‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 12

11. இளநாகம்

flowerபடைத்தலைவன் வஜ்ரகுண்டலனிடம் எல்லைகளை காத்து நிற்கும் பொறுப்பை அளித்து தலைமை அமைச்சர் கருணாகரரிடம் அரசுப்பொறுப்பை ஒப்படைத்தபின் மூன்று சிற்றமைச்சர்களும் சிறுகாவல்படையும் உடன்வர நளன் விதர்ப்பத்திற்கு கிளம்பினான். எல்லை ஊரான சம்பகிரியில் இருந்து முந்தையநாள் இரவே கிளம்பி வந்து சேர்ந்துகொண்ட புஷ்கரன் உடன் வந்தான். நளன் அழைத்ததுமே மூத்தவனை பார்க்கும் ஆவலுடன் அவன் கிளம்பியிருந்தான். பொறுப்பான அரசுப்பணிகள் எதுவும் அதுவரை அவனுக்கு அளிக்கப்பட்டதில்லை என்பதனால் அதுவும் வெறுமனே உடன் செல்லும் அரசப்பணி என்றே எண்ணியிருந்தான்.

நகர் விட்டு வெளியே செல்வதுவரை அவனிடம் செல்லும் நோக்கமென்ன என்று சொல்லியிருக்கவில்லை. கிரிப்பிரஸ்தத்தின் எல்லையை கடந்த பின்னரே சிற்றமைச்சர் ஸ்ரீதரர் அவனிடம் அதை சொன்னார். அவன் முதலில் அதை சரிவர புரிந்துகொள்ளவில்லை. “நாம் விதர்ப்பத்திற்குச் சென்று அரசரிடம் பேசப்போகிறோமா?” என்று கேட்டுக்கொண்டிருக்கையிலேயே அவனுக்கு புரிந்துவிட்டது. மூச்சுத் திணற முகம் சிவக்க பேச்சை நிறுத்திவிட்டான். கிளர்ச்சியடைந்த முகத்துடன் அவன் தமையனை நோக்கிவந்து “நாம் விதர்ப்பத்தின் இளவரசியை கைப்பற்றச் செல்கிறோமா? சற்று முன் அமைச்சர் ஸ்ரீதரர் சொன்னார்” என்றான்.

“ஆம்” என்று நளன் சொன்னான். “நன்று மூத்தவரே, தாங்கள் அவரை மணம் கொள்ளக்கூடுமென்று நான் நெடுநாட்களாக எண்ணியிருந்தேன். இச்செய்தியை வெவ்வேறு சொற்களில் முன்னரே சொல்லி கேட்டுவிட்டேன். அதை நம் குடியின் வெறும் விழைவென்றே எண்ணினேன். தங்கள் அழகையும் ஆற்றலையும் கண்டு நமது குடிகள் கொள்ளும் பெருவிழைவு இயல்புதான் என கருதினேன். விதர்ப்பத்தின் இளவரசி தங்களை ஏற்றுக்கொண்டாரென்று கேட்டபோது முதல் கணம் அது என்னை திகைக்க வைத்தது. பின்னர் வேறெப்படி இயலுமென்று தோன்றியது” என்றான்.

என்ன பேசுவதென்று தெரியவில்லை அவனுக்கு. ஆனால் பேசாமலும் இருக்க முடியவில்லை. நாணம் கொண்டவன்போல கண்களில் நீர்மை படர உரக்க சிரித்துக்கொண்டு “தங்கள் ஓவியம் ஒன்றை கண்டபின் எந்த இளவரசியும் பிறிதொரு முடிவை எடுக்க முடியாது” என்றான். நளன் புன்னகைத்து “நன்று” என்றபின் எழுந்து காத்து நின்றிருந்த தன் புரவி நோக்கி சென்றான். அவனுக்குப் பின்னால் உடல் பதற நடந்து வந்த புஷ்கரன் “இதில் என்னையும் சேர்த்துக்கொண்டதற்கு நான் தங்களுக்காக உயிர் கொடுக்க வேண்டும், மூத்தவரே. நாளை இந்நிகழ்வை காவியங்கள் பாடும். அதில் என் பெயரும் இருக்கும். நான் வாள் கற்றதும் புரவி தேர்ந்ததும் இதற்காகவே என்று இப்போது உணர்கிறேன்” என்றான்.

