வெற்றி -கடிதங்கள் 9

images

ஜெ,

படுப்பாளா?, எவ்ளளவு பணம் கொடுத்தால் படுப்பாள்?,  பணக்காரனின் பண திமிரா? ஏழையின் தன்மானமா? ஆண்மகனின் ஆணவமா, பெண்ணின் கற்பா? வெற்றி பெறுவது எது? போன்ற அற்ப கேள்விகளுக்கு பதில் அல்ல “வெற்றி”.

முக்கிய கதாபாத்திரம் போல் தோன்றும் ரங்கப்பர் உண்மையில் போட்டியில் இல்லை. அவரை பயன்படுத்தி நமச்சிவாயமும், அவர் மனைவியும்  தான் போட்டியிடுகிறார்கள்.  வெற்றி பெறுவது யார் என்பதுதான் கதை.

எந்த சூழ்நிலையிலும் பெண் கற்பு தவற கூடாது என்று ஆண் விரும்புகிறான். அதை நிலைநாட்டும் பொருட்டு தொடர்ந்து போராடுகிறான். ஆனால் நான் அறிந்த வகையில் ‘எந்த சூழ்நிலையிலும்’ என்பதை பெண்கள் ஏற்று கொள்ள தயாராக இல்லை. நான் இப்படி இருக்க வேண்டும் என்றால், நீ இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பெண் விருப்பப்படுகிறாள் அவள் எதிர்பார்ப்பு ஏமாற்றம் அடையும் போது, வெற்றி பெரும் வாய்ப்புக்காக காத்திருக்க தொடங்கி விடுகிறாள்.

பெரும்பாலான பெண்கள் ஏன் துறவு மேற்கொள்ள முடிவதில்லை என்ற வினாவின் மூலம், இந்த கதை காட்டும் தரிசனம் மிக முக்கியமானது.

-செந்தில்குமார்

***

வெற்றி சிறுகதைக்கு தற்போது கொஞ்சம் ஆக்கபூர்வமான விமர்சனங்கள் வருவது கொஞ்சம் ஆறுதல் தருகிறது (ஜெயமோகன் அவர்களே கதையின் மைய முடிச்சைப்பற்றியும், கதை எதை பேசுகிறது, எதைப் பேசவில்லை என்பது பற்றி குறிப்புகள் தந்த பிறகும்). இருந்தாலும் என் பங்குக்கு மேலும் சில பார்வைகளை முன்வைக்க விரும்புகிறேன்.

இந்தக்கதையை படிக்கும் வாசகர்கள் கருத்தில் கொள்ள வேண்டியவை:

  1. இந்த எழுத்தாளர் இதுவரை என்ன செய்திருக்கிறார், இப்போது என்ன செய்கிறார்?
  2. நம் இந்திய சமூகம் (ஆன், பெண் இருவருமே) இதுவரை பெண்களை எப்படி பார்த்திருக்கிறது, இப்போது எப்படி பார்க்கிறது?
  3. கலை என்பது எதற்காக? அதன் உச்சம் என்பது எதை நோக்கி செல்ல வேண்டும்?

ஜெயமோகன் என்னும் எழுத்தாளர்…

நிறைய எழுதியிருக்கிறார், எழுதிக்கொண்டிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. நான் சுட்டிக்காட்ட விரும்புவது இரண்டு விஷயங்களை:

  1. அவருடைய பெரிய நாவல்களின் உணர்வுகளின்சாராம்சத்தை ஏதேனும் சிறுகதைகளிலும், மேலும் அடர்த்தியாகவும் அதே சமயம் துல்லியமாகவும் அவை வெளிப்பட்டிருக்கும். காடு, கொற்றவைநாவல்கள் சிறுகதைகளாகவும் எழுதப்பட்டுள்ளன, உங்களால் எளிதில் கண்டுபிடிக்கவும் முடியும்.
  2. அவருடைய சமூக விமர்சனங்களில் எப்போதும் முற்போக்கு எண்ணங்களை மேலெடுத்து செல்ல விழைபவர், ஒரு சமுதாயத்தை மேலெடுத்து செல்வதில் கலைஞர்களின் பங்கு முதன்மையானது என்று நம்புபவர்.

