நான் எண்ணும் பொழுது…

balu

பழைய புகைப்படங்களைப் பார்க்கையில் ஒரே உடலுக்குள் நாம் எப்படியெல்லாம் மாறிவந்திருக்கிறோம் என்னும் உணர்வு எழுகிறது. பரவலாக இருக்கும் மாயை ஒன்றுண்டு. உடல் மாறாமலிருக்கிறது, உள்ளம் மாறிக்கொண்டே இருக்கிறது என. உண்மையில் உடல்தான் கணந்தோறும் மாறுகிறது. உள்ளம் அப்படியே நீடிக்கிறது என நினைக்கிறேன்.

இல்லை, உள்ளமும்தான் மாறிக்கொண்டிருக்கிறது. மாறாமலிருப்பது நாம் நமக்கெனத் தொகுத்து வகுத்து சூடிக்கொள்ளும் தன்னிலை மட்டுமே. நாம் அதை நம் உருவாக்கிக்கொள்ளும்பொருட்டே உறவுகளில் ஆடுகிறோம். செயல்களில் திளைக்கிறோம். வெல்கிறோம், அடைகிறோம், வைத்துக்கொள்கிறோம்.

பழைய புகைப்படங்கள் நினைவுகளால் ஆனவை. ஒவ்வொரு புகைப்படத்துடனும் இடமும் காலமும் உறவுகளும் பிணைந்துள்ளன. அன்றுநாம் எப்படி இருந்தோம் என்பதை இப்போது நினைவாகவே மீட்டெடுக்கமுடிகிறது. உண்மையில் அவை இன்று நாம் உருவாக்கிக்கொள்ளும் நினைவுகள். ஆகவே எந்நிலையிலும் நம்மால் அன்றிருந்த உளநிலையைக்கூட மீட்டுக்கொள்ளமுடிவதில்லை. எந்த வகையிலும் காலத்தால் பின்னகர முடியாது. அக்கரையில் நின்றிருக்கும் அடையாளங்கள் இப்புகைப்படங்கள். அங்கே செல்லாமல் இங்கு நின்று ஏங்கலாம்

ஒருமுறை பாலு மகேந்திராவின் அலுவலகம் சென்றபோது அவர் இலங்கையிலிருந்த காலகட்டத்தில் எடுத்த பழைய கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களை எடுத்துக்காட்டி உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தார். ஆனால் முகம் துயர்கொண்டிருந்தது. ஒருகட்டத்தில் கண்கலங்கினார். நான் “பழையபுகைப்படங்களை ஏன் பார்க்கிறீர்கள், அப்படியென்றால் வாழ்க்கையை இழுத்து மூடிவிட முடிவெடுத்துவிட்டீர்களா? இனி இறந்தகாலம் மட்டும்தானா? வருங்காலக் கனவுகள் திட்டங்கள் ஏதுமில்லையா?” என்றேன்.

Dethan2
தத்தன் புனலூர்

முகம் இருள “இல்லையே” என்றார். “அப்படியென்றால் எடுத்து அப்பால் வையுங்கள். கடந்தகால ஏக்கம் போல கொல்வது வேறில்லை. அது அர்த்தமில்லாத துயரில் ஆழ்த்தி வைக்கும். அது தேவைதான். எப்போதாவது தனிமையில் ஓர் அரைமணிநேரம் அந்த நஞ்சின் தித்திப்பில் திளைக்கலாம். ஆனால் அதை மீட்டிக்கொண்டிருப்பது நிகழ்கால வாழ்க்கையை மறுதலிப்பது. செயலின்மையில் மூழ்குவது. வாழ்க்கை என்னும் பரிசுக்கு முகம் திருப்பிக்கொள்வது” என்றேன்.

சற்றுநேரம் கசப்புடன் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தபின் ‘’சரிதான்’’ என்றார். சிலநாட்களுக்குப்பின் தொலைபேசியில் அழைத்து இரண்டு பெரிய எதிர்காலத் திட்டங்கள் வைத்திருப்பதாகச் சொன்னார். ஒரு சினிமாப்பயிற்சிநிலையம். ஒரு கலைப்படம். இரண்டையும் அவர் செய்தார்.

எங்களுக்கிடையே வயது வேறுபாடு மிக அதிகம். ஆனால் என்னை தனக்குச் சமானமான வயதுடையவராக பாலு நடத்தினார். நான் அவரை பாலு என அழைப்பதை விரும்பினார். ‘நம்ம ஜெனரேஷன்லே…’ என்று அடிக்கடி என்னிடம் பேசுவார். அவர் என் வழியாக இளமையை அடைந்துகொண்டிருந்தார். அது ஒருவகையில் எனக்கும் உற்சாகமானதாகவே இருந்தது

????????? ?????

நானும் அவரும் ஒருவகையில் சமானமானவர்கள். என்னைப்போலவே அவரும் கடந்த நிலத்திற்கு மீளமுடியாதவர். அவர் ஒருபோதும் மீளமுடியாத பிறந்த நிலம் இலங்கை. சட்டபூர்வமாகவே அவர் வெளிநாடு செல்லமுடியாது. அவர் மீதான குற்றவியல் வழக்குகள் இரண்டு இருந்தன. குடியுரிமைச்சட்ட மீறல் அதில் ஒன்று. ஒரு கலைஞன் என்பதனால் அவ்வழக்குகள் கடைசிவரை அப்படியே கிடப்பில் போடப்பட்டிருந்தன என்றுதான் நினைக்கிறேன்.