நளன் “பார்ப்போம்” என்று புன்னகையுடன் சொன்னான். அவன் தன் புரவியில் ஏறிக்கொண்டு மூத்தவன் பின்னால் விரைந்தபடி “அங்கு போர் நிகழும் அல்லவா? மூத்தவரே, தாங்கள் இளவரசியை கைப்பற்றி புரவியில் விரைந்து கடந்து செல்லுங்கள். நான் என் படைவீரர்களுடன் எதிர்த்து வருபவர்களை செறுத்து நிறுத்துகிறேன். அக்களத்தில் நான் உயிர் துறப்பேன்” என்றவன் கை தூக்கி “ஆம், இப்போது எனக்கு தெரிகிறது. நான் உயிர் துறப்பேன். என்னைப்பற்றி சூதர்கள் பாடுவார்கள். என் பெயரில் காவியங்கள் எழும். தங்களின் பொருட்டு உயிர் துறந்தேன் என்ற பெருமை என் குலத்தை தலை நிமிரச்செய்யும்” என்றான்.

“மூடன்போல் பேச வேண்டியதில்லை” என்று அவன் தோளில் தட்டி நளன் சொன்னான். பின்னால் வந்த ஸ்ரீதரரிடம் “இளமை ஒருவகை மடமை. ஆனால் சில தருணங்களில் அதைப் பார்க்க அழகாகத்தான் இருக்கிறது” என்றான். புஷ்கரன் “நான் என்ன செய்யவேண்டும்? சொல்லுங்கள்…” என்றான்.  “நீ என் உடைவாள் தாங்கி அருகே நில். ஆம், இத்தருணத்தை நமது சூதர்கள் பாடுவார்கள். நீ என் உடைவாள் தாங்கினாய் என்ற செய்தி அதிலிருக்கும்” என்றான் நளன். “ஆம்” என்ற பின் அவன் உடைந்து குரல் நெகிழ கண்கள் கசிய தலைகுனிந்தான். “நான்…” என்றபின் மேலும் சொல்லெடுக்க முடியாமல் இரு கைகளாலும் விழிகளை அழுத்தி திரும்பிக்கொண்டான். “செல்வோம்” என அமைச்சர்கள் சொன்னபின் நளன் புரவியை விரைந்தோடச் செய்தான்.

flowerபுஷ்கரனால் நிலைகொண்டு புரவிமேல் அமரமுடியவில்லை. திரும்பி சிற்றமைச்சர்களிடம் “அங்கு போர் நிகழுமல்லவா? பதினாறு தொல்குடி ஷத்ரியர்கள் வந்திருக்கிறார்கள் என்றார்கள். எட்டு பேரரசர்கள். நால்வர் எதிரிகள். போர் நிகழாமலிருக்காது. நான் எவரிடம் போர்புரிவது?” என்றான். “அதை அங்கு சென்று பார்ப்போம். தாங்கள் சற்று அமைதியாக வரமுடியுமா?” என்றார் ஸ்ரீதரர். “போர் நிகழும். அதில் ஐயமேயில்லை. நான் அவரிடம் சொல்லிவிட்டேன். அவர் இளவரசியுடன் செல்கையில் நான் எதிர்த்து வருபவர்களை தடுத்து நிறுத்தி போரிடுவேன். என்னுடன் வரவேண்டியவர்களிடம் அனைத்தையும் பேசிவிடுகிறேன். அவர்களில் எவரும் எஞ்சப்போவதில்லை. புகழ் ஒன்றே அவர்கள் ஈட்டுவதாக இருக்கும்” என்றான் புஷ்கரன்.