இப்பொழுது வெண்முரசு எழுதிக்கொண்டிருக்கிறார், அதாவது ஆப்கானிஸ்தான் முதல் அருணாச்சல பிரதேசம் வரை, கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரை உள்ள அதனை வகையான நிலைக்காட்சிகளும், மனிதர்களும் அவர்கள் பண்பாடும், பழக்கவழக்கங்களும் துல்லியமாகவும் விவரமாகவும் அவரது ஆழ்மனம் தொகுத்து வைத்திருக்கிறது (அவரே வியக்கும் அளவுக்கு). இவ்வளவு நுட்பமான கலைமனம் எளியது போல ஒன்றை சொன்னாலும் அது உண்மையில் அவ்வளவு எளியதாக இருக்க முடியாது.

நம் சமூக மனநிலை…

கிருஷ்ணனுக்கு அறுபதினாயிரம் துணைவிகள், கிருஷ்ணைக்கு வெறும் ஐந்து தான். கிருஷ்ணன் இன்றும் கொண்டாடப்படுகிறான், பாஞ்சாலி இன்றும் இழிவாக பார்க்கப்படுகிறாள். இங்கு நான் சுட்டுவது துணைகளின் எண்ணிக்கையோ அல்லது அதற்குப்பின் உள்ள நமது தத்துவங்களையோ அல்ல, நமது பார்வை எப்படி இருக்கிறது என்பது மட்டுமே.

கலை  என்பது..

ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தை தொடர்பவர்களுக்கு இது குறித்து மிக நல்ல தெளிவு இருக்கும், இருந்தாலும் சுருக்கமாக, நமது மனதின் நுட்பமான  முடிச்சுகளால் நமது வாழ்க்கையின் காட்சிகள் அமைகின்றன. சில காட்சிகளை நிகர் வாழ்க்கையாக கட்டமைக்கையில் நமது மனதின் நுட்பங்களை (திரும்பி) சென்று தொடுவதை கலை என்று கொள்வோம் எனில் எவ்வளவு நுட்பமாக தொடுகிறதோ அதுவே அந்தக்கலையின் உச்சம்.

வெற்றி என்கிற இந்தக்கதை…

அவர் எழுதிக்கொண்டிருக்கிற மஹாபாரத நாவலின் சிறுகதை வடிவம் இது. கதை மாந்தர்களின் குணநலன்களையும்  நினைவு கூர்க (ரங்கப்பர் – அர்ஜுனன் போல் தெரியும் கிருஷ்ணனா?) அது போக நச்சிவாயம், தன்னை தர்மபுத்திரனுடன் ஒப்பு நோக்குவதையும் ரங்கப்பரை அர்ஜுனனுடன் ஒப்பிடுவதையும் (ஒருவேளை வாசகர்கள் சரியாக கவனிக்க மாட்டார்களோ) இதில் இன்னுமொரு லாபம், இருப்பதிலேயே நமச்சிவாயம் தான் கெட்டவன் போல தோன்றுவது, அவனை தருமனோடு ஒப்பிட்டால் அந்த உணர்வு கொஞ்சம் மட்டுப்படும். என்னதான் பொண்டாட்டிய வச்சு சூதாடினவன் என்றாலும் நாம் தருமனை கெட்டவனாக நினைப்பதில்லை, பாவம் பலவீனமானவன் என்று மன்னித்துவிடுகிறோம்.

மேலும் வியாசர் தன் கதைக்கு வைத்த பெயர், ஜெயசரித, வெற்றியின் கதை.

யாரும் நல்லவரும் இல்லை, யாரும் கெட்டவரும் இல்லை. எல்லோருக்குள்ளும் தேவர்களும் இருக்கிறார்கள் அசுரர்களும் இருக்கிறார்கள், சில சமயம் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்ளவும் செய்கிறார்கள்.

