளங்கோ.

திருமண வரவேற்பு மாலையில். அதுவரை அருகே காட்டுக்குச் செல்லலாம் என்று சொன்னார்கள். நான்கு இருசக்கர வண்டிகளில் கிளம்பினோம். பவானி சென்று அங்கிருந்து ஆப்பக்கூடல் வழி அத்தாணி சென்று கள்ளிப்பட்டி அருகே மையச்சாலையில் இருந்து விலகி சிற்றூர்கள் வழியாக சென்றோம். கோவணம் மட்டும் அணிந்து ஆடு மேய்க்கும் ‘சம்சாரி’யை நீண்ட நாட்களுக்குப் பின் கண்டேன்.

பாதுகாக்கப்பட்ட வனத்துக்குள் நுழைந்து மண்சாலை வழியாக மலையாளிகள் என்ற பழங்குடிகள் வசிக்கும் சிறு கிராமத்தை அடைந்தோம்.செல்லும் வழியில் இரு சிறு ஆறுகளை நீரில் இறங்கித் தாண்டினோம். விஜயராகவன் வண்டியை தள்ளி இருமுறை மல்லாந்து விழுந்தது பார்க்க ரம்யமாக இருந்தது. பொதுவாக பயணங்களுக்குரிய உற்சாகத்தையும் அது உருவாக்கியது. பழங்குடி கிராமத்தில் வண்டிகளை நிறுத்திவிட்டு ஐந்து கிலோமீட்டர் காட்டுக்குள் ஒற்றையடிப்பாதை வழியாக நடந்தோம்.

எங்களூரில் பூச்செடி என்று சொல்லப்படும் சிறிய காவிநிறப் பூங்கொத்துகள் கொண்ட செடி இருபக்கமும் அடந்திருந்தது. இளவெயிலில் அது வாடும் தழை வாசனை. ஈரமண் காயும் வாசனை. தூரத்து மலைகள் காடுகளாக இருந்தன. அங்கிருந்து குளிர்ந்த காற்று. இளவெயிலில் தட்டாரப்பூச்சிகள் வெயில் துண்டுகளினாலான சிறகுகளுடன் பறந்து கொண்டிருந்தன.

கல்யாணாப் பாறை என்று சொல்லப்படும் அருவி காட்டுக்குள் உள்ளது. பயணிகளுக்கு அனுமதி இல்லை. குற்றாலம் ஐந்தருவி அளவுக்கு இருக்கும். மிகமிக தனிமையான இடம். அமெரிக்காவில் பனி உருகி வழியும் ஆறுகளில்தான் நான் அந்த அளவுக்கு தெள்ளிய நீரை பார்த்திருக்கிறேன். அருவி கொட்டும் பள்ளம் பத்தடி ஆழமான குழி. அடித்தட்டு துல்லியமாக தெரிந்தது.

அருவியிலும் கயத்திலுமாக நீந்தி துழாவி குளித்தோம். நீருக்குள் மூழ்கி அருவி கொட்டும் நீரில் இருந்து பல்லாயிரக்கணக்கான காற்றுக்குமிழிகள் கிளம்பி வரும்பேரழகை மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டிருந்தேன். குற்றாலத்திலும் திற்பரப்பிலும் நெடுநேரம் குளித்ததுண்டு. ஆனால் இத்தனை அதிதூயநீர் அருவியாகக் கொட்டுவதில் குளித்ததே இல்லை.

குளிக்கும்போது நாம் அறிவதில்லை. பிறரை கவனித்தால் தெரியும் நாம் சிறுவர்களைப் போல சிரித்துக் கொண்டே இருப்பதை. பொதுவாக சத்தமே இல்லாத ஆளுமையான வசந்த குமார் கூட சிரித்துக் கொண்டே இருந்தார். இரண்டு மணிநேரம் குளித்துவிட்டு பாறை மேல் ஏறி மேலே சென்றோம். அங்கே கிட்டத்தட்ட அறுபதடி ஆழமான ஒரு சிறிய கயம் இருந்தது. பாறையில் நீர் விழுந்து உருவான குழி. அத்தனை ஆழமான தூய நீர் அற்புதமான நீல நிறம் கொண்டிருந்தது.

ஔவையார் யவனர் நன்கலம் தந்த ஒந்தேறல் வைத்த புட்டி போல இருந்ததாக ஒரு மலைச்சுனையைப்பற்றிச் சொல்கிறார். அந்த உவமையின் அர்த்தம் அப்போது மனம் மலரச்செய்யும்படி நினைவில் விரிந்தது. அக்காலத்தில் புட்டிகள் நீலநிறமான இயற்கையான பாறைகளை வெட்டி செய்யப்பட்டவை. நீரில் குதித்து மீண்டும் குளியல். அங்கே நீர் கனத்து நிற்பதாகப் பட்டது. நீரில் மூழ்கி மணிக் குவியல்களாக குமிழிகள் எழுந்துவருவதை பார்த்தேன். பொன்னிற மீன் போல ஒரு பலா இலை சுடர்ந்து சுடர்ந்து மேலே சென்றது

மீண்டும் நடந்து வந்து வண்டிகளை எடுத்துக்கொண்டு அத்தாணி வந்து சேர ஐந்து மணி. அருவியில் குளித்தால் எண்ணைக் கோழி சாப்பிடவேண்டுமென அருள்மிகு நாஞ்சில் சித்தர் வாக்கு. ஆகவே பரோட்டாவும் சிக்கனும் சாப்பிட்டு விட்டு அறைக்கு வந்தோம். கிருஷ்ணனின் நண்பர் சிவாவும் அவரது இரு நண்பர்களும் பார்க்க வந்திருந்தார்கள்.

அதன்பின் திருமணத்துக்குச் சென்றேன். சங்கச்சித்திரங்கள் நூலைக் கவுண்டர்கள் மார்போடணைத்துக் கொண்டுசெல்வதைக் கண்டு மனம் மலர்ந்தேன். வெங்கடேஷைச் சந்தித்து கைகுலுக்கி அவர் மனைவியிடம் வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு இரு இனிப்புகளைச் சாப்பிட்டு விட்டுக் கிளம்பினேன். அங்கே என் வாசகர் பரத் பிக்காஜியைச் சந்தித்தேன். என் இணையதளத்தில் நிறையக் கடிதங்கள் எழுதியிருக்கிறார். சென்னை ஐஐடியில் ஆசிரியர். அவரும் வெங்கடேஷும் பெங்களூர் ஐஐடியில் சேர்ந்து படித்தவர்களாம். சிறு வயதாக இருந்தார்.

திரும்பி அறைக்கு வந்து உடனே பேருந்துக்குக் கிளம்பினேன். மீண்டும் கெ.பி.என்.  நல்லவேளை போதையர் எவரும் இல்லை. சுமுகமாக இருந்தது. நாகர்கோயில் வரைத் தூங்கினேன்.

மேலும் புகைப்படங்கள் இங்கே

முந்தைய கட்டுரைபாரதி வரலாறு…
அடுத்த கட்டுரைஆ.மாதவனுக்கு விருது: அ முத்துலிங்கம்