“இதுவும் நாம் அங்கு சென்று நிலைமையை நோக்கி முடிவெடுக்க வேண்டியது. இப்போதே இத்தனை கிளர்ந்தெழுந்தால் நம் உடல்நிலைதான் பாதிக்கப்படும்” என்றார் சிற்றமைச்சரான சூக்தர். “ஆம், இப்போதே முடிவெடுக்க வேண்டியதில்லை. ஆனால் என்னால் வேறெதையும் எண்ண முடியவில்லை” என்றான் புஷ்கரன். “அங்கு வேறு ஏதாவது இளவரசி இருந்தால் நீங்கள் கவர்ந்து வரலாம். அதைப்பற்றி எண்ணுங்கள்” என்றான் காவலர்தலைவன் வஜ்ரகீர்த்தி. அதிலிருந்த பகடியை புரிந்துகொள்ளாமல் புஷ்கரன் அவர்களை உளக்கொந்தளிப்புடன் மாறி மாறி நோக்கினான்.

இன்னொரு சிற்றமைச்சரான நாகசேனர் “அரசிக்கு இளையவர்கள் இல்லையே?” என்றார். “இருப்பார்கள். பட்டத்தரசிக்கு பிறக்காத பெண்டிர்” என்று வஜ்ரகீர்த்தி சொன்னான். அவர்களின் விழியாடலைக்கூட உணராத புஷ்கரன் “ஆம், அங்கு அழகான பெண்கள் பிறர் இருந்தால் எனக்கென நான் கவர்ந்து வர எண்ணுகிறேன். அதுவும் காவியத்தில் இடம் பெறட்டும். பெண் கவர்ந்து வருவதென்பது எவ்வளவு சிறந்தது என்பதை நூல்களை படிக்கும்போதுதான் உணர்ந்தேன். கவர்ந்த பெண்ணையே மணக்க வேண்டும் என்று நெடுநாட்களாக நான் எண்ணியிருந்தேன்” என்றான். அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி புன்னகைத்துக்கொண்டனர்.

புரவியை குளம்போசை விரைந்தொலிக்க ஓடவிட்டு நெடுந்தொலைவு முன்னால் சென்று அதே விரைவில் திரும்பி வந்தான். வால்சுழற்றி அது பாய உடல் முன்னால் செலுத்தி அம்புபோல் காற்றில் ஊடுருவ அருகே வந்து சுழன்று நின்று மூச்சிரைத்தபடி “ஏன் இத்தனை மெதுவாக செல்கிறோம்?” என்றான். “எத்தனை மெதுவாக சென்றாலும் ஒரு நாளுக்குள் சென்றுவிடும் தொலைவில்தான் குண்டினபுரி உள்ளது, இளவரசே” என்றார் நாகசேனர்.

“நாம் முன்னரே செல்வது நல்லதல்லவா?” என்றான் புஷ்கரன். “முன்னரே செல்லலாம். ஆனால் அரசர்கள் வந்துசேரத் தொடங்கியபின்னர் செல்வதுதான் நன்று. முதலாவதாக சென்று நின்றால் அங்கே பந்தல் கட்டவும் தண்ணீர் அள்ளி நிரப்பவும் நம்மிடம் சொல்லிவிடுவார்கள்” என்றார் ஸ்ரீதரர் சற்று எரிச்சலுடன். புஷ்கரன் உவகைப்பெருக்குடன் “ஆம். உண்மையிலேயே நாம் அதை செய்ய்லாம். பந்தல் கட்டுபவர் போலவும் தண்ணீர் அள்ளி நிரப்புபவர் போலவும் சென்று அங்கிருக்கும் தனிச் செய்திகளை நாம் அறிந்துகொள்வோம். முன்பு வங்க நாட்டு சம்புகன் அவ்வாறு மாற்றுருக்கொண்டு கலிங்கத்துக்கு வந்து இளவரசியை கவர்ந்து சென்றதாக சூதர் பாடி கேட்டிருக்கிறேன்” என்றான்.

இரு கைகளையும் அசைத்தபடி “நான் இதுவரை மாற்றுருக்கொண்டதே இல்லை, அமைச்சரே. மாற்றுருக்கொண்டு செல்வது மிகச் சிறந்த ஒன்று. ஏனென்றால் அப்போது நாம் இன்னொருவராக இருக்கிறோம். நம்மை சந்திப்பவர்கள் அனைவரும் நம்மிடம் ஏமாந்துகொண்டே இருக்கிறார்கள். நாம் மாற்றுருக்கொள்வோமா, மூத்தவரே?” என்றான். நளன் புன்னகைத்து “ஆம், பெரும்பாலும் நாம் மணம்கொண்டு திரும்பியதும் சிலகாலம் மாற்றுருக்கொள்ள வேண்டிருக்கும்” என்றான். அதிலிருந்த எள்ளல் அனைவரையும் சிரிக்கச் செய்தது.

