விருதுகள் மதிப்பீடுகள்

manusshi

இந்த வருடத்தின் யுவ புரகாஸ்கர் விருது இளம் கவிஞர் மனுஷிக்கு வழங்கபட்டு இருக்கிறது.

மனுஷியின் கவிதைகளை வாசித்து இருக்கிறேன். ஆரம்ப கட்டத்தில் இருக்கிறார். இந்த விருது அவருக்கு பொருந்துவதாக இல்லை.

ராஜீவ்,

***

DSC_6806 copy
ராஜீவ்,

அன்புள்ள ராஜீவ்,

விருதுகளுக்கான அளவீடுகள் எப்படி இருக்கவேண்டும் என எனக்கு ஓர் எண்ணம் உண்டு. பிறர் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதில்லை. என் கோணம் இது.

இலக்கிய விருதுகள், குறிப்பாக அரசு போன்ற அமைப்புக்களைச் சார்ந்தவை மிகச்சரியான இலக்கிய மதிப்பீடுகளுடன் அமைவது இன்றைய சூழலில் அரிது. ஒரு திறனாய்வாளனின் மதிப்பீடுகளில் உள்ள தொடர்ச்சியும் தர்க்க ஒழுங்கும் அவற்றில் இருக்க வாய்ப்பில்லை.

ஒருவருக்கு வாழ்நாள் சாதனைக்கான விருது, ஞானபீடம், சரஸ்வதி சம்மான் போன்ற முதன்மையான இலக்கியவிருதுகள் கிடைக்கும்போது அவருடைய ஒட்டுமொத்தப் பங்களிப்பு கருத்தில் கொள்ளப்படவேண்டும். அவர் ஓர் இலக்கிய முன்னுதாரணமாக முன்வைக்கப்படலாமா என்பது விவாதிக்க வேண்டும். ஏற்பும் மறுப்பும் அவ்வடிப்படையிலேயே நிகழவேண்டும்.

சாகித்ய அக்காதமி போன்ற பிற விருதுகளைப் பொறுத்தவரை கருத்தில் கொள்ளப்பட வேண்டியது இரண்டு அம்சங்களே.

ஒன்று, அப்படைப்பாளிக்கும் இலக்கியம் என்னும் இயக்கம் மீது நம்பிக்கை இருக்கிறதா? அந்நம்பிக்கையுடன் அவர் தொடர்ந்து செயல்பட்டுள்ளாரா? தமிழின் நவீன இலக்கிய மரபின் தொடர்ச்சியை அறிந்து அதில் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறாரா?

இரண்டு, அவருடைய படைப்புக்கள் குறைந்த  அளவிலேனும் படைப்பூக்கம் கொண்டவையா? இலக்கியம் என்னும் வட்டத்திற்குள் வருவனவா?

இரண்டுக்கும் ஆம் என்றால் அவர் விருதுபெறுவதை வாழ்த்துவதே முறை. அவ்வகையிலேயே நான் பல படைப்பாளிகளை வாழ்த்தி எழுதியிருக்கிறேன். உதாரணமாக, எனக்கு மேலாண்மை பொன்னுச்சாமி எவ்வகையிலும் முக்கியமான படைப்பாளி அல்ல. ஆனால் அவரை நான் வாழ்த்தி எழுதினேன்.

அதே சமயம் அது அவர்களின் புனைவுகள் மீதான ஏற்பு அல்ல என்பதையும் தெளிவுபடுத்தினேன். அவர்களின் புனைவுகளை என் கறாரான அழகியல் கோணத்திலேயே விமர்சனம் செய்தேன்.

இளம்படைப்பாளிகள் விருதுபெறுகையில் நான் முன்வைக்க விரும்பும் அளவீடு இன்னமும் நெகிழ்வானது. இளம்படைப்பாளி பலசமயம் ஒரு சாத்தியக்கூறையே வெளிப்படுத்துகிறார். அவர் விருதுபெறும்போது கடுமையாக விமர்சனம் செய்து அவரைச் சோர்வுறச்செய்வதில் பொருளில்லை. என் வரையில் நான் இரண்டு விஷயங்களையே பார்ப்பேன்.