இப்படி உருவகப்படுத்தினால், வாசக மனம் தான் cosmopolitan கிளப். எவ்வளவு பழையது, மகாபாரத காலம் தொட்டு இன்றும் மாறாமல், வெறும் பழம்பெருமைகளை சூடிக்கொண்டு..

ரங்கப்பர் லதாவின்  சந்திப்பிற்கு பின் அவள் உடல் மொழியை அவ்வளவு நுட்பமாக சொன்ன ஆசிரியன் அங்கே என்ன நடந்தது என்று ஒரு வார்த்தையும் எழுதவில்லை. அந்த வெற்றிடத்தில் தான் வாசகனின் மனதில் இருப்பது அசுரனா தேவனா என்று முகம் எழுந்து வருகிறது. ஆசிரியர் மிகச்சரியான ஒரு கோணத்தில் மிகநுட்பமான ஒரு கண்ணாடியை நம் முன் நீட்டுகிறார், நாம் நம் நிஜ முகத்தைக்கண்டு அதிர்கிறோம்.

ஆசிரியர் ஒரு வார்த்தையும் எழுதவில்லை, கடைசியில் வரும் வரியும் லதாவின்  கூற்றுதான், அவள் அதை நமச்சிவாயத்தை பழிவாங்குவதற்காக பொய்யாக கூட சொல்லியிருக்கலாம் என்ற சாத்தியக்கூறை கதை முழுவதும் எழுதியிருக்கிறார். ரங்கப்பர் ஒரு காமுகன் அல்ல என்பதையும் தனக்கு பணியாத ஒரு பெண்ணுக்காக ஏங்கி (கண்ணீர் விடுமளவுக்கு) நிற்பவன் என்றும் சொல்லியிருக்கிறார். இத்தனை இருந்தும் அந்தப்பெண் அங்கு சோரம் போனாள் என்று மட்டுமே எடுத்துக்கொள்ளும் நம் புத்தியை என்ன செய்வது?

வெண்முரசு தொடங்கும்போது, ‘என்னடா இது வியாசனுக்கு சவால் விடறாப்ல, கொஞ்சம் ஓவராத்தான் போகுது ‘ என்று நினைத்தேன். மகாபாரதத்தின் மைய உணர்வை அதே அளவு துல்லியத்துடன் சிறுகதையில் வைத்தபோது overtake பண்ணிவிட்டார் என்றே கருதுகிறேன்.

வெற்றி கதையின் பக்கங்களை (நீளத்தை) எண்ணுபவர்கள் தயவுசெய்து வெண்முரசின் பக்கங்களை எண்ணிப்பார்க்கவும்.

கதை எழுதியதன் தொழில்நுட்பங்களை அதிகம் அலச வேண்டாம் என்று நினைத்தாலும் கதை எழுத ஆசைப்படும் அனைவரும் இந்தக்கதையை பல முறை கூர்ந்து (உணர்வுகளை ஒதுக்கி விட்டு) படித்தால் கற்றுக்கொள்ள நிறைய கிடைக்கும் என்றே நினைக்கிறேன்.