ஆனால் புஷ்கரன் அதே உளப்பெருக்குடன் “எந்த மாற்றுருவை நாம் கொள்வோம்? என்னால் மிகச் சிறப்பாக மலைக்குறவனாக நடிக்க முடியும்” என்றான். “தாங்கள் நடிக்கவே வேண்டியதில்லை. இயல்பாகவே அவ்வசைவுகள் உங்களிடம் இருக்கின்றன” என்றார் நாகசேனர். அவர் அத்துமீறிவிட்டார் என பிறர் உணர்ந்தனர். காளகர்களை குறவர் என சொல்லும் வழக்கம் பிற குடிகளிடம் உண்டு. ஆனால் புஷ்கரன் சிரித்தபடி “ஆம், நாங்கள் குறவர்குடிகளைப் போன்றவர்களே. நான் மலைக்குறவனாக செல்லும்போது என்னை மலைக்குறவனென்றே எல்லாரும் நினைக்கிறர்கள் என்பார் கூஷ்மாண்டர்” என்றான்.

பகல் முழுக்க அவன் குண்டினபுரியில் ஆற்றப்போகும் வீரச்செயல்களை சொல்லிச் சொல்லி வளர்த்துக் கொண்டிருந்தான். பல நூறு முறை நடித்து ஒரு கட்டத்தில் அவை அனைத்தும் இறந்த காலம் என அவனுக்கு ஆயிற்று. ஒவ்வொரு சிறு நுட்பத்துடனும் அவன் இதுவரை பார்த்திராத அந்நகரைப்பற்றி பேசிக்கொண்டு வந்தான். அதன் தொன்மையான அகன்ற தெருக்கள். அங்கே புழுதி கிளப்பி பறந்து வரும் தேர்கள். புரவியில் அமர்ந்தபடியே காதுவரை நாண் இழுத்து அம்புகளை பறக்கவிட்டு அவன் வீழ்த்தும் வீரர்கள் அலறியபடி விழுந்து தரையில் துடிக்கிறார்கள். சகடம் உடைந்த தேர்கள் தெருக்களில் சிதறுகின்றன. அலறல்கள், குருதிமணம்.

அவனுடைய போர்த்திறனை உப்பரிகைக்கு ஓடிவந்து தூண்மறைந்து நின்று நோக்கி நெஞ்சில் கைவைக்கிறார்கள் அழகிய பெண்டிர். நீள்விழிகள் அவனை தொடுகின்றன. அம்புகள் பெண்கள் மேல் பட்டுவிடக்கூடாதென்பதில் அவன் மிகுந்த உளக்கூர் கொண்டிருக்கிறான். தெருக்களில் அவன் விரைகிறான். அவனுக்குப் பின்னால் சருகுச்சுழல்போல் குண்டினபுரியின் வீரர்கள் வருகிறர்கள். தெற்குக்கோட்டைமேல் அவன் புரவியில் இருந்து பாய்ந்து ஏறுகிறான். அங்கிருந்த காவல் மாடத்தில் நின்றிருந்த வீரர்களை வாளால் வெட்டி வீழ்த்தி மாடத்தில் இருந்த தொலைவில்லை கையிலெடுத்து நீண்ட அம்புகளால் துரத்தி வருபவர்களை வீழ்த்துகிறான்.

NEERKOLAM_EPI_12

அவர்கள் உடைந்த தேர்களும் கால் முறிந்த குதிரைகளுமாக தெருக்களில் குவிய அவர்களுக்குப் பின்னால் வந்தவர்கள் அதனால் அணைக்கட்டப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள். அங்கிருந்து எழுந்த அம்புகள் எதுவும் அவனை வந்து அடையவில்லை. உரக்க நகைத்தபடி கோட்டையின் மறுபக்கம் குதித்து அங்கே காத்து நின்றிருந்த புரவிமேல் ஏறி விரைகிறான்.

