உதயகுமாரின் பிராமண எதிர்ப்பு

uthaya

ஜெ,

எஸ்.பி.உதயகுமாரின் இக்கருத்துக்களைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

https://m.facebook.com/story.php?story_fbid=1422050687818637&id=100000411583309

ராம்

***

அன்புள்ள ராம்,

ரத்தினச்சுருக்கமாகச் சொல்லப்போனால் அசட்டுத்தனம். அரசியல்ரீதியாகச் சொல்லப்போனால் முதிராநாஸிஸம்.

ஆனால் இங்கே இந்தமாதிரி எதிர்ப்பரசியல் பேசப்போகிறவர்கள் மிகப்பெரும்பாலானவர்கள் இந்த குட்டையில்தான் சென்று விழுகிறார்கள். இன்னொரு உதாரணம் மறைந்த நம்மாழ்வார்.சிறுவயதிலேயே மார்க்ஸியம் போன்றவற்றுக்குள் சென்றவர்களுக்கு இந்த மனச்சிக்கல் இருப்பதில்லை

இது ஏன் என்பதை நானும் பலவாறாக யோசித்ததுண்டு. இவர்கள் அனைவருக்கும் குடும்பப்பின்னணியில் இருந்து பெரியாரியம் சார்ந்த வெறுப்பரசியல்தான் ஆரம்பத்தில் கிடைக்கிறது. அறிவியலோ சூழியலோ பின்னர் கற்றுக்கொள்வதுதான். அந்த மேற்கட்டுமானம் பலவீனமான அடித்தளம் மீது நின்றுகொண்டிருக்கிறது. கொஞ்சம் ஆட்டம் கண்டால் மேலே உள்ள சுமையை உதிர்த்துவிட்டு அடித்தளம் மட்டும் எஞ்சுகிறது

முப்பதாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. எஸ்.வி.ராஜதுரை அன்று சுந்தர ராமசாமியின் நண்பர்.தீவிர இடதுசாரி. அவர் சுந்தர ராமசாமிக்கு எழுதிய உணர்ச்சிக்கொந்தளிப்பான கடிதங்களை நான் வாசித்ததுண்டு

திடீரென சோவியத் ருஷ்யா உடைந்தது. எஸ்.வி.ராஜதுரை நேராக பார்ப்பன எதிர்ப்பு, பெரியாரியம் என சென்று அமர்ந்தார். சுந்தர ராமசாமி சொன்னார். “தலைக்கு அடி பட்டால் சிலர் சட்டென்று ஆறுவயதிலோ ஏழுவயதிலோ திரும்பிச் சென்று நின்றுவிடுவார்கள். உண்மையில் அவர்களின் அறிவுவளர்ச்சியும் ஆன்மிக வளர்ச்சியும் அங்கேதான் நின்றுகொண்டிருக்கின்றன. மிச்சமெல்லாம் சுமந்துகொண்டிருந்ததுதான். பாவம் எஸ்.வி.ஆர்”

உதயகுமாருக்கும் தலையில் அடிபட்டுவிட்டது. அமெரிக்காவின் பல்கலைகளில் பாடம்நடத்தும் சமூகவியலாளரின் இந்த ஒரு சின்னக்குறிப்பிலேயே உள்ள தகவல்பிழைகள்! காயஸ்தர்களும், சீக்கியர்களுமெல்லாம் பிராமணர்களாக ஆகும் இந்த மாய வித்தையின் அடிப்படையில் அவருடைய நண்பர் லட்சுமி மணிவண்ணனையும் என் நண்பர் அனீஷ்கிருஷ்ணன் நாயரையும் பிராமணராக ஆக்கினால் வேண்டிய செலவுகளை அவர்கள் செய்வார்கள் என நான் உறுதியளிக்கிறேன்.

ஆனால் இது ஓர் அப்பாவித்தனமான அரசியல் அல்ல. நுட்பமாகத் திட்டமிடப்பட்டது. ஆழ்மனதால் திட்டமிடப்பட்டதனாலேயே இதன் கூர்மை மிக அதிகம். பிராமண வெறுப்பு என்பது அப்பட்டமான ஒரே நோக்கம் கொண்டது – வேறெந்த நோக்கமும் இல்லாதது. சாதிய அமைப்பின் கடந்தகாலக் கொடுமைகளுக்கான பொறுப்பை பிராமணர் மேல் சுமத்திவிட்டு தாங்கள் கழன்றுகொள்வது. இது மீனவர்கள், தலித்துக்கள் உட்பட கடந்தகாலத்தில் உதயகுமாரின் சாதியால் ஒடுக்கப்பட்டவர்கள் மேல் அவர் தலைமைகொள்வதற்கான நியாயப்படுத்தலாக ஆகிறது.

உதயகுமார் சார்ந்த நாடார் சாதியும் சென்றகாலத்தில் இங்கே எல்லாவகையான சாதியக்கொடுமைகளையும் அவர்களைவிடக் கீழே இருந்த சாதியினருக்குச் செய்தவர்களே. இன்றும் அவர்களின் ‘அக்ரஹாரங்களில்’ தலித்துக்கள் குடியேறிவிடமுடியாது. அதற்கு எதிராக உதயகுமார் குரலெழுப்பிவிடமுடியாது.

நேர்மையான முறையில் தன் குலத்தின், குடியின் சென்றகாலப் பிழைகளுக்கு தான் பொறுப்பேற்பவர், தன்னை அதிலிருந்து விடுவித்து மேம்படுத்திக்கொள்ள விழைபவர் இந்தவகையான வெறுப்புக்கூச்சல்களை எழுப்ப மாட்டார். உதயகுமார் தெரிந்தெடுத்திருப்பது தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் கடைப்பிடிக்கும் குறுக்குவழி

அவருடைய தனிப்பட்ட நேர்மை, வன்முறை அற்ற வழியில் அவர் முன்னெடுக்கும் சூழியல்போர்கள் மீதான பெருமதிப்புடன் இதைச் சொல்கிறேன். எதிர்மறைமனநிலைகள் கொண்ட அரசியல்நோக்கு இதேபோல எளிய வெறுப்புகளை நோக்கியே கொண்டுசெல்லும். வெறுப்பின் விளைவு தன்னை மறுபரிசீலனை செய்யமுடியாதவராக ஆதல்தான்

ஜெ

***

 

முந்தைய கட்டுரைஇந்த டீ சூடாறாதிருக்கட்டும்..
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 37