ஒன்று, அவர் இலக்கியம் என்னும் இயக்கம் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறாரா? இத்தொடர்ச்சியில் அவரும் இருக்கிறாரா? இரண்டு, அவர் இனிமேல் எழுதக்கூடும் என்னும் சாத்தியத்தைக் கொண்டிருக்கிறாரா? இரண்டுக்கும் ஆம் என்றால் விருதுபெறுவதை விமர்சிப்பது தேவையில்லை என்பதே என் நிலைபாடு.

ஆனால் அதற்கு அவருடைய படைப்புக்களை கறாராக விமர்சிக்கக்கூடாது என்று பொருள் இல்லை. அவருடைய ஆக்கங்களின் குறைகளை, தோல்விகளை சுட்டிக்காட்டலாம். அவ்விமர்சனம் அவரை சோர்வுறச்செய்யாமல் முன்னகர உதவிசெய்வதாக அமையவேண்டும்.

மனுஷி அவர்களின் கவிதைகளை வாசித்திருக்கிறேன். ஒரு கவிதையைக்கூட என்னை கவர்ந்தது என்று சொல்லத்தோன்றவில்லை. நவீனக் கவிதைக்குரிய மொழியும் வடிவமும் எவ்வகையிலும் கைவரவில்லை. நேரடியான அறிவிப்புகளும் உணர்ச்சிவெளிப்பாடுகளுமாகவே அவை நிற்கின்றன.

கணிசமான கவிதைகளில் மனுஷ்யபுத்திரன் மொழிநடையின் சாயல் உள்ளது. பல கவிதைகள் தமிழின் வழக்கமான ‘என்னைப் புரிந்துகொள். நான் வேறு ஆள்’ வகை பெண்ணியக்கவிதைகள்.அவர் கவிஞராக ஆக செல்லவேண்டிய தொலைவு மிக அதிகம்.

அதேசமயம் அவரிடம் ஒரு வேகம் இருக்கிறது. எழுதவேண்டுமென்ற துடிப்பு. அவர் தமிழின் கவிமரபை மேலும் கூர்ந்து கற்பதும், எளிய வம்புகளைப்புறமொதுக்கி கவிதைக்கான மனநிலையை நீட்டிக்க முயல்வதும், நல்ல கவிதைகளுடனான உரையாடலில் இருப்பதும் அவசியமானது.

விமர்சனங்களை ஆக்கபூர்வமாக எடுத்துக்கொண்டு, இப்போது எழுதுவது எவ்வகையிலும் இலக்கியமதிப்பு கொண்டது அல்ல என அவர் உணர்வார் என்றால், தன்னிடம் உள்ள வேகத்தால் தன் மொழியைக் கண்டடையக்கூடும்.

இன்று அவருக்கு மிகப்பெரிய தடை அவருடைய இந்த முதிரா எழுத்தை பொய்யாகச் சிலாகிக்கும் சிறு கூட்டம். அவர்களை உதறி மேலே செல்லும் துணிவும் சுயவிமர்சனமும் அவருக்கு வரவேண்டும். போலியான பாராட்டுக்களால் படைப்பாளிக்கு ஆகவேண்டியதொன்றும் இல்லை.

இவ்விருது அவருக்கு பாராட்டு அல்ல, அறைகூவல். அதை அவர் எதிர்கொண்டு சென்று சேரட்டும்.