புரவி காட்டில் அம்பென இலைப்புதர் தழைப்பினூடாக ஊடுருவிச் செல்கையில் மரங்களின் தழைப்புக்குள் ஒளிந்திருந்த ஒற்றன் நச்சு தோய்த்த அம்பை அவன் முதுகில் எய்கிறான். முதுகில் அம்பு பட்டு ஓடிவந்து நிலத்தில் விழுந்து துடித்து ‘மூத்தவரே!’ என்று சொல்லி முனகியபடி அவன் உயிர் துறக்கிறான்.

அவனது உடலை அப்புரவி சுற்றிச் சுற்றி வர அதைக் கண்டு ‘இளவரசே…’ என்று கூவியபடி திரும்பி வந்த அவன் வீரர்களையும் எதிரிகள் கொன்றனர். அவன் உடலை பீமகரின் படைவீரர்கள் கோட்டைக்குள் திரும்ப கொண்டு சென்றனர். அவன் உடலின் தலையை வெட்டி தொங்கவிடவேண்டும் என படைவீரர்கள் கொதித்தபோது கலிங்கமன்னன் சூரியதேவனும் மாளவமன்னனும் உரத்த குரலில் ‘அவன் தூயவீரன்! நின்று போரிட்டு களம்பட்டவன். அவனை ஷத்ரியனுக்குரிய முறையில் சிதையேற்றுவோம். விண்ணிலிருந்து தேவர் இறங்கிவந்து அவன் உயிரை கொண்டு செல்வார்கள்’ என்றார்கள். ‘ஆம்! ஆம்!’ என்று படைவீரர்கள் அனைவரும் தங்கள் வாள்களையும் ஈட்டிகளையும் உயரே தூக்கி குரலுயர்த்தினர்.

பீமகர் ‘ஆம், இம்மாவீரனை முறைப்படி சிதையேற்றுவோம். அங்கு அவனுக்கு ஒரு நடுகல் அமைப்போம். குண்டினபுரியின் மண்ணில் இவன் விழுந்தது நமக்கு பெருமை’ என்றார். அவனுடைய உடலை ஊர்வலமாக கொண்டுசென்றனர். அதைத் தொடர்ந்து பல்லாயிரம் படைவீரர்கள் உருவிய வாளுடன் நடந்தனர். அதில் கலிங்கனும் அங்கனும் வங்கனும் மாளவனும் கலந்துகொண்டனர். முடிமன்னர்கள் கைதூக்கி வாழ்த்த அவன் உடல் சந்தனச் சிதையில் ஏற்றப்பட்டு அவனுடைய மைந்தன் என சொல்பூண்ட இளஞ்சிறுவன் ஒருவனால் எரியூட்டப்பட்டது. ‘மாவீரன் விண்புகுந்தான்! அவன் வாழ்க!’ என்று பெருங்குரல் எழுந்தது.

விண்ணில் அப்புகழ் சென்று தொட்டபோது இளந்தூறல் விழுந்தது. பொன்னிற ஒளி மரங்கள்மேல் பொழிந்து இலைகளை ஒளிகொள்ளச் செய்தது. தேவர்கள் வந்து அவனை கொண்டு சென்றதைக் கண்டதாக சூதர்கள் பாடலாயினர். அவன் புகழை குண்டினபுரியில், கிரிப்பிரஸ்தத்தில், பின்னர் பாரதவர்ஷத்தில் அனைத்துப் பகுதிகளிலும் சூதர்கள் பாடினர். விதர்ப்ப விஜயம் என்று ஒரு காவியத்தை புலவர் ஒருவர் எழுதினார். அதில் அவன் பிறப்பிலிருந்து இறப்பு வரை நிகழ்ந்தவை அனைத்தும் சொல்லப்பட்டிருந்தது. அவன் மண் நிகழ்ந்தபோது ஏழு நிமித்திகர் ‘இவன் நிஷதகுடியின் மாவீரன். தன் குடியின் பெருமை காக்க உயிர்துறப்பான்’ என்று வரும்பொருள் உரைத்ததை முதல் படலத்திலேயே ஆசிரியர் சொல்லியிருந்தார்.

