சபரி -கடிதங்கள்

sapari

ஜெ அவர்களுக்கு

வணக்கம்.. சபரிநாதனைப் பற்றி உங்கள் தளத்தில் தான் தெரிந்து கொண்டேன். அவர் படைப்புகளைப் பற்றி வந்த கட்டுரைகளையும் படித்தேன்.இனிமேல் தான் புத்தகங்கள் வாங்க வேண்டும். இருப்பினும், அவர் எழுதிய தேவதச்சம் கட்டுரை உங்கள் தளத்தில் படித்தேன். பல முறை வாசித்தேன். இப்படி ஒரு கட்டுரை கிடைப்பதற்கு தான் அவர் இத்தனை வருடம் எழுதினாரோ என்று தோன்றுகிறது.. தேவதச்சன் அவர்களுக்கு கிடைத்த மிகச்சிறந்த விருது என்றே தேவதச்சம் விளங்கும்.

பின் மர்மநபர் வெளியீட்டு விழாவில் அவர் பேசிய காணொளி முழுதும் பார்த்தேன்..

பிரமிப்பாய் இருக்கிறது.. இத்தனை சிறு வயதில்,என்ன ஒரு ஞானம்!! வாசிப்பு தந்த அறிவின் சுடரொளி முகத்தில் ஜொலிக்கிறது.. அழகாய் தன் கருத்துகளை,பதிவு செய்தார்.

உங்களுடன் அவர் விருதுவிழாவில் அமர்ந்த புகைப்படம் பார்த்தேன். அது மிகச்சிறந்த புகைப்படம்.. உங்களுக்கும், அவருக்குமான உறவு அவ்வளவு அழகாய் அதில் தெரிகிறது..

சபரிநாதன் ஏற்புரை வாசித்து முடித்தபின், ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி, அசோகன் பெயரை சொல்ல திணறி, பின் ஒரு சிரிப்பு சிரித்தாரே, அது தான் அவரின் மிகச்சிறந்த கவிதைக் கணம்.. அந்தக் குழந்தைமை அவருக்கு என்றும் இருக்கட்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்..

ஒரு வேளை நேரில் பார்த்தால், வீட்டில் அம்மாவிடம் சொல்லி திருஷ்டி சுத்திப்போடச் சொல்லுப்பா என்று சொல்லியிருப்பேன்..

வாழ்த்துகள்..

பவித்ரா

***

அன்புள்ள ஆசிரியருக்கு,

வணக்கம். சபரிநாதன் விழாவில் கலந்துகொண்டேன். அருமையான உரையொன்றைத் தந்தீர்கள். நன்றி. நிகழ்வின் முடிவில் தேவதேவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். உங்களுடன் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று மேடையருகே வந்து நீங்கள் நின்ற பொழுது உங்கள் பக்கத்தில் வந்து நின்று எவ்வளவு முயன்றும் வார்த்தை வெளிவரவில்லை. பயந்து நடுங்கி பின் நண்பரை, அவரைக் கூப்பிட பயமாய் இருக்கிறது. அப்படியே எடுங்கள் என்று படம் எடுத்துக்கொண்டேன். அடுத்த முறைப் பார்த்தால் தைரியமாக வணக்கம் தெரிவிக்கவேண்டும்

அன்புடன்,
சங்கர்

அன்புள்ள ஜெ

நீங்கள் விருது அளித்ததனால் நான் சபரிநாதனின் கவிதைகளை வாசிக்க ஆரம்பித்தேன். நீங்கள் சொல்வது சரிதான். அவருடைய கவிதைகளை நான் வழக்கமாகக் கவிதை என நினைத்திருக்கும் மொழிக்குள் வைத்துப்புரிந்துகொள்ள முடியவில்லை. [நீங்கள் சொன்ன அந்த ஓமியோபதி உதாரணம் பெர்ஃபெக்ட். ]

அதன்பின் அவரது உரையைக் கேட்டேன். தேவதச்சனைப்பற்றிய அவருடைய கட்டுரையை வாசித்தேன். மெதுவாக அவரை அணுக ஆரம்பித்தேன். அவர் தன் கவிதைகளைப்பற்றித்தான் பேசுகிறார் என்ற எண்ணம் ஏற்பட்டது. அது பெரிய திறப்பு. அவை கவிதைகள் அல்ல, உள்ளத்தில் உள்ள கவித்துவமான ஓர் எழுச்சியைப்பற்றிய சிந்தனைகள் என வகுத்துக்கொண்டேன். எளிதாக இருந்தது. அந்தச்சிந்தனைகள் வழியாக அவருக்குள் நிகழ்ந்த கவிதைக்குள் போகமுடிந்தது.

அதன்பின் சிலநாட்களாக சபரியின் கவிதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். போகிறபோக்கில் அவருடைய ரசிகனாக ஆகிவிடுவேன் என நினைக்கிறேன்

மகேஷ்

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 35
அடுத்த கட்டுரை‘மல்லிகை’ ஜீவாவுக்கு 90