ஜெ

***

sanyanthan
சயந்தன்
இயல் விருதுகள்

ஜெ

கனடா இலக்கியத் தோட்ட விருது அறிவிப்புகள் கண்டேன். சென்ற ஆண்டு சிறந்த படைப்பாளிகளின் பட்டியல் ஒன்றை தமிழ் இந்து நாளிதழில் வெளியிட்டிருந்தீர்கள். அந்தப் பட்டியலே விருதுப்பட்டியலாகவும் இருக்கிறது. ஆனால் அந்தச் சிபாரிசை ஒட்டித்தான் நான் ஆதிரை நாவலையும் ஆயிரம் சந்தோஷ இலைகளையும் வாசித்தேன். தமிழிலக்கியத்தின் முக்கியமான படைப்பாளிகள் என இருவரையும் சந்தேகமில்லாமல் சொல்வேன்.

ஆதிரை ஒரு கொந்தளிப்பான வரலாற்றுசூழலை கொந்தளிப்பே இல்லாமல் எப்படிச் சொல்வது என பாடம் கற்கவேண்டிய படைப்பு. சென்ற நாலைந்து ஆண்டுகளில் தமிழில் நிகழ்ந்த இலக்கியச்சாதனை ஆதிரை.

அதேபோல ஆயிரம் சந்தோஷ இலைகள் நவீனக்கவிதையின் அடுத்த முகம். அந்தத் தொகுதியை காரின் டாஷ்போர்டில் வைத்திருந்து கிட்டத்தட்ட மூன்றுமாதம் வாசித்தேன். வாசித்துவிட்டு நிமிர்ந்தால் நாம் பார்க்கும் ஒவ்வொன்றும் கவிதையாகத் தோற்றம் அளிக்கும் அற்புதம் நிகழ்ந்தது. கவிதையை மிகமிகச்சாதாரணமான மொழிலேயே நிகழ்த்திவிட முடியும் என்று காட்டியகவிதைகள்.

இருவருக்கும் ஆரம்பத்திலேயே இந்த விருது வழங்கப்பட்டிருப்பது தொடர்ச்சியாக அவர்களை வாசகர்கள் கவனிக்கவும் விவாதிக்கவும் வழிவகுக்கும். கனடா இலக்கியத் தோட்டத்திற்கு வாழ்த்துக்கள்

பிரபாகர்

***

சங்கர ராமசுப்ரமணியன்

 

அன்புள்ள பிரபாகர்,

என் தேர்வுகள் என் சொந்த ரசனையை, நானே இரக்கமில்லாமல் அமைத்துக்கொள்ளும் தேர்வை, சார்ந்தவை. ஆகவே இலக்கியத்தை ரசனைசார்ந்து அணுகும் பெரும்பாலானவர்களின் அணுகுமுறையில் அவையே முக்கியமானவையெனத் தோன்றுகின்றன. அது இயல்பானதுதான். ரசனை தனிநபர் சார்ந்தது. ஆனால் எப்போதும் அது கூட்டாகவே நிகழ்கிறது

ஜெ

 

SUKUMAR

அன்புள்ள ஜெ

சுகுமாரனுக்கு இயல்விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் கனடா சென்று அவ்விருதை பெற்றிருக்கிறார் என அறிகிறேன். தமிழின் தலைசிறந்த சில கவிஞர்களில் ஒருவர் அவர். இன்றைய கவிதை இயக்கத்தையே தொடங்கிவைத்த சிலரில் ஒருவர். அவருக்கு கிடைத்த இவ்விருது தமிழகம் பெருமைகொள்ளவேண்டியது. சாகித்ய அக்காதமி போன்ற விருதுகள் அவருக்குக் கிடைக்கவேண்டும் என வாழ்த்துகிறேன்.

அருண்

***

அன்புள் அருண்,

சாகித்ய அக்காதமி சமீபகாலமாக கவிதைகளுக்கு அளிக்கப்படுவதில்லை. கண்ணதாசனுக்குக் கூட சேரமான்காதலி என்ற [திராபை] நாவலுக்குத்தான் அளிக்கப்பட்டது

ஜெ

***

இயல் விருதுகள்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 30
அடுத்த கட்டுரைகதைகள் – கடிதம்