விதர்ப்பத்தின் இளவரசியை நிஷதபுரியின் அரசன் மணந்தபோது முதல் சில மாதங்கள் நிகழ்ந்த சிறு பூசல்களுக்குப்பின் இரு நாடுகளும் நிகர்நிலையில் நின்று ஒப்பந்தம் இட்டன. அதற்கு அவனுடைய பெருவீரமே முதன்மைத் தூண்டுகோலாக அமைந்தது. இரு படைகளும் புதிய ஆடைகள் சூடி ஒளிர் படைக்கலன்களுடன் ஒன்று கலந்து விழவு கொண்டாடின. சூல் கொண்ட வயிற்றுடன் தமயந்தி யானைமேல் அமர்ந்து குண்டினபுரிக்குள் நுழைந்தாள். மாளிகைகளிலும் உப்பரிகைகளிலும் தெருக்களிலும் கூடிய கூட்டம் அவளை வாழ்த்தி ஆரவாரம் செய்தது.

குண்டினபுரியின் கோட்டைவாயிலை அடைந்த அவள் ‘முதலில் நான் தென்திசை சென்று என் குலக்கொழுந்தின் நடுகல்லுக்கு மாலையிட்டு வணங்கிய பின்னரே நகர் நுழைவேன். அது என் வஞ்சினம்’ என்றாள். ‘ஆம், அவ்வாறே ஆகுக!’ என்றார் பீமகர். யானையிலிருந்து இறங்கி தென்திசைக் காடுகளுக்குச் சென்று அங்கு சிவந்த மலர்கள் சூழ நின்றிருந்த அவனது நடுகல்லில் செங்காந்தள் மலர்மாலையணிவித்து கள்ளும் ஊனும் படைத்து அவளும் நளனும் வணங்கினர். பின்னர் அங்கிருந்து அவன் நினைவாக துயர் மிகுந்த காலடிகளை எடுத்து வைத்து குண்டினபுரிக்குள் நுழைந்தனர்.

இரவில் விதர்ப்பத்தின் எல்லையில் சோலைமரத்தடியில் அமர்ந்திருந்த புஷ்கரன் நெஞ்சு உருகி கண்ணீர்விட்டான். ஊறி ஊறி வந்த மூக்கை உறிஞ்சி துடைத்துக்கொண்டான். அவ்வோசை அத்தனை உரக்க எழுமென்று அவன் எண்ணவில்லை. அருகே துயின்று கொண்டிருந்த அமைச்சர்களை திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான். பின்னர் தன் மேலாடையால் தன் முகத்தை அழுத்தி துடைத்தான். தொலைவில் படைக்கலமேந்தி காவல் நின்றிருந்த வீரன் தன்னை திரும்பிப் பார்ப்பதை அறிந்து முகம் திருப்பிக்கொண்டு சால்வையால் முகத்தை நன்கு மூடி படுத்தான்.

இனிய வெம்மையான எண்ணங்கள். எத்தனை இனிமையான எண்ணங்களிவை! இவையெல்லாம் நிகழுமா? இவற்றில் ஒரு துளி நிகழ்ந்தால்கூட வாழ்க்கை எத்தனை பொருளுள்ளது. காமம் நிறைந்த எண்ணங்களில்கூட அவன் அடையாத அகக்கிளர்ச்சி. அவனால் படுத்திருக்கமுடியவில்லை. நெஞ்சில் குருதி நிறைந்து கொப்பளித்தது. எழுந்து நெஞ்சிலும் தலையிலும் அறைந்து ஓலமிடவேண்டும்போலத் தோன்றியது. கைகளை விரித்தபடி ஓடி சுற்றிவர வேண்டும். தலையை மரங்களில் முட்டி மோதி உடைக்க வேண்டும்.