அன்புடன்,

முரளிதரபாண்டியன்

***

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

திரு. ராஜா அவர்களின் கடிதமும் அதற்கு தங்கள் பதிலும் எனக்கு ஒரு திறப்பாக அமைந்தது. பல கடிதங்களிலும் அவ்வாறு கூறப்படும் போது அதன் பொருள் எனக்குப் புரியவைல்லை, “திறப்பாகஎன்றால் என்ன? என்று என்னை நானே கேட்டுக்கொள்வேன். இப்போதுதான் புரிந்து கொண்டேன். தஞ்சை சந்திப்பின் போது ஒரு படைப்பை அதன் வரலாற்றுப் பின்புலத்துடன் நோக்குதல் பற்றி பேசினீர்கள். இந்திய மனம் தனக்கே உரித்தானதாக கொண்ட வாழ்கை முறைகள், ஒழுக்க மதிப்பீடுகள் பற்றிய எண்ணங்கள், உணர்வுகள் ஒரு புறம், பிரிட்டிஷ்அமெரிக்கர்களின் தாக்கம் கொண்டவர்கள் மறுபுறம் என்று பார்க்க கதை தனி மனிதர்களைக் கடந்து அக்காலத்தின் பொது சூழலை சென்றடைகிறது. வெற்றி சிறுகதையை இப்படி பார்க்கஅட கதையின் பாத்திரங்கள் கை நழுவிச் சென்று விடுகிறதே ? தனிமனிதரில் யாருக்கு வெற்றி யாருக்கு தோல்வி என்று எவ்வாறு சொல்ல முடியும்? ஒருவர் எதை வெற்றி என்று கருதுகிறார் என்பதைப் பொறுத்து அது நபருக்கு ஏற்ப மாறுவதல்லவா? எதைச் சொன்னாலும் அது என் சொந்த மதிப்பீடு தானே ஒழிய வேறன்ன? அது சரி என்று எவ்வாறு கருத முடியும் ?. ஒரு படைப்புக்குள் சென்று அதன் வழியாக நாம் நேரடியாக அறிந்திராத ஒரு காலத்தின் பரப்புக்குள் செல்வதுஇவ்வெண்ணம் உவகை அளிக்கிறது. ஒரு படகு போல படைப்பைப் கொண்டு கடந்த காலத்தின் கரை அடைந்து அங்கே படகை நீங்கி சென்றுவிடுதல். எனில், வரலாற்றுக்குள் செல்வது, அக்காலகட்டத்தின் அனைத்து அம்சங்களின் சாராம்சமான சிலவற்றை கிரகித்துக் கொள்வது. திசை காட்டும் கருவி கொண்டு அறிவது போல கடந்த காலத்தைக் கொண்டு நிகழ்காலத்தை, அவ்வாறே எதிர்காலம் சென்று கொண்டிருக்கும் திசையை அறிதல். சில காலம் முன்பு சவுதியில் ஒருவருக்கு தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்படும் வீடியோவை நண்பர் ஒருவர் காண்பித்தார். “மிகவும் கொடூரம்.” என்றேன். “இதைவிட கொடூரம் இங்கு இருந்திருக்கிறது. இதிலாவது கொலைக் குற்றம் செய்தவருக்குத் தான் மரண தண்டனை. ஆனால் இங்கு அன்று கோவலனுக்கு திருட்டு குற்றச்சாட்டின் பேரில் அல்லவா மரண தண்டனை வழங்கப்பட்டது? என்ன நாம் அந்த காலத்தைக் கடந்து வந்து விட்டோம். இவர்கள் பெட்ரோலால் செல்வம் குவிந்திருந்தாலும் இன்னும் மனதளவில் வாட்களின் காலத்திலேயே இருக்கிறார்கள்.” என்றான். அவர்களும் மாறுவார்கள். மாறித்தான் தீர வேண்டும்.

இன்னொன்று, வெண்முரசுமாமலர்நீர்க்கோலம், உங்கள் தளத்தில் சில இடங்களில், இப்போது சபரிநாதன் நேர்காணலில் – “யாதும் ஊரே யாவரும் கேளிர்சங்கப்பாடல் பாடலின் வரிகள் அல்லது அவற்றின் பொருள் வரக் காண்கிறேன். அனைத்தையும் அணைத்து அனைத்தையும் வளர்த்து அனைத்தும் தானென்றாகி நிற்கும் வேதமுடிபுக்கொள்கையே உங்கள் தளத்தையும் அத்தனை படைப்புகள்விஷயங்களுடன் இணைத்து நிற்கிறதோ என்று எண்ணுகிறேன்யாதும் ஊரே யாவரும் கேளிர்.”

அன்புடன்,

விக்ரம்,

கோவை

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 18
அடுத்த கட்டுரைதாயார்பாதம்- கடிதம்