எனக்கு இரண்டு எஜமானர்கள். ஏசு சொன்னார், ஒருவன் இரு எஜமானர்களிடம் பணிபுரியமுடியாதென்று. அதே ஏசுதான் சீசருக்கு உரியது சீசருக்கு, தெய்வத்துக்குரியது தெய்வத்துக்கு என்றும் சொன்னார். நான் இரண்டாம் கொள்கையை பின்பற்றினேன். ஆட்டிப்படைத்த சீசரின் பெயர் டாக்டர் நஞ்சுண்ட ராவ். மெளனமாக உயிரை வாங்கிய தெய்வம் அவர் அப்பா டாக்டர் கருணாகர ராவ். என் மூக்கு இன்றுகடைந்த மோரையும் நேற்று கடைந்த மோரையும் அடையாளம் காணும். முளைக்கீரைக் கூட்டையும் அரைக்கீரைக் கூட்டையும் பிரித்தறியும். ஆனால் பறவை எச்சம் என் [...]