இந்த எழுச்சியுடன் இவ்விரவை தன்னால் கடக்க முடியாது. இனிய எண்ணங்கள். இதைப்போன்ற இன்னொரு நாள் எனக்கு அமையப்போவதில்லை. ஆனால் இனிப்பும் ஒரு தவிப்பே. அது அமையும்போது முடிய வேண்டுமென்றுதான் உளம் தவிக்கிறது. எழுந்து சென்று விண்மீன்களை நோக்கி இடையில் கைவைத்து நின்றான். விண்மீன்கள் மண்ணை துழாவிக்கொண்டிருக்கின்றன. அவை இங்கு வாழ்ந்து அருஞ்செயல் இயற்றி விண்புகுந்தவர்களின் ஆத்மாக்கள். அவர்களில் ஒருவர் இங்கிருக்கிறார் என்று அவர்கள் அறிந்தால்…

அறிந்திருப்பார்கள். ஏனெனில் அங்கு காலமில்லை. நிகழ்வதும் வருவதும் அங்கு ஒன்றே. அவர்களைப் பொறுத்தவரை ஒருவேளை முன்னரே அவன் அங்கு சென்றுவிட்டிருக்கலாம். எழுச்சியுடைய எண்ணங்கள். எத்தனை ஒழுங்கற்றவை! ஒழுங்கற்றவையே விசை கொண்டவை. ஒழுங்கென்பதே விசையை அணைகட்டுதல். இவர்கள் இங்கு துயின்றுகொண்டிருக்கிறார்கள். எழுந்து இப்போதே விரைந்து குண்டினபுரிக்குள் நுழைந்தால் என்ன? விண்மீன்களை நோக்கி அவன் நீள்மூச்செறிந்தான்.

flowerகுண்டினபுரியின் தோற்றமே புஷ்கரனை சோர்வுறச் செய்தது. விதர்ப்பத்தின் எல்லையை நெருங்குந்தோறும் உளக்கொப்பளிப்புடன் அவன் புரவிமேல் கால்வளையங்களில் குதி ஊன்றி எழுந்து நின்று தொலைவு வரை நோக்கிக்கொண்டிருந்தான். “வந்துவிட்டோமா? வந்துவிட்டோமா, அமைச்சரே?” என்று திரும்பத் திரும்ப உசாவினான். “வரும்போது காவல்மாடம் தெரியும், இளவரசே” என்றான் வஜ்ரகீர்த்தி. “காவல்மாடங்கள் மரங்களுக்கு மேல்தான் தெரிவது வழக்கம் என்று அமைச்சர் சொன்னார். மிகப் பெரிய காவல்மாடம் என்று கேள்விப்பட்டேன்” என்றான் புஷ்கரன். “எங்கு கேள்விப்பட்டீர்கள்?” என்று ஸ்ரீதரர் சினந்து நோக்க “நூல்களில்” என்று அவன் விழிவிலக்கினான். “எந்த நூலில்?” என அவர் மேலும் கேட்டார். புன்னகைத்து “பல நூல்கள். எனக்கு நினைவில் இல்லை” என்றான்.

ஸ்ரீதரர் சலிப்புடன் தலையசைத்து திரும்பிக்கொள்ள புஷ்கரன் “காவல்மாடங்களை உயரமாக வைப்பதுதான் பேரரசுகளின் வழக்கம்” என்றான். “விதர்ப்பம் பேரரசு அல்ல” என்றார் அமைச்சர். “ஆனால் தொன்மையான அரசு அல்லவா?” என்று புஷ்கரன் மீண்டும் கேட்டான். எவரும் மறுமொழி சொல்லவில்லை. “அவர்களின் கோட்டையும் பெரிது என கேள்விப்பட்டேன்” என்றான். அதற்கும் எவரும் மறுமொழி சொல்லவில்லை. “அவர்களின் படைவல்லமையும் மிகைதான்” என்றான். அவனை எவரும் கேட்டதாகவே தெரியவில்லை.

ஒரு காவலன் “அதோ!” என்றான். திரும்பிப்பார்த்துவிட்டு “எங்கே?” என்றான் புஷ்கரன். “அதோ, நீங்கள் பார்ப்பதுதான் காவல் மாடம்” என்றான் காவலன். மரங்களுக்குமேல் மூன்று மரக்கிளைகளை இணைத்து கட்டப்பட்டிருந்த சிறிய மரக்குடிலைக் கண்ட புஷ்கரன் “அதுவா? குறவர் அமைக்கும் ஏறுமாடம்போல் அல்லவா இருக்கிறது?” என்றான். “அதுவேதான். காவலுக்கு இது போதும்” என்றார் அமைச்சர். “மகதத்தின் காவல் மாடத்தின்மேல் கழுகுகள் கூடுகட்டும் என்று கேட்டிருக்கிறேனே?” என்றான் புஷ்கரன். “அந்தச் சூதனுக்கு தங்க நாணயத்தை அளித்திருப்பீர்களே?” என்று ஒருவன் கேட்க மற்றவர்கள் புன்னகைத்தனர்.