இயல்விருது ஒன்றுக்காக அவரை பரிந்துரைசெய்தபோது அவர்தான் தனக்கு இந்தியக்குடியுரிமை, கடவுச்சீட்டு இல்லை என்றும் அதை வாங்குவதில் சிக்கல்கள் உண்டு என்றும் சொன்னார். மேற்கொண்டு கேட்டுக்கொள்ளவில்லை. அன்று அவரது உண்மை வயதும் தெரிந்தது. ‘அதிகாரபூர்வ’ வயதைவிட மிக அதிகம்

’சமவயதினன்’ என்பதனால் பாலு அவரது மாணவர்கள் எவரிடமும் பேசாதவற்றை எல்லாம் என்னிடம் பேசியிருக்கிறார். ஆனால் அத்தனை நெருக்கமான, அத்தனை அந்தரங்கமான நீண்ட உரையாடல்களில்கூட ஒருமுறைகூட ஷோபா பேச்சில் வந்ததே இல்லை. மிக இயல்பாக அவர் அதைக் கடந்து செல்வார். நாங்கள் பேசிக்கொண்டவற்றில் பெண்ளும் மலையாள சினிமாவின் எழுபதுகளும்தான் அதிகம். அனைத்திலும் ஷோபா உண்டு. ஆனால் அவர் அச்சொல்லையே சொல்லி நான் கேட்டதில்லை.

p126b

கடந்தகாலத்தை எண்ணி ஏங்குகிறோம். கடந்தகாலத்தில் ஒரு பகுதியை அப்படியே வெட்டி வீசிவிடுகிறோம். ஒருவேளை அப்படி நினைவில் வெட்டி வீசப்பட்ட பகுதிகள்தான் கனவில் மேலும் தீவிரமாக வெளிப்படுமோ என எண்ணியிருக்கிறேன். அப்படி அல்ல என்று தோன்றுகிறது. நினைவுகளான் ஆன நம் ஆளுமை என்பது நாமே தொகுத்துக்கொள்வதுதான். ஆகவே நாம் விரும்பாதவற்றை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றிவிடமுடியும். ஒன்றைப்பற்றி பேசாமலிருந்தாலே அது விலகிச்சென்றுவிடும். காலப்போக்கில் இல்லாமலேயே, நிகழாததாகவே ஆகிவிடக்கூடும்.

இன்றிரவு  இரு புகைப்படங்கள் அகப்பட்டன. 1997 ல் தத்தன் புனலூர் எடுத்த புகைப்படத்தில் நான் கொழுகொழுவென்று அப்படியே மல்லுத்தனமாக இருக்கிறேன். இத்தனை துல்லியமான மல்லு முகம் எனக்கிருந்தது என நினைக்கையில் வேடிக்கையாக இருக்கிறது

இன்னொரு புகைப்படம் 1992 ல் திருவண்ணாமலையில் எடுத்தது. திருவண்ணாமலையில் கலை இலக்கிய இரவு ஒன்றை ஒட்டிய இலக்கிய நிகழ்ச்சியில் எடுத்தது என நினைக்கிறேன்.சா. கந்தசாமியும் சா.தேவதாஸும் உடனிருக்கிறார்கள். இதில் தலைநிறைய முடியுடன் அடிதடிக்கு பாயப்போகும் முகபாவனையுடன் இருக்கிறேன்

இன்றிரவு கடந்தகால ஏக்கத்தின் சில துளிகளை சுவைக்க விரும்பினேன். ஆகவே புகைப்படங்கள். அழியாநினைவுகளின் சிதறல்கள். தனிப்பட்ட முறையில் பாலுவுக்கு மிகப்பிடித்தமான பாடல் ‘நான் எண்ணும் பொழுது’. அவருக்கு சலீல் சௌதுரி மலையாளப்படங்களில் பணியாற்றும்போது மிக நெருக்கம். அவர் பணியாற்றிய முதல்படமான நெல்லு சலீல் சௌதுரி இசையில் வெளிவந்ததுதான். இளையராஜாவிடம் ஒரு சலீல் அம்சம் உண்டு. பாலு அதை மிக விரும்பினார்.

நான் எண்ணும் பொழுது பாடலுக்கு பாலுவுக்கு பிடித்தமான கடந்தகால ஏக்கம் என்னும் அம்சமும் உண்டு. அழியாத கோலங்களே கடந்தகால ஏக்கம் பற்றிய படம்தான். அதன் தலைப்பிலிருந்தே. அது ஒருவகையில் அவருடைய சுயசரிதை என்று சொல்லியிருக்கிறார்

இன்றிரவு அதில் ஏறி மேலும் பின்னால் சென்றேன். சலீல் சௌதுரி தன் மெட்டுக்களை மீண்டும் மீண்டும் போடும் வழக்கம் கொண்டவர். சின்னசின்ன வேறுபாடுகளுடன் உணர்வுகளை முற்றிலும் மாற்றிவிடுவார். நான் எண்ணும் பொழுது பாடலின் மூலமான  நா ஜியா லேகே லதாமங்கேஷ்கர்  குரலில் பிறிதொரு உணர்வுநிலை கொண்டது. ஆனால் அதுவும் இன்றிரவில் இனிய கடந்தகாலத்தின் கொல்லும் அமுதே

https://www.youtube.com/watch?v=f75u1oLXzVM

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் சிங்கப்பூர் கிளையிலிருந்து ஒரு கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-2