அருகே நெருங்குந்தோறும் புஷ்கரன் நம்பமுடியாதவனாக ஒருவர் மாற்றி ஒருவரையாக நோக்கிக்கொண்டிருந்தான். அவர்கள் தன்னுடன் விளையாடுகிறார்கள் என்றே அவன் எண்ணினான். “இத்தனை சிறிதாக இருக்கிறதே?” என்று இறுதியில் நளனிடம் கேட்டான். “விதர்ப்பம் எளிய காவல் படையும் அதைவிட எளிய நகரும் கொண்ட அரசு, இளையோனே” என்றான் நளன். அவன் மெய்யாகவே சொல்கிறான் என்பதை முகத்திலிருந்து உணர்ந்துகொண்டு மெல்ல புரவிமேல் அமர்ந்து கடிவாளத்தை தளரப்பற்றி நோக்கியபடி வந்தான் புஷ்கரன்.

மூங்கில்களை இணைத்துக்கட்டிய சிறுவேலி ஒன்றே விதர்ப்பத்தின் எல்லையாக இருந்தது. அதுவும்கூட பாதையை மட்டுமே மறித்தது. இருபுறமும் காடு திறந்தே கிடந்தது. “எல்லையில் கோட்டையென ஏதுமில்லையா?” என்று அவன் கேட்டான். அதற்கு எவரும் மறுமொழி சொல்லவில்லை. “ஆம், ஒரு நாட்டின் எல்லை முழுக்க கோட்டை கட்டி காக்க முடியாதுதான்” என அவனே சொல்லிக்கொண்டான். எல்லைக்காவலன் வந்து தலைவணங்கி முகமன் சொல்லி “தங்கள் வருகை குறித்த செய்தி முன்னரே வந்தது, நிஷாத அரசே. இந்நகருக்கு தங்கள் வரவு சிறப்புறுக!” என்றான்.

குண்டினபுரிக்குச் செல்லும் பாதை மண்ணாலானதாக இருந்தது. புரவிக்குளம்புகள் கிளறிப்புரட்டிய மண்ணில் மீண்டும் குளம்புகள் விழும்போது சேற்றில் கல் விழுவதுபோல் ஓசையெழுந்தது. இருபுறமும் விரிந்திருந்த உயரமற்ற மரங்களாலான குறுங்காட்டுக்குள் புரவிக்குளம்படி ஓசைகள் எதிரொலிக்க பறவைகள் கலைந்தெழுந்து ஓசையிட்டன. புஷ்கரன் “வண்டிப்பாதை கூட இல்லை” என்றான். “வண்டிகள் செல்வதில்லை” என்றான் காவலன். “ஏன்?” என்று புஷ்கரன் கேட்டான். “நமக்கும் விதர்ப்பத்துக்கும் இடையே வணிகத் தொடர்புகள் இல்லை. நமது வணிகம் அனைத்தும் கோதாவரி வழியாகவே. விதர்ப்பம் மறுபுறம் மகாநதியினூடாகவே வணிகம் செய்கிறது” என்றான் நளன்.

“ஆம், அதை நானே வரைபடத்தில் பார்த்தேன்” என்று புஷ்கரன் சொன்னான். அவனுடைய ஏமாற்றம் மெல்ல விலகத் தொடங்கியது. சிறிய நாடென்றால் மேலும் நன்று, முழுநாட்டையே அவன் தன் வில்லால் வெல்வான். ஒரு நாட்டை முற்றாக வென்ற தனிவீரன் என அவனைப்பற்றி சூதர் பாடுவார்கள். விருத்திரன் நகரியை தனித்துச் சென்று அழித்த இந்திரனைப்போல. மீண்டும் அவன் உள்ளம் விம்மத்தொடங்கியது.

முந்தைய கட்டுரைசபரிநாதன் கவிதைகள்
அடுத்த கட்டுரைவெற்றி -கடிதங்கள் 4